கலாம் எங்களுடன் வசிக்கவேண்டும் - அண்ணன் உருக்கம்

ராமேஸ்வரத்தில் தனி அறை தயார் பதவிக் காலம் முடிந்த பிறகாவது கலாம் எங்களுடன் வசிக்க வேண்டும் - அண்ணன் உருக்கம்




"நாட்டுக்காக வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்த அப்துல் கலாம், ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின் எங்களுடன் இருக்க வேண்டும்; அவருக்காக ராமேஸ்வரத்தில் அவர் பிறந்த வீடு தயாராக உள்ளது" என மூத்த சகோதரர் முத்துமீரா மரைக்காயர் கூறினார்.

ராமேஸ்வரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், பள்ளி படிப்பை முடித்து விட்டு ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை தொடர்ந்தார். பின்னர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, சென்னை எம்.ஐ.டி.யில் தனது படிப்பு காலங்களை முடித்தார். ஆராய்ச்சி பணியில் ஈடுபட்ட அவர், பொக்ரானில் அணுகுண்டு சாதனை நிகழ்த்தி சாதனை புரிந்தார். ஜனாதிபதி பதவி அவரைத் தேடி வந்தது.

திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையை நாட்டுக்காகவே அவர் செலவழித்து வருகிறார். 2020 இந்தியா வல்லரசாக ஆக வேண்டும் என்ற ஆசையோடு தனது ஜனாதிபதி பதவிக் காலத்தையும் அவர் முடிக்க போகிறார்.கலாமின் பதவிக்காலம் இந்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின், அப்துல் கலாம் தங்கள் மாநிலத்தில் தங்க வேண்டும் என பல மாநில முதல்வர்கள் போட்டிப் போட்டு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசும் நடைமுறைப்படி டெல்லியில் ஒரு பெரிய பங்களாவை அவருக்காக தயார்படுத்தி வருகிறது.

அப்துல் கலாம் பிறந்து வளர்ந்த வீடு, ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. அங்கு இவருடைய மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரக்காயர் குடும்பத்துடன் இருந்து வருகிறார். இந்த வீட்டின் மாடி தளத்தை அப்துல் கலாமுக்காக ஒதுக்கி தம்பியின் வருகைக்காக காத்திருக்கிறார்.

இது குறித்து முகமது முத்துமீரா மரைக்காயர் கூறியதாவது:

பள்ளி படிப்பு காலத்தை முடித்து சென்ற கலாம், ஆராய்ச்சி, அணுகுண்டு சோதனை, ஜனாதிபதி பதவி என வாழ்வின் பெரும் பகுதியை நாட்டுக்காகச் செலவழித்துள்ளார். அவர் இங்கு வந்து சென்றது சில நாட்களே. கடைசியாக கடந்த ஆண்டு, செப்டம்பர் 23ம் தேதி வீட்டுக்கு வந்து சென்றார்.

அவருடைய பதவிக்காலம் முடிந்த பிறகு, பிறந்த வீடான இங்கு வந்து தங்க வேண்டும். அவருக்காக மாடியில் ஒரு அறையை ஒதுக்கியுள்ளோம். இதுதொடர்பாக முடிவு எடுப்பது கலாமின் விருப்பத்தை பொறுத்தது. அவர் எடுக்கும் முடிவு எப்போதும் சரியாகவே இருக்கும். வாழ்வின் பெரும் பகுதியை வெளியூரில் கழித்த அவர், இனிமேல் எங்களுடன் தங்குவார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு முத்துமீரா கூறினார்.

0 comments: