'போதும் தி.மு.க.' - சிதம்பரம்

சிதம்பரத்தின் சிவகங்கை சபதம்



பெருந்தலைவர் காமராஜரின் 105வது பிறந்த நாள் விழா, கடந்த 15ஆம் தேதி நாடு முழுவதும் தடபுடலாகக் கொண்டாடப்பட்டுள்ளது. புதிதாகக் கட்சி துவங்கப்போகும் சரத்குமார், சென்னையில் முப்பெரும் விழாவாக அதை நடத்தியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் காமராஜர் விழாவினைக் கொண்டாடியுள்ளது. அக்கட்சியில் உள்ள கோஷ்டிகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அந்த விழா களைகட்டியது.

மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் புரசைவாக்கம் தாணா தெருவில் காமராஜரின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடினார்கள். மறுபுறம் மௌன்ட்ரோட்டின் அருகே உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கிருஷ்ணசாமி இவ்விழாவினை நடத்தினார்.

இந்த இரு கோஷ்டிகளுக்கும் பிடிக்காத இன்னொரு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், வட சென்னைக்குப் போய்விட்டார். அங்கே அவரது ஆதரவு மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ தலைமையில் காமராஜர் விழா கலகலப்பாக நடைபெற்றுள்ளது.

இப்படித் தங்களுக்கு பிடித்த தலைவரின் பிறந்த நாள் விழாவினை காங்கிரஸ் பிரமுகர்கள் ஆளுக்கொரு திசையில் கொண்டாடினர். இந்நிலையில் காமராஜரின் சில எண்ணங்களைப் பிரதிபலித்தும், பலவற்றைப் பிரதிபலிக்காமலும் போகும் வகையில் மத்தியில் பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ள நிதி யமைச்சர் சிதம்பரம், புதிய சிந்தனையில் இருக்கிறாராம்.

டெல்லியில் அவருக்கு அன்றாடம் பெரும் தலைவலி! தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளுக்கு அவர் செயல் வடிவம் கொடுக்க முனையும் போதெல்லாம், முன்னால் போனால் கம்யூனிஸ்ட்டுகள் இழுக்கிறார்கள். பின்னால் போனால் காங்கிரஸில் உள்ளவர்களே குறை சொல்கிறார்கள்.

இப்படி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், காங்கிரஸில் உள்ள தன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் சிதம்பரம். நிதியமைச்சகத்தில் இருப்பது அவருக்கு திரிசங்கு சொர்க்கம் போலிருக்கிறது என்றுதான் அவருடைய நெருங்கிய வட்டாரங்களே பேசுகின்றன.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்கின் வலியுறுத்தலால்தான் சிதம்பரம் டெல்லியில் நிதியமைச்சராக நீடித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் இன்றைய நிலை.

டெல்லி நிலைமை இப்படியிருக்க, தமிழகத்திலோ "போதும் தி.மு.க! இனி ஆட்சியைப் பிடிக்க நாம் தமிழக பாலிடிக்ஸில் நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கிறார் சிதம்பரம்' என்று அவருடைய முக்கிய ஆதரவாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.

"காமராஜர் ஆட்சி' என்ற லட்சியத்தை தூக்கிப் பிடித்து 1996ல் காங்கிரûஸ விட்டு மூப்பனாருடன் வெளியேறினார் சிதம்பரம். அதற்காக சில முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் அ.தி.மு.க.வுடன் மீண்டும் த.மா.கா. கூட்டணி வைக்க வேண்டி வந்தது.

அப்போது, "வேண்டாம். நான் தனிக்கட்சி காண்கிறேன்' என்று கூறிவிட்டு காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை ஆரம்பித்தார். மாவட்ட அளவில் நிர்வாகிகளைப் போட்டு, உண்மையான எண்ணிக்கையில் உறுப்பினர்களைச் சேர்த்து கட்சியை நடத்தினார்.

ஆனாலும் அவர் நினைத்தது போல் "காமராஜ் ஆட்சியை'க் கொண்டு வரும் வலிமை, அந்த இயக்கத்துக்கு இல்லாமல் போனது.அதற்குக் காரணம் 1996, 2001 ஆகிய இரு தேர்தல்களிலுமே "அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க.' என்றும், "தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க.' என்றும் மாறாத சிந்தனை மக்கள் மனதில் குடி இருந்ததுதான்.

இந்த நிலையில் 2006 சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில்தான் புதிய சக்தியாக வந்தது தே.மு.தி.க. இந்தக் கட்சி, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கும் மாற்றாக வரும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்து, அதில் ஓரளவு வெற்றியும் கண்டது.

விஜயகாந்த் வைத்த கோஷம் ஒன்றும் புதிதல்ல. "இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை' என்று காமராஜர் சொன்ன கருத்துதான். "அதை நாம் சொன்னபோது ஏற்றுக் கொள்ள மறுத்த மக்கள், இன்று அந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காத விஜயகாந்த் சொல்லும்போது ஏற்றுக் கொண்டுள்ளார்களே...' என்ற எண்ணம் சிவகங்கைக்காரரின் மனதில் குடியேறியிருக்கிறது. இது,

அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய சிந்தனையை புது மாதிரியாக அவர் மனதில் கிளறி விட்டுள்ளது. "இனி தி.மு.க.வை ஆதரித்துப் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று முடிவே செய்துவிட்டாராம் சிதம்பரம்.

சமீபத்தில் மதுரை மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. சிதம்பரம் வெற்றி பெற்ற சிவகங்கை தொகுதிக்கு அருகில் உள்ளது இந்த இடைத்தேர்தல் தொகுதி. ஆனால் அங்கு தேர்தல் பிரசாரத்திற்குப் போகவில்லை சிதம்பரம்.

ஏனென்றால், அங்கு போனால் தி.மு.க. அரசின் சாதனைகளைப் பாராட்டி வாக்கு கேட்க நேரிடும். இதனாலேயே அவர் தேர்தல் பிரசாரத்தைத் தவிர்த்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கையில் போட்டி வேட்பாளராக நின்று வெற்றி பெற்று நகர சபைத் தலைவரானார் முருகன். இவர் குண்டு வைத்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் சிதம்பரம், "குற்றவாளிகள் உடனடியாக பிடிக்கப்பட வேண்டும்' என்று அறிக்கையே விட்டார்.

மத்திய நிதி அமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர், மாநிலத்தில் தனிப்பட்ட விரோதத்தில் நடைபெற்ற ஒரு கொலைக்குக் கண்டனம் தெரிவித்தது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற முதல் சம்பவம். இந்த ஆட்சியை எதிர்த்து விட்ட முதல் அறிக்கை இது என்றும் கூட சொல்லலாம்.

"நான் தி.மு.க.வின் ஆதரவாளன் அல்ல' என்பதை மெல்ல மெல்ல அழுத்தமாகக் காட்டிக் கொண்டு வரும் அமைச்சர் சிதம்பரம், இன்னொரு புறத்தில் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் (காங்கிரஸ் ப்ளஸ் பழைய த.மா.கா) தன் பக்கம் அணி திரள வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். அதன் ஓர் அங்கம்தான் கார்த்தி சிதம்பரம் நடத்தும் ரகசியக் கூட்டங்கள்!

கார்த்தி சிதம்பரம் தலைமையில் ப.சிதம்பரத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அடிக்கடி பேசுகிறார்கள். சுப்புராம், ராமசாமி, சுந்தரம் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் கார்த்தி நடத்தும் பிரத்யேகக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்கிறார்கள். இதுவரை வெளிப்படையாக ஒரு கூட்டமும், ரகசியமாக பத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களும் போட்டு காங்கிரஸ் கட்சிக்குள் "பலம் மிக்க' தங்கள் அணியை உருவாக்குவது பற்றி ஆலோசனை செய்து வருகிறது இந்தப் படை.

வருகின்ற 19ஆம் தேதி கார்த்தி தலைமையில் இன்னொரு கூட்டத்தை காமராஜர் வீட்டின் முன்பு இருக்கும் ஒரு ஹோட்டலில் போடுகிறார்கள். அதில் அநேகமாக ஃபைனல் ஆக்ஷன் ப்ளான்கள் பளிச்சிடும் என்றே தகவல். தங்கள் அணியை பலமுள்ளதாக்க காங்கிரஸில் வெயிட்டாக உள்ள வாசன் அணியை உடைப்பது கார்த்தி சிதம்பரத்தின் திட்டமாக இருக்கலாம் என்று பேசிக் கொள்கின்றனர். இதற்கு பட்டுக்கோட்டை ராஜேந்திரன் போன்ற பழைய மூப்பனார் ஆதரவாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் வாசன் பக்கம் இருந்தாலும், அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலரும் பொறுப்பு ஏதும் கிடைக்காமல் சுணங்கிப் போயிருக்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களுக்காக வாசன் அறங்காவலர் பதவியோ, வேறு வாரிய உறுப்பினர்கள் பதவியோ தி.மு.க.விடம் சிபாரிசு செய்து பெற்றுத் தருவதில்லை என்ற கோபமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இப்படி வாசன் மீது அதிருப்தியில் இருப்போருக்கு வலை வீசுகிறார்கள் கார்த்தி அணியினர். மாவட்டத்திற்கு குறைந்தது 30 பேரையாவது பிடித்துவிட வேண்டும் என்று தன் ஆதரவாளர்களுக்கு "ஸ்பெஷல் அûஸன்மென்ட்' கொடுத்துள்ளாராம் கார்த்தி. இவர் நடத்தும் வெளிப்படையான மற்றும் ரகசியக் கூட்டங்கள் அனைத்திற்குமே அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவு இருப்பதாகவே பேசுகிறார்கள்.

காங்கிரஸுக்குள் தங்கள் அணியைப் பலப்படுத்துதல் பற்றி சிதம்பரத்திடம் டிஸ்கஸ் பண்ணியபோது, ""என் அந்தஸ்துக்கு இங்கே கோஷ்டி அரசியல் பண்ண முடியாது. ஆனால் தமிழக காங்கிரஸ் போகும் பாதை சரியில்லை. நம் கட்சியை இன்னொரு கட்சி விழுங்க அனுமதிப்பது சரியல்ல. அதனால் எல்லாவற்றையும் செய்து காங்கிரஸ் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். மற்றவற்றை நான் மேடத்திடம் (சோனியா காந்தி) பேசிக் கொள்கிறேன். அவர் ஓ.கே. சொன்ன பிறகுதான் என்னால் இங்கு முழு வீச்சில் களமிறங்க முடியும்'' என்று பூடகமாகக் கூறியுள்ளாராம்.

""இரு கழகங்களும் ஒன்றே' என்ற கோஷத்தை முன் வைத்து மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க முயற்சி எடுப்போம்'' என்று "சிவகங்கை சபதம்' போட்டிருக்கும் சிதம்பரம், ஒருபுறம் வங்கிகள் மூலம் நலத் திட்ட உதவிகளை மாதத்திற்கு இரு முறையாவது தொகுதியில் செய்கிறார். மக்களுக்கான மருத்துவத் திட்டங்களையும் நிறைவேற்றுகிறார். இன்னொரு புறம் காங்கிரஸிற்குள் தங்கள் அணி பயில்வானாக இருக்க, முழு வீச்சில் தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை களமிறக்கியுள்ளார். ஆக, தமிழக பாலிடிக்ஸýக்கு சிதம்பரம் மீண்டும் சுறுசுறுப்பாகத் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

ராம்ஸ்

0 comments: