திருவாளர் ராமகோபாலனை விசாரிக்கவேண்டும்!

தலையங்கம் - 'விடுதலை'



`ராமன்’ என்ற இதிகாசக் கற்பனையைத் தூக்கிப் பிடித்து இந்த நாட்டில் பார்ப்பனீய வருணாசிரமக் கொடியை மீண்டும் பறக்கவிடலாம் என்ற மனப்பான்மையிலிருந்து பார்ப்பனர்கள் விடுபடுவதாகத் தெரியவில்லை.

பாபர் மசூதியை இடித்து ராமன் கோயிலை எழுப்பத் துடிப்பதும், மக்கள் நலன் சார்ந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் `ராமன் பாலம்’ என்ற புளுகைத் திணிப்பதும் அந்த வகையைச் சார்ந்ததேயாகும்.

புராணங்களையும், இதிகாசங்களையும் உண்மை வரலாறுபோல நிலைநாட்ட இந்தக் கூட்டம் மேற்கொள்ளும் பித்தலாட்டத்தைச் சொல்லி முடியாது.

கருத்தால் சந்திக்க முடியாது என்கிற கட்டம் வருகிறபோது தயாராக சில சொற்களைக் கையிருப்பில் வைத்திருப்பார்கள்.
..... என்பது நம்பிக்கை!
..... என்பது அய்தீகம்! என்கிற வார்த்தைப் பிரயோகங்கள்தான் அவை.

இப்படிச் சொல்லிவிட்டால், அதற்குமேல் எந்தவித விவாதத்துக்கும், அறிவு ரீதியான விமர்சனத்துக்கும் அவர்கள் தயாராக இல்லை என்பது பொருளாகும்.பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமன் கோயில் பிரச்சினையைக் கிளப்பும் நிலையிலும்கூட `இந்தப் பிரச்சினை யில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது, கூடாது. இது ஒரு நம்பிக்கைப் பிரச்சினை என்று அவர்கள் அடம்பிடித்துப் பேசினார்களா இல்லையா - இன்றும் பேசுகிறார்களா - இல்லையா?

ராமன் பாலம் பிரச்சினையில் தொடக்கத்தில் விஞ்ஞான முலாம் பூசிப் பார்த்தனர். `நாஸா’வைச் சந்திக்கு இழுத்தனர். மணல் திட்டு இருப்பதாகத்தான் கூறினோமே தவிர, ராமன் பாலம் என்றெல்லாம் கூறவில்லை. 17 லட்சம் வருடங்களுக்கு முந்தியது அந்தப் பாலம் என்றும் கூறவில்லை என்று அவர்கள் கை விரித்த நிலையில், புதுப்புது அக்கப்போர்களைக் கிளப்பிவிட்டுப் பார்த்தனர்.

யாரோ ஒரு விஞ்ஞானியாம்! புனித் தனேஜா (வயது 40) என்ற நபர் விஞ்ஞானி என்று சங் பரிவார்க் கும்பலால் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `இஸ்ரோ’வின் விஞ்ஞானி என்றும் அவர் கூறிக் கொண்டார். அவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்தினார்கள் சங் பரிவார்க் கூட்டம்.

தனுஷ்கோடி கடற்பகுதியில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று மணல் திட்டுகளை வீடியோ படம் எடுத்து ``இதுதான் ராமன் பாலம்’’ என்று தெரிவித்தாராம்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர்களும் நம்பினார்களாம். அதன் பிறகே அவர்கள் இந்தப் பிரச்சினையை உரத்த குரலில் முழங்கினார்களாம்.

கடைசியில் இப்பொழுது என்னாயிற்று? ஏழு லட்ச ரூபாயை இதற்காக ஆர்.எஸ்.எஸ்., தலைவரிடம் பெற்றுக்கொண்டு விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொண்ட அந்த ஆசாமி தலைமறைவாகி விட்டார் என்ற செய்தி வெளியாயிற்றே, இல்லை என்று மறுக்க முடியுமா?

இவர்கள் தூக்கி நிறுத்திய இந்தப் பிரச்சினை அடிப்படை ஏதும் இல்லாததால், அடி முறிந்து அசிங்கமாகப் போய்விட்டதே.இந்த நிலையில்தான் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் திருவாளர் ராமகோபாலன் என்பார் சங் பரிவார்க் கும்பலுக்கே உரித்தான வழக்கமான பாணியில் கரடி விட ஆரம்பித்துவிட்டார்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்துக்காக ராமன் பாலத்தை இடித்தால் கடல் பகுதியில் எரிமலை வெடித்துக் கிளம்பும் என்று ஓய்வுபெற்ற புவியியல் நிபுணர் கூறியிருப்பதாகக் கூறியுள்ளார்.யார் அந்தப் புவியியல் நிபுணர்? அவர் பெயர் என்ன? எந்த ஊர்க்காரர்? என்கிற விவரங்களைக் கூறவில்லை.இது அவர்களின் வழமையான முறையாகும். அறிவு நாண யத்துக்கும், அவர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.

இதுவரை எந்தப் புவியியல் வல்லுநர்களாவது அந்தப் பகுதியில் எரிமலை இருப்பதாகக் கூறியதுண்டா? அப்படியிருந்தால் அதனை வெளிப்படுத்தலாமே!கடைசியில் நெருக்கிக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? `ராமன் நேற்றிரவு என் கனவில் வந்து அப்படிக் கூறினார்’ என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

சிதம்பரத்தில் நடராஜக் கடவுள் கனவில் வந்து நந்தனைத் தீயில் குளித்து வரச் சொன்னார் என்று சொல்லி, நந்தனைச் சாம்பலாக்கிவிடவில்லையா?நியாயமாக காவல்துறை, திருவாளர் ராம கோபாலனை அழைத்து, எரிமலை வெடிக்கும் என்று கூறியது தொடர்பாக விசாரணை நடத்திட வேண்டும். அப்படி ஒரு புவியியல் நிபுணர் இருப்பாரேயானால் அவரிடமும் தகவல் கேட்கும் முறையில் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற புரளிகள், மக்களை அச்சுறுத்தும் போக்கிரித்தனங்களுக்கு ஒரு முடிவு ஏற்படும். அரசும் யோசிக்கட்டும்!

0 comments: