"சிவாஜி' தடை கோரி வழக்கு...!

ஏவிஎம்மின் பிரம்மாண்ட தயாரிப்பான ரஜினியின் சிவாஜி படத்தை தடை செய்ய வேண்டும்; ரூ.50 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் சத்தியமூர்த்தி என்னும் காங்கிரஸ்காரர் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரது நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சிவாஜி படத்தில் காட்சி சித்தரிக்கப்பட்டிருப்பதாக தன் மனுவில் அவர் கூறியிருக்கிறார். கல்லூரி கல்விக்கு கட்டாய நன்கொடை வசூலிப்பது சம்பந்தமாக படத்தில் ஒரு காட்சி இடம் பெறுகிறது. தனியார் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கும் படத்தின் வில்லனுடன் (சுமன்) நாயகன் (ரஜினிகாந்த்) சந்தித்து உரையாடும் ஒரு காட்சியின் பின்புலத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இருவரின் படங்கள் மாட்டப்பட்டுள்ளன.

வில்லன் பின்னணியில் இப்படி அரசியல் பெருந்தலைவர்கள் இருவரின் படத்தை காட்டியிருப்பது அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகும்; அவப்பெயர் ஏற்படுத்துவது ஆகும். ஆகவே படத்தை திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், ரூ.50 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தன் மனுவில் அவர் கூறியிருக்கிறார்.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர், சென்னையில் உள்ள மத்திய தணிக்கை குழு, நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், இயக்குனர் ஷங்கர் மற்றும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு எதிராக சத்தியமூர்த்தி இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார்.

மனு நாளை விசாரணை வருகிறது

0 comments: