ரத்த அழுத்தம் சீராக சாக்லெட் சாப்பிடுங்க!

சாக்லெட்களை சிறிதளவு தினந்தோறும் சாப்பிட்டால் உடலின் ரத்த அழுத்தம் குறைகிறது என ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கோகோ அதிகம் உள்ள கறுமை நிற சாக்லெட்களை சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என முந்தைய ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. ஆனால், அதில் இருக்கும் கூடுதல் சர்க்கரை, கொழுப்புச்சத்து மற்றும் கலோரி ஆகியவற்றால் கோகோவால் ஏற்படும் நன்மை கெட்டுவிடுகிறது என்றும் மற்றொரு ஆய்வு அறிக்கை தெரிவித்தது.

ஆனால், சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், அதாவது தினந்தோறும் 7 கிராம் அளவுக்கு சாக்லெட் சாப்பிட்டால், எந்த வித பாதிப்பும் இல்லாமல் ரத்த அழுத்தத்தின் அளவு குறைகிறது என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் டிரிக் டாபர்ட்.

சாக்லெட்டில் உள்ள பாலிபீனல்கள் எனும் ரசாயனப் பொருள்தான் நம் உடலுக்கு நன்மையைத் தருகிறது. இந்த ஆய்வுக்கு 56 வயது முதல் 73 வயது வரை உள்ள 44 பேரை தேர்வு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக டாக்டர் டிரிக் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் ஒரு பிரிவினருக்கு 30 கலோரி அளவுக்கு 30 கிராம் பாலிபீனல் இருக்கக்கூடிய கறுப்பு சாக்லெட்களும், மற்றொரு பிரிவினருக்கு பாலிபீனல் இல்லாத வெள்ளை சாக்லெட்களும் கொடுக்கப்பட்டது. 18 வாரம் கழித்து இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கோகோ அதிகம் நிறைந்த கறுப்பு சாக்லெட் சாப்பிட்ட பிரிவினருக்கு ரத்த அழுத்தம் குறைந்துள்ளது.

ஆனால் இவர்களில் எடை, கொழுப்புச்சத்து மற்றும் சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. "ஒவ்வொருவருக்கும் இவ்வாறு ரத்த அழுத்தம் குறைந்தால் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்பு 5 சதவீதம் குறையும்" என்கிறார் டாக்டர் டிரிக்.

1 comments:

July 6, 2007 at 7:38 AM Avanthika said...

இதுக்காகத்தான் நான் after breakfast and after Dinner அளவா ஒன்னு சாப்பிடறேன்...புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க...

தேங்கஸ் அண்ணா..இது பிரிண்ட் எடுத்து டைனிங் ஹால்லேயும் அப்புறம் என்னோட ரூம்லேயும் ஒட்டி வச்சுடறேன்...