ஆகஸ்ட் 10ல் துணை ஜனாதிபதி தேர்தல்

ஜூலை 9ல் மனுதாக்கல் தொடக்கம் ஆகஸ்ட் 10ல் துணை ஜனாதிபதி தேர்தல்.



துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் 9ம் தேதி துவங்குகிறது என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.

துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத்தின் பதவிக் காலம் ஆகஸ்ட் 18ம் தேதி முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக புதிய துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன் நேற்று டெல்லியில் அறிவித்தது. இதன்படி, ஜூலை 9ம் தேதி தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கல் துவங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 23. மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 26.ஆகஸ்ட் 10ம் தேதி தேர்தல் நடைபெறும். அன்று மாலையே ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் வாக்களிப்பர்.இப்போது மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுடன் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்கள் 12 பேரும், மக்களவையின் நியமன உறுப்பினர்கள் 2 பேரும் வாக்களிப்பர். ஆக மொத்தம் 790 எம்.பி.க்கள் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள்.தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்த அணிக்கு போதுமான பெரும்பான்மை பலம் உள்ளது.

இந்த அணியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.ஜனாதிபதி தேர்தல் இந்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால் டெல்லி அரசியல் களம் மேலும் சுறுசுறுப்படைந்து விட்டது. துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்று முதல் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள அணியின் சார்பில் பிரதிபா பாட்டீல் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ. கூட்டணியின் ஆதரவுடன் துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

0 comments: