உயரே போகிறது பங்குச் சந்தை

யல்உயரே போகிறது பங்குச் சந்தை: 15 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.



பங்குச்சந்தை முதலீட்டாளர்களும், பங்கு வர்த்தகர்களும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வரலாற்று சாதனையை நேற்று மும்பை பங்கு சந்தை படைத்தது. ஆம்.15 ஆயிரம் புள்ளிகளை நேற்று தொட்டது.

கடந்த சில ஆண்டுகளாக பங்குச்சந்தை பரபரப்பாக பேசப்படுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியின் போக்கை அறிந்து கொள்வதற்கு ஒரு கண்ணாடி போல் பங்குச்சந்தை உள்ளது. பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இருந்த நிலைமை மாறி சாதாரண மக்களின் கவனத்தையும் இது இழுத்துள்ளது. "காளை'யாக சீறி பாய்ந்த பங்குச்சந்தையில் கடந்தாண்டு மே மாதம் ஒரு பலத்த சரிவு ஏற்பட்டது.

இதிலிருந்து மீண்டு, பங்குச்சந்தை மேல்நோக்கி வரத் துவங்கியது. இருப்பினும், சில மாதங்களுக்கு முன் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால், ஏற்றுமதியை நம்பியிருக்கும் தகவல் தாழில்நுட்பத்துறை பங்குகள் ஆட்டம் கண்டன. போதாக்குறைக்கு சிமென்ட், சர்க்கரை பங்குகளில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக பங்குச்சந்தையில் தள்ளாட்டம் கண்டது. வேகமாக சென்ற ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி 10 ஆயிரம் புள்ளிகளை பங்குச்சந்தை கடந்தது. இதன்பின் 13 ஆயிரம் புள்ளிகளை அக்டோபர் 17ம் தேதி எட்டியது. (இடையில் மே மாதம் 15ம் தேதி ஏற்பட்ட சரிவுக்கு பிறகும்) இதன் பின் 26 வர்த்தக நாட்களில் 14 ஆயிரம் புள்ளிகளை எட்டியது. இந்த 14 ஆயிரத்தில் 15 ஆயிரம் புள்ளிகளை எட்டுவதற்கு மட்டும் எடுத்து கொண்ட து ஏழு மாதங்கள். இந்த வரலாற்று சாதனையை நேற்று படைத்தது. நேற்றைய பங்குச்சந்தை துவக்கம் மந்தகதியில் தான் இருந்தது. சற்றே ஏறுவதும், சற்றே இறங்குவதுமாக இருந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் அறிவிக்கப்படும் பணவீக்க விகிதம் முந்தைய வாரத்தை விட சற்றே உயர்ந்து இருந்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தான் அதாவது வர்த்தகம் முடிய இரண்டு மணி இருக்கும் போது 15 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. முந்தைய நாள் வர்த்தகத்தை விட 145.33 புள்ளிகள் அதிகம். மும்பை பங்குச்சந்தையின் "லைப் டைம் ஹை' என்று குறிப்பிடும் வகையில் நேற்று15 ஆயிரத்து 7.22 புள்ளிகளை தொட்டுவிட்டு வர்த்தகம் முடியும் போது 14 ஆயிரத்து 964.12 புள்ளிகள் என நிலை பெற்றது.

நேற்று வரலாற்று சாதனை படைப்பதற்கு முக்கிய காரணம், தகவல் தொழில்நுட்ப பங்குகள் மற்றும் சிமென்ட் பங்குகளின் கணிசமான விலை உயர்வே ஆகும். அடுத்த வாரத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் காலாண்டு அறிக்கையை வெளியிட இருக்கின்றன. இதன் காரணமாக இந்த துறை பங்குகளை அதிகம் வாங்கப்பட்டதே முக்கிய காரணம். அடுத்து வெகுநாட்களாக ஒதுக்கப்பட்டு இருந்த சிமென்ட் பங்குகளை பலரும் வாங்கியது காரணம். "சென்செக்ஸ்' பட்டியலில் வரும் முப்பது பங்குகளில் நேற்று 25 பங்குகள் விலை உயர்ந்து இருந்தன. அதே போல் தேசிய பங்குச்சந்தையில் "நிப்டி' நேற்று உச்சத்தை தொட்டது. இது நான்காயிரத்து 411 புள்ளிகள் வரை சென்று விட்டு வர்த்தகம் முடியும் போது நான்காயிரத்து 384.85 என நிலை பெற்றது.

இந்த வாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "டிஎல்எப்' பங்குகள் நேற்று முன் தினம் பட்டியலிடப்பட்ட போது வரவேற்பு கிடைக்கவில்லை. ரூ.525க்கு பட்டியலிடப்பட்ட இப்பங்கு, அதிகபட்சமாக ரூ.583 வரை போனது. அதே சமயம் புதன்கிழமை வெளியிடப்பட்ட "விசால் ரீடெய்ல்' பங்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. ரூ.270 க்கு பட்டியலிடப்பட்ட இப்பங்கு இரண்டு மடங்குக்கும் அதிகமாக விலை போனது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ், விப்ரோ, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிகம் விலை போனது. ஐரோப்பிய பங்குச்சந்தை, ஷாங்காய் சந்தை ஆகியவை முன்னணியில் இருந்ததும் இந்த ஏற்றத்திற்குக் காரணம்.

0 comments: