ஜெயலலிதாவின் முரண்பாடுகள் அம்பலம்-கருணாநிதி

கோடநாடு எஸ்டேட் பங்களா விவகாரத்தில் ஜெயலலிதாவின் முரண்பாடுகள் அம்பலம் -கருணாநிதி அறிக்கை.



கோடநாடு எஸ்டேட் குறித்து ஜெயலலிதா கொடுத்த விளக்கம் முழுவதும் முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக தொண்டர்களுக்கு கருணாநிதி இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோடநாடு எஸ்டேட் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் கேள்வி கேட்டு, நீண்ட நாட்களுக்கு பிறகு திடீரென்று இன்று ஜெயலலிதா நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இத்தனை நாள் தாமதத்துக்கு அவரே அறிக்கையில் தெரிவித்துள்ள காரணம், "தேவையான ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேகரிக்க சில நாட்கள் தேவைப்பட்டது" என்கிறார். இதிலிருந்தே ஆதாரங்களையெல்லாம் சேகரித்துக் கொடுக்க வேண்டிய நிலையிலே அவர் இருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது.

கோடநாடு எஸ்டேட் சசிகலாவுக்கு சொந்தமானது என்றும் நான் சொன்னதாக கேள்வி எழுப்புகிறார்கள் என்று அந்த அறிக்கையிலே சொல்லியுள்ள ஜெயலலிதா, அடுத்த பத்தியிலேயே, "1996ல் கருணாநிதி அரசு என் மீதும், இன்னும் சிலர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தபோது அதில் கோடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டது. அப்போது எனக்கும் எஸ்டேட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்தக் கால கட்டத்தில் கோடநாடு எஸ்டேட் என்னுடையது அல்ல. அது சசிகலாவுக்கும், வேறு சிலருக்கும் சொந்தமானது என்று கூறினேன்" என்று எழுதியிருக்கிறார். அது சசிகலாவின் சொத்து என்று ஜெயலலிதாவே கூறியிருப்பது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதைத் தானே காட்டுகின்றது.

"தனியாருக்கு சொந்தமான இடங்களில் நான் சென்று தங்கினால்கூட அந்த இடங்களைக் குறி வைத்து செயல்படுவது என்பது கருணாநிதியின் முழுநேர வேலையாக உள்ளது. நான் தங்கின பாவத்துக்காக அந்த இடத்தின் சொந்தக்காரர்களை திமுக அரசு படாதபாடு படுத்துகின்றது" என்று கடந்த மே 31-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஜெ. கூறியிருந்தார்.
ஆனால், இப்போது வெளியிட்ட அறிக்கையில் "2000ம் ஆண்டு தொடக்கத்தில் கோடநாடு எஸ்டேட் கம்பெனியில் நான் ஒரு பார்ட்னராக இணைந்தேன். அதன் பின்னர் 2000ம் ஆண்டுக்கு பிறகு அதில் எனக்கு பங்கு இல்லை என்று நான் சொன்னதே இல்லை" என்கிறார்.

தனியாருக்குச் சொந்தமான இடத்திலே சென்று தங்கியதாக ஒரு சமாளிப்பு பொய்யைச் சொல்லிவிட்டு, இப்போது நான் அப்படி சொல்லவே இல்லை என்று கூறினால் மக்கள் என்ன செவிடு, குருடு, ஊமைகளா? அல்லது சிந்தனையற்ற ஜீவன்களா?

ஜெயலலிதா, மேலும் தனது அறிக்கையில் "1995 ஜூன் மாதத்தில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இந்த நிறுவனத்தில் பார்ட்னர்களாக இணைந்தார்கள் என்று சொல்லியிருக்கிறார். 1995ம் ஆண்டு ஆட்சியிலே இருந்தது யார்? சாட்சாத் இந்த ஜெயலலிதா அம்மையார் தானே? சசிகலா யார்? அவருடைய உடன்பிறவா சகோதரி தானே? அவருடைய நெருங்கிய உறவினர்கள்தானே இளவரசியும், சுதாகரனும். முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வீட்டிலே அவருடன் 24 மணி நேரமும் இருக்கக் கூடியவரின் பெயரிலும், அவரது உறவினர்கள் பெயரிலும் இந்த கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு என்ன பொருள்? திடீரென்று அவ்வளவு பெரிய எஸ்டேட்டில் பங்குதாரர்களாக சேருவதற்கு அவர்களுக்கெல்லாம் கோடிக்கணக்கான ரூபாய் எங்கிருந்து கிடைத்தது?

முதல்வர் வீட்டிலேயே இருக்கும் ஒருவர் பெயரில் இவ்வளவு பெரிய சொத்து சேர்க்கப்பட்டது என்றால், அதற்குப் பெயர் பினாமி தானே?அப்போது கோடநாடு எஸ்டேட் பலகோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வந்ததாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். எந்தப் பைத்தியக்காரனாவது நட்டத்தில் தொடர்ந்து இயங்கி, கடனில் உள்ள கம்பெனியை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குவானா? அளவுக்கு மீறி கையிலே கொள்ளைப் பணம் வைத்திருப்பவர்கள்தானே நட்டத்தில் இயங்கும் நிறுவனத்தை வாங்குவார்கள். அப்படி வாங்கப்பட்ட சொத்துதான் இது என்பதை அம்மையாரின் அறிக்கையே தெளிவாக நமக்கு விளக்குகிறதே.

2000ம் ஆண்டு முதல் கோடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் ஜெயலலிதா பங்குதாரராக இருந்து வந்த விவரத்தை 2006ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அந்த சொத்து விவரத்தை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டதும், தற்போது விழித்துக் கொண்டு 2006-ம் ஆண்டு ஏப்ரல் திங்களில், தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு அந்த நிறுவனத்திலிருந்து தான் விலகிக் கொண்டதாக அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார்.


2006ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் கோடநாடு எஸ்டேட் நிறுவனத்தின் பங்குதாரர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதாக கூறிவிட்டு, அதே அறிக்கையில் 2006ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் அதே நிறுவனத்தில் பார்ட்னராக தான் இணைந்ததாகவும், தொடர்ந்து பார்ட்னராக நீடிப்பதாகவும் இப்போது சொல்லிக் கொள்கிறார்.

ஏப்ரலில் பங்குதாரராக இருந்து விலகியதாகவும் (அதாவது தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு) மீண்டும் ஜூன் மாதம் அதில் பங்குதாரராக இணைந்ததாகவும் சொல்வது யாரை ஏமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்? திடீரென்று 2006ம் ஆண்டு ஏப்ரலில் ஏன் விலகினார்? பிறகு இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அதே நிறுவனத்தில் ஏன் பங்குதாரராகச் சேர்ந்தார்?


ஜெயலலிதா தனது அறிக்கையில் "பெருமளவில் இந்த எஸ்டேட்டில் நான் பண முதலீடு செய்திருக்கிறேன் என்று தவறான தகவல் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதே அறிக்கையில், "கோடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் பார்ட்னராக நான் இணைந்தபோது என்னுடைய முதலீடு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் கணக்கில் காட்டப்பட்டு வருமான வரித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது" என்றும் கூறியிருக்கிறார். அவரே முதலீடு செய்ததை மூன்றாம் பக்கத்தில் ஒப்புக் கொண்டு விட்டு, ஐந்தாம் பக்கத்தில் அதனை தவறான தகவல் என்றும் கூறுகிறார். யாராவது காதிலே பூ வைத்தவர்கள்தான் ஜெயலலிதாவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியும்.

கோடநாடு எஸ்டேட் சொத்துக்கள் ஏற்கனவே நீதிமன்றத்தின் பொறுப்பிலே உள்ளவைகளாகும். அந்த சொத்துக்களில் புதிதாக கட்டடம் கட்டுவது என்றால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். அவ்வாறு அனுமதி பெறப்பட்டிருக்கிறதா? அதுபோலவே நீதிமன்றத்தின் பொறுப்பிலே ஒரு சொத்து இருக்கும்போது அதில் இருந்து தன் இஷ்டம் போல் விலகிக் கொள்வதும் பிறகு அதிலே சேர்ந்து கொள்வதும் சரியா? அதற்கான அனுமதியும் நீதிமன்றத்திலே பெறப்பட்டிருக்கிறதா? இந்த விவரங்கள் நீதிமன்ற விசாரணையில் வரும்போது அம்மாவின் அண்ட புளுகுகள் எல்லாம் அம்பலத்துக்கு வந்தே தீரும்.

கோடநாடு எஸ்டேட் ஜெ.வுக்கு உரிமையானதா என்றெல்லாம் நாட்டிலே சிலர் சந்தேகப்பட்டு கொண்டிருந்தார்கள். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் ஜெ. நேற்றைய அறிக்கையில் திட்டவட்டமாக அந்த எஸ்டேட்டில் அவர் பங்குதாரர்தான் என்று ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால் இந்த எஸ்டேட்டுகளை எல்லாம் கோடிக்கணக்கில் முதலீடு செய்து வாங்க எங்கிருந்து அந்த தொகை வந்தது என்பதைதான் இந்த நாடும் மக்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அது கொள்ளை அடித்த பணம் என்பதை நிரூபிக்கும் வகையில்தான் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவில் நமது கூட்டணி பெற்ற வாக்குகளும் ஜெ. கூட்டணி பெற்ற வாக்குகளும் தமிழகத்துக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

ஜெயலலிதாவின் அறிக்கைகளை வரிசைப்படுத்தி படித்துப் பார்த்தாலே அவற்றில் காணப்படும் முரண்பாடுகள், அவரது சுய ரூபத்தை காட்டிக் கொடுத்துவிடும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments: