கோயம்பேடு-மதுரவாயல்-பாடி சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை


ஆகஸ்ட் 4ம் தேதி முதல் கோயம்பேடு-மதுரவாயல்-பாடி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை



அம்பத்தூர் பாடி-கோயம்பேடு-மதுரவாயல் ஆகிய இடங்களில், அடுத்த மாதம் 4ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. அந்த வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோயம்பேடு-மதுரவாயல்-பாடி பகுதிகளில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய ஓர் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பால், தண்ணீர், மருந்து, சமைத்த உணவு, மண்ணெண்ணெய் போன்ற அத்யாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களைத் தவிர, பிற பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை செல்ல ஒரு மாத காலத்துக்கு தடை செய்யப்படுகிறது. இந்த திட்டம் பரிட்சார்த்தமான முறையில் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

அதில் பொருள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், தாம்பரம் பைபாஸ் சாலையில் வந்து தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக மதுரவாயலைக் கடந்து கோயம்பேடு சந்திப்பை நோக்கி செல்வதும், உள்வட்ட சாலை வழியாக மாதவரம் சந்திப்பை நோக்கிச் செல்வதும் தடை செய்யப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலையை கடந்து தேசிய நெடுஞ்சாலை- 4 மற்றும் உள்வட்ட சாலை வழியாக வடசென்னையை நோக்கி இதுவரை சென்ற மேற்படி கனரக வாகனங்கள் இனிமேல் தடை செய்யப்பட்ட நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை-4, பூந்தமல்லி - ஆவடி சாலை, தேசிய நெடுஞ்சாலை-205, அம்பத்தூர்-மதனகுப்பம்-மேட்டுப்பாளையம் ரோடு - தேசிய நெடுஞ்சாலை-5ன் வழியாக செல்ல வேண்டும்.

பொருள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 4ல் சென்னீர்குப்பம் மேம்பாலத்தை கடந்து, கோயம்பேடு சந்திப்பை நோக்கி செல்வது தடை செய்யப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை - 4ல் சென்னீர்குப்பம் மேம்பாலத்தை கடந்து கோயம்பேடு சந்திப்பு வழியாகவும், உள்வட்ட சாலை வழியாகவும் வடசென்னைக்கு இதுவரை சென்ற கனரக வாகனங்கள், இனிமேல் தடை செய்யப்பட்ட நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை-4, பூந்தல்லி, ஆவடி சாலை, தேசிய நெடுஞ்சாலை 205, அம்பத்தூர், மதனகுப்பம், மேட்டுப்பாளையம் ரோடு, தேசிய நெடுஞ்சாலை- 5ன் வழியாக செல்ல வேண்டும்.

திருவள்ளூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை- 205ன் வழியாக வந்து பாடி சந்திப்பு மற்றும் உள்வட்ட சாலை வழியாக வடசென்னைக்கு சென்ற வாகனங்கள், இனிமேல் தடை செய்யப்பட்ட நேரத்தில் அம்பத்தூர்-மதனகுப்பம், மேட்டுப்பாளையம் ரோடு, புழல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை- 5ன் வழியாக செல்லலாம்.

வடசென்னையில் இருந்து மாதவரம் மேம்பாலத்தை கடந்து உள்வட்ட சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை- 4ன் வழியாக திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், தாம்பரம் நோக்கிச் சென்ற வாகனங்கள் இனிமேல் தேசிய நெடுஞ்சாலை - 5, புழல், அம்பத்தூர், மதனகுப்பம், மேட்டுப்பாளையம் ரோடு, தேசிய நெடுஞ்சாலை- 205, பூந்தமல்லி, ஆவடி ரோடு, தேசிய நெடுஞ்சாலை - 4 , தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக செல்லலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments: