ராஜீவ் கொலை - ஓய்வு பெற்ற RAW உளவாளி திடுக் தகவல்!


ராஜீவ் மரணத்துக்கு உளவுத்துறை தோல்வியும் ஒரு காரணம் - ஓய்வுபெற்ற உளவாளி திடுக் தகவல்



முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு உள்நாட்டு உளவுத்துறை தோல்வியும் ஒரு காரணம் என வெளிநாட்டு உளவு விவகாரங்களை கவனித்து வரும் "ரா" அமைப்பின் முன்னாள் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உளவு விவகாரங்களை கவனிப்பதற்காக அமெரிக்காவின் சிஐஏ போல் இந்தியாவில் "ரா"(ரிசர்ச் அண்டு அனாலிசஸ் விங்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் கூடுதல் செயலாளராக பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்ற பி.ராமன், தனது அனுபவங்களை "தி கீ பாய்ஸ் ஆப் ரா" என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வருகிறார். இந்த மாத இறுதியில் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது.

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை ராமன் வெளியிட்டுள்ளார். அதில் ராஜீவ்காந்தி விஷயத்தில் உள்நாட்டு உளவுத்துறை காட்டிய அலட்சியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ராமன் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை யாழ்ப்பாண தமிழர்கள் ஐரோப்ப நாடுகளில் ஜெர்மன், பிரான்ஸ் போன்றவற்றிலும், அமெரிக்க கண்டத்தில் கனடா நாட்டிலும் அதிக அளவில் வசிக்கிறார்கள்.

இவர்கள் விடுதலைப்புலிகளின் இயக்கத்துக்கு ஆதரவாக நிதி மற்றும் ஆயுதங்கள் திரட்டுவது போன்ற காரியங்களுக்கு அதிக அளவில் உதவி செய்து வருகிறார்கள். இதனால் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் குறித்து ஓரளவுக்கு இங்கு வசிக்கும் யாழ்ப்பாண தமிழர்களுக்கு தெரியும். இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளின் உளவுத்துறையினர் யாழ்ப்பாண தமிழர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பதுண்டு.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர் ஒருவர் அடிக்கடி சென்னைக்கு வந்து போயிருப்பதாக ஜெர்மன் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

முக்கியமான இந்த தகவலை ஜெர்மன் உளவுத்துறை அதிகாரிகள் ரா அமைப்புக்கு தெரிவித்தனர். அவர்கள் உள்நாட்டு உளவுத்துறைக்கு தெரியப்படுத்தினர். ஆனால் இது தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையையும் இந்திய உளவுத்துறை மேற்கொள்ளவில்லை. இந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக் கொண்டு ஜெர்மன் அதிகாரிகளிடம் கூடுதல் தகவல் கேட்டிருந்தால், ராஜீவ் கொலையாளிகளின் திட்டத்தை முன்கூட்டியே முறியடித்திருக்க முடியும்.

இவ்வாறு தனது புத்தகத்தில் ராமன் எழுதியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது போல் உளவுத்துறைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் மேலும் பல தகவல்கள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ரா அமைப்பை விமர்சித்து முன்னாள் ராணுவ அதிகாரி எழுதியிருந்த புத்தகத்தை தடை செய்வது குறித்து பரிசீலித்து வரும் நிலையில் ராமன் புத்தகத்துக்கும் தடை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

0 comments: