காங்கிரஸ் எம்.பி. தங்கபாலு "மெகா டிவி" என்ற பெயரில் டிவி சேனல் துவக்குகிறார். ராஜீவ்காந்தி பிறந்தநாளான ஆகஸ்ட் 20ந் தேதி இந்த சேனல் துவக்கப்படும். பொழுது போக்குடன், பயனுள்ள கருத்துக்களை வழங்கும் இந்த சேனல் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கும் தேச நலனில் அக்கறை உள்ள நிகழ்ச்சி களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று தங்கபாலு எம்.பி. தெரிவித்தார்.
மெகா டிவியின் நிர்வாக இயக்குனராக தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலு பதவி வகிக்கிறார். இவர் ஏற்கனவே தங்கவேலு என்ஜினியரிங் கல்லூரி, டி.ஜே. தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட், தங்கவேலு கலைக் கல்லூரிகளை திறம்பட நிர்வகித்து தமிழ்நாட்டில் தலைசிறந்த 10 என்ஜினியரிங் கல்லூரிகளில் ஒன்றாக திகழச் செய்து உள்ளார்.
மெகா டிவி டைரக்டராக தங்கபாலுவின் மகன் கே.டி.கார்த்திக் செயல்படுகிறார். விஜய் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பில் 5 ஆண்டு பொறுப்பு வகித்த சுதாகர் துணைத்தலைவர் பதவி வகித்து வருகிறார்.
இன்று காலை ரெசிடன்சி டவர் ஓட்டலில் மெகா டிவி அறிமுக விழா நடைபெற்றது. இந்த டிவியின் நிர்வாக இயக்குனர் ஜெயந்தி தங்கபாலு, டைரக்டர் கே.டி.கார்த்திக் பேசுகையில் கூறியதாவது:
24 மணி நேர இலவச ஒளிபரப்பாக மக்களின் கண்ணையும் கருத்தையும் கவர வரும் மெகா டிவி தமிழ் சமுதாயத்தை தன்னிகரற்றதாக உயர்த்தும் தனிப்பெரும் லட்சியத்தை ஏற்றுள்ளது. தேசநலனை முன்னிறுத்தும் சமுதாய அக்கறை உள்ள நிகழ்ச்சிகள் மெகா டிவியின் சிறப்பம்சமாகும்.
தமிழ் மக்களின் சமூக, பொருளதாதார முன்னேற்றத்துக்கு ஏதுவான நிகழ்ச்சிகளை தாங்கி வரவுள்ள மெகா டிவியில் தமிழ் பண்பாட்டையும், தமிழர் கலாச்சாரத்தையும் பேணிக் காக்கும் அரிய நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. திரைப்படம் சார்ந்த அல்லது சாராத பொழுது போக்கு நிகழ்ச்சிகள் எதுவானாலும் அவற்றில் பாரதத் திருநாட்டின் பாரம் பரியத்தை காக்கும் வகையில் நிகழ்ச்சிகளை வடிவமைத்திருக்கிறோம்.
மேலை நாட்டு மோகத்தைத் தவிர்த்து, இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமான வழியில் திருப்பவும் மகளிர் உரிமையை நிலைநாட்டவும் மெகா டிவி நிகழ்ச்சிகளை வழங்க உள்ளது. வாழ்க்கைக்கு அத்தியா வசியமான தகவல்களை பொழுது போக்குடன் சேர்த்து வழங்க உள்ள மெகா டிவி, பரதம்பண்பாடுபாரம்பரியம் என்ற அடித்தளத்தில் தமிழ்தமிழர்தமிழகத்தின் வளம் சேர்க்க அயராது பாடுபடும்.
நடுநிலையான சமுதாய அக்கறை உள்ள செய்திகள் மெகா டிவியின் உயிர்நாடி ஆகும். தேசியப் பார்வை உடன் மக்களுக்கு விழிப் புணர்வூட்டும் அம்சங்கள் மெகா செய்திகளை அலங்கரிக்கும். பொதுமக்களுக்கு மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை உரக்கச் சொல்லி உணர்த்தவும், அவற்றின் பயன்களை உய்விக்க செய்யும் சீரிய பணியையும் சீர்மேற்கொள்ள இருக்கிறது மெகா செய்திகள்.
துல்லியமாக படம் எடுக்கும் கேமிராக்கள் அதிநவீன படத்தொகுப்பு சாதனங்கள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட அரங்குகள், என சிறந்த தொழில்நுட்பம் எங்கள் கூடுதல் பலமாகும். உலகின் எந்த பகுதியில் நிகழும் செய்திகளையும் உடனுக்குடன் பெற, மக்களுக்குத் தர எங்கள் தொழில்நுட்பத் திறன் உதவி புரியும். முக்கிய நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தகுந்த வசதிகள் மெகா டிவியின் சிறப்பம்சம்.
மொத்தத்தில் பயனுள்ள செய்திகள் மற்றும் தலைசிறந்த பொழுதுபோக்கு அம்சங் களுடன் உலகெங்கிலும் வாழும் தமிழர் இல்லங்களுக்கும், உள்ளங்களுக்கும் மகிழ்ச்சியை வழங்க வருகிறது மெகா டிவி.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment