தலையங்கம் - 'விடுதலை'

முல்லை பெரியாறு அணையும் - கேரள அதிகாரிகளின் அவசரமும்!


முல்லை பெரியாறு அணைப் பகுதி வட்டார செய்தி ஒன்று - ஜூன், ஜூலை மாதங்களில் அதிக மழை வேண்டி பெரியாறு அணைப் பகுதியில் விவசாயிகள் வருண பூஜை நடத்துவார்களாம். இந்த ஆண்டு அந்தப் பகுதியில் அத்தகைய பூஜை நடத்திட கேரள அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனராம்!

இப்படி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அறிவுப் பிரச்சினையா? உரிமைப் பிரச்சினையா? என்ற கேள்வி எழலாம்.
பார்த்தீர்களா, பார்த்தீர்களா, வருண பகவான் பூஜை நடத்துவதற்குக்கூட கேரள அரசு அனுமதி அளிக்கவில்லை என்று ஆர்ப்பரிக்கலாம்.பூஜையின்மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றால், முல்லை பெரியாறு பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே!

இந்தப் பொது அறிவிருந்தால், இந்தப் பிரச்சினையே ஏற்பட்டு இருக்காதே!
மழை பொழிவது வருண பகவானால் என்பதும், காற்றடிப்பது வாயு பகவானால் என்பதும், நெருப்புக் கிடைப்பது அக்னி பகவானால் என்றும் கருதிய காலம் கடைந்தெடுத்த கற்காலமாகும்.மழையையும், காற்றையும், நெருப்பையும் அறிவியலால் சுழலச் செய்யும் காலகட்டத்தில் இன்னும் காட்டு மிராண்டிக் காலக் கருத்தின் காலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருப்பது அறிவுடைமையானதுதானா?

கேரள மாநில அரசு முல்லை பெரியாறு பிரச்சினையில் நியாய விரோதமாகவும், சட்ட விரோதமாகவும் நடந்துகொண்டு இருக்கிறது என்பது வேறு பிரச்சினை. சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலத்தில் ``குறுகிய வட்டார வெறி’’ கண்மண் தெரியாமல் தலைவிரித்தாடுகிறது என்பது மக்களுக்குத் தெரிந்து விட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் அவர்களேகூட இந்தப் பிரச்சினையில் கேரள மாநில முதலமைச்சரிடம் நேரில் பேசி உரியன செய்வதாகக் கூறி பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால், பலன்தான் இதுவரை ஏற்படவில்லை.

இப்பொழுது நிலைமை என்ன தெரியுமா? அந்த வட்டாரத்தில் வருண பகவானுக்குப் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டாலும்கூட கனமழை கொட்டித் தீர்க்கிறது. இப்பொழுது அணையின் நீர்மட்டம் 131.50 அடி ஆகிவிட்டது. வினாடிக்கு 2091 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்துகொண்டும் இருக்கிறது. அணையி லிருந்து 1644 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளில் கேரள மாநிலப் பொதுப் பணித்துறை தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

142 அடிக்கு மேலும் அணையில் தண்ணீரைத் தேக்கினாலும் அணைக்கு அதனால் ஆபத்து ஏற்பட்டு விடப் போவதில்லை. அந்த அளவு அணை பலமாக உள்ளது என்று தொழில் ரீதியாக உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

142 அடிவரை தண்ணீர் தேங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதில் கேரள அரசு விழிப்பாக இருக்கிறது என்பதுதான் உண்மையாகும். இயற்கையாக மழை பொழிந்து 142 அடியையும் தாண்டிவிட்டால், கேரள அரசு சாதித்து வருகிற பிடிவாதம் அடிபட்டுப் போய்விடுமே! அதிக அளவு தண்ணீரைத் தேக்க முடியாது. அப்படித் தேக்கினால் அணை உடைந்து இடுக்கி மாவட்டமே மூழ்கிப் போய்விடும் என்ற அவர்களின் பொய்க் கூற்று அம்பலமாகிவிடுமே. அந்த அவசரத்திலும், ஆத்திரத்திலும்தான் அவர்களின் செயல்பாடுகள் அமைந்து இருக்கின்றன. தண்ணீரை அவசர அவசரமாக திறந்துவிடும் தந்திரம் இதுதான்!

0 comments: