Showing posts with label தலையங்கம். Show all posts
Showing posts with label தலையங்கம். Show all posts

தீ பரவட்டும்!

பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியின் கொள்கை குலதர்மமாகத்தானிருக்கும் என்பதற்கு அடையாளம்தான், குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியால் எழுதப்பட்ட (கர்மயோக்) நூலின் சாரமாகும்.

ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கையில் வருணாசிரமப் பாதுகாப்பு கெட்டியாக இருக்கிறது. வர்ணவியா வஸ்தா என்பது ஓர் சமூக அமைப்பு என்றும், அதில் ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் கூறுகிறார்.

இன்னும் பச்சையாக அனைவருக்கும் புரியும்படி ஜாதியை ஆதரித்து வெளிப்படையாகவே எழுதுகிறார்.

நீண்ட காலமாகவே சிலர் ஜாதி அமைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த ஜாதி அமைப்பு நமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது; உண்மையில் ஜாதி அமைப்பு சமூக ஒற்றுமைக்கு உதவுகிறது என்று ஆர்.எஸ்.எஸின் வேத நூல் என்று போற்றப்படும் நூலில் (Bunch of Thoughts) பச்சையாகவே ஜாதியை, அதன் குலத்தொழில் நிலையை நியாயப்படுத்தி எழுதியுள்ளார்.

அவரைக் குருநாதராகக் கொண்டு வழிபடும் பச்சை ஆர்.எஸ்.எஸ்.,காரரான குஜராத் முதலமைச்சர் திருவாளர் நரேந்திரமோடி குப்பை அள்ளும் தொழிலையும், மலம் எடுக்கும் தொழிலையும், சாக்கடையைச் சுத்தப்படுத்தும் தொழிலையும் ஆதரித்து, அதில் ஈடுபடுகிறவர்கள் மோட்சம் போவர் என்று பேசுவதில் ஆச்சரியம் என்ன?

இந்த 2007 ஆம் ஆண்டிலும் இத்தகைய கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டு அத்தகைய மனித வெறுப்பாளர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டியதுதான் மனித நேயக்காரர்களின் முதலாவதும், முக்கியமானதுமான கடமையாகும். இத்தகைய பிற்போக்கு வாதிகள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டால், மனித குலம் கற்காலத் திற்குத்தான் தள்ளப்பட நேரும் என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் திட்டமிட்டுச் செய்யவேண்டும்.

நேற்று (11.12.2007) சென்னையில் - மோடியின் கூற்றை எதிர்த்து திராவிடர் கழகமும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் இணைந்து நடத்திய போராட்டத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் இதுதான் மிளிர்கிறது.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எரித்தனர் என்பதையும் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியதை, மீண்டும் மக்களின் சிந்தனைப் பார்வைக்கு வெளிச்சமாகக் கொண்டு வந்து காட்டவேண்டும். விழிப்புணர்வு என்பதே சரியான பரிகாரமும், ஆயுதமும் ஆகும்.

இந்தியா முழுமையும் மலத்தை அள்ளித் தலையில் சுமக்கும் எங்கள் சகோதரர்கள் 6 லட்சத்து ஆயிரம் பேர் உள்ளனர் என்கிற புள்ளி விவரத்தை திராவிடர் கழகத் தலைவர் எடுத்து விளக்கினார் - பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்பொழுது விஷ வாயு தாக்கி மரணமடைந்தவர்கள் 22,327 பேர்கள் என்றும், இவர்கள் அத்தனைப் பேரும் சேரிவாழ் மக்களாக, தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பதை அவர் எடுத்துரைத்ததை நாகரிகம் உள்ள ஒரு சமுதாயம் எண்ணிப் பார்க்கவேண்டாமா? பரிகாரம் தேடிட முனைய வேண்டாமா?

தாழ்த்தப்பட்ட தோழர்கள் இத்தகைய தொழில்களைச் செய்கிறார்கள் என்பதற்காகக் கூட அல்ல - மனிதநேய அடிப் படையில் பார்ப்பனர்கள்கூட இந்தத் தொழிலைச் செய்யக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னதை பார்ப்பனர்களும், மோடி போன்ற பார்ப்பனத் தொங்கு சதைகளும் எண்ணிப் பார்க்கவேண்டும். நாங்கள் போராட வந்த நோக்கத்தையும் சிந்திக்கவேண்டும்.

இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரத்தில் நேற்று நடத்தப்பட்ட குலதர்ம எதிர்ப்புப் போராட்டத்தின் வீச்சினை - சாரத்தினை காஷ்மீர் பனிமலை வரை கொண்டு செலுத்தவேண்டியது மிகவும் அவசியமாகும்.

இது ஒரு தீப்பொறிதான் - இது இந்தியாவின் நாலாத் திசை களிலும் பரவட்டும்! பரவட்டும்!!
குஜராத் முதலமைச்சர் எழுதியுள்ள கருத்துக்கூட ஒரு வகை யில் தீண்டாமைக்கான குற்றம்தான். அந்தக் கண்ணோட்டத்திலும் மத்திய அரசு அதனைப் பார்க்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தரவு - விடுதலை

அய்.அய்.டி.,யா- அக்கிரகாரமா?

அய்.அய்.டி.,களில் (IIT) இட ஒதுக்கீடு என்பதைப்பற்றித் தெரிந்துகொள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த பிஎச்.டி., பட்டம் பெற்ற எத்திராஜ் முரளிதரன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்தார். அய்.அய்.டி.,களில் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை என்கிற தகவல் கிடைத்திருக்கிறது.

அய்.அய்.டி.,களில் தகுதி அடிப்படையில்தான் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றும், அதற்கான ஆணையிருக்கிறது என்றும் அய்.அய்.டி., தரப்பில் கூறப்பட்டாலும், அத்தகு ஆணை எதுவும் கிடையாது என்று மனித வள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளதாக தினமலர் ஏடே கூறுகிறது.

அப்படியானால், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக அய்.அய்.டி., செயல்பட்டு வருகிறது என்றுதானே பொருள்?

இதன்மீது மனித வள மேம்பாட்டுத் துறை அய்.அய்.டி., இயக்குநர் மற்றும் நிருவாகத்தின்மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கவேண்டாமா? இந்தப் பிரச்சினையில் மனித வள மேம்பாட்டுத் துறை ஏன் தயக்கம் காட்டுகிறது?

சென்னை - அய்.அய்.டி.,யை எடுத்துக்கொண்டால் ஆசிரியர்களில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை 282 (70 சதவிகிதம்), முன்னேறிய ஜாதியினர் 40 (10 சதவிகிதம்), பிற்படுத்தப்பட்டோர் 57 (14 சதவிகிதம்), தாழ்த்தப்பட்டோர் 3 (0.75 சதவிகிதம்), கிருத்தவர் 15 (3 சதவிகிதம்), சமணர்கள் 3 (0.75 சதவிகிதம்), முசுலிம்கள் பூச்சியம்.

இந்தியா முழுமையும் அநேகமாக இந்த நிலைதான்.

நூற்றுக்கு மூன்று சதவிகித எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்கள் இப்படி முழுச்சுளையையும் விழுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உயர்தரக் கல்வி நிறுவனம் என்று சொல்லப்படுகின்ற கல்வி நிறுவனங்களில் இந் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் புறக்கணிக்கப் படுகின்றனர் என்றால், இந்தக் கொடுமையை அனு மதிக்கலாமா? ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்ச்சி இல்லை என்று இதற்குப் பொருளா?

சென்னை - அய்.அய்.டி.,யில் உள்ள இயக்குநர் ஆனந்த் என்ற பார்ப்பனருக்குப் பதவி நீட்டிப்பு அளிக்கப் பட்டுள்ளது. இந்த ஆசாமி பொறுப்பேற்ற காலந்தொட்டு பச்சை அக்கிரகாரத்தனம் தலை கொழுத்துத் தாண்டவமாடுகிறது.

பல்வேறு குளறுபடிகளைச் செய்துகொண்டு இருக்கும் இவரை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன் றத்தில் நிலுவையிலும் உள்ளன. போராட்டங்களும் நடைபெற்று இருக்கின்றன. என்ன நடந்தாலும், எதுவும் நடக்காததுபோல, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ராஜ நடைபோட்டுத் திரிகிறார் இவர் என்றால், இதனை அனுமதிக்கலாமா?

டில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இப்படித்தான் வேணுகோபால் என்ற பார்ப்பனர் திமிர் முறித்துக் கொண்டு இருந்தார். உச்சநீதிமன்றம் வரை அவருக்கு முட்டுக் கொடுத்துப் பார்த்தது; இப்பொழுது வெளி யேற்றப்பட்டுவிட்டார் - ஒரு சட்டத்தின்மூலம். அதைவிட மோசமான பரிபாலனம் சென்னை - அய்.அய்.டி.,யில் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கு எப்பொழுதுதான் முடிவு?

பல ஆண்டுக்காலமாக இட ஒதுக்கீடு புறக்கணிக்கப் பட்டதால், நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படவில்லையா? அந்த இழப்புக்கு என்ன பரிகாரம்?
இனிமேலும் இந்த அநீதி தொடரலாமா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் - குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் அக்கறை காட்டுமாறு வலியுறுத்துகிறோம்.


தரவு - விடுதலை

அக்கிரகாரத்தின் சினம்

மனுதர்ம சாத்திரத்துக்கே வக்காலத்து வாங்கி எழுதும் திருவாளர் சோ ராமசாமி, செல்வி ஜெயலலிதாவுக்காக வக்காலத்து வாங்கி கலைஞரைப் பழி தூற்றுவதில் அதிசயம் இருக்க முடியாதுதான்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.என். அகர்வால் ஆணை, வாய் வார்த்தைகள் அனைத்துக்குமே சிவப்புக் கம்பள வரவேற்பினைத் தாராளமாக அளித்துள்ளார் அவர்.

நீதிமன்றங்கள் தங்கள் மனம்போன போக்கில் ஆணை பிறப்பிப்பதே முதல் தவறு. வேலை நிறுத்தம் கூடாது என்பதெல்லாம் நீதிபதிகளின் சொந்த அபிப்பிராயங்கள்தானே - அரசமைப்புச் சட்டத்தின் சரத்துக்களை எடுத்துக்காட்டியா ஆணைகளைப் பிறப்பிக்கிறார்கள்? உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு போராட்ட முறையை - உரிமைக்கான வெளிக்காட்டுதலை தடை செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

அதிகாரம் உள்ள பதவி நாற்காலியில் உட்கார வாய்ப்புக் கிடைத்ததற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்றால், அதன் எதிர் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியதுதான். `சோ போன்ற ஞாயிற்றுக்கிழமை வக்கீல்கள் (இனிமேல் இந்த வார்த்தையையும் கூற முடியாது - காரணம் நீதிபதியே ஞாயிறு அன்று நீதிமன்றத்தைத் திறக்கச் சொல்லி விசாரித்து இருக்கிறாரே!) தான் இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

வேலை நிறுத்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வேலை நிறுத்தத்தை நடத்த முடிவு செய்து இருக்கலாமா என்ற வினாவைத் தொடுத்துள்ளார்.
நீதிமன்றத்தின் அத்தகு தடைகளுக்குப் பிறகும் நாடு தழுவிய அளவில் அத்தகைய போராட்டங்கள் நடக்கத்தான் செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில்கூட இவ்வாண்டு மார்ச் 31 ஆம் தேதி இதே தி.மு.க., தோழமைக் கட்சிகளின் சார்பில் நடத்தப்பட்டுள்ளதே - மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங் களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து அத்தகைய போராட்டம் நடத்தப்பட்டது. ஆந்திராவிலும்கூட நடத்தப் பட்டதுண்டு.

அதற்கு `சோ கூறும் சமாதானம் - அந்த வேலை நிறுத்தம்பற்றி (பந்த்) உச்சநீதிமன்றத்திற்கு யாரும் கொண்டு செல்லவில்லை என்கிறார் - எத்தனையோ வழக்குகளை நீதிமன்றங்கள் தாமாக விசாரிக்க முன்வந்துள்ளனவே - அதுபோலவே இதிலும் தலையிட்டு இருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

தி.மு.க., என்றால் மட்டும் ``இனந்தெரியாத எரிச்சலா? இன்னொன்றையும் வலிந்து வாதாடுகிறார். உச்சநீதிமன்றம் `பந்த்க்குத் தடை என்றவுடன் தி.மு.க., தோழமைக் கட்சிகள் போராட்ட வடிவத்தை மாற்றிவிட்டன. உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு `சோ எழுதுவது என்ன தெரியுமா? ``உண்ணாவிரதம் என்ற முகமூடி அணிந்து வந்த பந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.

பந்த் என்பது தடை செய்யப்பட்ட ஒன்று; உண்ணா விரதம் அப்படியல்லவே! மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும், முடிச்சுப் போடுவானேன்?

போராட்டமே நடத்தக்கூடாது என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடா? உச்சநீதிமன்ற வழக்குத் தொடர்பாக விலா வாரியாக தலையங்கம் தீட்டும் திரு. `சோ ஓர் இடத்தில் தலையில் துண்டு போட்டுக்கொண்டு தலைமறைவாகி விடுகிறார்.

வாதியைப் பார்த்து நீதிபதி, நீதிமன்ற அவதூறு மனு போடுங்கள் என்று கூறினாரே, அதுபற்றி ஏன் `சோவின் பேனா வாய் திறக்கவில்லை?சு.சாமி, சோ, ஜெயலலிதா என்ற ஒரு கோடு நீண்டு கொண்டே போகிறது - இதற்குள்ளிருக்கும் பந்த பாசம் நாடு அறிந்த ஒன்றாகும்.
கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்று, சமூகநீதி உணர்வோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆ(ச)ண நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். பெரியார் அரசு நடக்கிறது என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மக்கள் மத்தியில் மேலும் செல் வாக்குப் பெருகும். பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு? எனவேதான் எது கிடைத்தாலும் அதனை தி.மு.க., ஆட்சிக்கு எதிராகப் பயன்படுத்தும் ஓர் அரட்டையில், ஆத்திரத்தோடு ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது அக்கிரகாரக் கூட்டம் - தமி ழர்கள் உன்னிப்பாக கவனிப்பார்களாக! புரிந்து கொள்வார்களாக!!

தரவு - விடுதலை

கலைஞரா புண்படுத்துகிறார்?

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் இந்து மக்களின் மனதைப் புண்படுத்துகிறார், ராமனை இழிவாகப் பேசுகிறார் என்பது போன்ற ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

செல்வி உமாபாரதி தலைமை வகிக்கும் பாரதீய ஜனசக்தி என்ற அமைப்பின் தமிழகத் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர் (யாரோ, ராம. தங்கராசாம்) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கையே தொடுத்துள்ளார்.

"முதல்வர் கருணாநிதி ராமர் பற்றி தவறாக விமர்சித்துப் பேசி வருகிறார் - அவரது பேச்சு பெரும்பாலான இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. அவரது பேச்சு சமுதாய அமைதியைக் கெடுப்பதாக உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 504, 505 ஆகிய பிரிவுகளின்கீழ் அவரைத் தண்டிக்கவேண்டும். முதல்வர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்று வழக்குக்கான மனுவில் கூறப்பட்டுள்ளது (`தினமணி, 19.9.2007).

வீதிமன்றங்களில் பேசப்பட்ட ராமன், ராமாயணம் என்பனவற்றின் யோக்கியதைகள் இனி நீதிமன்றங்களிலும் பதிவு செய்யப்படக் கூடிய வாய்ப்பு என்றே இதனைக் கருதலாம்.
ராமன் பிறப்பு, தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்கிற சமாச்சாரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அந்த ராமாயணம் திராவிடர்களை இழிவுபடுத்துகிறதே - குரங்குகள் என்று சொல்லுகிறதே - ராட்சதர்கள் என்று கேவலப்படுத்துகிறதே, பவுத்தர்களைத் திருடர்கள் - நாட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்று சொல்லுகிறதே - சூத்திரன் தவம் செய்தால் அவன் கழுத்தை வெட்டு என்று போதிக் கிறதே - வருணாசிரமத்தைக் கெட்டிப்படுத்துகிறதே, பெண்ணை அவமானப்படுத்துகிறதே - இதற்கெல்லாம் என்ன பதில்?

அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அவமானப் படுத்தலாம் - இழிவு செய்யலாம் - மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று அவர்கள் போற்றும் ராமன் சூத்திரன் என்பதற்காக சம்புகனை வெட்டிக் கொல்லலாம் - அவற்றைப்பற்றியெல்லாம் பேசக்கூடாதா? அடிபட்டவன் வலிக்கிறதே என்று கூடக் கூறக்கூடாதா?

ராமன் செய்கை குற்றமானது - தவறான நடவடிக்கை - மோசமான போதனை என்று பாதிக்கப்பட்ட நாங்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடாதா?

"நீதி தேவன் மயக்கம் என்னும் நாடகத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் "யார் இரக்கமற்றவர்கள்? என்று அடுக்கடுக்காக அம்பறாத் தூணியிலிருந்து புறப்படும் கணைகள்போல அலை அலையாக வினாக்கள் எழுப்பினாரே - இதுவரை எந்தக் கொம்பர்கள் பதில் அளித்தனர்?
தந்தை பெரியார் செய்ததைவிட - அதனைத் தாண்டி ராமாயண ஆராய்ச்சி செய்தவர்கள் உண்டா?
"இராமாயணப் பாத்திரங்கள் என்ற தந்தை பெரியார் அவர்களின் நூல் இதுவரை எத்தனை எத்தனைப் பதிப்புகள் வெளிவந்துள்ளன - எத்தனை இலட்சம் நூல்களும் மக்கள் மன்றத்தைச் சென்றடைந்தன?

ஆங்கிலத்திலும் (Ramayana A true treading) இந்தி யிலும் (சச்சி இராமாயணா) வெளிவந்துள்ளதே - ஒரே ஒரு வரி இதுவரை மறுக்கப்பட்டதுண்டா?

தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (1974 டிசம்பர் 25) அன்னை மணியம்மையார் அவர்கள் "இராவண லீலா நடத்தி ராமன், சீதை, லட்சுமணன் வகை யறாக்களைக் கொளுத்தினார்களே - அந்த வழக்கில்கூட திராவிடர் கழகம் வெற்றி பெற்றதே - நினைவிருக்கிறதா?

மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு இப்போது உயர் நீதிமன்றத்திற்கு வருகிறது - வரவேற்கிறோம். ராமனை, ராமாயண வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவோம்!
ராமாயணத்தைப்பற்றி மீண்டும் புது வீச்சோடு மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய கிடைத்தற்கரிய வாய்ப்பாக இதனைக் கருதுவோம்!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

விடுதலை தலையங்கம்

தந்தை பெரியார் 129

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 129 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.
இந்நாளில் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும், மனிதநேயர்களுக்கும் புரட்சிகரமான பகுத்தறிவு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியார் மறைந்து 34 ஆண்டுகள் மறைந்தன என்றாலும், அவர் நினைக்கப்படாத, அவர் சிந்தனைகள் பேசப்படாத, சர்ச்சை செய்யப்படாத நாளோ, நாழிகையோ இல்லை என்றே சொல்லலாம்.

வெகுதூரம் செல்லவேண்டாம். ராமன் பாலம் பிரச்சினை, ராமாயணப் பிரச்சினை என்று இந்தியா முழுமையும் இன்று விமர்சிக்கப்படுகிறதே - இதில் அறிவார்ந்த பக்கம், உண்மையின் பக்கம், ஆய்வின் பக்கம் எழுந்து நிற்கும் அலைகளின் மையப் புள்ளி தந்தை பெரியார் அவர்களே!

ஒரு முக்கால் நூற்றாண்டுகளுக்குமுன் ராமனை, ராமாயணத் தைக் கையில் எடுத்துக்கொண்டு மக்கள் மன்றத்தில் தந்தை பெரியார் சர்ச்சையைக் கிளப்பியபோது, பரவலாக மக்கள் மதித்துக் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக புதிய வெளிச்சத்தை அவற்றின் மீது பாய்ச்சியபோது, படித்தவர்கள்கூட முற்போக்கு, இடதுசாரி எண்ணம் கொண்டவர்கள்கூட, அதன் வீரியத்தை, விவேகத்தைப் புரிந்துகொண்டார்கள் இல்லை.

இப்பிரச்சினையில் மக்களின் சிந்தனைகளை வளர்த்து, அடுத்தகட்டமாக, மக்களின் வெறுப்பை அவற்றின்மீது காட்டும் வகையில் ராமாயண எரிப்பு, ராமன் பட எரிப்பு என்கிற அளவுக்கு மேலால் வளர்த்துக்கொண்டு சென்றாரே!

இந்த வெறுப்பும், எதிர்ப்பும்தான் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் போதிய சிந்தனை வளத்தையும், மாந்த நேயத்தையும், சகோதரத்துவத்தையும், இணக்கமான சமூகச் சூழலையும் உருவாக்கிற்று என்று உறுதியாகவே கூறலாம்.

இந்தியாவின் பிற பகுதிகளில் அந்த நிலை எட்டப்படாததால், ஆங்கெல்லாம் அவலமும், அமைதியற்ற சூழலும், மதவெறித் தீயின் தீய ஆட்டமும், கோரத் தன்மையாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

தந்தை பெரியார் சிந்தனை வெளிச்சம் எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக மற்ற மற்ற பகுதிகளுக்குப் பரவுகிறதோ, அந்த அளவுக்குத்தான் அப்பகுதிகளும் தமிழ் மண்ணாகி, சமூக நல்லிணக்கம் பட்டொளி வீசி பறந்திடும் என்பது கல்லின்மீது எழுத்தாகும்.
பச்சைத் தமிழர் காமராசர் போன்றவர்களே இந்தக் கருத்தை வேறு சொற்களில் பலமுறை சொன்னதுண்டு. வட மாநிலங் களுக்குப் பெரியார் தேவைப்படுகிறார் என்று சொல்லவில்லையா?
இன்றைக்கு இந்திய அளவில் தேவைப்படும் சமூகநீதி - இட ஒதுக்கீடு, மகளிர் இட ஒதுக்கீடு - மதச்சார்பின்மை என்பனவற்றுக் கும் தந்தை பெரியார் அவர்களின் வலுவான சித்தாந்தங்கள் தேவைப்படுகின்றன.

இந்தப் பிரச்சினைகளால் சமூகம் அமைதியற்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டத்திலும் குழப்பங்களும், கண்மூடித்தனமான சச்சரவுகளும் தலைதூக்கி நிற்கின்றன. மதவெறிக் கூட்டம் மாச்சரியங்களை ஏற்படுத்தி வருகின்றன.

அரசியல் தலைவர்களுக்கும் சரி, ஆட்சியாளர்களுக்கும் சரி, ஏன் உயர் அதிகாரம் படைத்த நீதிபதிகளுக்கும் சரி தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வெளிச்சம் மட்டுமே சரியான பாதையைக் காட்ட முடியும். அவர்கள் அத்தனைப் பேரும் பெரியாரியத்தை அறிந்திட முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், கல்விக் கூடங்கள், அலுவலக வளாகங்கள்; மக்கள் கூடும் பொது இடங்கள் அத்தனையிலும் தந்தை பெரியார் அவர்களின் பிரம்மாண்டமான சிலைகள் நிறுவப்படவேண்டும். மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் அவர்களைப்பற்றி புரட்சிக்கவிஞர் பாடினாரே - அந்தக் கருத்தை உருவகப்படுத்தும் வகையில் அந்தச் சிலைகள் அமையவேண்டும். அதைப் பார்த்த அளவிலே அய்யாவின் சித்தாந்தங்கள் பீறிடுகின்ற வகையில் அவை வடிவமைக்கப்பட வேண்டும்.

தொடக்கப்பள்ளி முதல் முதுநிலை ஆய்வுப் பட்டப் படிப்புவுரை தந்தை பெரியாரியல் கட்டாயப் பாடமாக ஆக்கப்படவேண்டும்.

ஏன் எனில், அவர் மட்டுமேதான் வேறு எந்தப் பற்றுக்கும், ஆசாபாசத்திற்கும் பலியாகாமல் மனிதப் பற்றை மட்டுமே முன் னிறுத்தி, தாராள சிந்தனைக்குத் தன்னை முற்றிலுமாக ஒப் படைத்து, உயர் எண்ணங்கள் மலரும் சோலையாக மணம் வீசினார்.

அது அறியாமை நோய் தீர்க்கம் மாமருந்து; சமத்துவச் சீர் தூக்கும் துலாக்கோல், தன்னம்பிக்கைக்கு ஆக்கம் சேர்க்கும் ஆணி வேர்!

அதனைச் சிக்கெனச் சமூகம் பிடித்துக் கொண்டு உய்யுமாக!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

'விடுதலை' - தலையங்கம்

மோடி அரசின் பாசிசம்



விண்வெளியில் பல மாதங்கள் தங்கி ஆய்வு செய்து சாதனை படைத்தவர் சுனிதா வில்லியம்ஸ். உலகம் முழுமையும் இதற்காகப் பாராட்டு கிடைத்தது. அதுவும் பெண் ஒருவர் இந்தச் சாதனையைச் செய்ததற்காகக் கூடுதல் புகழும் கிடைத்தது.

அவரின் பூர்வீகம் குஜராத் மாநிலம் - அவரின் உறவுக்காரர்கள் இன்னும் குஜராத் மாநிலத்தில் இருக்கிறார்கள். சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு, குறிப்பாக குஜராத்துக்கு வர விரும்பினார். குஜராத் ஏடுகளிலும் அந்த செய்தி வெளிவந்தபோது, பொதுமக்கள் மத்தியிலே நல் வரவேற்பும் இருந்தது.

ஆனாலும், அம்மாநில முதலமைச்சரான நரேந்திர மோடிக்கோ சுனிதா வில்லியம்ஸ் குஜராத் வருவதில் விருப்பமில்லை. ``சுனிதா இந்தியப் பெண் அல்ல - அவர் சாதனையால் நமக்கு ஒன்றும் பெருமை வந்துவிடப் போவதில்லை - அவர் வருகையை நான் அங்கீகரிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

மோடியைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது. பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர்களின் பார்வையெல்லாம் ஒரு வழிப்பாதைதான் - பாசிசப் பாதைதான். ``நீரோ மன்னன் என்று உச்சநீதி மன்றத்தால் படம் பிடித்துக் காட்டப்பட்டவராயிற்றே - பின் எப்படி நடந்துகொள்வார்?

சுனிதாவின் பெயரை ஒட்டி வில்லியம்ஸ் என்று இருப்பது அவர் கண்களை உறுத்தக்கூடும். காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றக்கூடும் - மனதைக் கோடரியாகப் பிளக்கவும் செய்யும். அப்படிப் பார்க்கப் போனால், மோடி பறந்து செல்லும் விமானத்தைக்கூட முதலில் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் கூட கிறித்தவர்கள் தான். ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஸ்டீவன்சன் கூட அந்த மதத்துக்காரர்தான். மின்சாரத்தைக் கண்டு பிடித்தவர்களும் அவர்களே!

கிறித்தவர்கள் கண்டுபிடித்ததை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று அஞ்ஞாத வாசம் செய்யப் போகிறாரா?இந்த 2007 ஆம் ஆண்டிலும் இத்தகு மனிதர்கள் இருக்கிறார்களே - அதுவும் மிக முக்கியமாக ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கிறார்களே என்பதை எண்ணும் போது, எந்த அளவுக்கு வாக்காளர்கள் மத்தியில் நஞ்சைப் புகுத்தி வைத்திருக்கின்றனர் என்று எண்ணும் போது வேதனையும், வெட்கமும் தான் மிஞ்சுகின்றன.

இன்னொரு காரணமும் கசிந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவரும், பின்னாளில் மோடிக்கு எதிரணியாகச் சென்றவருமான ஒருவரின் தூரத்து உறவுக்காரராம் இந்த சுனிதா. அதன் காரணமாகவும் மோடிக்கு வெறுப்பு என்று கூறப்படுகிறது.
தனக்கு எதிராக இருப்பவர்கள், தம் கருத்துக்கு மாறாகயிருப்பவர்கள் யாராக இருந்தாலும் வெறுக்கத் தகுந்தவர்கள் என்ற மன நோய்க்காரர்களாக காவி வட்டாரம் இருப்பதையும் இது காட்டுகிறது.

இப்படி ஒரு மனப்பான்மை அவர்களுக்கு இல்லா விட்டால், குஜராத் மாநிலத்தில் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கானவர்களை நரவேட்டை ஆடித் தீர்த்து இருப்பார்களா?

தேர்தல் நேரம் வருகிற காரணத்தால், சுனிதா வில்லியம்ஸ் பிரச்சினை குஜராத் மாநிலத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக சுனிதாவின் வருகையைக் குறித்து மோடி எதிர்க்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாம்.

குஜராத் பல்கலைக் கழகம் சுனிதாவுக்கு அழைப்புக் கொடுத்துள்ளது. அந்த விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாலும், இதுவரை அவர் இசைவு தெரிவிக்கவில்லையாம்.

பா.ஜ.க.,வின் அரசியல், தேசியம், இந்துத்துவா பார்வை எவ்வளவு மோசமானது என்பதைத் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.

.விடுதலை - தலையங்கம்

குடிசைகளும் - கோபுரங்களும்!

நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையின் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா மக்களவையில் (28.8.2007) வெளிப்படுத்தியுள்ள ஒரு தகவல் -இந்தியா எந்த இடத்தில் உழலுகிறது என்பதற்கான கண்கண்ட எடுத்துக்காட்டாகும்.

"2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி 6 கோடியே 80 லட்சம் மக்கள் இந்திய நகர்ப் புறங்களில் உள்ள குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். 1981 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2 கோடியே 79 லட்சம் மக்கள் நகர்ப்புற குடிசைகளில் வாழ்ந்துள்ளனர். 20 ஆண்டுகளில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி `கிரேட் மும்பை நகரின் மொத்த மக்கள் தொகையில் 54.1 சதவிகிதம் பேர் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். அடுத்ததாக, மீரட் நகரில் 44.1 சதவிகிதமும், நாக்பூரில் 35.9 சதவிகிதமும், கொல்கத்தாவில் 32.5 சதவிகித மக்களும் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். கணக்கெடுப்பின்படி, தேசிய தலைநகரில் 18.7 சதவிகித மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார் அமைச்சர்.

நாடு வளர்ச்சித் திசையில் அதிவேகத்தில் பாய்கிறது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இருந்தாலும், இந்தப் புள்ளி விவரங்கள், அந்தத் தகவல்களைக் கேலிக் குறியாக்கி விட்டன.
பொருளாதார வளர்ச்சி இருக்குமானால், சேரிகளின் எண்ணிக்கை எப்படி பெருக முடியும் என்பது அடிப்படையான ஒரு கேள்வியாகும்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதிகள் மும்பையைச் சேர்ந்த தாராவியில்தான் இருக்கிறது. இந்தத் தாராவியின் மொத்த குத்தகைக்காரர்கள் யார் என்றால், நம் தமிழர்கள்தாம்.
இது ஒரு பக்கத்தின் நிலை என்றால், இன்னொரு பக்கத்தில் 36 மகா கோடீசுவரர்கள் இந்தியாவில்; 10 லட்சம் ரூபாய்க்குமேல் ஆண்டு ஒன்றுக்கு வருமான வரி கட்டுபவர்கள் 5 லட்சத்து 62 பேர்களாம்.

36 கோடீசுவரர்களின் கையிருப்பு ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டுகிறது.
இந்தியாவின் ஆண்டு வரவு - செலவு என்ன தெரியுமா? ஆறு லட்சம் கோடி ரூபாய்தான். இந்திய அரசாங் கத்தைவிட பணக்காரர்கள் 36 பேர் இந்தியாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இந்தி யாவை ஆட்டிப் படைக்காமல் என்ன செய்வார்கள்? அரசுக்கு வரி கட்டாமல் சவால் விடுபவர்கள் இன்னொரு பக்கம்.

சமச்சீரான வளர்ச்சி இந்தியாவில் இல்லை என்பதற்கு இவை எல்லாம் அடையாளங்கள்தாம்.
சேரிகள் என்றால் அவற்றின் பொருள் என்ன? சுகாதார வசதிகள் கிடையாது. மழை, வெயில்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இங்கு வாழ்பவர்கள் அன்றாடக் கூலிகள். அன்றாடம் வேலை கிடைக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.

இந்த நிலையில், இவர்கள் பெற்றுப் போடும் பிள்ளை களுக்குக் கல்வியாவது, வெங்காயமாவது! எத்தகைய சூழலில் அக்குழந்தைகள் வளர்வார்கள் என்பதை எண் ணிப் பார்த்தால் ரத்தக் கண்ணீர்தான் வடிக்க வேண்டி வரும்.அடிதடிகளும், குற்றச் சூழல்களும்தான் இயல்பாக அந்தப் பகுதிகளில் நிலவும் பிரத்தியட்ச நிலைமையாகும்.

தி.மு.க., ஆட்சியில்தான் குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு புதுத் திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அறி முகப்படுத்தப்பட்டது. பல்லாண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்கள் இடிந்த நிலையில், புதிதாகக் கட்டித் தரும் உறுதியையும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அளித்துள்ளார்.

ஒரு பக்கத்தில் நகரம் - கிராம பேதங்கள் என்ற நவீன வருணாசிரம நிலை என்றால், இன்னொரு பக்கத்தில் நகருக்குள் மாட மாளிகைகள் ஒருபுறம், சாலையோரக் குடிசைகள் இன்னொருபுறம்!

இதற்கு முடிவுதான் என்ன? மிகவும் கவலையோடு அணுகவேண்டிய, தீர்வு காணவேண்டிய தீப்பொறி போன்ற பிரச்சினை இதுவாகும். இது வளருமேயானால், `சாலையோரங்களில் வேலையற்றதுகள் - அவர்களின் கண்களிலே விபரீதக் குறி! என்றாரே அறிஞர் அண்ணா. அந்த வரிகள்தான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகின்றன - எச்சரிக்கை!

வருமுன் காப்பதுதான் மனிதன் அறிவாளி என்பதற்கான இலக்கணமாகும்.

.'விடுதலை' தலையங்கம்

விட்டுக் கொடுக்கவில்லை என்றால் - பறிக்கவேண்டியதுதான்!




நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்கிற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது. சமூகநீதி வரலாற்றின் பரிணாமத்தில் இந்தக் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் - காலத்தின் கட்டாயமும் ஆகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் (சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம்) மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடமைப்பட்டுள்ளவர்கள் ஆவார்கள். இந்த நிலையில், தங்களுக்கு அதிகாரம் இருக்கும் காரணத்தினால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளாக இருக்கக் கூடியவர்கள், மக்கள் நலன் கருதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களைக் கிழித்துக் குப்பைக் கூடையில் வீசி எறிகிறார்கள்.

குறிப்பாக இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் அவர்களின் கைகள் எல்லை கடந்து நீளுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கமே சமூகநீதிக்கு உத்தரவாதம் தருகிறது. முதல் சட்டத் திருத்தத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோல் சமூக ரீதி - கல்வி ரீதி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. சமூக ரீதி என்கிறபோது ஜாதிதான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எத்தனை சதவிகிதம்தான் இட ஒதுக்கீடு என்றும் வரையறுக்கப்படவில்லை. இவ்வளவுத் தாராளமான இடம், இட ஒதுக்கீடுப் பிரச்சினைக்காக இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கிக் கொடுத்திருக்கும்போது, அந்த அரசமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதற்கு மாறாகப் பேசுவதும், தீர்ப்பு அளிப்பதும் எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும்?
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்கச் சென்ற ஒரு நீதிபதி - அதற்குமுன் அந்த அறையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி இருந்தார் என்பதற்காக அறையைச் சுத்திகரிக்க வேண்டும் என்று சொன்னதும், அவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட பிறகே அந்த அறையில் நுழைந்தார் என்பதும் எவ்வளவுப் பெரிய அவமானம் - சட்ட விரோதம் - மனித சமத்துவ விரோதம்!

இத்தகு நிலையில் நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் இந்தக் குரல் மிகமிக முக்கியத்துவத்தைப் பெறும் என்பதில் அய்யமில்லை.

பார்ப்பனர்களின் மனோ நிலை என்ன? இந்த வார `துக்ளக் இதழில் (5.9.2007) ஒரு கேள்வி - பதில் வாயிலாக அது தெளிவாகிறது.

கேள்வி: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ரவீந்திரன் என்பவர், `ஆண்டாண்டு காலமாக இருபது அல்லது முப்பத்து சதவிகிதத்தினர் மட்டுமே அனுபவித்து வந்த சலுகைகளை, எழுபது, எண்பது சதவிகித மக்களையும் அனுபவிக்க விடுவதில் என்ன தவறு? என்று கூறியுள்ளாரே?

பதில்: ஆண்டாண்டு காலமாக இருபது அல்லது முப்பது சதவிகிதத்தினர் `சலுகையை அனுபவித்தார்கள் என்று நீதிபதி கூறியது தவறு. அவர்கள், தங்கள் தகுதியினால் பெற்றதை, இன்று இட ஒதுக்கீடு என்ற `சலுகையின் மூலமாக, எழுபது சத விகிதத்தினர் பெறுவதற்கு வழி செய்ய, அரசுகள் முனைகின்றன. இந்த வித்தியாசத்தை நீங்கள் குறிப்பிட்டுள்ள நீதிபதியின் கருத்து, கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.


இதுதான் `துக்ளக் பதில்.
ஆண்டாண்டு காலமாக இருபது அல்லது முப்பது சதவிகிதத்தினர் சலுகைகளை அனுபவித்தவர்கள் தங்கள் தகுதியினால் அவற்றைப் பெற்றார்களாம்.அவர்கள் கூறும் அந்தத் தகுதி - 20 அல்லது 30 சதவிகிதத்தினரைச் சுற்றியே தொடர்ந்து வந்து கொண்டிருந்த `மர்மம் என்ன? இதுபற்றி `துக்ளக் சோ ராமசாமி என்றைக்காவது சிந்திக்க முயற்சித்தது உண்டா?

ஆண்டாண்டுகாலமாக குறிப்பிட்ட அந்த ஆதிக்கக் கூட்டத்திற்கு மட்டுமேதானே கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அரசர்கள் காலத்தை எடுத்துக்கொண்டாலும், சமஸ்கிருதமும், அதன் வழி வேதங்களும், உபநிடதங்களும் தானே பார்ப்பனர்களுக்காக மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.
இந்தச் சமூக வரலாற்றினைப் புறந்தள்ள முடியுமா? வாய்ப்பு மறுக்கப்பட்டுக் கிடந்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதுதானே சமூகநீதி?

இந்த நிலையில் உயர் அதிகார மையமாகத் திகழக்கூடிய உயர்மட்ட நீதித்துறைகளில் இட ஒதுக்கீடு அவசியம் என்பது சொல்லாமல் விளங்கக் கூடியதாகும்.பார்ப்பனர்கள் என்றைக்குத் தங்கள் ஆதிக்கத்தை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள்? விட்டுக் கொடுக்கவில்லையென்றால், அதனைப் பறிக்கவேண்டியது இயற்கை நியதிதானே?

'விடுதலை' தலையங்கம்

எது குறுகிய வாதம்`கல்கியாரே?




கேள்வி: தமிழகத்தில் இன்னும் பகுத்தறிவுப் பக்குவம் ஏற்படாமல் மக்கள் காசி, ராமேசுவரம் என்று போவதும், நெற்றி யில் விபூதி, குங்குமம் பூசுவதும் தமிழக முதல்வருக்கு வேதனையாக இருக்கிறதாமே?

பதில்: `பகுத்தறிவு என்பது, சமய நிராகரிப்பு, கடவுள் மறுப்பு என்ற குறுகிய நோக்கைவிட்டு வெளியே வருவது முதல்வருக்கு நல்லது. கோயிலுக்குப் போவதும், திருநீறு குங்குமம் பூசுவதும் மூட நம்பிக்கை வட்டத்துக்குள் வராது. பகுத்தறிவு வாதமே இன்றைய விண்வெளி யுகத்தில் எல்லாம் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது.

இது `கல்கி வார இதழில் இந்த வாரம் (26.8.2007, பக்கம் 66) இடம்பெற்றிருக்கும் பகுதியாகும்.

(1) கடவுளுக்கு உருவம் கிடையாது, தூணிலும், துரும்பிலும் இருப்பான் என்று ஒரு பக்கத்தில் கூறிவிட்டு இன்னொரு பக்கத்தில் கோயில் கட்டி கடவுளுக்கு ஆயிரக்கணக்கான உருவங்கள் வடித்து, கடவுளுக்குப் பெண்டாட்டிகள் வைப்பாட்டிகள், பிள்ளைகள் என்று புராணங்கள் எழுதி வைத்து, ஆண்டு முழுமையும் விழா கொண்டாடிக் கொண்டு இருப்பது - அவர்கள் கூறும் ஆன்மீகத்துக்கே எதிரானதா இல்லையா?

(2) சர்வ சக்தி வாய்ந்தவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் பேசிவிட்டு, இன்னொரு பக்கத்தில் பக்தர்கள் தங்கள் குறைகளைச் சொல்லவேண்டும் என்றும், கண்ணீர் விட்டுக் கதறவேண்டும் என்றும், கடவுளுக்கு நேர்த்திக் கடன்கள் செய்யவேண்டும் என்பதும், முரண்பாடா இல்லையா?

(3) கோயிலுக்குச் சென்று வணங்கினால், கோயில் குளத்தில் குளித்தால், புண்ணிய நதிகளில் நீராடினால் பஞ்சமா பாதகங்கள் தொலைந்து போகும் என்ற பிராயச்சித்தங்களை மதத்தில் ஏற்பாடு செய்து வைத்திருந்தால், நாட்டில் ஒழுக்கம் வளருமா என்கிற கேள்விக்கு என்ன பதில்?

(4) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடத்தில் தட்சணை வாங்குவதும், தரிசனம் காண்பதற்குப் பல வகையான கட்டணங் களை வைத்திருப்பதும் (சுயவந) அதிகக் கட்டணம் கொடுத்தால் சீக்கிரத்தில் கடவுள் சிலையைத் தரிசிக்கலாம் என்கிற ஏற்பாடு மூலம் - கோயில் என்பது ஒரு வியாபார நிறுவனம் என்று ஆகிறதா இல்லையா?

(5) திருநீறு பூசினால் எல்லா பாவங்களும் போகும் என்பதும், செத்துப் போன பிணத்துக்குத் திருநீறு பூசினால்கூட அவனுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதும், `கல்கி சொல்லும் பகுத்தறிவு வட்டத்துக்குள் வருகிறதா?

(6) லிங்கம், நாமம் போன்றவற்றிற்குக் கூறப்படும். விளக்கங் களும், தத்துவங்களும் ஆபாசமாக உள்ளனவே - (நாமத்தின் இரு கோடுகளும் விஷ்ணுவின் தொடை என்பதும், நடுவில் இருக்கும் சிகப்புக் கோடு என்பது விஷ்ணுவின் `குறி என்று கூறப்படுகிறதே!). இதனை அருவருப்பாக `கல்கி கூட்டம் கருத வில்லையா? நெற்றியில் படம் வரைந்துதான் மதத்தையும், பக்தியையும் பறைசாற்ற வேண்டுமா?

(7) பக்தி என்பது இப்போது பேஷனாகப் போய்விட்டது. வர்த்தக மனப்பான்மையாகிவிட்டது என்று சங்கராச்சாரியார் 1976 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த அகில இந்திய இந்து மாநாட்டில் பேசியதற்கு என்ன பதில்?

`என் அனுபவத்தில் சொல்லுகிறேன், பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று திருமுக கிருபானந்த வாரியாரே `ஆனந்தவிகடன் பேட்டியில் (22.12.1991) கூறினாரே - இதற்கு மேலும் யார் வக்காலத்துப் போட்டுப் பேசவேண்டும்?

(8) கோயில்களில் என்னென்ன அசிங்கங்கள் நடக்கின்றன - அர்ச்சகர்களின் களியாட்டங்கள் எத்தகையவை என்பதை யெல்லாம் சர்.சி. ராமசாமி அய்யரின் கமிஷன் அறிக்கையே வெள்ளையாக, பச்சையாக எடுத்துக் கூறியதே - குஜராத் மாநிலம் சுவாமி நாராயண் கோயில் அர்ச்சகர்கள், கோயிலையே அந்தப் புரமாக்கி நடத்திய லீலைகள் வண்டி வண்டியாக ஊடகங்களில் உலா வந்ததே - இதற்கெல்லாம் என்னதான் பொருளாம்?

(9) இன்றைய விண்வெளி யுகத்தில் எல்லாம் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது என்று மங்களம் பாடுகிறதே கல்கி.

உண்மை நிலை என்ன? அமெரிக்காவின் நேச்சர் என்ற விஞ்ஞான இதழின் கணிப்பு என்ன?

1914 ஆம் ஆண்டில் கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் 72 சதவிகிதம். 1999 இல் 90 சதவிகிதம் என்று கூறியிருக்கிறதே `கல்கி கூற்றில் ஏதாவது உண்மை இருக்கிறதா?

மனித சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களுக்குப் பகுத்தறிவைப்பற்றி கவலையிருக்கிறது - மூட நம்பிக்கை ஒழிக்கப்படவேண்டும் என்ற அக்கறையிருக்கிறது.
மூட நம்பிக்கை வளர்ந்தால்தான், பக்தி கொழித்தால்தான் தங்களின் உயர்ஜாதி ஆதிக்கம் நிலைக்கும் என்ற எண்ணத்தில் உள்ள `கல்கிகளுக்கோ, பகுத்தறிவுவாதம் குறுகிய கண்ணோட்டமாகப்படுகிறது.

எந்தவிதத்திலும் கலைஞரைக் குறைகூற வேண்டும் என்பதில் அக்கறையாக உள்ளவர்கள் என்னதான் எழுதமாட்டார்கள்.

மூடத்தனம் விரிந்ததாம் - பகுத்தறிவுவாதம் குறுகியதாம் - இதுதான் `கல்கி கூறவிரும்புவது - புரிந்துகொள்ளுங்கள்!

தரவு - விடுதலை

'விடுதலை' தலையங்கம்

`சிவ சிவாவும்`ஓம் சக்தியும்!




பெண்களுக்கான விடுதலை மாநாடுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஒரு முக்கியமானது தீப்பொறி போன்ற மனச்சான்றைச் சுடும் பிரச்சினையாகும்.மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியுறும் பிரச்சினைதான் அது. உலகம் பூராவும் இந்தப் பிரச்சினை இருக்கிறது என்று சமாதானம் சொல்லுவதைவிட, இந்நாட்டில் நிலவும் இந்தச் சூழ்நிலை கவனமுடன் - கவலையுடன் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.

1901 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின்படி ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண் குழந்தைகள் இந்தியாவில் இருந்தன. 2001 ஆம் ஆண்டில் அது 939 ஆகக் குறைந்துள்ளது. அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 800 பெண் குழந்தைகளே என்று கணக்குக் கூறப்படுகிறது. இதன் காரணமாக உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களிலிருந்து ஏழைப் பெண்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டு, இந்த மாநிலங்களுக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு குடும்பத்தில் பல ஆண்களுக்கு திரவுபதையாக ஆக்கப்படுகின்றனராம். தங்கள் காம இச்சைக்கான கழிப்பிடமாகப் பெண்களைக் கருதும் கேவலம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.

கருவில் இருக்கும்போதே, அது ஆணா, பெண்ணா என்று அறிவியல் ரீதியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பெண் சிசு என்றால் கருவிலேயே அழித்துவிடுவது என்ற கொடுமை நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ஒரு கோடி பெண் சிசுக்கள் இவ்வாறாக அழிக்கப்பட்டுள்ளதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
இவ்வார `கல்கி இதழில் இதுபற்றிய பல விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பலரிடமிருந்தும் கருத்துகள் கேட்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமான சமூக அமைப்பே இதற்குக் காரணம். பெண்களுக்குப் பாதகமாக அமையும் தவறான மத நம்பிக் கைகளையும், மதச் சடங்குகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வரும் பெரும்பான்மை மக்களின் மனநிலை மாற்றங்களினால் மட்டுமே இவற்றுக்குத் தீர்வு காண இயலும்.
பெண்கள் எண்ணிக்கை குறைய குறைய ஆண்கள் பெண்களை வேட்டையாடும் கொடுமை ஏற்படக்கூடும். பெண் கடத்தல் அதிகமாகக் கூடும். ஒரு பெண் பல ஆண்களைத் திரு மணம் செய்துகொள்வது என்பது கட்டாயமாகக் கூட ஆகக்கூடும் என்பது போன்ற கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெண் சிசுக் கொலை என்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் கொலை என்ற பிரிவின்கீழ்தான் (302) கொண்டு வருகிறது. இதில் யார் குற்றவாளியாக ஆக்கப்படுகிறார் என்றால், குழந்தையின் தாய்தான்; இது ஒரு சரியான முடிவாக இருக்க முடியாது. சிசுக் கொலைக்கு ஒரு குடும்பமோ, சுற்றமோகூட காரணமாக இருக்கக்கூடும்.

சிசுக் கொலைக்காக இதுவரை தண்டிக்கப்பட்டவர்கள் யார்? ஏட்டுச் சுரைக்காயாகத்தான் சட்டம் இருக்கிறதே தவிர, நடைமுறையில் பூச்சியம் தான்.நான்கு இடங்களில் தண்டிக்கப்பட்டார்கள் என்கிற நிலை உருவாகும்போது, விளம்பரம் ஆகும்போது அவ்வளவு எளிதாக சிசுக் கொலையில் ஈடுபடமாட்டார்கள்; அச்சம் அவர்களை உலுக்கக் கூடும்.

சிசு ஆணா, பெண்ணா என்று மருத்துவ ரீதியாகச் சொல்லக்கூடாது என்று சட்டம் இருக்கத்தான் செய்கிறது - அதுவும் ஏட்டுச் சுரைக்காய்தான்.சில சொல்லாடல்களை அவர்கள் வைத்துக் கொண்டுள்ள னராம். `சிவ சிவா என்றால் ஆண் குழந்தையாகும்; `ஓம் சக்தி என்றால் பெண் குழந்தையாம். நம் நாட்டு மதம் எவ்வளவுக் கேவலமான காரியங்களுக்குப் பயன்படுகிறது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆணுக்கு நிகராக பெண்களுக்கு எல்லா வாய்ப்புகளும், உரிமைகளும் (கல்வி, வேலை வாய்ப்பு, பொருளீட்டல்) கிடைக்க உத்தரவாதம் செய்யப்படுமேயானால், பெண்கள் சுமை என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும் என்பது தந்தை பெரியாரின் முடிவு.
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வெளிச்சம்தான் இந்த இருளுக்குக் கிடைக்கும் விடையாக இருக்க முடியும்.

சனி பெயர்கிறதா? - விடுதலை தலையங்கம்

அறிவியல் வளர்ந்தும் மனிதன் பக்திப் போதையில் சிக்கினால் அவன் காட்டு விலங்காண்டிதான். `எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது; உலக்கையைக் கொண்டு வா, கோவணம் கட்டி வருகிறேன் என்கிற நிலையில்தான் பக்திப் பைத்தியம் பிடித்த - படித்த மனிதர்களும்கூட அலைகிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு வெகுதூரம் போகவேண்டாம். நாளைய தினம் சனிப்பெயர்ச்சியாம் - பக்தர்கள் இலட்சக்கணக்கில் திருநள்ளாறு கோயிலுக்குச் சென்று தரிசிக்கப் போகிறார்களாம். அறிவியல் கண்டுபிடித்த ஏடுகளில் கிறுக்குகிறார்கள் -விஞ்ஞானம் அளித்த தொலைக் காட்சிகளைப் பயன்படுத்தி சனிப் பெயர்ச்சி நேரடி ஒளிபரப்பாம்!

புரோகிதக் கொள்ளைக்கு நல்ல அளவு வசதி செய்து கொடுப்பதுதான் இதுபோன்ற சரடுகள். அதில்கூட ஒருமைப்பாடு கிடையாது. பஞ்சாங்கங்களில் பலவகை உண்டே. முரண்பாடு இல்லாமல் என்ன செய்யும்? திருக்கணித பஞ்சாங்கம், சுத்த வாக்கிய பஞ்சாங்கம், கஞ்சனூர் பஞ்சாங்கம் என்று தொழில் போட்டிகள் அதிலும் உண்டு. இந்த ஆண்டுகூட ஜூலை 16 சனிப் பெயர்ச்சி என்ற ஒரு பஞ்சாங்கமும், இல்லை, இல்லை ஆகஸ்ட் 5 தான் சனிப் பெயர்ச்சி என்று இன்னொரு பஞ்சாங்கமும் பறைசாற்றுகின்றன. இரண்டு என்ன, ஆண்டு ஒன்றுக்கு இருநூறு சனிப் பெயர்ச்சிகள் என்று சொன்னாலும் - புரோகித வரும்படிதானே!

பக்தர்கள்தான் புத்தியைப் பறி கொடுத்தவர்கள் ஆயிற்றே -ஓர் ஆண்டுக்கு எத்தனை சனிப் பெயர்ச்சி என்று கேட்கவா போகிறார்கள்?மற்றவற்றில் எல்லாம் ராஜாஜியையும், கல்கி கிருஷ்ண மூர்த்தியையும் தூக்கிப் பிடிக்கும் `கல்கி இதழ்கூட சோதிடத்தில் அவர்கள் இருவரும் நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தாலும், வாரந்தோறும் ராசிபலன் வெளியிட மட்டும் தவறுவதில்லை.

மவுடீகமும், முட்டாள்தனமும் வளர்ந்தால்தானே பார்ப்பனியம் வளரும் என்பதை அவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் விடாப்பிடியாக அவற்றைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்!அறிவியல்படி சூரியன் என்பது நட்சத்திரமாக இருந்தாலும், ஜோதிடம் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. அதனைக் கிரகம் என்றே சொல்லுகிறார்கள்.

ஒரு வேடிக்கை - காஞ்சி `சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒருமுறை `தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக் கூறினார் (13.4.2004).

`முக்கிய கிரகம் சூரியன், மற்ற கிரகங்கள் அதைச் சுற்றி இயங்குகின்றன என்று கூறினாரே பார்க்கலாம் - இவர்தான் ஜெகத்குருவாம். தொடக்கப் பள்ளி மாணவனுக்குக் கூடத் தெரியும் சூரியன் ஒரு நட்சத்திரம் என்று. ஆனால், மத மவுடீகம் பிடித்து ஆட்டும் சங்கராச்சாரியார்களுக்கு இந்தப் பாலபாடம் கூடத் தெரியவில்லை என்பது எவ்வளவுப் பெரிய வெட்கக்கேடு.

இந்த வருடம் சனி பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறாராம் - எப்படியிருக்கிறது கதை?

சனி என்பது ஒரு கிரகம். பூமியிலிருந்து கிட்டத்தட்ட 80 கோடி மைலுக்கு அப்பாலிருக்கிறது. பூமியைவிட 700 மடங்கு பெரியது. சனி கிரகத்தில் உயிர்கள் கிடையாது. மைனஸ் 244 டிகிரி பாரன்ஹீட் கடும் குளிர் - ஆக்சிஜன் கிடையாது; எனவே, உயிர் வாழும் நிலை அங்கு இல்லை. இப்படி அறிவியல் கூறும்போது புராணீகர்கள் என்ன கூறுகிறார்கள்? சனி சூரியனுக்கும், சம்ஞைக்கும் பிறந்தவனவாம்.

இந்து மதத்தில் எல்லாமே இனக் கவர்ச்சிதான் - புணர்ச்சிதான்!

80 கோடி மைல் தொலைவில் உள்ள சனியின் சுழற்சிக்கும், பூமியில் உள்ள மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? மற்ற மற்ற உயிர்களுக்குச் சம்பந்தம் இல்லாமல் போன மர்மம் என்ன?
இதனையும் இந்த 2007 இல் 21 ஆம் நூற்றாண்டில் நம்பி சனி பகவான் பொல்லாதவன் - அவன் கோபத்தைத் தணிக்கவேண்டும் - திருநள்ளாறு செல்லவேண்டும்; நளன் தீர்த்தத்தில் எண்ணெய்த் தேய்த்து முழுகவேண்டும் என்று நம்புவதை நினைத்தால், சீ... இப்படியும் இந்த 2007--லும் இந்த மனிதர்களா என்று பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

அய்.ஏ.எஸ்., அதிகாரிகள், காவல்துறை அய்.பி.எஸ்., அதிகாரிகள், ஆளுநர்கள், அமைச்சர்கள் என்று ஒரு கிரகத்தைப் பகவானாக்கி மூத்திரக் குட்டையில் மூழ்குகிறார்களே -வெட்கப்படுவதா - வேதனைப்படுவதா?

விஞ்ஞான மனப்பான்மையை ஊக்குவிக்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 15ஏ 51(ஏ) கூறுவதன் லட்சணம் இதுதானா? மக்கள் நல அரசாக இருந்தால் இந்தக் கோயில்களில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்தி அவற்றைப் பாடசாலைகளாக்க வேண்டாமா?

விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம் அழகாகவே சொன்னார்:
"சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவில் உள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு அவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது? தங்கள் வாழ்க்கையை அவை ஆட்டிப் படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பதுபற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தகைய குட்டிக்குட்டி மூட நம்பிக்கைகளை ஒழித்துக் கட்டவேண்டுமானால், இதற்கெல்லாம் மூல மூத்த மூட நம்பிக்கையான கடவுள் என்ற நம்பிக்கையின் வேரை அடியோடு வெட்டி வீழ்த்தினாலொழிய மனிதனை மானமும், அறிவும் உள்ளவனாக, பண்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரனாக மாற்றுவது என்பது இயலாது. கடவுள்மீது தந்தை பெரியார் ஏன் கை வைத்தார் என்பதை இந்த இடத்தில் அக்கறையோடு சிந்திப்பார்களாக!

திருவாளர் ராமகோபாலனை விசாரிக்கவேண்டும்!

தலையங்கம் - 'விடுதலை'



`ராமன்’ என்ற இதிகாசக் கற்பனையைத் தூக்கிப் பிடித்து இந்த நாட்டில் பார்ப்பனீய வருணாசிரமக் கொடியை மீண்டும் பறக்கவிடலாம் என்ற மனப்பான்மையிலிருந்து பார்ப்பனர்கள் விடுபடுவதாகத் தெரியவில்லை.

பாபர் மசூதியை இடித்து ராமன் கோயிலை எழுப்பத் துடிப்பதும், மக்கள் நலன் சார்ந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் `ராமன் பாலம்’ என்ற புளுகைத் திணிப்பதும் அந்த வகையைச் சார்ந்ததேயாகும்.

புராணங்களையும், இதிகாசங்களையும் உண்மை வரலாறுபோல நிலைநாட்ட இந்தக் கூட்டம் மேற்கொள்ளும் பித்தலாட்டத்தைச் சொல்லி முடியாது.

கருத்தால் சந்திக்க முடியாது என்கிற கட்டம் வருகிறபோது தயாராக சில சொற்களைக் கையிருப்பில் வைத்திருப்பார்கள்.
..... என்பது நம்பிக்கை!
..... என்பது அய்தீகம்! என்கிற வார்த்தைப் பிரயோகங்கள்தான் அவை.

இப்படிச் சொல்லிவிட்டால், அதற்குமேல் எந்தவித விவாதத்துக்கும், அறிவு ரீதியான விமர்சனத்துக்கும் அவர்கள் தயாராக இல்லை என்பது பொருளாகும்.பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமன் கோயில் பிரச்சினையைக் கிளப்பும் நிலையிலும்கூட `இந்தப் பிரச்சினை யில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது, கூடாது. இது ஒரு நம்பிக்கைப் பிரச்சினை என்று அவர்கள் அடம்பிடித்துப் பேசினார்களா இல்லையா - இன்றும் பேசுகிறார்களா - இல்லையா?

ராமன் பாலம் பிரச்சினையில் தொடக்கத்தில் விஞ்ஞான முலாம் பூசிப் பார்த்தனர். `நாஸா’வைச் சந்திக்கு இழுத்தனர். மணல் திட்டு இருப்பதாகத்தான் கூறினோமே தவிர, ராமன் பாலம் என்றெல்லாம் கூறவில்லை. 17 லட்சம் வருடங்களுக்கு முந்தியது அந்தப் பாலம் என்றும் கூறவில்லை என்று அவர்கள் கை விரித்த நிலையில், புதுப்புது அக்கப்போர்களைக் கிளப்பிவிட்டுப் பார்த்தனர்.

யாரோ ஒரு விஞ்ஞானியாம்! புனித் தனேஜா (வயது 40) என்ற நபர் விஞ்ஞானி என்று சங் பரிவார்க் கும்பலால் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `இஸ்ரோ’வின் விஞ்ஞானி என்றும் அவர் கூறிக் கொண்டார். அவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்தினார்கள் சங் பரிவார்க் கூட்டம்.

தனுஷ்கோடி கடற்பகுதியில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று மணல் திட்டுகளை வீடியோ படம் எடுத்து ``இதுதான் ராமன் பாலம்’’ என்று தெரிவித்தாராம்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர்களும் நம்பினார்களாம். அதன் பிறகே அவர்கள் இந்தப் பிரச்சினையை உரத்த குரலில் முழங்கினார்களாம்.

கடைசியில் இப்பொழுது என்னாயிற்று? ஏழு லட்ச ரூபாயை இதற்காக ஆர்.எஸ்.எஸ்., தலைவரிடம் பெற்றுக்கொண்டு விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொண்ட அந்த ஆசாமி தலைமறைவாகி விட்டார் என்ற செய்தி வெளியாயிற்றே, இல்லை என்று மறுக்க முடியுமா?

இவர்கள் தூக்கி நிறுத்திய இந்தப் பிரச்சினை அடிப்படை ஏதும் இல்லாததால், அடி முறிந்து அசிங்கமாகப் போய்விட்டதே.இந்த நிலையில்தான் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் திருவாளர் ராமகோபாலன் என்பார் சங் பரிவார்க் கும்பலுக்கே உரித்தான வழக்கமான பாணியில் கரடி விட ஆரம்பித்துவிட்டார்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்துக்காக ராமன் பாலத்தை இடித்தால் கடல் பகுதியில் எரிமலை வெடித்துக் கிளம்பும் என்று ஓய்வுபெற்ற புவியியல் நிபுணர் கூறியிருப்பதாகக் கூறியுள்ளார்.யார் அந்தப் புவியியல் நிபுணர்? அவர் பெயர் என்ன? எந்த ஊர்க்காரர்? என்கிற விவரங்களைக் கூறவில்லை.இது அவர்களின் வழமையான முறையாகும். அறிவு நாண யத்துக்கும், அவர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.

இதுவரை எந்தப் புவியியல் வல்லுநர்களாவது அந்தப் பகுதியில் எரிமலை இருப்பதாகக் கூறியதுண்டா? அப்படியிருந்தால் அதனை வெளிப்படுத்தலாமே!கடைசியில் நெருக்கிக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? `ராமன் நேற்றிரவு என் கனவில் வந்து அப்படிக் கூறினார்’ என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

சிதம்பரத்தில் நடராஜக் கடவுள் கனவில் வந்து நந்தனைத் தீயில் குளித்து வரச் சொன்னார் என்று சொல்லி, நந்தனைச் சாம்பலாக்கிவிடவில்லையா?நியாயமாக காவல்துறை, திருவாளர் ராம கோபாலனை அழைத்து, எரிமலை வெடிக்கும் என்று கூறியது தொடர்பாக விசாரணை நடத்திட வேண்டும். அப்படி ஒரு புவியியல் நிபுணர் இருப்பாரேயானால் அவரிடமும் தகவல் கேட்கும் முறையில் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற புரளிகள், மக்களை அச்சுறுத்தும் போக்கிரித்தனங்களுக்கு ஒரு முடிவு ஏற்படும். அரசும் யோசிக்கட்டும்!

தலையங்கம் - 'விடுதலை'

முல்லை பெரியாறு அணையும் - கேரள அதிகாரிகளின் அவசரமும்!


முல்லை பெரியாறு அணைப் பகுதி வட்டார செய்தி ஒன்று - ஜூன், ஜூலை மாதங்களில் அதிக மழை வேண்டி பெரியாறு அணைப் பகுதியில் விவசாயிகள் வருண பூஜை நடத்துவார்களாம். இந்த ஆண்டு அந்தப் பகுதியில் அத்தகைய பூஜை நடத்திட கேரள அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனராம்!

இப்படி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அறிவுப் பிரச்சினையா? உரிமைப் பிரச்சினையா? என்ற கேள்வி எழலாம்.
பார்த்தீர்களா, பார்த்தீர்களா, வருண பகவான் பூஜை நடத்துவதற்குக்கூட கேரள அரசு அனுமதி அளிக்கவில்லை என்று ஆர்ப்பரிக்கலாம்.பூஜையின்மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றால், முல்லை பெரியாறு பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே!

இந்தப் பொது அறிவிருந்தால், இந்தப் பிரச்சினையே ஏற்பட்டு இருக்காதே!
மழை பொழிவது வருண பகவானால் என்பதும், காற்றடிப்பது வாயு பகவானால் என்பதும், நெருப்புக் கிடைப்பது அக்னி பகவானால் என்றும் கருதிய காலம் கடைந்தெடுத்த கற்காலமாகும்.மழையையும், காற்றையும், நெருப்பையும் அறிவியலால் சுழலச் செய்யும் காலகட்டத்தில் இன்னும் காட்டு மிராண்டிக் காலக் கருத்தின் காலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருப்பது அறிவுடைமையானதுதானா?

கேரள மாநில அரசு முல்லை பெரியாறு பிரச்சினையில் நியாய விரோதமாகவும், சட்ட விரோதமாகவும் நடந்துகொண்டு இருக்கிறது என்பது வேறு பிரச்சினை. சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலத்தில் ``குறுகிய வட்டார வெறி’’ கண்மண் தெரியாமல் தலைவிரித்தாடுகிறது என்பது மக்களுக்குத் தெரிந்து விட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் அவர்களேகூட இந்தப் பிரச்சினையில் கேரள மாநில முதலமைச்சரிடம் நேரில் பேசி உரியன செய்வதாகக் கூறி பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால், பலன்தான் இதுவரை ஏற்படவில்லை.

இப்பொழுது நிலைமை என்ன தெரியுமா? அந்த வட்டாரத்தில் வருண பகவானுக்குப் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டாலும்கூட கனமழை கொட்டித் தீர்க்கிறது. இப்பொழுது அணையின் நீர்மட்டம் 131.50 அடி ஆகிவிட்டது. வினாடிக்கு 2091 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்துகொண்டும் இருக்கிறது. அணையி லிருந்து 1644 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளில் கேரள மாநிலப் பொதுப் பணித்துறை தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

142 அடிக்கு மேலும் அணையில் தண்ணீரைத் தேக்கினாலும் அணைக்கு அதனால் ஆபத்து ஏற்பட்டு விடப் போவதில்லை. அந்த அளவு அணை பலமாக உள்ளது என்று தொழில் ரீதியாக உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

142 அடிவரை தண்ணீர் தேங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதில் கேரள அரசு விழிப்பாக இருக்கிறது என்பதுதான் உண்மையாகும். இயற்கையாக மழை பொழிந்து 142 அடியையும் தாண்டிவிட்டால், கேரள அரசு சாதித்து வருகிற பிடிவாதம் அடிபட்டுப் போய்விடுமே! அதிக அளவு தண்ணீரைத் தேக்க முடியாது. அப்படித் தேக்கினால் அணை உடைந்து இடுக்கி மாவட்டமே மூழ்கிப் போய்விடும் என்ற அவர்களின் பொய்க் கூற்று அம்பலமாகிவிடுமே. அந்த அவசரத்திலும், ஆத்திரத்திலும்தான் அவர்களின் செயல்பாடுகள் அமைந்து இருக்கின்றன. தண்ணீரை அவசர அவசரமாக திறந்துவிடும் தந்திரம் இதுதான்!

தலையங்கம் -"கல்கி"

நடந்து முடிந்த தேர்தலும் நடக்கப்போகும் தேர்தலும்


இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதென்பது கடினம். இதுவரை நடந்த ஆட்சி மீது அதிருப்தி கொண்டு எதிர் அணிக்கே மக்கள் வாக்களிப்பது இயல்பு. மதுரை மேற்கில் இந்த நிலை மாறுபட்டு, அ.தி.மு.க.வுக்கு, போன தேர்தலை விடவும் குறைவாக வாக்குகள் பதிவாகியுள்ளன. விஜயகாந்த் கட்சி, வாக்குகளில் தன் பங்கைக் கணிசமாக உயர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகளை விடவும் மிக அதிகமாகப் பெற்று, தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. விடமிருந்து இந்தத் தொகுதியை காங்கிரஸ் பறித்துக் கொண்டும்
விட்டது.

இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கௌரவமாக ஆமோதிக்காததுகூட ஆச்சர்யமில்லை; அதை அவரிடம் எதிர்பார்க்க முடியாது என்று கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஆனால், வெற்றி பெற்ற தி.மு.க. அணித் தலைவர், அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்த அரும்பாடுபட்ட தேர்தல் கமிஷனுக்கு உரிய ஆமோதிப்பை வழங்குவதற்குப் பதிலாக, அதனைக் குறை கூறி அதன் நேர்மையையே கேள்விக்குட்படுத்தியிருப்பதுதான் அதிசயமான வேதனை! கமிஷன் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டிருந்தால், இவ்வளவு பெரிய வெற்றி தி.மு.க. அணியினருக்கு எவ்வாறு கிட்டியிருக்கும்?

முதல்வரின் பாய்ச்சல், வெற்றிப்படிகளின் உச்சியில் இடறி விழுந்தது போலாகிவிட்டது.

தன்னதிகாரம் பெற்ற ஜனநாயக அமைப்புகளின் மேலாண்மையை
மதித்து ஏற்கும் பக்குவம் நம் அரசியல்வாதிகளுக்கு என்றுதான் வரப்போகிறதோ!

குடியரசுத் தலைவர் பதவிக்கு முற்றிலும் தகுதிபடைத்த அறிஞர்களையும் நன்மக்களையும் ஒதுக்கிவிட்டு, சர்ச்சைகளின் உறைவிடமான ஒரு வேட்பாளரை, ஆளும் கூட்டணி நியமித்திருப்பது மிகவும் கொடுமை!

பிரதிபா பாடீல் மீதும் அவரது சுற்றத்தார் மீதும் புற்றீசலாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய் என்று அவர் சார்பில் காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பு வெளியிடும்போதே, மீடியா அக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைப் பிட்டுப் பிட்டு வைத்துக் கொண்டிருக்கிறது! இதற்கிடையே விருந்து, பேரணி, கொண்டாட்டம் என்று இந்த வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகள் அருவருப்பூட்டி, கௌரவமும் நடுநிலையும் மிக்க நாட்டின் முதல் குடிமகன் பதவிக்கே இழுக்கு செய்கின்றன!

‘மனசாட்சிப்படி வோட்டுப் போடுங்கள்’ என்று பா.ஜ.க. அணி வேட்பாளர் ஷெகாவத் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது எப்படி சாத்தியம் என்பதுதான் கேள்விக்குறி!

ஒரு வேட்பாளர், குற்றச்சாட்டு மழையில் தத்தளிக்க, எதிர் வேட்பாளர் ஹிந்துத்வா கோட்பாடுகளின் ஆதரவாளர்! அவரிடம் நடுநிலைமையையோ கட்சி மற்றும் மதம் கடந்த தெளிந்த பார்வையையோ எவ்வாறு எதிர்பார்ப்பது? மனசாட்சிப்படி
வாக்களிப்பதானால் இருவரையுமே நிராகரிக்கத்தான் முடியும்.

குடியரசுத் தலைவரைத் தங்கள் கைப்பாவையாக்கிக் கொண்டு, தட்டிக் கேட்பார் இல்லாமல் தங்கள் கொட்டத்தைத் தொடர்வதற்கான திட்டத்தை அரசியல்வாதிகள் தீட்டியிருப்பது தெளிவு. அதனை முறியடிக்க முடியாவிட்டாலும் அது குறித்த விழிப்புணர்வு பெற்று
எச்சரிக்கையாக இருப்பது மக்களின் பொறுப்பு!

தலலயங்கம் - 'விடுதலை'

அடிப்படை வாதத்தின் ஆபத்தான முகம்!




எந்த மதமாக இருந்தாலும் அடிப்படை வாதத்தினைக் கையில் எடுத்துக் கொள்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள். மதம் என்பதே அபின் என்றாலும், ஒடுக்குமுறைக்கான கூர் ஆயுதம் என்றாலும், அடிப்படை வாதமானது அந்தக் கூர்முனையில் தடவப்பட்ட நஞ்சாகும்.
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள், இஸ்லாமிய மக்களையே கூட அதிர்ச்சி அடையச் செய்திருக்கும்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் லால் மசூதியின் கட்டுப்பாட்டில் இரு மதரசாக்களில் ஏழாயிரம் பேர் படித்து வருவதாகவும், அங்கு இருபால் மாணவ, மாணவிகளுக்கும் அடிப்படைவாதக் கல்வி போதிக்கப்படுவதாகவும், இஸ்லாமியக் கொள்கைகளுக்கு விரோதமாக நடப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், அரசுக்கே இந்த அமைப்புகள் சவாலாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த நிலையில், இந்த இரு மதரசாக்களும் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

அப்துல் அஜீஸ் அவரது உடன் பிறப்பான அப்துல் ரஷித் காஜி ஆகிய இருவருமே இந்த அமைப்பினை நடத்தி வருகிறார்கள்.அப்துல் அஜீஸ் பெண்ணைப்போல பர்தா அணிந்து தப்பிக்கச் சென்றபோது பிடிபட்டுள்ளார். அவர் பல தகவல்களைக் கூறியதாகத் தெரிகிறது.
அடுத்த 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும், தேவையான ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் மசூதிக்குள் இருப்பதாக மதக் குரு கூறுவதிலிருந்து திட்டமிட்ட வகையில் மதரசாவை உருவாக்கி நடத்தி வருவது புலனாகிறது.

பாகிஸ்தான் அதிபர் முஷாரப்மீது ராக்கெட் குண்டு வீசும் அளவுக்கு அவர்கள் தயாராகி உள்ளனர் என்பது சாதாரணமானதல்ல.இப்பொழுது மசூதி இராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. உள்ளே மாணவர்கள், மாணவிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதால் இராணுவம், தான் நினைத்தபடி சூறையாடிடவும் முடியாது. மிகவும் விழிப்பாகப் பிரச்சினையைக் கையாள வேண்டிய நெருக்கடி! அரசுத் தரப்பில் எது நடந்தாலும் அது உலகம் தழுவிய மதப் பிரச்சினையாக வெடித்துக் கிளம்பும் ஆபத்தும் இதற்குள் இருக்கிறது. காரணம் அடிப்படைவாதிகள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள்.

இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் மத அடிப்படை வாதம் எவ்வளவுப் பெரிய ஆபத்தானது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.இந்தியாவில் இந்துத்துவா என்ற முகமூடி அணிந்து கொண்டு அடிப்படைவாத உருவமாகவே இருக்கக் கூடிய ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தின் ஆபத்தான வெளிப்பாடே குஜராத் கலவரங்கள். அந்தக் கூட்டத்தின் இன்னொரு முகமே ராமன் பாலம் என்பது போன்ற குரூரமான கூச்சல், மற்றொரு முகமே பாபர் மசூதி இடிப்பு! இவர்கள் இந்து மதத் தாலிபன்கள்! அவர்களோ முசுலிம் மதக் காவிகள்!

மதம் மக்களுக்குத் தேவையென்றும், அதுதான் நன்மார்க்கத்துக்கான வழிகாட்டியென்றும், ஒழுக்க நெறிக்கு ஊன்றுகோல் என்றும் பொதுவாக இதோபதேசம் செய்பவர்கள் அந்தக் கருத்துகளின்மீது மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டனர்.
மதக் காரணங்களுக்காக உலகில் மனித ரத்தம் சிந்தப்பட்ட அளவுக்கு, வேறு காரணங்களுக்காகச் சிந்தப்பட வில்லை என்பதுதான் வரலாறு.

அவரவர்களின் வேத நூல்களில் பேசப்படும் மென்மையான `குரலுக்கும்’, யதார்த்தமான நடப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை நாடு அனுபவத்தில் கண்டுகொண்டுதானிருக்கிறது.
மதத்தை அறவே தூக்கி எறிய முடியாவிட்டால், அந்தந்த மதத்துக்குள் இருக்கும் கல்வியாளர்களும், சமூகக் கவலை யாளர்களும் ஒரு மேசைமுன் அமர்ந்து நிதானமாகக் கருத்துகளைப் பரிமாறக் கடமைப்பட்டுள்ளனர். காலத்துக்கேற்ற வடிவங்களைக் கொடுக்க முன்வர வேண்டும். அடிப்படை வாதம் என்கிற எரிமலை வீச்சிலி ருந்து மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்று பொறுப்பாகச் சிந்திக்காவிட்டால், செயல்வடிவம் கொடுக்காவிட்டால், ஒரு முடிவை ஏற்படுத்தாவிட்டால், ஒட்டுமொத்தமாகவே அந்த எரிமலை எரித்து முடித்துவிடும், எச்சரிக்கை!

தலையங்கம் - 'கல்கி'

குண்டர் படையை வென்ற உறுதி!



மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் மெய்யான வெற்றி தேர்தல் கமிஷனுக்குத்தான்!

தொகுதி முழுவதும் அணு அணுவாக ஆராய்ந்து, வன்முறையாளர்களும் போலி வாக்காளர்களும் வெளியேற்றப்பட வழி செய்திருக்கிறது. வாக்காளர்களுக்கு லஞ்சம் தரப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக அதை நிறுத்தாவிட்டால் தேர்தலே தள்ளிவைக்கப்படும் என்று எச்சா¢த்திருக்கிறது.

நீண்ட நெடும் நாட்களாகத் தொகுதியில் பணியாற்றி, செல்வாக்கை வளர்த்துக் கொண்ட காவல் துறையினரையும் அதிகாரங்களையும் பணிமாற்றம் செய்தாகவேண்டும் என்று போராடி சாதித்திருக்கிறது. காவல்துறையின் இடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையையும் ராணுவத்தையும் கொண்டுவந்து நிறுத்தி, வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறது. காவல் துறையினர் வாக்குச் சாவடிகளுக்கு வெளியேதான் (நூறு மீட்டருக்கு அப்பால்) கண்காணிப்புச் செய்திருக்கிறார்கள்!

வாக்குச் சாவடிகளில் வழக்கமான கண்காணிப்பாளர்களுடன் இருபது கூடுதலான உலாவும் கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறது. இவையெல்லாம் போதாதென்று சாவடிக்குச் சாவடி ரகசிய கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்து, மக்கள் அச்சமின்றி வாக்களிக்க உதவியிருக்கிறது.

இது வரலாறு காணாத பந்தோபஸ்து ஆனதால், வழக்கத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்தேறியிருக்கிறது. 75 சதவிகிதம் என்பது உத்தேசக் கணிப்பு. இது, இத் தொகுதியில் 2006 பொதுத் தேர்தலில்கூட நிகழாத விந்தை.

இத்தனை முயற்சிகளும் போர்க்கால எச்சரிக்கையும், குறைந்த அளவு வாக்காளர்களே உள்ள ஒரு சிறிய தொகுதிக்கு! அப்படியானால் பல்வேறு தொகுதிகளில் ஒரு சேர வாக்குப் பதிவு நடந்தால், தேர்தல் கமிஷன் என்ன பாடுபடவேண்டியிருக்கும்!

தேர்தல் வன்முறையும் முறைகேடுகளும் நமது அரசியல்வாதிகளால் செழிப்பாக வளர்க்கப்பட்டு, தேர்தல் கமிஷனுக்குச் சவால் விடுகிற அதே சமயத்தில், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக மாற்றிவிட்டன. மக்கள் இயல்பாக தங்கள் ஜனநாயக கடமைகளைச் செய்வதற்கும் உரிமைகளை நிலை நாட்டுவதற்கும் ஏதுவான சூழல் இன்று தமிழகத்தில் கிடையாது என்பது மறுபடி நிரூபணமாகியிருக்கிறது. அரசியலில் புகுந்துவிட்ட குண்டர் கலாசாரமும் கட்சிகளிடையேயான ஆரோக்கியமற்ற பரஸ்பர விரோதமுமே இதற்குக் காரணம்!

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தினூடே வன்முறை தலைகாட்டி யிருக்கிறது. தேர்தல் ஆணையாளர் நோ¢ல் வந்து பார்த்து, தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்புவரை அமைதியும் சகஜ நிலையும் திருப்திகரமாக இல்லை என்று கூறியிருக்கிறார்.

தலைவர்களோ, தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை மதிப்பதற்குப் பதிலாக, கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள். “தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்” என்று தமிழக முதல்வர் சொன்னதாகவும் பிறகு சொல்லவில்லை என்றும் செய்திகள்! முதல்வர் அப்படிச் சொல்லாவிட்டாலும் முதல்வர் சொன்னதாக ஒரு மத்திய அமைச்சர் சொல்வதென்பதேகூட வரம்புமீறல்தான்.

இது மிரட்டலுக்குச் சமமாகும் என்று எடுத்துக் காட்டியதுடன், இந்த மிரட்டலுக்கோ அழுத்தத்துக்கோ தேர்தல் கமிஷன் பணிந்துவிடாமல் தேர்தலை ஒத்திவைக்கும் உரிமை தனக்கு உண்டு என்று உணர்ந்து, கடைசிவரை உறுதியாக இருந்திருக்கிறது.

இந்த உறுதியின் விளைவாக மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் பெருமளவு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், ‘ஒரு கட்சி வேட்பாளரின் வெற்றி, ஜனநாயக நல்மரபுகளின் வெற்றியாகவும் மாறுவது எப்போது?’ என்கிற கேள்வி மக்கள் மனத்தில் நிலவத்தான் செய்கிறது.

தலையங்கம் - 'விடுதலை'


நடந்து முடிந்த மதுரை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தேர்தல் முடிவுக்குப்பின் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தத் தகவல்களைப் பார்க்கும்பொழுது, எந்த அளவுக்குத் தேர்தல் ஆணையம் எல்லை மீறிச் சென்று இருக்கிறது; அளவுக்கு அதிகமான ஈடுபாட்டைக் காட்டியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

வேட்பு மனுவைத் தாக்கல் செய்யச் சென்றபோது அய்ந்து பேர்களுக்குமேல் சென்றார்கள் என்று காரணம் கூறி,மதுரை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மதுரை மாநகர காவல்துறை ஆணையர், மதுரை மத்திய தொகுதி தேர்தல் அதிகாரிகளை உடனடியாக மாற்றவேண்டும் என்று கூறி, ஒவ்வொரு அதிகாரிக்கும் பதிலாக மூன்று பெயர்களைக் கொண்ட பட்டியலை அனுப்பவேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஆணையிட்டது. அதனை ஏற்றுக்கொண்டு அப்படி ஒரு பட்டியலை தமிழக அரசு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது.


நியாயப்படி தேர்தல் ஆணையம் என்ன செய்திருக்க வேண்டும்? அந்தப் பட்டியலிலிருந்து ஒவ்வொரு பதவிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் எப்படி நடந்துகொண்டு இருக்கிறது?

மதுரைக் கோட்டாட்சியர் பதவிக்குத் தமிழக அரசு அனுப்பியிருந்த பட்டியலில் இடம்பெறாத ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் பெயரைப் பட்டியலில் சேர்த்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் ஆணைப் பிறப்பித்ததாம்.

மதுரை மாநகரக் காவல் துறை ஆணையர் பதவிக்குத் தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் குறிப்பிடப்பட்ட மூவரையும் புறக்கணித்துவிட்டு, தேர்தல் ஆணையமே ஒருவரைக் குறிப்பிட்டு, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் சகிக்க முடியாத இந்த நடவடிக்கைகளைப்பற்றி தமிழக முதலமைச்சர் அப்பொழுது எந்தவித விமர்சனத்துக்கும் உட்படுத்தாமல், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியும் உள்ளார்.


செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்த மாதிரி தேர்தல் ஆணையம் அத்துமீறி நடந்துகொண்டு இருந்தால், எத்தகைய கடுமையான கொடுஞ்சொற்களால் தேர்தல் ஆணையர் அபிஷேகம் செய்யப்பட்டு இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

கலைஞர் அவர்கள் முதிர்ச்சியுள்ள, பக்குவம் நிறைந்தவர் என்கிற காரணத்தால், தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்த நேரத்தில், அதுபற்றி வாய்த் திறக்காமல், அதேநேரத்தில் தேர்தல் முடிவுக்குப் பின் சொல்ல வேண்டிய சரியான நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.


இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், தேர்தல் ஆணையம் இப்படி வழமைக்கு மாறாக, அதிரடியாக நடந்துகொண்ட நிலையிலும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில்கூட தேர்தல் ஆணையம் எப்படி நடந்துகொண்டு இருக்கிறது?

ஒருவர் இரண்டு தொகுதிக்குமேல் போட்டியிடக் கூடாது என்கிற ஆணை 2002 இல் தான் போடப்பட்டது. ஆனால், ஜெயலலிதா 2001--லேயே அவ்வாறு நடந்துகொண்டார்.இந்த நிலையில் தேர்தல் ஆணையம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதாடிய வக்கீல் கேட்டுக்கொண்டார். தேர்தல் ஆணையமே செல்வி ஜெயலலிதாவுக்குச் சாதகமான ஒரு சட்டப் பிரச்சினையை எடுத்துக் கொடுக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும்.

மும்பையிலிருந்து முன்பு வெளிவந்த `கரண்ட்’ பத்திரிகையில் ஜாதிக்குறி என்ற ஒரு கட்டுரையை டி.எஃப். காரக்கா என்பவர் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் சாராம்சம்தான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைகிறது.
ஒரு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரே முகாம் போட்டு பணியாற்றியது என்பதை இப்பொழுதுதான் நாடு கேள்விப்படுகிறது.


என்னதான் ஆட்டம் போட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் சரியாகவே எடை போடக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் இப்பொழுதாவது புரிந்துகொண்டிருக்க வேண்டுமே!

தினமனி தலையங்கம்

தொடரும் முயற்சி; கிட்டுமா வெற்றி - எஸ்.ராஜாராம்



"ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக ஆதரவு அளிக்க வேண்டும்''

அமெரிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை எந்த நாட்டுத் தலைவர்கள் இந்தியா வந்தாலும், இந்தியா சார்பில் வைக்கப்படும் முக்கியக் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று.

வெளிநாட்டுத் தலைவர்களில் பலர் இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவு தருவதாகவும், சிலர் பரிசீலிப்போம் என்றும் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளாக, அணுஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு "வீட்டோ' (ஸ்ங்ற்ர்) என்னும் ரத்து அதிகாரம் உண்டு.

உலக அரங்கில் இந்தியா அணுஆயுத நாடாகக் கருதப்பட்டாலும், ஐ.நா. மற்றும் அமெரிக்காவைப் பொருத்தவரை இன்னும் அணுஆயுத நாடாக இந்தியாவை அங்கீகரிக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் -அப்படி அங்கீகரித்தால் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவைச் சேர்க்கவேண்டிய நிலை ஏற்படும். மேலும், அணுஆயுத நாடுகளாகக் கருதப்படும் பாகிஸ்தான், வடகொரியா போன்றவையும் போட்டிக்கு வரும்.

பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் உலகின் நான்காவது சக்தி இந்தியா என அமெரிக்கா ஒப்புக்கொண்டாலும், ராணுவ வலிமையைப் பொருத்தவரையில் இந்தியாவின் பலத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.அமெரிக்காவுக்கு பிடிக்காத ரஷியா, ஈரானுடனான இந்தியாவின் உறவும் இதற்கு ஒரு காரணம்.

மேலும், அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்தியாவை அமெரிக்கா மிகவும் வலியுறுத்தியது. ஆனால், இந்தியா அதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டுமென்றால், ஐ.நா. பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.இதற்கு வீட்டோ அதிகாரம் படைத்த நாடுகள் மட்டுமன்றி, சிவில் பணிகளுக்காக அணுசக்தி மூலப்பொருளை (யுரேனியம்) சப்ளை செய்யும் நாடுகளான பிரேசில், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்வீடன், கனடா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவும் மிக அவசியம்.

அப்படியானால், 5 வீட்டோ நாடுகளில் இந்தியாவுக்கு ஆதரவு தரும் நாடு எது என்றால் சந்தேகமின்றி ரஷியாதான்.இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை எப்போதும் அமெரிக்காவின் பின்னால்தான். அமெரிக்காவின் கருத்தையே அவை ஆதரிக்கும். சீனாவோ மதில்மேல் பூனை. அந்த நாடு ஆதரிப்பது சந்தேகம்தான். ஏனெனில் அனைத்துத் துறைகளிலும் தங்களுடன் இந்தியா போட்டிபோட்டு வருவதே சீனாவுக்கு நெருடலான விஷயம்.

ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில்கூட, இந்தியா சார்பில் நிறுத்தப்பட்ட சசிதரூர் இரண்டாவது இடத்தையே பெறமுடிந்தது. அந்தத் தேர்தலில், வீட்டோ அதிகாரம் படைத்த இரண்டு நாடுகள் இந்தியாவுக்கு எதிராக வாக்களித்தன.ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு இந்தியாவை ஆதரிக்காத சீனா, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆதரிக்கும் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றுதான்.

பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற நினைக்கும் இந்தியா, இதுவரை சிறிய நாடுகளைச் சேர்ந்தவர்களே பொறுப்பு வகித்துவந்த ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடலாமா என்று அப்போது சர்ச்சை எழுந்தது வேறு விஷயம்.

இவை எல்லாம் கடந்தகாலச் சூழ்நிலைகள். ஆனால், தற்போது இந்தியா - அமெரிக்கா உறவு மேம்பட்டிருப்பது சற்று ஆறுதலான விஷயம். இரு நாடுகளிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இறுதிவடிவம் பெறும் கட்டத்தில் உள்ளது.

""இரு நாடுகளுக்கு இடையிலான உறவைத் தாங்கி நிற்கப்போகும் தூண் இந்த அணுசக்தி ஒப்பந்தம்'' என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியிருக்கிறார்.

இந்த ஒப்பந்தத்திற்கு இந்தியாவில் அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்தாலும், இந்திய அரசு உறுதியாக இருக்கிறது.

உலகின் 3-வது சக்தியாக வளர்ந்துவிட்டது சீனா. இதை உணர்ந்துதான் ஆரம்பத்தில் அந்த நாட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்க வேண்டும் என அமெரிக்கா வலியப்போய் அழைத்தது. அதுபோல, இந்தியாவும் தவிர்க்க முடியாத சக்தி என அமெரிக்கா தற்போது கருதத் தொடங்கிவிட்டதாகச் சொல்லலாம். எனவே, காலங்கள் மாறும்போது காட்சிகள் மாறும் என்பதால், இந்தியாவின் முயற்சி வெற்றிபெறும் காலம் தொலைவில் இல்லை.

தலையங்கம் - 'விடுதலை'

இடைத்தேர்தல் முடிவும் எண்ண ஓட்டமும்!



மதுரை மேற்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அபார வெற்றி பெற்று இருக்கிறது. அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க.; தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளைக் கூட்டினாலும், அதனையும் விஞ்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர்.


இந்த இடைத்தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லையென்றாலும், ஆளும் கட்சி வேட்பாளர் தோல்வி கண்டால், `மக்களிடம் ஆளும் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது; நம்பிக்கையை இழந்துவிட்டது; எனவே, பதவி விலகுக!’ என்று கூப்பாடு போட ஆரம்பித்து விடுவார்கள். இப்பொழுது அந்தக் கேள்விக்கே இடம் இல்லாமற் போய்விட்டது.

கடந்த முறை அ.இ.அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதியை அது இழந்திருக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கதாகும். அதுவும் கடந்த முறை பெற்ற வாக்குகளில் சரி பாதியை இழந்து பரிதாப நிலையில் தலைவிரிகோலமாய் நிற்கிறது.

இதற்குக் காரணங்கள் என்ன? மாநிலத்தை ஆளும் தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சி காங்கிரஸ் என்பது; மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தது. இவ்விரண்டு ஆட்சிகளும் மக்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டக் கூடியவைகளாக இருக்கின்றன.குறிப்பாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க., கடந்த ஓராண்டுக் காலத்தில் சாதித்து இருப்பவை அசாதாரணமானவை.

பதவியையேற்ற அந்த இடத்திலேயே மக்கள் சமுத்திரத்தின் முன் தேர்தலில் தாம் கொடுத்த வாக்குறுதியை நிலை நாட்டும் வண்ணம் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்பதற்கான கோப்பில் முதல் கையொப்பமிட்டாரே! பிறகு செய்தும் காட்டினாரே!
அன்றாடக் கூலிகளாய் அல்லல்படும் மக்களின் வாழ்வில் பால் வார்த்த செயல்பாடல்லவா அது! தி.மு.க., அரசு எந்த மக்களின் பால் கண்ணோட்டம் செலுத்துகிறது என்பதற்கான அடையாளமாகவே இது கருதப்படுகிறது.

சித்தாந்த அளவில் என்று சொல்லும்பொழுது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான செயல்பாட்டுக்கு ஒப்பம்!
கொள்கை, மக்கள் வளர்ச்சி என்கிற இரு தண்டவாளங்களில் கலைஞர் தலைமையிலான ஆட்சி மக்கள் நல அரசு என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாகச் செயல்பட்டு வருகிறது.
மிக முக்கியமான பிரச்சினையாகத் தலையெடுத்து நிற்பது வேலையின்மையாகும்.

கலைஞர் தலைமையிலான ஆட்சியைப் பொறுத்தவரை தொழிற்சாலைகள், ஆலைகள் தொடங்கப் படுவதற்கு இருகரம் நீட்டிக் காத்திருக்கும் அரசாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டும் உள்ளன; தொடங்கப்படவும் உள்ளன. இதனால் உற்பத்திப் பெருக்கம் என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கத்தில் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டக்கூடிய சூழ்நிலையாகும்.

படித்துவிட்டு வேலை கிட்டாமல் தத்தளிக்கும் இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை அளிப்பது என்பது இந்தியாவிலேயே தி.மு.க., ஆளும் தமிழ்நாட்டில் மட்டும்தான்! ஒரு மாநில அரசு இதனைச் செய்வது என்பது, மனந்திறந்த பாராட்டுக்குரியதாகும்.
ஆளும் கட்சி இந்தச் சிறப்பில் இருக்கிறது என்றால், அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய அ.இ.அ.தி.மு.க.,வின் செயல்பாடோ அறிவார்ந்த முறையில், பொறுப்பான தன்மையில் இல்லாமல் எதிரிக்கட்சியாகவே செயல்படுகிறது.

சட்டமன்றத்திற்குச் செல்வதே அமைதியைக் குலைப்ப தற்குத்தான், வெளி நடப்புச் செய்வதற்குத்தான் என்கிற தண்டவாளங்களில் அது ஓடிக் கொண்டு இருக்கிறது.
இவர்களை எதிர்க்கட்சியாக அனுப்பியதேகூட தவறுதான் என்று வாக்களித்த நாட்டு மக்கள் நினைத்து வருந்தும் அளவுக்கு, தான்தோன்றித்தனமாக அது செயல்படுகிறது. மதுரை மேற்கு இடைத்தேர்தல் உணர்த்தும் பாடம் இதுதான்.

தே.மு.தி.க.,வைப் பொறுத்தவரை, அதன் வளர்ச்சி நாட்டுநலன் கண்ணோட்டத்தில் கவலையைத் தரக் கூடியதாக இருக்கிறது.கொள்கைக் கோட்பாடுகள் ஏதும் இன்றி சினிமாத்தனத்தின் வக்கிரத்தில் வீழ்ந்துவிடும் விட்டில் பூச்சிகளாக பதினெட்டு வயது இளைஞர்கள் ஆகக் கூடிய ஆபத்தை சமுதாய, அரசியல் களத்தில் உள்ள பொறுப்பான பெருமக்கள் உணர்ந்து, ஆக்க ரீதியான வழிகாட்டுதலைத் தரவேண்டியது அவசியமான கடமையாகும்.

எல்லாமே சினிமா என்பது ஆரோக்கியமானது அல்ல, சித்தாந்தம் இருக்குமானால் விமர்சிக்கலாம். அது இல்லாத இடத்தை என்ன செய்வது!ஊடகங்களுக்கும்கூட இதில் பொறுப்பு இருக்கிறது, எச்சரிக்கை!

'கல்கி' தலையங்கம்

நெரிபடுகிறது நீதியின் குரல்வலை




ஆர்ஜன்டீனா தேசத்து நீதிபதி, நமது சி.பி.ஐ.க்கு வைத்துள்ள குட்டு நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்ல, நடுநிலையான, அரசு சாரா அமைப்பாக இயங்க வேண்டிய சி.பி.ஐ.யை இனி எந்த விஷயத்துக்குமே நம்ப முடியாது என்கிற முடிவுக்கு நம்மை வரச் செய்கிறது.

போ·பர்ஸ் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த
ஒட்டாவியோ குவாட்ரோச்சியை முதலில் தப்பவிட்டது சி.பி.ஐ. அவரது மேல்நாட்டு வங்கிக் கணக்கை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, ஓசைப்படாமல் நீக்கி, அத்தனை பணத்தையும் அவர் வேறு தேசத்துக்குக் கொண்டு செல்ல சௌகரியம் செய்து கொடுத்தார் ஒரு மத்திய அமைச்சர்! அரசின் கவனத்துக்குக் கொண்டு வராமல் அமைச்சர் தன்னிச்சையாக இயங்கிவிட்டதாகத் தெரிவித்தார் பிரதமர்! சர்வதேச போலீஸ் குவாட்ரோச்சிக்கு வலை விரித்ததன் அடிப்படையில் ஆர்ஜன்டீனாவில் அவரை போலீஸ் கைது செய்து இந்தியாவுக்குத் தகவல் தந்தது. இதன் பிறகே வேறு வழியின்றி அவரை விசாரணைக்கு அழைத்து வர சி.பி.ஐ. மனு செய்தது! அந்த முயற்சியில் படுதோல்வியும் அடைந்திருக்கிறது!

தோல்விக்குக் காரணம் சி.பி.ஐ.யின் திறமையின்மை என்பதைக் காட்டிலும் திட்டமிட்ட முயற்சியின்மை என்றே கூற வேண்டும். வெறும் கண்துடைப்புக்காக ஒரு மனு தயாரித்தளித்து, ஆர்ஜன்டீன நீதிபதியின் வன்மையான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது சி.பி.ஐ. நீதிபதி, கண்டனம் தெரிவித்ததோடல்லாமல், எதிர்த்தரப்புக்கு வீண் செலவு ஏற்படுத்தியதற்காக நஷ்ட ஈடும் அபராதமும் விதித்திருக்கிறார்.

வரி செலுத்தும் அப்பாவி இந்திய குடிமக்கள், போ·பர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குவாட்ரோச்சி முறைகேடு செய்து கோடிகோடியாக சம்பாதித்ததைச் சகித்துக் கொண்டதோடு, இப்போது சி.பி.ஐ.யின் மோசடி காரணமாக விளைந்துள்ள அபராதச் செலவையும் குவாட்ரோச்சிக்குக் கொடுத்து அழ வேண்டும்!

ராஜீவ்காந்திக்கும் போ·பர்ஸ் ஊழலுக்கும் தொடர்பு இருப்பதை
ஊர்ஜிதப்படுத்தக் கூடிய விசாரணைகள் அனைத்துமே அரசியல் செல்வாக்கினால் தடைபடுத்தப்பட்டு வந்துள்ளன; அல்லது பூசி மெழுகப்பட்டு வருகின்றன. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிவிட்டது சி.பி.ஐ. குற்றம் சாட்டப்பெற்ற அரசியல்வாதி அல்லது அவரது கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், வழக்குகள் உடனே வாபஸ் பெறப்படுகின்றன; அல்லது கிடப்பில் போடப்படுகின்றன. தப்பித் தவறி வழக்கை எடுத்து நடத்தினாலும், குற்றவாளி தப்புவதற்கு வசதியான விதத்தில் அது நடத்தப்படுகிறது. எதிர்கட்சியினர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு சி.பி.ஐ. விசாரணை ஆரம்பமாகிறது!



இப்படி எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்ட சி.பி.ஐ.தான் மதுரை தினகரன் அலுவலகத் தாக்குதல் வழக்கையும் விசாரித்துக் கொண்டிருக்கிறது; ஜெயலலிதா பேரில் உள்ள குற்றச்சாட்டுகளையும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததுமே ‘தாஜ் காரிடார்’ வழக்கு கிடப்பில் போடப்படுகிறது. முலாயம் சிங் பேரில்
விசாரணை தொடங்க ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது.

நீதித்துறையைக் கடைசி நம்பிக்கையாக நாம் கொண்டிருக்கிறோம். ஆனால், வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் கண்துடைப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டால் நீதி ஜெயிப்பதற்குப் பதிலாக அதன் குரல்வளை நெரிக்கப்படுகிறது. வஞ்சகம்தான் ஜெயிக்கிறது.