தி.மு.க. வன்முறை அரசியலுக்கு முடிவு கட்டுவோம்: 'ஜெ'

தி.மு.க. வன்முறை அரசியலுக்கு முடிவு கட்டுவோம்: ஜெயலலிதா அறைகூவல்!

தி.மு.க.வின் வன்முறை அரசியலுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று ஜெயலலிதா அறைகூவல் விடுத்தார்.

அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் உள்ளாட்சி, கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என்றும் ஜெயலலிதா கூறினார்.

அரசியல் சூழ்நிலை விரைவில் மாறும். அண்ணா தி.மு.க. ஆட்சியில் அமரும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.



ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. அரசு தொடர்ந்து வன்முறையிலும், அராஜகத்திலும் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு தேர்தலின் போதும் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஜனநாயகம் கருணாநிதியிடமும், தி.மு.க. கட்சிக்காரர்களிடமும் சிக்குண்டு கண்ணீர் விட்டு கதறி அழுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்கள் நடைபெற்ற போது, அத்தேர்தல்களில் தி.மு.க.வினர் நடத்திய அராஜகத்தைக் கண்டு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்துத் தரப்பு மக்களும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். பின்னர் தி.மு.க.வினர் நிகழ்த்திய தேர்தல் அத்துமீறல்களை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. மாநிலத் தேர்தல் ஆணையர், சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் மற்றும் மாநில காவல்துறைத் தலைவர் ஆகியோர் மீதும் கடுமையான கண்டனத்தை உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்தது. அதில், ஆளும் மைனாரிட்டி தி.மு.க. அரசாங்கத்திற்கு உடந்தையாக செயல்பட்டு கலவர அரசியலுக்குத் துணை போயிருக்கிறார்கள் என்று நீதிமன்றம் கடுமையாக அவர்களைச் சாடியது. குறிப்பாக, மாநிலத் தேர்தல் ஆணையர் சந்திரசேகர் ஒரு தி.மு.க. மாவட்டச் செயலாளரைப் போல் செயல் பட்டது வேதனைக்குரியது ஒன்றாகும்.

கூட்டுறவு தேர்தலை புறக்கணித்தது ஏன்?

இந்நிலையில் தற்போது கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் 8.6.2007 முதல் துவக்கப்படும் என்று அறிவித்தது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைப் போலவே, கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல்களிலும் வன்முறையைத் தொடர்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே தான் இத்தேர்தலை அண்ணா தி.மு.க. புறக்கணிக்கும் என்று நான் அறிவித்தேன்.

ஜனநாயக விரோத செயல் 1996ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., கூட்டுறவு அமைப்புகளில் இருந்து தகுதியான உறுப்பினர்களையும், அண்ணா தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்களையும் நீக்கியது. பின்னர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களையும், அவர்களுக்குச் சாதகமானவர்களையும் மட்டுமே உறுப்பினர்களாகச் சேர்த்து முறை யற்ற வகையில் ஜனநாயக விரோதமான தேர்தலை நடத்தியது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக, அண்ணா தி.மு.க.வினர் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கப் படாமல், அடித்து தாக்கப்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி அடிக்கப் பட்டார்கள். அத்தகைய வன்முறையையும் மீறி வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களை நிராகரிப்பது போன்ற அநீதிகளும் இழைக்கப்பட்டன.

தி.மு.க. அடித்த கொள்ளை 1996 முதல் 2001 வரை கூட்டுறவு சங்க அமைப்புகளில் தி.மு.க.வினர் பொறுப்பு வகித்ததன் மூலம் அதில் பல நூறு கோடி ரூபாய்களை கொள்ளையடித்து கூட்டுறவுத் துறையையே நாசம் செய்துவிட்டனர். அண்ணா தி.மு.க. பொறுப்பேற்றவுடன் தி.மு.க.வினர் செய்த முறைகேடுகளை களையும் வகையில் ஏற்கனவே நீக்கப்பட்ட தகுதியுள்ள உறுப்பினர்களையும், புதிய தகுதி உள்ள உறுப்பினர்களையும் மீண்டும் சேர்க்க சட்டத்தின் மூலம் வழிவகை செய்தோம். அத்தகைய நியாயமான சட்டத்தை எதிர்த்து தி.மு.க.வினரின் தூண்டுதலால் வழக்கு தொடரப்பட்டது.

முறைகேடாக சேர்த்து மோசடி தேர்தல்

தனி அதிகாரிகள் பதவிக்காலத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க இயலாது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு நிர்வாக அமைப்பின் மூலம் புதிய உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பினை எதிர்த்து, அண்ணா தி.மு.க. அரசால் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நேரத்தில் தான் 2006ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. பின்னர் øமாரிட்டி தி.மு.க. அரசு அந்த வழக்கை வாபஸ் பெற்று 1996 97ல் முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முறைகேடாக சேர்த்த தி.மு.க.வைச் சேர்ந்த அதே பழைய உறுப்பினர்களை வைத்தே மீண்டும் தேர்தல் நடத்த மைனாரிட்டி தி.மு.க. அரசு தற்போது ஆணையிட்டுள்ளது. இது ஒரு ஜனநாயக மோசடியாகும்.

அச்சப்பட்டபடி நடந்துள்ளது கருணாநிதி ஆட்சியில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடைபெற்றால் எவ்வகை அத்துமீறல், அராஜகம், வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என்று அச்சப் பட்டோமோ, அதையேதான் தற்போது மைனாரிட்டி தி.மு.க. அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

2.7.2007 அன்று தொடங்கிய கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தலின் முதல் கட்டமான வேட்பு மனு தாக்கல் என்பது கேலிக்கூத்தாக மட்டுமல்ல, பெரும் வன்முறை வெறியாட்டத்துடன் நடந்து இருக்கிறது. தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், பா.ம.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், பொது மக்களையும் வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் விரட்டி அடித்து, அதையும் மீறி வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் மீது தி.மு.க.வினர் ஆயுதத் தாக்குதல் நடத்தியும் இருக்கிறார்கள்.

வன்முறை மீது தி.மு.க. நம்பிக்கை

தற்போது தி.மு.க. கூட்டணிக் கட்சியினரிடையே குழப்பங்கள் நிலவி வருகின்றன. வன்முறையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ள தி.மு.க.வினர் தங்களுக்குள்ளேயே கோஷ்டித் தகராறில் ஈடுபட்டு வன்முறையை பரப்பி சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருப்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

ஆட்சிக்கு வந்ததும்...

இத்தகைய அராஜக, பாசிச மைனாரிட்டி தி.மு.க. அரசின் நடவடிக்கைகள் அத்தனையும் விரைவில் முடிவுக்கு வந்தே தீரும். தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை விரைவில் மாறும். நாம் மீண்டும் ஆட்சியில் அமருவோம். அப்போது உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு அவற்றின் பதவிப் பொறுப்பு களில் முறையற்று அமர்ந்திருப்பவர்கள் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அதன் பின்னர் ஜனநாயக ரீதியான, முறையான உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புத் தேர்தல்களை மக்கள் சந்திக்கின்ற நிலையையே உருவாக்குவோம்.

தேர்தல் விதிமுறைகளை மீறினார்கள்

உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆகியவற்றின் அவலம் தான் இப்படியென்றால், மதுரையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் இதே நிலைமை தான். மத்திய அரசில் தி.மு.க. வினரின் செல்வாக்கு அதிகம் இருப்பதால், இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை என்பதின் அடையாளமாக மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் வெற்றி, மற்றும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் அனைத்து தேர்தல் விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறினார்கள் என்பது கண்கூடு.

அண்மையில் மதுரை மேற்கு தொகுதியில் வன்முறை மற்றும் மிரட்டல்கள் அதிகரித்தன. அதனால் அமைதியற்ற சூழ்நிலை நிலவியது. இதன் அடிப்படையில் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சூழ்நிலை உருவானது. முறையான ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஜூலை 3ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளி வந்தன.

மக்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு?

கருணாநிதியின் உண்ணாவிரத மிரட்டல் மூலம் முடிவு மாறிவிட்டது. தி.மு.க.வின் வன்முறை, அராஜகம் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் இந்திய தேர்தல் ஆணையமே செயலற்றுப் போனது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கதியே இது தான் என்றால், கூட்டுறவு சங்கத் தேர்தலின் கதி என்ன? தி.மு.க. வினரின் கோஷ்டி மோதலின் காரணமாக சிவகங்கை நகர மன்றத் தலைவரை தமிழகத்தில் முதல் முறையாக "ரிமோட் கண்ட்ரோல்' மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்து கொலை செய்யும் அளவுக்குப் போய்விட்ட பிறகு, தமிழகத்தில் பொது மக்களின் உயிருக்கு என்ன பாதுகாப்பு? என்பதை மக்கள் எண்ணிப்பார்த்து சிந்திக்க வேண்டும்.

தி.மு.க. வன்முறை அரசியலுக்கு முடிவு

மைனாரிட்டி தி.மு.க. அரசின் வன்முறை அரசியலுக்கு நாட்டு மக்கள் தான் விரைவில் ஒரு முடிவு கட்ட வேண்டும்.

கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தலில் அண்ணா தி.மு.க. உடன்பிறப்புகள் போட்டியிட முடியவில்லையே என்று சிறிதும் கவலையோ, வருத்தமோ அடைய வேண்டாம். கூட்டுறவு அமைப்புகளில் நாம் அங்கம் வகித்து பொதுமக்களுக்காக சேவை செய்யும் ஒரு பொன்னான எதிர்காலம் நமக்குக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

0 comments: