பகல் நேர சினிமா காட்சிகளை ரத்து செய்ய போராட்டம்: ராமதாஸ்

தமிழகத் திரையரங்குகளில் பகல் நேரக் காட்சிகளை ரத்து செய்யக் கோரும் போராட்டத்தை பாட்டாளி இளைஞர் சங்கம் விரைவில் நடத்தும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் கூறினார்.

வேலூரில் சனிக்கிழமை நடந்த பாட்டாளி இளைஞர் சங்க மாநாட்டில் அவர் பேசியது:

இந்த மாநாடு தமிழ் இளைஞர்களை சீரழிவில் இருந்து காப்பாற்றும் சமுதாய மாநாடாக நடத்தப்படுகிறது. தந்தை பெரியார் ஆங்காங்கே இத்தகைய சமுதாய சீர்திருத்த மாநாடுகளை நடத்தினார். அவர் வழியில் பாமக இளைஞர் சங்கம் இந்த மாநாட்டை நடத்துகிறது.

இவ்வாண்டு ஐக்கிய நாடுகள் மன்றம் 100 கோடி மரங்களைடிசம்பர் 31-க்குள் நடுவதற்கு கட்டளையிட்டுள்ளது. பசுமை தாயகம் தமிழகத்தில் ஜூலை 25 முதல் 31-க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பூரண மதுவிலக்கு பாமக கொள்கையாக உள்ளது. பாரெங்கும் படை நடத்திய இளைஞர்கள் "பார்" எங்கும் நுழையக் கூடாது என்று கூறுகிறோம். அதனால் அவற்றை இழுத்து மூடச் சொல்கிறோம்.

டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்துக்கு பெண்கள் தயாராக உள்ளனர். இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் "பார்'களை மூடும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

உழைப்பின் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய இளைஞர்கள் சினிமா திரையரங்கு வாயிலில் காலையிலேயே காத்துக் கிடக்கும் சூழல் தமிழகத்தில் உள்ளது.

இந்த அவலத்தைத் தடுக்க மாலை 5 மணிக்குப் பின்னர்தான் திரைப்பட அரங்குகள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி இளைஞர் சங்கம் போராட்டம் நடத்தும் என்றார் ராமதாஸ்.

2011-ல் ஆட்சி மாற்றம்

1967-ல் ஆட்சி மாற்றத்தின் மூலம் திமுக ஆட்சி மலர்வதற்கு காரணம் அன்றைய இளைஞர்களே. அதேபோன்ற ஆட்சி மாற்றத்தை இன்றைய இளைஞர்கள் 2011-ல் ஏற்படுத்தவுள்ளனர்.

இளைஞர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்ய வேண்டும். இறப்புக்கு பிறகு கண்களை தானம் செய்யுங்கள். கிராமம்தோறும் விளையாட்டுக் குழு அமைத்து தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்துங்கள் என்றார் அன்புமணி ராமதாஸ்.

முன்னதாக அவர் எல்லோருக்கும் தரமான, கட்டணமில்லா கட்டாய கல்வி கிடைக்க பாடுபடுவது, தமிழ் பண்பாட்டை காப்பது, மது, போதை, லாட்டரி உள்ளிட்ட தீயப் பழக்கங்களை கைவிடுவது, தடுப்பது உள்ளிட்ட 10 அம்ச கட்டளைகளை வாசிக்க, மாநாட்டில் பங்கேற்றோர் உறுதிமொழியாக ஏற்றனர்.

1 comments:

July 29, 2007 at 6:21 AM சின்னப் பையன் said...

helmet poottuNdu, 'anththa' maathiri padaththai paarkka oru periya varisai niRkumee, athai inimee paarkka mudiyaathaa...chennai aNNaa saalaiyil chithraa enRoru aranggu irunthathu...ippoothu irukkiRathaa enRu theriyavillai...:-)