தமிழகத்தில் முதல்முறையாக அரவாணிக்கு ஆபரேஷன்

தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் அரசு மருத்துவமனையில் 8 அரவாணிக்கு இலவச ஆபரேஷன். ஜூலை 5-ம் தேதி நடக்கிறது.

பெண்ணாக மாற விரும்பிய 8 அரவாணிகளுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் வரும் 5-ம் தேதி இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.ஆணாக பிறந்து பெண் தன்மையுடன் வாழும் அரவாணிகளுக்கு சமூகத்தில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. அவர்களை கேலிப் பொருளாக நினைத்து பலர் கிண்டல் செய்து வருகின்றனர். "நாங்களும் மனிதப் பிறவிதான். அரவாணியாக பிறந்தது எங்கள் குற்றமா? எங்களையும் சமூகத்தில் ஒரு அங்கமாக மதிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அளிக்கும் சலுகைகளை எங்களுக்கும் அரசு வழங்க வேண்டும்" என்று அரவாணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


ஆண்களுக்கான அடையாளங்கள் அருவெறுப்புடன் இருப்பதாகவும், தங்களது பெண் உணர்வுகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் கருதும் அரவாணிகள், மும்பை உட்பட பல இடங்களுக்கு சென்று ஆபரேஷன் மூலம் தங்களை முழு பெண்ணாக மாற்றிக் கொள்கின்றனர். இந்த வகை ஆபரேஷனுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது.


தங்களுக்கு வருவாய் இல்லாததால் இத்தகைய ஆபரேஷனை அரசே இலவசமாக செய்ய வேண்டும் என்று அரவாணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரவாணிகளை பெண்ணாக மாற்றும் ஆபரேஷன் இலவசமாக செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.


அதன்படி, முதல்முறையாக தமிழகத்தில் வேலூர் அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை வரும் 5-ம் தேதி செய்யப்படுகிறது. சவுந்தர்யா, சிம்ரன், கீதா, நாகவள்ளி, கவிதா, திவ்யா, பானுப்ரியா, கற்பகம் ஆகிய 8 பேர் ஆபரேஷன் செய்து கொள்கின்றனர். இவர்களுக்கான ரத்த பரிசோதனை, எச்ஐவி பரிசோதனை உட்பட அனைத்து முதற்கட்ட பரிசோதனைகளும் கடந்த வாரம் நடந்து முடிந்தது. ஆபரேஷன் செய்து கொள்ள விருப்பம் உள்ள அரவாணிகளின் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.

3 comments:

July 1, 2007 at 6:51 AM நாமக்கல் சிபி said...

முறையாக அரசாங்கமே செலவினை ஏற்று அறுவை சிகிச்சி செய்கிறது என்பது மகிழ்ச்சியே!

அவர்களுக்கும் ஒரு விடிவுகாலம்(சமூக அங்கீகாரம்) பிறக்க வேண்டும்!

கூடிய விரைவில் நடக்கும் என்று நம்புவோமாக!

July 1, 2007 at 1:22 PM G.Ragavan said...

நல்லதொரு தொடக்கம். சமூகத்தில் அவர்களும் ஒரு பங்குதான். அதை ஏற்றுக்கொண்டு அனைவரும் அரவணைத்து வாழும் நிலை வரவேண்டும் என்று நம்புவோம். விரும்புவோம்.

July 1, 2007 at 3:03 PM யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அரசைப் பாராட்டுகிறேன்.
அவர்களை மனிதராக மதிக்கும் மனோநிலை வளர வேண்டும்.