கூட்டுறவு சங்க தேர்தலில் தி.மு.க. வன்முறை

தமிழகம் முழுவதும் இன்று நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் பல இடங்களில் தி.மு.க.வினர் வன்முறை அராஜகத்தில் ஈடுபட்டார்கள்.

பல இடங்களில் ஓட்டுப் பெட்டிகளை தி.மு.க.வினர் தூக்கி கொண்டு ஓடினார்கள்.

பதிவான ஓட்டுச்சீட்டுகளை கிழித்து போட்டார்கள். தடுக்கப்போன போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள்.

தி.மு.க.வினரின் வன்முறை வெறியாட்டம் காரணமாக பல இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தி.மு.க.வினரின் அராஜகத்தை கண்டித்து கடை அடைப்பு நடந்தது.



தமிழகம் முழுவதும் 5 கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கிறது. இன்று (7ந்தேதி) முதல் 11ந்தேதி வரை இந்த தேர்தல் நடக்கிறது.

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2ந்தேதி தொடங்கியது. தேர்தல் இன்று காலை துவங்கியது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

கூட்டுறவு பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 1945 கூட்டுறவு சங்கங்களுக்கும் செயற் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 3994 கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. பங்கேற்கவில்லை. ம.தி.மு.க.வும் பங்கேற்கவில்லை.

தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். கூட்டுறவு தேர்தல் நடத்தப்படும் விதத்தை பா.ம.க. தலைவர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜனும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. ஆளும் கட்சியினர் விரும்புபவர்களை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்துள்ளதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ஜனநாயக பூர்வமாகவும், அமைதி யாகவும் ஓட்டளிப்பதை உத்தரவாதப் படுத்தும் முறையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களே தி.மு.க.வினரின் அராஜகத்தை சுட்டிகாட்டியுள்ள நிலையில் இன்று கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பல இடங்களில் வன்முறை வெறியாட்டடும் தலைவிரித் தாடியது.

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம் அருகே இன்று காலை நடந்த கூட்டுறவு வங்கி தேர்தலில் தி.மு.க.வினரின் அராஜகம் தலைவிரித்தாடியது. வாக்குப் பெட்டியை அக்கும்பல் சூறையாடி வாக்குச் சீட்டுகளை கிழித்து எரிந்தனர். பொதுமக்கள் கூடியதால் அக்கும்பல் தப்பியோடியது. இதையொட்டி தேர்தல் ரத்து செய்யப் பட்டது. பதட்டம் ஏற்பட்டதால் ஆயுதம் தாங்கிய போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

முத்தியால்பேட்டை, ஐயன்பேட்டை, ஏரிவாய், பூச்சிவாக்கம், தாங்கி, வில்லிவலம் உள்ளிட்ட கிராமங்கள் வங்கியின் எல்லை களாக உள்ளன. மொத்தம் இந்த வங்கியில் 11 நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு 32 பேர் போட்டியிட்டனர்.

தி.மு.க. தரப்பில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜி. சுகுமார் மற்றும் அவரது அணியினரும், காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவரும், ஒன்றிய கவுன்சிலரு மான முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித் குமாரும் தேர்தலில் போட்டியிட்டார்கள்.

வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடினர்

இந்நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு இவ்வங்கியில் கூட்டுறவு தேர்தல் தொடங் கியது. தேர்தல் அதிகாரி ஆர். சீனிவாசன் தேர்தலை நடத்தினார். காலை 9.30 மணிக்கு 105 பேர் ஓட்டுப் பெட்டியில் வாக்குகளை பதிவு செய்தனர். அச்சமயம் திடீரென ஐயன் பேட்டை தி.மு.க. கிளை செயலாளர் ராமலிங்கம், வள்ளுவப்பாக்கத்தை சேர்ந்த சம்பத், முத்தியால்பேட்டையை சேர்ந்த தண்டுகுமார் ஆகிய தி.மு.க.வினர் திடீரென வாக்குப் பதிவு நடந்த அறைக்கு சென்றனர். அங்கிருந்த வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது பதிவாகியிருந்த வாக்குச்சீட்டுகளையும் அக்கும்பல் கிழித்து எரிந்தது.

வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் 5 போலீசார் முன்னிலை யில் இவ்வாக்கு பெட்டியை அக்கும்பல் கால் பந்து போல் தட்டி சென்று 200 மீட்டர் தூரத்தில் போட்டுவிட்டு மக்கள் கூடியதும் அக்கும்பல் தப்பி ஓடிச் சென்றது.

தேர்தல் அதிகாரி முற்றுகை

இத்தகவல் அறிந்ததும் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி. ரஞ்சித்குமார் மற்றும் காங்கிரசார் வங்கிக்கு சென்று தேர்தல் அதிகாரி சீனிவா சனிடம் நியாயத்தை கேட்டு முற்றுகை யிட்டனர். மேலும் காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்ட் அ.முனியப்பன் ஆயுதம் தாங்கிய போலீசாருடன் முத்தியால் பேட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு விரைந்தார். தேர்தல் அதிகாரி சீனிவாசனிடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் முனியப்பன் விசாரணை நடத்தினார். அப்போது தேர்தல் அதிகாரி சீனிவாசன், "ஒரு மர்ம கும்பல் வாக்குப்பதிவு நடை பெறும் அறைக்கு திடீரென வந்தது. அங்கிருந்து வாக்குப் பெட்டியை வேகமாக தூக்கி சென்று, அதிலிருந்த வாக்குச் சீட்டு களை கிழித்து எரிந்தது என்றார்'. உடனடி யாக துணை போலீஸ் சூப்பிரண்ட் முனியப்பன் அந்த கும்பலில் உள்ளவர்களை அடையாளம் காட்டுவீர்களா? என்றார். அதற்கு தேர்தல் அதிகாரி, சரியாக சொல்ல முடியாது என்றார்.

பதட்டம்

முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த தேர்தல் வன்முறையால் அங்கு பதட்டம் நிலவுகிறது. அங்கு கூடியிருந்த காங்கிரசார் தி.மு.க.வினரின் அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டனர்.

தேர்தல் ரத்து

எந்த தேதியில் மீண்டும் தேர்தல் நடக்கும் என்று நிருபர்கள் தேர்தல் அதிகாரியிடம் கேட்டனர். தற்போது தேர்தல் ரத்து செய்யப் பட்டது. தேர்தல் நடைபெறும் மறுதேதி அறிவித்ததும் தெரிவிக்கப்படும் என்றார்.

மரக்காணத்தில்...

மரக்காணம் அருகே உள்ளது அனுமந்தை கிராமம். அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு 11 இயக்குனர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. இக்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் இன்று காலை ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் ஓட்டு பதிவு நடந்தது. கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர்.

தே.மு.தி.க.வை சேர்ந்த ராஜேந்திரன் தலைமையில் 17 பேர் இயக்குனர் தேர்தலில் ஒரு அணியாக போட்டியிட்டனர். தி.மு.க.வை சேர்ந்த கண்ணன் தலைமை யிலான அணி உட்பட 20பேர் இன்னொரு அணியாக போட்டியிட்டனர்.

ஓட்டுப் பெட்டியை தூக்கிக்கொண்டு தி.மு.க.வினர் ஓட்டம்

விறுவிறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவில் காலை 9 மணி அளவில் கண்ணன் ஆதரவாளர்கள் திடீர் என்று ஓட்டுப் பதிவு நடக்கும் அரசு ஆரம்பப் பள்ளிக்குள் திபுதிபுவென்று புகுந்தனர். அங்குள்ள தேர்தல் அதிகாரியை தாக்கி விட்டு ஓட்டுப் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

தடுக்க வந்த போலீசார், விஜயகாந்த் கட்சியினர் மீது கல்வீச்சு

தடுக்க வந்த போலீசார் மீது கல் வீசினார்கள். கல்வீச்சில் மரக்காணம் சப்இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் உட்பட 4 போலீசார் காயமடைந்தனர். தே.மு.தி.க. வைச் சேர்ந்த ஆனந்தன், கேசவன் ஆகியோரும் காயமடைந்தனர். இதில் ஆனந்தன் கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

கடைகள் அடைப்பு; பதட்ட நிலை

அந்த கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. கடைகள் மூடப்பட்டு விட்டன. தகவலறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி. குமார் தலைமையில் போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று பல இடங்களிலும் தி.மு.க.வினர் இன்று வன்முறையில் ஈடுபட்டார்கள்.

0 comments: