மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இன்று மாலை 6 மணிக்கு அணையை பாசனத்துக்காக திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.. கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து காரணமாக கடந்த 29ம் தேதி 72 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்தது.
நேற்று காலை கபினி அணையில் இருந்து வினாடிக்கு 46 ஆயிரத்து 117 கனஅடி நீர், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து வினாடிக்கு 28 ஆயிரத்து 779 கனஅடி நீர் சேர்த்து மொத்தம் 74 ஆயிரத்து 896 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. இந்த நீர் இன்று மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 54 ஆயிரத்து 48 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 104.750 அடியாகவும், நீர் இருப்பு 71.135 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்தது. அணை நிரம்புவதற்கு இன்னமும் 22 டி.எம்.சி., நீர் தேவை. தற்போது அணையின் நீர் இருப்பு நாள் ஒன்றுக்கு 4.5 டி.எம்.சி., வீதம் உயர்கிறது. வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர்வரத்து கிடைக்கும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ஆறு டி.எம்.சி., வீதம் நீர் இருப்பு உயரும். இதனால், வரும் நான்கு நாட்களில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி விடும்.
அணை திறக்கும் முன்பே உபரி நீர் திறந்தால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிருப்தியடைவர். எனவே, உபரி நீர் திறப்பதற்கு முன்பே மேட்டூர் அணையை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். தற்போது மேட்டூர் அணை வேகமாக நிரம்புவதால் ஜூலை 25ம் தேதிக்கு முன்பாகவே மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
.இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்வரத்தை முதல்வர் கருணாநிதி நேற்று மீண்டும் ஆய்வு செய்தார். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஓரிரு நாட்களில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல்வரிடம் கூறினர். இதையடுத்து, இன்று (18ம் தேதி) மாலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment