ஜெயலலிதா இன்று டெல்லி சென்றார்!

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று பிற்பகல் 2.20 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது, துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பது பற்றியும் அரசியல் சூழ்நிலைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதீபா பட்டீல் நிறுத்தப்பட்டிருக்கிறார். பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் சுயேச்சையாக பைரோன்சிங் ஷெகாவத் போட்டியிடுகிறார்.

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் அப்துல்கலாமை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் அது முடியாமல் போனது. எனவே ஜனாதிபதி தேர்தலில் தங்களது நிலையை அறிவிப்பதில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு கால அவகாசம் தேவைப் பட்டது. இதற்கிடையில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அமெரிக்கா சென்று விட்டார். அவர் 2 நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் இருந்து திரும்பினார்.

எனவே ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் நாளை மதியம் 12 மணிக்கு டெல்லியில் இந்திய லோக்தள் கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா வீட்டில் கூடி ஆலோசனை நடத்து கிறார்கள். டெல்லி போதி எஸ்டேட்டில் உள்ள சவுதாலாவின் வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடை பெறுகிறது.

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டம் முதலில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் சந்திரபாபு நாயுடு வீட்டில் நடந்தது. அடுத்த கூட்டம் சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்த அணிக்கு ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது.

நேற்று முன்தினம் ஜெயலலிதாவை பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் சந்தித்து பேசினார். அப்போது பாரதீய ஜனதா ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிடும் பைரோன்சிங் ஷெகாவத் துக்கு ஆதரவு தரும்படி ஜெயலலிதாவிடம் ஜஷ்வந்த் சிங் கேட்டதாக தெரிகிறது. ஆனால் முடிவு ஏதும் தெரிவிக்கப் படவில்லை. வைகோவையும் ஜஸ்வந்த் சிங் சந்தித்து பேசினார். இந்த நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் பைரோன்சிங் ஷெகாவத்துக்கு ஆதரவா? அல்லது தேர்தல் புறக்கணிக்கப்படுமா? என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

கூட்டம் முடிந்த பின் நாளை மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.

0 comments: