பிரதமருக்கு தயாநிதிமாறன் கடிதம்...!

பி.எஸ்.என்.எல். நிறுவன டெண்டர் தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றி உடனடி விசாரணை நடத்தி, உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மறைந்த எனது தந்தை முரசொலி மாறன் மற்றும் எனது மதிப்புக்குரிய தலைவரும் வழிகாட்டியுமான கலைஞர் கருணாநிதி ஆகியோர் காட்டிய வழியில் பொதுவாழ்வில் நான் எப்போதும் உயரிய கண்ணியத்தை கடைப்பிடித்து வருகிறேன். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஜி.எஸ்.எம். 2ஜி மற்றும் 3ஜி டெண்டர் பற்றி விரும்பத்தகாத சர்ச்சைகள் எழுந்துள்ளது துரதிருஷ்டவசமானது. இதனால் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய நேர்ந்தது.

எனக்கு எதிராக ஊடகங்கள் மூலம் திட்டமிட்ட விஷமப் பிரசாரத்தில் சிலர் உள்நோக்கத்துடன் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் என்ற முறையில், பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்களின் டெண்டர் நடைமுறைகளில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை. இப்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இந்த டெண்டரை பி.எஸ்.என்.எல். போர்டுதான் இறுதி செய்தது.

இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான கொள்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நோக்கியே எனது முழு கவனமும் இருந்தது. நாட்டின் எந்த மூலையில் இருந்தும் ஒரு ரூபாயில் மக்கள் பேச வகை செய்த "ஒரே இந்தியா" திட்டம், தேசிய மற்றும் தொலைதூர தொலைபேசி சேவையில் புதிய நிறுவனங்கள் ஈடுபட இருந்த தடைகளை நீக்கியதன் மூலம் தொலைதூர தொலைபேசி சேவைக்கான கட்டணங்களைக் குறைக்க வகை செய்தது, மாதத்துக்கு ரூ.250 என்ற மிகக் குறைந்த மாதாந்திர கட்டணத்தில் 2 எம்.பி. திறன்கொண்ட பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை ஆகியவை, நான் அமைச்சராக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சில.

இந்திய தொலைத்தொடர்புத் துறைக்கு வழிகாட்டும் வகையில், 2007ம் ஆண்டுக்குள் 25 கோடி தொலைபேசி இணைப்புகளை வழங்கவும் 2010ம் ஆண்டுக்குள் 50 கோடி இணைப்புகளை வழங்கவும் இலக்கு நிர்ணயித்து, அதற்கான நடவடிக்கைகளில் நான் கவனம் செலுத்தினேன். அதேநேரம், மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி மையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்ததன் மூலம், இத்துறையில் இறக்குமதியைத் தவிர்க்க முயற்சிகளை எடுத்தேன். இந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முன்னோடியாக செயல்பட்டு வந்தது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, "நவரத்னா" அந்தஸ்தைப் பெறவிருக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி, அதன் மூலம் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், பி.எஸ்.என்.எல். டெண்டரை தடுத்து நிறுத்தி, அதன் மூலம் ஆதாயம் பெற என்.ஆர்.ஐ. (வெளிநாடு வாழ் இந்தியர்) ஒருவர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அறிகிறேன். இதன் ஒரு பகுதியாக, ஊடகங்கள் வழியாக நடத்தப்படும் பொய் பிரசாரத்தின் மூலம், மக்களிடம் எனக்குள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக அஞ்சுகிறேன்.

டெண்டர் நடவடிக்கையில் தவறுகள் நடந்திருப்பதாக சில பத்திரிகைகளில் பொய்யான குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. எனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நலனையும் அதன் ஊழியர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, பி.எஸ்.என்.எல். டெண்டர் தொடர்பாகவும் இந்தப் பிரச்னையில் என்.ஆர்.ஐ. தொழிலதிபரின் பங்கு குறித்தும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

உடனடியாக விசாரணை நடத்தி, உண்மைகளை வெளியில் கொண்டு வருவதன் மூலம், எனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த நடக்கும் பொய் பிரசாரமும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அழிக்க நடக்கும் சதித் திட்டமும் அம்பலமாகும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு தயாநிதி மாறன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: