குண்டர்களூக்கு தடை....!

வங்கி கடன் பாக்கி வசூல் செய்ய குண்டர்களுக்கு தடை! ரிசர்வ் வங்கி அடுக்கடுக்கான உத்தரவு



வங்கிகள் கடன் பாக்கி வசூல் செய்ய குண்டர்களை அனுப்பும் நடைமுறைக்கு ரிசர்வ் வங்கி முடிவு கட்டியுள்ளது.

இது தொடர்பாக அடுக்கடுக்கான பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதை பின்பற்றாவிடில் சம்பந்தப்பட்ட வங்கியின் செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் செயல்பாடு அதிகரித்துள்ளது. தனி நபர் கடன், வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட பல வகை கடன்கள் அளிக்கப்படுகின்றன. கிரெடிட் கார்டுகள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கி, பின்னர் அத்தொகையை வங்கிகளுக்கு செலுத்தும் நடைமுறையும் செயல்பாட்டில் உள்ளது. கடன் மற்றும் கிரெடிட் கார்டுகளை பெறும் நடைமுறைகளும் எளிதாகப்பட்டுள்ளன. இதன் காரணமாக வங்கிகளில் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், கடன் தொகையை திரும்பி செலுத்துவதில் சிக்கல் எழும் போது பிரச்னை அதிகரிக்கிறது.பெரிய அளவிலான தனியார் வங்கிகள் கடன் வசூல் செய்வதில் புதுவிதமான நடைமுறையை அவர்கள் பின்பற்றுகின்றனர். `ரெக்கவரி ஏஜென்ட்' என்ற பெயரில் குண்டர்களை பணியமர்த்தி கடன் தொகையை வசூல் செய்கின்றனர். இந்த கடன் வசூல் ஏஜென்ட்கள் வங்கி வாடிக்கையாளர்களிடம் முரட்டுதனமாக நடந்து கொள்கின்றனர். தினமும் பல முறை போனில் அடாவடியாக பேசுவது, ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை மிரட்டுவது போன்ற செயல்கள் நடக்கின்றன. இதனால் கடன் பெற்ற சிலர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை என்ற முடிவுக்கு சென்று விடுகின்றனர். இது போன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வங்கிகள் கடன் வசூலுக்கு குண்டர்களை பயன்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் சென்றதோடு, இப்பிரச்னை குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கலானது. அதிரடி குண்டர்கள் மூலம் வசூலிப்பதை சுப்ரீம் கோர்ட் கடுமையாக தன் தீர்ப்பில் சாடியுள்ளது. அந்த அடிப்படையில் ரிசர்வ் வங்கி தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளது. கடன் தொகையை வசூலிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுகுறிப்புகள் என்ற பெயரில் அடுத்தடுத்து பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகள் வருமாறு:

வங்கிகளால் நியமிக்கப்படும் கடன் வசூல் ஏஜென்ட்கள், வாடிக்கையாளர்களை வார்த்தைகள் அல்லது செயல் மூலம் மிரட்டுவதோ, கொடுமைப்படுத்துவதோ கூடாது.

ஏஜென்ட்கள் வசூல் தொகையை நிர்ணயித்தும், அவர்களுக்கு வாய்மொழி உத்தரவு மூலம் கெடுபிடித்திட்டங்களை அமல்படுத்த வங்கிகள் அனுமதிக்கின்றன. இதன் காரணமாக, ஏஜென்ட்கள் மிரட்டல் முறையிலும், கேள்விக்குள்ளாகும் நடைமுறைகளையும் பின்பற்றுகின்றனர். இந்த நடைமுறையை இனி பின்பற்றகூடாது.

கடன் தொகையை வாடிக்கையாளர் திருப்பி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டால், கடன் வசூல் ஏஜென்ட்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்ற தகவலையும், அந்த ஏஜென்ட்கள் குறித்த முழு விவரங்களையும் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கடன் வழங்கும் போது தெரிவிக்கப்பட்ட போன் எண்களில் இருந்து தான் வாடிக்கையாளர்களுடன் ஏஜென்ட்கள் பேச வேண்டும். இரவு நேரங்களில் மிரட்டல் கூடாது. மற்ற எண்கள் மூலம் மிரட்டும் முறை கூடாது. அப்படிப் பணியாற்றும் ஏஜன்டுகளுக்கு 100 மணிநேர முறையான பயிற்சி தேவை.

கடன் தரும் போது நிலுவை வந்தால் ஈடான சொத்து பறிமுதல் செய்யப்படும் என்ற ஷரத்து தெளிவாக குறிப்பிட வேண்டும். கடனை திருப்பி செலுத்தாத வாடிக்கையாளரிடம் அதுகுறித்து முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதே போல, ஏலம் விடும் போது முன்னறிவுப்புத் தகவலும் தேவை.

ரூ. 10 லட்சத்துக்கு குறைவான கடன் தொகை செலுத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டால், `லோக் அதாலத்'தை அணுகி, கடன் தொகையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பல உத்தரவுகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை மீறும் வங்கிகளை குறுகிய காலத்துக்கு தடை செய்யவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன் பிறகு வங்கி சம்பந்தப்பட்ட நடைமுறையில் மாற்றம் இல்லை என்றால் தடை காலம் நீடிக்கவும் முடிவு செய்துள்ளது.

தரவு - தினமலர்

இனி ஒரு விதி செய்வோம்....

ஒன்பது ரூபாய் நோட்டு் - விமர்சனம்



மண்ணையும் மனசையும் பின்னி பிசைந்து படம் எடுப்பதில் தங்கருக்கு நிகர் அவரே! இந்த ஒன்பது ரூபாய் நோட்டும் அப்படிப்பட்ட கதைதான். பண்ருட்டி பக்கத்தில் அமைந்திருக்கும் பத்திரக்கோட்டை கிராமம். அங்கே வாழ்ந்த மாதவர் படையாட்சி, வேலாயி, அவர்கள் சார்ந்த வாழ்க்கை என்று நகரும் கதையில் பிழிய பிழிய அழுகையும், கவலையும் ஒட்டிக்கொள்ள, இந்த இரண்டரை மணி நேர செலுலாய்ட் சிற்பத்திற்கு அடிமையாகி போகிறது மனசு. (உள்ளே போகிறவர்களுக்கு கர்சீப் அவசியம்)

திருட்டு மாங்காய் பறிக்கும் சிறுசுகள், சாயங்கால சந்தையில் ஏலம் கேட்கும் பெருசுகள், சந்தடி சாக்கில் காதல் வளர்க்கும் இளசுகள் என்று தங்கரின் கண்கள் கிராமத்து நிஜங்களை உள்வாங்கியிருக்கிறது. இந்த நிஜங்களையெல்லாம் விஞ்சி நிற்கிறது சத்யராஜ் என்ற மஹா கலைஞனின் நடிப்பு.

கிராமத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் மாதவர் படையாட்சி, தன் பிள்ளைகள் துணையோடு வயலில் பாடுபடுகிறார். இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆனபிறகும் பணத்தையும், பட்டுவாடாவையும் அப்பா மாதவரே பார்க்க, பெண்டாட்டிகளின் துணையோடு அப்பாவை கேள்வி கேட்கிற துணிச்சல் பிறக்கிறது மகன்களுக்கு. எதிர் வீட்டு பங்காளியின் தூண்டுதல் வேறு! இந்த லட்சணத்தில் கடைக்குட்டி மகனுக்கு அந்த ஊர் வண்ணானின் மகள் மேல் காதல்! கண்டிக்கிற அம்மாவிடம், அவள் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்று போராடுகிறான். அவமானத்தால் கூனிக்குறுகி போகும் முதியவர்கள் இருவரும் பிள்ளைகளிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் பக்கத்தில் குடியேறுகிறார்கள். ஆறு வருடங்கள் போயே போய்விடுகிறது. போன இடத்தில் பெண்டாட்டியை பறிகொடுக்கிற மாதவர் திரும்பி ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில்...?

கிராமத்து மனிதர்களுக்கேயுரிய ரோசத்தோடும், பெருந்தன்மையோடும், மாதவர் படையாட்சியாகவே உருமாறிவிட்டார் சத்யராஜ். கோவிலில் மனைவிக்கும் மகனுக்கும் நடக்கும் விவாதத்தை கேட்டு அப்படியே உறைந்து போகிற காட்சியிலாகட்டும், பல வருடங்கள் கழித்து மகனை பார்த்து வேதனையில் துடிப்பதாகட்டும், மனைவியை பாம்பு தீண்டிவிட, ஐயோ என்று அலறித் துடிப்பதாகட்டும், கடைசி கடைசியாக பேரனை கொஞ்சிவிட்டு, வேறெதுவும் தர இயலாமல் இறுகிப் போவதாகட்டும், இனிமேல் நடிக்க எதை மிச்சம் வைத்திருக்கிறார் சத்யராஜ்? விருதுக்கமிட்டிகளுக்கு சத்யராஜின் விலாசம் பழகிவிடும் போலிருக்கிறது.

சத்யராஜுக்கு சமமான போட்டி என்றால் அது அர்ச்சனாவுக்குதான். அடித்தொண்டை கிழிய 'வாழும் முனியே... இப்படி பண்ணிட்டியே...' என்று அவர் அலறும் காட்சிகளில் மெய்சிலிர்த்து போகிறது. வா என்ற ஒருவார்த்தைக்காக கணவனின் கைபிடித்து நடக்கும் இந்த காதல் கிழவி கண்கலங்க வைத்திருக்கிறார்.

இந்து முஸ்லீம் உணர்வுக்கு எடுத்துக்காட்டாக மட்டுமல்ல, இதுவல்லவோ நட்பு என்று சிலாகிக்கவும் வைக்கிறார் நாசர். அதே நேரத்தில், தான் வளர்த்த ஆடுகள், சேமித்த பணம் எல்லாவற்றையும் கொடுத்த மாதவரை, எப்போதாவது வந்து பார்த்திருக்கலாமே இந்த காஜாபாய் என்ற கேள்வியும் எழும்புகிறது நாசரை பார்க்கும்போது.

கிராமத்து வண்ணான் வீட்டு பெண்ணுக்கு பெரியய்யா வீட்டு பையன் மேல் காதல். கூனிக்குறுகி அவர் வீட்டில் சோறு கேட்கும் அவலத்தை படித்த பெண்ணான அவளால் தாங்க முடியுமா? அந்த தவிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் புதுமுகம் இன்பநிலா. (நிறம் என்னவோ அமாவாசை?)

அந்த கோவணத்து ஆசாமி, நம்ப டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரல்லவா? ரொம்ப பழசாக இருந்தாலும் நம்பிக்கை அளிக்கும் புதுவரவு.

மனசு பொங்கி கண்ணீருக்கு வழிவிடுகிற நேரத்தில் எல்லாம் அதை விரைவாக செய்துவிட வைக்கிறது இசை. அற்புதம் பரத்வாஜ். மார்கழியில் குளிச்சு பாரு...வேலாயி... போன்ற பாடல்கள் உள்ளிட்ட எல்லா பாடல்களிலும் இசை ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் பரத்வாஜ்.

அந்த ஊருக்கே அழைத்து போன உணர்வை அளிக்கிறது ஒளிப்பதிவு.

எல்லாம் கச்சிதமாக இருந்தும், திருஷ்டி பொம்மை போல் தலைநீட்டும் சில இடைச்செறுகல்களை தவிர்த்திருக்கலாம். (உ.தா- இப்பல்லாம் இந்த கொடிதான் நம்ப ஊர்ல அதிகம் பறக்குது. அவங்களுக்குதான் செல்வாக்கும் அதிகம்).

விலை மதிப்பற்ற நோட்டு

தரவு - தமிழ்சினிமா.காம்

WE(A)eKEND





புலிகளின் செயற்கைகோள் மையம் தகர்ப்பு: 3 பேர் பலி

இலங்கையில் புலிகளின் ரகசிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை போர் விமானங்கள் இன்று காலை குண்டுவீசி தகர்த்தன. இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாய மடைந்தனர்.

விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் புலிகள் தரப்புக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படுகிறது. சில வாரங்களுக்கு முன் இலங்கை ராணுவம் நடத்திய விமான தாக்குதலில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட முக்கிய தலைவர்கள் பலர் பலியாயினர். இச்சம்பவம் புலிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அதன்பின் இலங்கை ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. "புலிகளின் ரகசிய இடங்கள் எல்லாம் குண்டுபிடிக்கப்பட்டு விட்டது. முக்கியத் தலைவர்களை ஒவ்வொருவராக கொல்வோம்" என இலங்கை விமானப்படை தளபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில், "கிளிநொச்சி பகுதியில் உள்ள தர்மாபுரம் கிராமத்தில் ஒரு ரகசிய இடத்தில் அமைந்துள்ள புலிகளின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை போர் விமானங்கள் இன்று காலை குண்டு வீசி தகர்த்தன. இதனால் புலிகள் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது" என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி புலிகள் தரப்பில், "இலங்கை விமானப்படை 8 குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

WE(A)eKEND






கமல் மகள் கதாநாயகியாகிறார்....


கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி, மாதவன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
நடிகர் கமல்ஹாசன், சரிகாவுக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரு மகள்கள் உள்ளனர். கமலிடம் விவாகரத்து பெற்று சரிகா பிரிந்து வாழ்கிறார். இதனால் இரு மகள்களும் சென்னையில் கமலுடன் வசித்து வருகின்றனர். மூத்த மகள் ஸ்ருதிக்கு இசையில் ஆர்வம் அதிகம். சினிமாவில் பாட ஆசைப்பட்ட அவர், கமல் நடித்த "தசாவதாரம்" படத்தில் மல்லிகா ஷெராவத் ஆட்டத்துக்கு பாடியுள்ளார். இதையடுத்து தனி இசை ஆல்பம் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ருதியை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. நிறைய அழைப்புகள் வந்தும் அவர் நிராகரித்து விட்டார். வெங்கட் பிரபு இயக்கும் ‘ஏழு’ படத்தில் அவரை நடிக்க கேட்டபோது, மறுத்துவிட்டார்.

இந்நிலையில், மாதவன் ஜோடியாக தமிழ்ப் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சேரன், சினேகா ஜோடி சேரும் ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தை தயாரிக்கும் ஞானம் பிலிம்ஸ், அடுத்து மாதவன் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை மும்பையைச் சேர்ந்த நிஷிகாந்த் காமத் டைரக்ட் செய்கிறார்.

தற்போது அவர் இயக்கிய ‘எவனோ ஒருவன்’ படத்தில் மாதவன், சங்கீதா நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது.

இதைத் தொடர்ந்து ஜனவரியில் மாதவன், ஸ்ருதி நடிக்கும் படம் தொடங்குகிறது. படத்துக்கு பெயர் சூட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தரவு - தமிழ்முரசு

WE(A)eKEND

திமுக மாவட்ட செயலாளர் குண்டு வீசி படுகொலை

பத்திரிகை கொடுப்பதுபோல் நடித்து கைவரிசை திருவாரூரில் பதற்றம்; கடைகள் அடைப்பு, திமுக மாவட்ட செயலாளர் குண்டு வீசி படுகொலை!



திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வனை இன்று காலை ஒரு கும்பல் குண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. திருமண பத்திரிகை கொடுப்பதுபோல வந்த 4 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராகவும், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் இருந்தவர் பூண்டி கலைச்செல்வன் (47). இவரது வீடு கொரடாச்சேரியில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு இவரது வீட்டுக்கு 4 பேர் வந்தனர். வீட்டில் இருந்தவர்கள் விசாரித்தபோது, திருமண பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக கூறினர்.

இதனால், அவர்களை கலைச்செல்வனை பார்க்க அனுமதித்தனர். அப்போது அந்த 4 பேரும் திடீரென பையில் வைத்திருந்த வெடிகுண்டை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது வீசினர். குண்டு சத்தம் கேட்டதும் கலைச்செல்வன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது அந்த கும்பல் தயாராக வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் கலைச்செல்வன் சரிந்து விழுந்ததும் நான்கு பேரும் அங்கிருந்த பைக்கில் ஏறி தப்பிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலைச்செல்வனை உடனடியாக திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.

கலைச்செல்வன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருவாரூர் மாவட்ட திமுகவினர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. கொரடாச்சேரியில் ஒரு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. பல பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் திருவாரூரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள்தான் கலைச்செல்வனை கொலை செய்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர்கள், கடந்த ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மணல்மேடு சங்கர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

திருச்சி சரக ஐ.ஜி. ராஜா, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாஷ்குமார் ஆகியோர் திருவாரூர் விரைந்துள்ளனர்.

தரவு- தமிழ்முரசு

தி.நகரில் போக்குவரத்து மாற்றம்




தி.நகர் உஸ்மான் சாலை, துரைசாமி சாலை சந்திப்பில் நடக்கும் மேம்பாலப் பணியையட்டி, இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாகேஸ்வரா சாலை - உஸ்மான் சாலை சந்திப்பு முதல் பிரகாசம் சாலை - உஸ்மான் சாலை சந்திப்பு வரை உள்ள உஸ்மான் சாலையின் ஒரு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

துரைசாமி சாலையிலிருந்து உஸ்மான் சாலை மற்றும் பிரகாசம் சாலை வழியாக, இதுவரை ஜி.என்.சாலை, தியாகராயா சாலை, வெங்கட்நாராயணன் சாலைக்கு சென்ற வாகனங்கள் இனிமேல் துரைசாமி சாலை, உஸ்மான் சாலை, நாகேஸ்வரா சாலை, பாஷ்யம் சாலை (இதுவரை வாகனங்கள் நிறுத்தப்பட் டிருந்த பகுதி) வழியாகச் செல்லலாம்.

பாஷ்யம் சாலை வந்தடைந்த வாகனங்கள் தியாகராயா சாலைக்கு செல்ல பாஷ்யம் சாலை மற்றும் தியாகராயா சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பி செல்லலாம். அதேபோல், வெங்கட்நாராயணா சாலைக்கு செல்லும் வாகனங்கள் மேற்படி சந்திப்பில் ‘யூ’ திருப்பம் திரும்பி செல்லலாம். மேலும் அத்தகைய வாகனங்கள் ஜி.என்.சாலைக்கு செல்ல பாஷ்யம் சாலை மற்றும் பிரகாசம் சாலை சந்திப்பு வரை சென்று அச்சந்திப்பில் வலது புறமாக திரும்பி ஜி.என்.சாலைக்கு செல்லலாம்.

வெங்கட்நாராயணா சாலையிலிருந்து ஜி.என். சாலை மற்றும் தியாகராயா சாலைக்கு இதுவரை நாகேஸ்வரா சாலை, உஸ்மான் சாலை மற்றும் பிரகாசம் சாலை வழியாக சென்ற வாகனங்கள், இனிமேல் பாஷ்யம் சாலை வழியாக வந்து பாஷ்யம் சாலை மற்றம் தியாகராயா சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பி தியாகராய சாலைக்கு செல்லலாம். ஜி.என்.சாலைக்கு செல்ல பிரகாசம் சாலை மற்றம் பாஷ்யம் சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பி ஜி.என்.சாலை செல்லலாம். தியாகராயா சாலையிலிருந்து ஜி.என்.சாலைக்கு இதுவரை நாகேஸ்வரா சாலை, உஸ்மான் சாலை, பிரகாசம் சாலை வழியாக சென்ற வாகனங்கள், இனிமேல் தியாகராயா சாலையிலிருந்து பாஷ்யம் சாலைக்கு இடது புறமாக திரும்பி பாஷ்யம் சாலை மற்றும் நாகேஸ்வரன் சாலை சந்திப்பில் ‘யூ’ திருப்பம் திரும்பி பாஷ்யம் சாலை (இதுவரை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதி) வழியாக வந்து பிரகாசம் சாலை மற்றும் பாஷ்யம் சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பி ஜி.என்.சாலைக்கு செல்லலாம்.

மேலும், நாகேஸ்வரா மற்றும் பாஷ்யம் சாலைகளில் வாகனங்கள் நிரந்தரமாக நிறுத்துவதும், பயணி களை இறக்கிவிட தற்காலிகமாக நிறுத்துவதும் அனுமதி இல்லை. ஜி.என்.சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று ஒதுக்கப்பட்ட மேற்படி சாலையின் பாதி பகுதியில் நிறுத்தலாம்.

தரவு-தமிழ்முரசு

நடிகர் கமலிடம் விசாரணை! உதவி இயக்குனருக்கு கொலை மிரட்டல்

சினிமா உதவி இயக்குனரின் வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், அவரது மேனேஜர்கள், சினிமா பி.ஆர்.ஓ. உள்ளிட்டவர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தனுஷ்", "அப்படியா" ஆகிய படங்களின் உதவி இயக்குனர் செந்தில்குமார் (32). சென்னை மேற்கு தாம்பரம் பூர்ண திலகம் குறுக்குத் தெருவில் வசிக்கிறார். தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி இவர் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

"அர்த்தநாரி என்ற குளோனிங்" என்ற பெயரில் ஒரு கதை தயார் செய்து நடிகர் கமல்ஹாசனிடம் கூறினேன். கதை வித்தியாசமாக இருப்பதாக கூறி கமல்ஹாசனும் அவரது மேனேஜர் முரளியும் என்னை வரச்சொன்னார்கள். நண்பர் பாலாவுடன் சென்றேன். கமல்ஹாசன், மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் ஆகியோரிடம் கதையை கூறினேன்.

சூப்பராக இருப்பதாக கூறி ரூ.501 அட்வான்ஸ் கொடுத்தனர். ரூ.25 லட்சம் தந்து, படத்தில் இணை இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு தருவதாக கூறினர். அதற்குப் பிறகு, அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. சில நாட்களுக்கு பிறகு, ஒரு படத்தில் 10 வேடங்களில் கமல் நடிக்கப்போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வந்தது. நான் சொன்ன கதைதான் அது. மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களிடம் கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பிவிட்டனர்.

இதையடுத்து, தசாவதாரம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு, தடை நீக்கப்பட்டது. ஐகோர்ட்டில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. படத்துக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் மனு செய்தேன்.

இது கமல்ஹாசனுக்கு தெரியவந்ததும், அவரது மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் மற்றும் 10 பேர் என் வீட்டுக்கு வந்தார்கள். "சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் வாங்கு. இல்லாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவோம். உன் குடும்பத்தினரை ஒழித்துக்கட்டி விடுவோம்" என்று மிரட்டினர். இதுகுறித்து மாநகர காவல் துறையிடம் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

என் கதையை வாங்கி ஏமாற்றியதுடன், எனக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் செந்தில்குமார் கூறியிருந்தார்.

அவரது சார்பில் மனுவை வக்கீல் சாமி வெங்கடேசன் தாக்கல் செய்திருந்தார். வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு வக்கீல் ஆறுமுகம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் போலீசார் ஆலோசனை செய்தனர். இதையடுத்து கமல்ஹாசன், மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் மற்றும் 7 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 451 (அத்துமீறி வீட்டில் நுழைதல்), 506/2 (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்தார்.

கமல்ஹாசன் உள்பட அனைவர் மீதும் விரைவில் விசாரணை நடத்தப்படும். விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட உள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு கமல்ஹாசன் உள்பட அனைவருக்கும் விரைவில் உத்தரவிடப்பட உள்ளது என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோடம்பாக்க வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொல்லாதவன் - விமர்சனம்


தினமும் ஐந்து லட்சம் பேருக்கு மேல் சென்னைக்கு வந்திறங்குகிறார்களாம். இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, குலை நடுங்கவைக்கும் கொலைகார சென்னையை காட்டியிருக்கிறார்கள். 'மளுக் மளுக்'கென்று வெண்டைக்காயை முறிப்பதுபோல் முறித்துப் போடுகிறார்கள் மனிதர்களை. இந்த இரத்த பிசையலுக்கு நடுவில், காதல் என்ற நிலாச்சோறும் இருக்கிறது. நிம்மதி!

ஒரு பைக்கிற்கு ஆசைப்பட்ட தனுஷின் வாழ்க்கை, தாறுமாறாக ஓடி கடைசியில் முட்டு சந்தில் நிற்பதுதான் கதை. வாரத்திற்கு ஒருமுறை ஷோரூமிற்கு வந்து 'பல்சர்' விலையை கேட்டுவிட்டு போகும் தனுஷ், கடைசியில் அதை வாங்கியே விடுகிறார். ஒரு காதலியை போல நேசிக்கும் அவர், ஒரு சந்தர்பத்தில் அதை தொலைத்துவிட்டு நிற்க, திருடிய கோஷ்டி அதில் பிரவுன் சுகர் கடத்துகிறது. எப்படியாவது பைக்கை அடைந்துவிட தவிக்கும் தனுஷ், அந்த போராட்டத்தில் செய்யும் கொலைகள்தான் முடிவு.

தறுதலை பிள்ளைகளின் ஜெராக்ஸ் ஆகவே மாறியிருக்கிறார் தனுஷ். நண்பர்களுடன் குடித்துவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்பி, அப்பா கொடுக்கிற அறையையும் வாங்கிக் கொண்டு, சிரிப்பு சிரிப்பா வருதுப்பா என்கிறாரே... அது தந்தைகுலங்களுக்கு கொடுக்கிற எனிமா. தூறல் புயலானது மாதிரி, மெல்ல துவங்குகிற சண்டை, நான் திருப்பி அடிச்சா நல்லாயிருக்காது என்று முடிவது பயங்கரம். குடும்ப சென்டிமென்ட்டை விடுங்கள். அந்த காதல் எபிசோட் பிரமாதம். தயங்கி தயங்கி காதலை சொல்லப் போகும்போதெல்லாம் தனுஷ§க்கு நெகட்டிவ் சிக்னல் காட்டும் திவ்யா, திடீரென்று ஒருநாள் என்னை காலேஜில் விட்டுடறியா? என்று பைக்கில் ஏறிக் கொள்வது 'நல்ல பொண்ணுங்கடா' என்று வாய்விட்டு முணுமுணுக்க வைக்கிறது.

தனுஷின் அப்பாவாக மலையாள முரளி. தேறவே மாட்டான் என்று நினைக்கிற பிள்ளை, வேலைக்கு போக ஆரம்பித்ததும் ரகசியமாக சந்தோஷப்படுகிறாரே அங்கேயும், மருத்துவமனையில் அரிவாள் தூக்கப்போகும் தனுஷை, அருகே அழைத்து தனக்கு பிறகு குடும்பத்தை சுமக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறாரே அங்கேயும், தானொரு அவார்டு வின்னர் என்பதை நினைவுபடுத்துகிறார்.

கலகலப்புக்கு கருணாசும், சந்தானமும். முதன்முதலாக பைக் வாங்கிய நண்பன் ஆசையோடு அழைப்பதாக நினைத்துக் கொண்டு போகிற சந்தானம், அழைக்கப்பட்டது எதற்காக என்பது தெரிந்ததும் வெகுண்டு எழுவது வெடிச்சிரிப்பு. டெலிபோன் டைரக்டரியை, ஏதோ ஆங்கில நாவல் மாதிரி விரித்து வைத்துக் கொண்டு ஃபிகர் தேற்றும் கருணாசும் நகைக்க வைக்கிறார்.

டேனியல் பாலாஜி, பவன், கிஷோர்குமார் என்று பதைபதைக்க வைக்கிறார்கள் வில்லன்கள். அதிலும் சொந்த அண்ணனையே போட்டுத்தள்ளும் பாலாஜியின் முகுத்தில் குரூரம் கொப்பளிக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ரீமிக்ஸ் பாடலான 'எங்கேயும் எப்போதும்' எவர்கிரீன். மற்றவை பிரகாஷின் இமேஜை பல படிகள் கீழே தள்ளும். குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் சந்து பொந்துகளிலும், கொலை நடக்கும் அரையிருட்டுகளிலும் ஒளிப்பதிவாளரின் திறமை வெளிச்சம் போட்டிருக்கிறது.

அருவாள காட்டி ரவுடிகளை விரட்டலாம். ரசிகர்களை விரட்டலாமா?

-ஆர்.எஸ்.அந்தணன்



தரவு - தமிழ்மணம்.காம்

ஆக்ரா - விமர்சனம்

தீபாவளி திரைப்படங்களின் விமர்சனங்கள்...சுடச்சுட உங்களின் பார்வைக்கு


'பொளேர்' என்று கன்னத்தில் அறைகிற வசனங்கள், அங்கங்கே எட்டிப்பார்க்கும் 'பார்த்திப' கிறுக்குகள், காதலர்கள் இருவர் ஒதுங்குகிற நேரம் க்ளோஸ்-ஷாட்டில் 'ஆட்கள் வேலை செய்கிறார்கள்' என்ற போர்டு! இப்படி முதல் பாதி ஆக்ரா, முழுக்க முழுக்க வயாக்ரா! இரண்டாம் பாதி நிஜமாலுமே ஆக்ராவுக்கு பயணமாகி காதலில் கரைகிறது. தண்ணீருக்காக பல மைல் தூரம் பானை சுமக்கிற ஹீரோயினுக்கு, தண்ணீருக்கு நடுவிலேயே வீடு கட்டி வாழ வேண்டும் என்ற ஆசை! இதுபோல் படம் முழுக்க மனசை கொள்ளையடிப்பதற்கென்றே நிறைய விஷயங்கள்.

காதலை பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதற்காக அமெரிக்காவிலிருந்து ஆலப்புழாவுக்கு வருகிறார் எமிமோகன். அங்கே அப்பாவின் நண்பர் நாசர், நாற்பது வருடங்களாக ஒரு கடிதத்திற்காக காத்திருக்கிறார். அது...? பிளாஷ்பேக் விரிகிறது. வயலின் கலைஞரான கண்ணன் ஆக்ராவில் சந்திக்கிறார் பொம்மை விற்கும் அஞ்சலியை! பார்த்தவுடனே பற்றிக் கொள்கிறது காதல். காதலுக்கு எதிரியான அந்த பூமி, அக்கினியாய் மாறி ஆக்ஷன் எடுப்பதற்கு முன்பே கண்ணனை தமிழ்நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறாள் அஞ்சலி. வருகிறபோது தன் முகவரியிட்ட கடிதம் ஒன்றை கொடுக்கிறான் கண்ணன். எப்போது நான் வந்து அழைக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்போது இதை அனுப்பு. வருகிறேன். இதுதான் கடிதத்திற்கான பின்னணி. நாற்பது வருடங்கள் கழித்து கடிதம் வர, மகிழ்ச்சியோடு ஆக்ரா செல்லும் காதலனுக்கு அங்கு கிடைத்தது என்ன? க்ளைமாக்ஸ்!

நாசரின் பார்வையில் பார்க்கிற எல்லாமே பிளாக் அண் ஒயிட்டாக தெரிவதையும், அதை வசனங்களால் கூட குறிப்பிடாமல், கடைசியில் விளக்குவதும் இயக்குனரின் சாமர்த்தியம். ஆபரேஷனுக்கு பிறகு கண்களை அவிழ்த்து, இமைகளை படபடத்து நீட்டி முழக்காமல், நாசரின் கண்ணுக்கு தபால்காரரையே கலர்புல்லாக காட்டி காட்சியை சுருக்கியிருக்கிறார் எடிட்டர். பலே! புதுமுகம் அஞ்சலியும், விகாஷ§ம் ஒன்றி நடித்திருக்கிறார்கள். ஆங்கில படமே தோற்றுப்போகிற அளவுக்கு லிப் டு லிப் காட்சிகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.

பீச்சில் சுண்டல் விற்கிற பையன், 'பேசாம சுண்டல் விக்கறதுக்கு பதிலா நிரோத் வித்திருக்கலாம் சார்' என்று போகிற போக்கில் காதல் பற்றி, கமெண்ட் அடிக்கிற போது பகீர் என்கிறது. அடிக்கடி காதல் பற்றி விவாதித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால், காதல்ங்கிறது... என்று ஆரம்பித்து குட்டியாக லெக்சர் கொடுப்பதுதான் போர்ர்ர்ர்! போதும் போதாதற்கு காயத்ரி என்ற பெண்ணை உருட்டி விளையாடியிருக்கிறார்கள். 'பிட்' படமோ என்ற அச்சமே வந்துவிடுகிறது.

டி.ராஜேந்தர் போல் உருவத்தோற்றமுள்ள அந்த புதுமுகம் கவனத்தை ஈர்க்கிறார்.

ஆக்ராவின் அழகையும், அவலத்தையும் ஒரேநேரத்தில் உள்வாங்கியிருக்கிறது பி.செல்வகுமாரின் கேமிரா. மதுரா, சிரபுஞ்சி, ஆலப்புழா என்று பசுமையை பந்தி வைத்திருக்கிற கேமிராமேனுக்கு முதல் சபாஷ்! நான் மட்டும் சளைத்தவனா என்கிறார் புதுமுக இசையமைப்பாளர் சி.எஸ்.பாலு. பின்னணி இசை மனசை அள்ளிக் கொண்டு போகிறது.

விருந்தா? விஷமா? சின்ன குழப்பத்தோடுதான் வெளியேற வேண்டியிருக்கிறது!

-ஆர்.எஸ்.அந்தணன்

தரவு - தமிழ்சினிமா.காம்

கண்ணாமூச்சி ஏனடா - விமர்சனம்

தீபாவளி படங்களின் விமர்சனம் சுடச்சுட...உங்களின் பார்வைக்கு



மலேசியாவில் துவங்கி, சென்னைக்கு நகர்ந்து, பிறகு அங்கிருந்து ஊட்டிக்கு நகர்ந்து, அதே வேகத்தில் மறுபடியும் சென்னைக்கு நகரும் படம்! (கதை நகரவே மாட்டேங்குது என்று யாரும் குறை சொல்ல முடியாதல்லவா?)

மலேசியாவில் சந்தியாவை பார்க்கும் ப்ருத்திவிராஜ், கண்டவுடன் காதல் கொள்கிறார். தன் குண்டு மூக்கின் மேல் கோபத்தை வரவழைத்துக் கொள்ளும் சந்தியாவும், முதலில் முரண்டு பிடித்து, பிறகு பிருத்திவிராஜ் மேல் காதல் கொள்ள, இந்தியாவுக்கு வருகிறார்கள் இருவரும். சென்னையில் போலீஸ் கமிஷனராக இருக்கும் சத்யராஜ், தன் மகள் சந்தியாவின் காதலனை சந்தேகத்தோடு பார்க்க, அம்மா ராதிகாவுக்கு வருங்கால மருமகன் மேல் நம்பிக்கை! விசில் வரும் நேரத்தில் குக்கர் வெடித்த கதையாக சத்யராஜும், ராதிகாவுமே பிரிய நேர்கிறது. வீட்டை விட்டு வெளியேறிய ராதிகாவை மறுபடியும் சத்யராஜுடன் இணைத்து வைக்க போராடுகிறார் பிருத்திவிராஜ். இதற்கிடையில் மாப்பிள்ளை நல்லவர்தான் என்று மாமனாரும் உணர, இறுதியில், சின்ன சூயிங்க இழுவலோடு சுபம்!

சைக்காலஜி படிப்பதற்காக மலேசியா வந்த சந்தியாவின் நடிப்பு தூள்! சைக்காலஜி பாடத்தை ரோட்டிலேயே மனப்பாடம் செய்து கொண்டே நடக்கிற அழகும், ஏய்...ஏய் என்று கண்களும், உதடுகளும், அவருக்கே ஸ்பெஷலான அந்த மூக்கும் துடிக்க, கோபப்படுவதும் அழகோ அழகு.

சென்னைக்கு வரும் பிருத்திவிராஜை போலீஸ் கமிஷனர் சத்யராஜ் வரவேற்பது அமர்க்களம்! வயர்லெசில் கைதியின் விசாரணை லைவ்வாக வந்து கொண்டேயிருக்க, அதையும் காதில் வாங்கிக் கொண்டே பிருத்திவி பதில் சொல்லி சமாளிக்கிறாரே...சூப்பர். பிருத்திவி அறையிலேயே சத்யராஜ் தங்கி அவரை அவஸ்தைப்படுத்துவது இன்னொரு பகீர் சிரிப்பு. அவரது ஓயாத குறட்டையையும், கட்டில் ஆக்ரமிப்பையும் சின்ன புன்னகையோடு சகித்துக் கொள்ளும் பிருத்திவிராஜின் பொறுமை அலாதி நகைச்சுவை. மெல்ல, மெல்ல, சத்யராஜ் பாணியிலேயே போய் அவரை கலவரப்படுத்துவதும் சுவாரஸ்யம்.

பல படங்களுக்கு பிறகு தனக்கேயுரிய ஸ்பெஷல் ஐட்டங்களுடன் ரகளை கட்டியிருக்கிறார் சத்யராஜ். மனைவி ராதிகாவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க தயங்கி, பின்பு உடைந்து நொறுங்குகிறபோது சென்ட்டிமென்ட் சிகரமாகிறார். 'நீ இல்லாம என்னால சாகக்கூட தெரியாது' என்று அவர் கதறுகிற போது, சிவக்குமாரின் வசனங்களுக்கும் கிரீடம் முளைக்கிறது.

ஓடிப்போன அக்கா(வா?)வாக ஸ்ரீபிரியா. வனத்துறை அதிகாரியாம். அறிமுகமே அசத்தல். இந்த பொறியிடம் சத்யராஜ் என்ற சிங்கமே மாட்டிக் கொண்டு அல்லல் பட்டிருக்கிறது. பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொள்கிற இந்த இரட்டையர்கள், அந்த நெகிழ்வான நிகழ்ச்சியையும் காமெடியாக்கிவிடுவதுதான் உறுத்தல்!

மலேசியா, ஊட்டி என்று அகோரப் பசியோடு மேய்ந்திருக்கிறது ப்ரிதாவின் கேமிரா! யுவன்சங்கர்ராஜா இசையில் பாடல்கள் பரவசம். குறிப்பாக மேகம் மேகம்... பாடல்! அன்று வந்ததும் அதே நிலா ரீமிக்சில் யுவனின் இசையும், சத்யராஜ்-ராதிகா ஜோடியும் ஆட்டமும் போட்டி போட்டிருக்கிறது.

கலகலப்பான கண்ணாமூச்சி ஆட்டம்தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

தரவு - தமிழ்மணம்.காம்

செய்திகளை முந்தித்தருவது மிளகாய்....

காவிரி - வைகை நதிகளை இணைக்க திட்டம்

கரூர் கட்டளையில் இருந்து குண்டாறு வரை ரூ.1,000 கோடியில் முதல் கட்டப் பணி


வறட்சி பாதித்த மாவட்டங்களை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய அளவில் நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது பற்றி ஆய்வு செய்ய கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக தென்னிந்தியாவில் ஓடும் நதிகளையாவது இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யோசனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநிலத்தில் ஓடும் நதிகளை இணைத்து வறட்சி பாதித்த பகுதிகளை மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளிலிருந்து உபரி தண்ணீரை, வறட்சி பாதித்த பகுதிகளுக்கு திருப்பிவிடுவது குறித்து மாநில பொதுப்பணித் துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

முதல் கட்டமாக காவிரியையும் வைகையையும் இணைப்பது பற்றி ஆய்வு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

காவிரி படுகை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவ தோடு, வறட்சி பகுதிகளான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமனாதபுரம், விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கவும் முடியும் என்கின்றனர் பொதுப்பணித் துறை பொறியாளர்கள்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கட்டளையில் காவிரி ஆற்றின் குறுக்கே மதகு அணை கட்டப்பட்டுள்ளது. இதை வெள்ள நீரை தேக்கி வைக்கும் அணையாகவும், தண்ணீர் மேலாண்மையை சிறப்பாக நிர்வகிக்கும் இடமாகவும் மாற்றப்படும்.

பின்னர், அங்கிருந்து குண்டாறு வரை வாய்க்கால் வெட்டப்படும். இந்த வாய்க்கால், அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, வைகை, ஆகிய ஆறுகளையும் இணைக்கும். இந்த கால்வாயின் மொத்தம் நீளம் 255 கி.மீ.

கடந்த 1975ம் ஆண்டு முதல் மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது பற்றிய கணக்கெடுத்தில் மேட்டூர் அணைக்கு 15 ஆண்டுகளில் 5 முதல் 81 நாட்கள் கூடுதல் தண்ணீர் வந்துள்ளது. மேலும் காவரி பாசன பகுதிகளில் அதிகளவில் மழை பெய்யும் போதும், கட்டளையில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, கால்வாய்க்கு திருப்பி விடப்படும்.

காவிரி வெள்ள நீரை மட்டுமின்றி, அரியாறு, கோரையாறு ஆகியவற்றில் மழை காலங்களில் ஓடும் வெள்ள நீரையும் இந்த கால்வாய் மூலம் திருப்பிவிடப்படும்.

இந்த இணைப்பு மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் நல்ல பலனையடையும்.

இந்த திட்டத்துக்கு மொத்தம் 3 ஆயிரத்து 684 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் 2 ஆயிரத்து 228 ஹெக்டேர் பட்டா நிலமாகவும், ஆயிரத்து 416 ஹெக்டேர் புறம்போக்கு நிலமாகவும் மீதி வனத் துறைக்கு சொந்தமான நிலமாகவும் உள்ளது.

இதற்கான ஆய்வு பணி இரண்டு கட்டமாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தடுப்பு அணை மற்றும் கால்வாய் கட்டுவது சம்பந்தமான பணிகள், மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்படும்.

இப்போது நடந்து வரும் இந்தப் பணி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடியும், அடுத்த கட்ட பணியில், வாய்க்காலை நீட்டிப்பது பற்றி ஆய்வு செய்யப்படும்.

முதல் கட்ட பணிக்கே ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இந்த தகவல்கள் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடன் வசூலிக்க குண்டர்களை அனுப்பிய ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம்

கடன் தவணையை வசூலிக்க குண்டர்களை அனுப்பிய ஐசிஐசிஐ வங்கிக்கு டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றம் ரூ.55 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனியார் வங்கிகளில் இந்தியாவின் 2-வது மிகப் பெரிய வங்கியாக திகழும் ஐசிஐசிஐக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது வங்கிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தபான் போஸ் என்பவர் ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று கார் வாங்கினார். தவணையை அவர் சரியாக கட்டவில்லை என வங்கி தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் போஸின் நண்பர் மகன் வினோத் போஸின் காரை ஓட்டிச் சென்ற போது ஐசிஐசிஐ வங்கியிலிருந்து வருவதாக கூறிய அடியாட்கள் சிலர் காரை வழிமறித்து வினோத்தை அடித்து உதைத்து காரை பிடுங்கிச் சென்றனர்.

இதை எதிர்த்து டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் போஸ் வழக்கு தொடர்ந்தார். டெல்லி நுகர்வோர் மன்றத்தின் தலைவரும் நீதிபதியுமான ஜேடி.கபூர் விசாரித்து, கடன் வசூலிக்க குண்டர்களை அனுப்பிய ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பது:

கடனை வசூலிக்க குண்டர்களை அனுப்பி வைக்கும் வங்கிகள் செயலை சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் எந்த ஒரு நாகரிக சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாது. இது மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயல். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வங்கிகள் மீது புகார்கள் வந்தால் அவற்றின் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய காவல்நிலைய பொறுப்பாளர்களுக்கு டெல்லி மாநில போலீஸ் கமிஷனர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தரவு - தமிழ்முரசு

நாளைய பொழுதும் உன்னோடு் - விமர்சனம்


பால்ய காலத்து நட்பு, பருவ வயதில் காதலாகிறது. வழக்கம்போல் பெற்றோர்களின் எதிர்ப்பு. வலுக்கட்டாயமாக பிரிக்கப்படும் ஜோடிகள் மீண்டும் சந்திக்கும்போது என்னாகிறது? ஹைக்கூவின் கடைசி வரி மாதிரி அழுத்தமான க்ளைமாக்ஸ்!

சிறுவயது சந்தோஷங்களை மார்கழி மாதத்து கோலம் மாதிரி குளிர குளிர வரைந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் மூர்த்தி கண்ணன். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போதுதான் வழக்கமான சினிமா வந்து ஒட்டிக் கொள்கிறது.

கோட்டை பிள்ளைமார் குடும்பத்து பெண்ணை காதலிக்கும் சேட்டை பிள்ளையாக பிருத்வி. நங்கை...நங்கை.. என்று அவர் பிதற்றி திரிவது அழகு என்றால், தைரியமாக கார்த்திகாவின் வீட்டுக்கே போய் நெல் கொட்டி வைக்கும் பத்தாயத்தில் இறங்கி காதல் மொழி பேசுவது குறும்பு. கார்த்திகாவை பிரிந்தபின் சாப்பிட கூட மனமில்லாமல் கையை அறுத்துக் கொண்டு சுய வேதனை செய்து கொள்ளும் நேரங்களில் பரிதாபப்பட வைக்கிறார். கிராமத்து இளைஞர்களுக்கேயுரிய துடுக்கும் இயல்பாகவே வருகிறது அவருக்கு.

பயமோ, பதட்டமோ இல்லாமல் ப்ருத்வியை வீட்டுக்கே அழைத்து கருவாட்டு விருந்து வைக்கும் கார்த்திகா, அநேக காட்சிகளில் தன் அழகான சிரிப்பை பந்தி வைக்கிறார். இறுதி ரீல்களில் கார்த்திகாவின் சிரிப்பு காணாமல் போய்விட, அவரின் நிலைமை பகீர்! நள்ளிரவில் ப்ருத்வியின் வீட்டுக்கே போய் கதவில் தொங்கும் பூட்டை பார்த்துவிட்டு கதறி அழும் அவர், எனக்கு அவன் வேணும்மா என்று கதறி அழுவது பரிதாபம்.

நாமெல்லாம் கோட்டை பிள்ளைமார் பரம்பரை என்று கர்ஜித்தபடி கிராமத்து நீலாம்பரியாக வரும் கௌரி, பேச்சில்தான் சூறாவளி. முகம் என்னவோ, தென்றல்! ஒட்டவேயில்லை அந்த ஆக்ரோஷம்! எவ்வளவு நேரம்தான் கிராமத்தையே காட்டுவது? சென்னைக்கு பஸ் ஏறுகிறது திரைக்கதை. இங்கே டிஸ்கோதேவில் ஒரு ஆட்டம். ஸ்லீவ்லெஸ் பனியன்களுக்கு க்ளோஸ்-அப் என்று விநியோகஸ்தர்களின் பசிக்கும் ஸ்னாக்ஸ் கொடுக்கிறார் இயக்குனர்.

ரோஹிணி என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஊறுகாய் அளவுக்கு கவர்ச்சியும் காட்டுகிறார்.

மொத்த கதையையும் தன் வாயால் சொல்கிறார் வேலுபிரபாகரன். மிகப்பெரிய எழுத்தாளரான அவர் யார் என்பதை இறுதிகாட்சியில் சொல்லும் போதுதான் சபாஷ் என்று சத்தம் போட்டு பாராட்ட வைக்கிறார் இயக்குனர். அந்த நொடியில் சின்ன சிலிர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. வி.ஏ.ஓ லிவிங்ஸ்டன், பத்திரிகை ஆசிரியர் வேணுஅரவிந்த், நகைச்சுவை கறிவேப்பிலை கோவை குணா என்று சின்ன சின்ன நடிகர்கள் கூட ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை பல காட்சிகளில் மௌனம் காத்து, மேலும் கனமாக்குகிறது! 'பேச பேராச...' என்ற பாடலில் பவதாரிணியின் குரல் மந்திரம் போல் கட்டி வைக்கிறது மனசை!


சற்றே வேகத்தை கூட்டியிருந்தால் நாளைய பொழுதிலும் பேசப்பட்டிருக்கும் படமாகியிருக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்



தரவு - தமிழ்சினிமா.காம்

வீட்டுக்காவலில் முஷாரப்? பாக்கிஸ்தான் அரசு மறுப்பு



அதிபர் முஷாரப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளை பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை மறுத்துள்ளது.

முஷாரபை வீட்டுக்காவலில் ராணுவத் துணைத் தளபதி வைத்திருப்பதாக நாடு முழுவதும் பரபரப்பாக வதந்தி பரவியது.

"அது உண்மையில்லை. அந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை. அவர் (முஷாரப்) அதிபர் மாளிகையில் இருக்கிறார்; வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்' என்றும் அரசின் உயர் நிலைச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தரவு - தினமணி

வீட்டு சிறையில் இருந்து தப்பினார் இம்ரான்கான்

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட உடன், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான்,

சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் உள்ளிட்ட முக்கிய சீனியர் வக்கீல்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இம்ரான் கான் உள்ளிட்ட சிலர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். ஆனால், வீட்டு சிறையில் இருந்து இம்ரான் கான் தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான் கான், நீதிக்கட்சி பெயரில் கட்சி நடத்தி வருகிறார். அவசரநிலை அறிவிப்பு வெளியான உடன், பாகிஸ்தான் மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், உடனடியாக அவர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். சி.என்.என்., சூடிவி'க்கு இம்ரான்கான் அளித்த பேட்டியில், சூலாகூரில் உள்ள எனது வீட்டுக்கு போலீசார் வந்தனர். நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதற்கான உத்தரவு எதையும் அவர்கள் காட்டவில்லை. இதுநாள் வரை தன்னை கருணையுள்ள ஒரு சர்வாதிகாரியாக முஷாரப் வெளிப்படுத்தி வந்தார். தற்போது, அவரது உண்மையான நிறம் வெளிப்பட்டு விட்டது. அதிகார பசி கொண்ட அவர், அதற்காக எதையும் செய்வார்' என்றார்.

வீட்டு சிறையில் வைக்கப்பட்ட சில மணி நேரத்துக்கு பிறகு இம்ரான் கான் தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில்,சூ போலீசார் வந்த போது, வீட்டில் இம்ரான்கானும், எட்டு ஆதரவாளர்களும் இருந்தனர். அவர்களை வீட்டு சிறையில் வைப்பதாக கூறி விட்டு, வீட்டின் முன்பகுதிக்கு போலீசார் சென்று விட்டனர். வீட்டினுள் தற்போது எட்டு ஆதரவாளர்கள் மட்டுமே உள்ளனர். இம்ரான் கான் தப்பி விட்டார்' என்று கூறினார்.

இதற்கிடையில், தனக்கு எதிராக செயல்படுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் முஷாரப் தீவிரமாக இறங்கியுள்ளார். சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் அய்ட்சாஸ் அசான், முஷாரப்புக்கு எதிராக செயல்பட்டவர். அவரையும் வீட்டுச்சிறையில் வைத்து விட்டனர். அங்கிருந்தபடியே அவர் அளித்த பேட்டியில், சூஒரே ஒரு மனிதன் நாட்டையே சிறைப்படுத்தி வைத்து விட்டார். ஜெனரல் முஷாரப் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது' என்றார். முஷாரப்புக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட சீனியர் வக்கீல் தாரிக் மெக்மூத் என்பவர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், சூ1999ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது முறையாக முஷாரப் நாட்டை கைப்பற்றியுள்ளார். அவர், அவசரநிலையை பிரகடனம் செய்யவில்லை. ராணுவ ஆட்சியை தான் அறிவித்துள்ளார்' என்றார்.

பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் முன்னணி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கட்சியின் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த ஜாவித் அஸ்மியும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், சூமுஷாரப்பின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ராணுவத்தை கொண்டு அரசியல் ஆட்சி நடத்தப்படுவதற்கு முடிவு நெருங்கி கொண்டு இருக்கிறது' என்றார். இது போல பல எதிர்க்கட்சிகளின் முன்னணி தலைவர்களும், சீனியர் வக்கீல்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

தரவு - தினமலர்

மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் மழை நீடிக்கும்

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. ஆனால், காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்ததால் மழை குறைந்தது.

இந்நிலையில், வங்கங்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் கருமேகங்கள் திரண்டு இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதை அடுத்து முதல்வர் கருணாநிதிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ரகசியத் தொடர்பு இருப்பது வெளிப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.

இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளவாடங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை போலீஸôர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெüனம் சாதித்தார்.

அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.

1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விடுதலைப்புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் ரகசியமாக விடுதலைப்புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.

இந் நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார் ஜெயலலிதா.

தரவு - தினமணி

தம்பி தமிழ்ச்செல்வா: பாரதிராஜா கண்ணீர்


விடுதலைப்புலியின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு டைரக்டர் பாரதிராஜா கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

ஒரு விடிவெள்ளியை கொன்று புலர்ந்த இந்த வெள்ளி விடியாமலே இருந்தி ருக்கலாம்.

ஒரு அட்சய பாத்திரத்தை பிச்சைக்காரர்கள் தின்று தீர்த்த இந்த நாள் விழிக்காமலே இருந்திருக்கலாம்.

மரணத்தை கண்டு அஞ்சியதில்லை தம்பிகள்!

அதுதான் அவர்களுக்கு முகவரி.

வலிகளும் அவர்களுக்கு புதிதல்ல!

அவர்கள் ரணங்கள் சாதாரணம்!!

தழும்புகளை நெஞ்சில் சுமந்த வீர மறவர்கள் அவர்கள்.

என்றாலும் அவர்கள் கண்ணீரில் நனையும் போது இங்கே கரிக்கிறது.

அங்கே அவர்கள் காயப்படும் போது இங்கே குருதி கொதிக்கிறது.

வெடி அல்ல, இடி

வான் வழியே விழுந்தது வெடியல்ல!

எங்கள் நெஞ்சில் விழுந்த இடி!!

தம்பி தமிழ்ச்செல்வா! நீ மாபெரும் இயக்கத்தின் அரசியல் வழிகாட்டி மட்டுமல்ல.

தம்பி பிரபாகரனைக் காண வீரமண்ணிற்கு எமையழைத்துச் சென்று விருந்தோம்பி உபசரித்து மறத் தமிழ் மக்களின் மற்றோர் உலகை எனக்கு காட்டியவனும் நீதான்.

அதனால்தான் அன்றே என் அரசியல் காவியத்திற்கு உன் பெயரிட்டேனோ?

ஈழத்திற்கான அமைதிப் பேச்சு வார்த்தையை, சமாதானப்பாதை நோக்கிய பய ணத்தை உலகெங்கிலுமுள்ள அரசியல் அரங்கங்களில் ஓங்கி ஒலிக்கச் செய்த தம்பியே!

உமது இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலக உருண்டையில் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்தமிழர்கள் எல்லோருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் அந்தோ.

தங்கத்தை இழந்தோம் அன்று சிங்கத்தை இழந்தோம்

இன்று தங்கத்தை இழந்து விட்டோம்!!

அஹிம்சை வழியில் அறத்தை கையிலேந்திய திலீபனை கொன்ற கைகள் தான் இன்று உன்னையும் தின்றது.

திலீபன் இறந்தபோது அவன் தாய் கூறினாள்.

"திலீபனை புதைக்க வில்லை. விதைத்திருக்கிறோம்''

தம்பி தமிழ்ச்செல்வா!

"உன்னை எரிக்கவில்லை...

ஏற்றியிருக்கிறோம்''

இவ்வாறு டைரக்டர் பாரதிராஜா கூறியுள்ளார்.

தரவு - தமிழ்சினிமா.காம்

புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக நடேசன் நியமனம்




தமிழ்ச்செல்வன் மறைவையடுத்து, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு புதிய தலைவராக நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிளிநொச்சி பகுதியில் இரனமேடு என்ற இடத்தில் உள்ள புலிகளின் ரகசியத் தளம் மீது விமானப்படை விமானங்கள் நேற்று குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
நார்வே குழுவினருடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தைகளில் தமிழ்ச் செல்வன் முக்கிய பங்காற்றினார்.

இவரின் மறைவையடுத்து, புலிகளின் போலீஸ் பிரிவு தலைவராக இருந்த நடேசன், அரசியல் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தரவு - தினகரன்

குருவாயூர் கோயிலில் குண்டுவெடிக்க வாய்ப்பு - தேவபிரஸ்னத்தில் தகவல்

குருவாயூர் கோயிலில் குண்டுவெடிப்பு, தீவிபத்து மூலம் உயிர்ச்சேதம் ஏற் பட வாய்ப்பு இருப்பதாக நேற்று நடந்த தேவ பிரஸ் னத்தில் தெரிய வந்துள்ளது.

குருவாயூர் கோயிலில் அஷ்டமங்கள தேவ பிரஸ்னம் கடந்த 31ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. இந்த தேவ பிரஸ்னம் நடந்து கொண்டிருக்கும் போதே துக்க சம்பவங்கள் நடைபெறும் என தலைமை ஜோதிடர் கூறினார். இவ்வாறு கூறிய ஒரு மணி நேரத்தில் கோயில் வளாகத்தில் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோயில் வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம் பவங்கள் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருவாயூர் கோயிலில் பிற மதத்தினரை அனுமதிக்கக்கூடாது என தேவ பிரஸ்னம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று 3ம் நாள் நடந்த தேவ பிரஸ்னத்தில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியானது. கோயிலிலோ அல்லது கோயிலை ஒட்டியுள்ள பகுதியிலோ குண்டு வெடிப்பு மூலமும், தீ விபத்து மூலமும் உயிர் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என பிரஸ்னத்தில் செய்யப்பட்டது. இது கோயில் நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

தேவபிரஸ்னம் தொடர்ந்த நாள் முதல் துக்க நிகழ்ச்சிகள் நடை பெற்று வருவதாலும், நேற்று நடந்த தேவ பிரஸ்னத்தில் உயிரிழப்பு ஏற்படுவது தெரியவந்ததாலும் அதற்கு பரிகாரமாக உடனடியாக கூட்டு பிரார்த்தனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோயில் தந்திரி, பூசாரிகள் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். தேவபிரஸ்னம் நடத்துவதற்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தலைமை ஜோதிடரை கோயில் நிர்வாகிகள் அழைக்க சென்றனர்.

அன்றைய தினம் மிக மோசமான நாள் என தலைமை ஜோதிடர் கூறினார். இதனால்தான் கோயிலில் துக்க சம்பவங்கள் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பரிகாரம் கடவுளை பிரார்த்திப்பதுதான் என தலைமை ஜோதிடர் கூறினார்.

மேலும் கோயில் வழிபாட்டில் எந்த மாற்றமும் ஏற்படுத்தக்கூடாது. கோயில் ஊழியர்கள் மோதலை நிறுத்திவிட்டு கடவுளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்றும் பிரஸ்னத்தில் தெரிய வந்ததாக தலைமை ஜோதிடர் கூறினார்.

WE(A)eKEND






சிவாஜி மனைவி காலமானார்

நடிகர் சிவாஜி கணேசன் மனைவி கமலா அம்மாள் (72) இன்று மாரடைப்பால் காலமானார்.
சில நாட்களாகவே உடல் நலமில்லாமல் இருந்தார் கமலா அம்மாள். நேற்று நெஞ்சில் சளி அதிகமாகி மூச்சு விட சிரமப்பட்டார். உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்துக்கொண்டனர். கமலா அம்மாளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இன்று காலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். தாயார் இறந்த தகவல் கேட்டவுடன் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் தி.நகரில் உள்ள சிவாஜி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலக பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். நாளை காலை அவரது உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

tharavu - tamilmurasu