லேசாக மழை பெய்துகொண்டிருந்த ஒரு மதியம். தலைநகரில் சங்கடமான குளிர்! குடியரசுத் தலைவர் மாளிகை வாசலில் பாதுகாப்பு அலுவலரிடம் ‘ஆஜர்’ சொன்னதும் அவர் தம்மிடமுள்ள பட்டியலை எடுத்து, பெயரைச் சரிபார்த்து உள்ளே அனுப்புகிறார். இப்படி மூன்றுகட்ட ‘சரி பார்ப்பு’களைக் கடந்து போனால், உள்ளே விஸ்தாரமான அறை ஒன்றில் அமரச் செய் கிறார்கள். “தேனீரா? கா·பியா?” என்று கேட்டறிந்து சிற்றுண்டியுடன் உபசரிப்பு. ஜன்னல் கண்ணாடி வழியே பசும்புல் தரையும் செந்நிற மலர்களும் தெரிகின்றன. தோகை மயில் ஒன்று நீலக்கழுத்தை நிமிர்த்தி கம்பீரமாகக் கடந்து செல்கிறது.
நிசப்தத்தில் கனத்திருக்கும் அறையின் கதவைத் திறந்துகொண்டு அதிகாரி ஒருவர் வந்து அழைக்கிறார்... நீண்ட தாழ்வாரத்தை கடந்து, மற்றோர் அறைக்குள் நம்மை அனுமதித்துவிட்டு வெளியேறுகிறார்.
‘இங்கு யாரையும் காணோமே...?’ என்று நாம் யோசனையுடன் தேட, அந்த பிரும்மாண்ட அறையின் மறுகோடியிலிருந்து மிக மெல்லிய தமிழ்க் குரல் கேட்கிறது - சில இணைய தளங்களில் தேடச் சொல்லி யாரிடமோ தொலைபேசியில் கூறிக் கொண்டிருக்கும் குரல். அத் திசை நோக்கிச் சென்றால்...
மிகப்பெரிய மேஜையின் பின் மிகச் சிறிய உருவமாக அமர்ந்திருக்கிறார். பாரத குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
ஏதோ நீண்ட நாட்கள் நம்முடன் பழகியதைப் போல் உரையாடலை அவரே தொடங்குகிறார்... “பேட்டிக்கு நேரமில்லையே...” என்று இழுத்துவிட்டு, மறுக்க மனமின்றி, சில கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.
“விஞ்ஞான ஆராய்ச்சியின் பயன்கள் கடைநிலை இந்தியனையும் சென்றடைய வேண்டும்” என்று முந்தைய நாள்தான் பேசியிருக்கிறார் - ஒரு கூட்டத்தில். “அப்படியானால் சந்திராயணம் எதற்கு?” என்று கேட்கிறோம்.
“அது அவசியம்... சந்திர மண்டலம் ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல; அங்கே நமக்கும் உரிமை இருக்கிறது என்பதை நாம் நிலைநாட்ட வேண்டும் இல்லையா? பௌர்ணமி நிலவைப் பார்த்து சந்தோஷப் படுகிறோம். அங்கே இருக்கிற விஷயங்கள் அதிகம் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். விண்வெளி ஆராய்ச்சிக்குத் தேவையான ராக்கெட் எரிபொருளுக்கு அங்கே டைட்டானியம், டங்ஸ்டன், ஹீலியம் போன்றவை கிடைக்கும்... இவை முக்கியமாக அணு ஆராய்ச்சிக்குத் தேவை... அண்டார்டிகாவில் கூடத்தான் நமது இந்திய ஆராய்ச்சிக் கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது... அது எதற்காக என்று கேட்க முடியுமா...? இவையெல்லாம் நம் நாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்துக்கு, மக்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான நடவடிக்கைகள். எந்த ஆராய்ச்சியின் வித்துக்களும் பலன் தருவதற்கு 20 - 30 வருஷங்கள் ஆகும். தொடர்ந்து பல திசைகளிலும் ஆராய்ச்சி நடத்தப்படத்தான் வேண்டும்.
அணு ஆராய்ச்சியின் அபாயங்கள் குறித்த நமது சந்தேகங்கள் அவசியமற்றவை என உறுதியாக நம்புகிறார் குடியரசுத் தலைவர். “செர்னோபைல் போன்ற விபத்துக்களெல்லாம் அந்தக்காலம்! நியூக்ளியர் எனர்ஜி இஸ் வெரி க்ளீன் எனர்ஜி. அதன் உற்பத்தியின்போது மாசுகள் வெளிப்படுவ தில்லை” என்று சுட்டிக் காட்டுகிறார்.
குடியரசுத் தலைவருக்குள் இருக்கும் விஞ்ஞானி பேசுவதை உணர்ந்து, அது குறித்தே அவர்ரிடம் கேட்கிறோம் : “விஞ்ஞானி கலாமுக்கும் குடியரசுத் தலைவர் கலாமுக்கும் என்ன வித்தியாசம்?”
“எல்லா பொறுப்புகளிலும் இருந்தவர் இருப்பவர் ஒரே கலாம்தான்” என்று பொறுமையாகப் பதில் சொல்கிறார். நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கான தீர்க்கதரிசன ஆவணம் ஒன்றை விஞ்ஞானத் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியபோது உருவாக்கியதையும் அந்த ஆவணமே கல்வியாளர் கலாமையும் குடியரசுத் தலைவர் கலாமையும் வழிநடத்துவதையும் விளக்குகிறார். “அதுதான் என்னுடைய எல்லா பொறுப்பு களையும் இணைத்துக் கோக்கும் நூல் சரடு!” என்கிறார்.
“பெரிய கனவுதான் இந்தியா 2020... ஆனால், இந்தியா உலக ஊழல் பட்டியலில் ‘உயர்’ இடம் பிடித்திருப்பது நம் நம்பிக்கையைப் பலவீனப்படுத்துகிறதே” என்றால்...
“நான் நம்புகிறேன்!” என்று அடித்துச் சொல்கிறார். இந்த நாட்டில் ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என்று வளர்ச்சியில் குறுக்கிடும் கோளாறுகளைச் சரிசெய்யும் ஆன்ம பலம் நம் குழந்தைகளிடமும் தாய்மார்களிடமும் இருக்கிறது என்பது கலாமின் உறுதியான நம்பிக்கை. மாணவர்களிடம் உரையாடி அவர்களது உள்ளங்களை அறிந்து பேசுவதாகக் கூறுகிறார்.
“கூட்டுக் குடும்பம் என்ற அமைப்புக்குப் பழகிய சமுதாயம் இது. நல்லது கெட்டதை எடுத்துச் சொல்ல பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களது அறிவுரையை ஏற்று நடக்கும் பக்குவமும் கட்டுப்பாடும் இந்த நாட்டுக்கு இயற்கையாகவே உண்டு.
ஆதி சுஞ்சுனகிரி என்ற ஊரில் ஆயிரக் கணக்கான பள்ளி மாணவர்கள் கூட்டம். பவானி என்ற சிறுமி எழுந்து என்னிடம் இதே கேள்வியைத்தான் கேட்டாள்... ‘ஊழலை ஒழிக்க முடியுமா?’ என்று.”
‘உங்கள் பெற்றோர் அந்தத் தப்பைச் செய்தால் நீங்கள் எதிர்ப்பீர்களா?’ என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் கலாம். முதலில் தயக்கத்துடன் உயர்ந்த கைககள், பிறகு கிடுகிடுவென்று உயர்ந்திருக்கின்றன. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் சுமார் பத்தாயிரம் பெற்றோரும் அந்தக் கூட்டத்திலேயே லஞ்ச மறுப்பு வாக்குறுதி தந்து −லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்றிருக்கின்றனர்.
மக்களின் மனங்களைத் தொட்டசைக்கும் இந்த ஆளுமைதான் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மிகப்பரிய பல மாகக் கை கொடுத்திருக்கிறது. எளிய குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறியவா¢ன் வாழ்க்கையோடு சராசரி இந்தியனால் எளிதில் ஒன்றிட முடிந்திருக்கிறது. அவரது வாழ்க்கைப் போராட்டங்களும் முயற்சிகளும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருந்திருக்கிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி என்பது அதிகாரங்கள் அற்ற அலங்காரப் பதவிதான். ஆனால், அப்துல் கலாம் மக்களிடம் நெருங்கி வந்ததன் மூலமாக, அந்தப் பதவிக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கூட்டியிருக்கிறார்.
இலவசங்களையும் ஒதுக்கீடுகளையும் வைத்துக் கொண்டு வித்தை காட்டி கட்சித் தலைவர்கள் அர சியல் பண்ணும் சூழலில், மக்கள் மனங்களில் கனவுகளை விதைத்து உத்வேகத்தை ஊட்டிய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
தோற்றத்திலும் பேச்சிலும் எளிமை மேலிட இருப்பவரைப் பார்த்துக் கேட்கிறோம்: “இக்கட்டான சூழலில் உங்களுக்குக் கைக் கொடுத்த குரான் வாசகம் ஒன்று...?”
“குறள் வாசகத்தை முதலில் சொல்கிறேன்:
‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து’.
உயர்ந்த செயல்களையே செய்ய நினைத்து, அது முடி யாமல் போனால்கூட, நமது எண்ணத்தின் உயர்வே வெற்றிதான்.
இதே கருத்துபட குரான் வாசகம் ஒன்றும் இருக்கிறது. அல் ·பாத்தியா வில் : உன் எண்ணங்கள் இறைவனைச் சார்ந்தும், செயல்கள் இறைவனுக்கு
உகந்தவையாக வும் இருக்கிறபோது பயமே வேண்டியதில்லை!”
ஒதுக்கிய நேரம் கடந்துவிட்டதால் மன் னிப்புக் கேட்டு அவசரமாக விடைபெறு கிறோம். “எப்படி வந்தீர்கள்? திரும்பிப் போக வண்டி இருக்கிறதா?” என்று
கனிவுடன் விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்கிறார் குடியரசுத் தலைவர்!
-சீதா ரவி
0 comments:
Post a Comment