அன்றாட செலவுக்குக் கூட திண்டாடும் ஜெயலலிதா?

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை நிதியமைச்சர் ப. சிதம்பரம் பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாக ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது. அவருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

கூட்டணித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் தலைவர்கள் பேசினர். அப்போது, சமாஜவாதி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் இதை அறிவித்தார்.

நிதியமைச்சர் சிதம்பரம், ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ் உள்பட தமது அணியின் தலைவர்களை குறிவைத்து தேவையற்ற தொல்லைகளைத் தருவதாக அமர்சிங் குற்றம் சாட்டினார்.

கூட்டணித் தலைவர்களுக்கு எதிராக சர்வாதிகார போக்கை சிதம்பரம் கடைபிடிப்பதாக அமர்சிங் புகார் கூறினார். ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கைக்கூட முடக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அவருக்கு அன்றாடச் செலவுக்குக்கூட பணம் இல்லாத அளவுக்கு, நெருக்குதலான நிலைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் புகார் கூறினார்.

"தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸýக்கு எதிராக நாடாளுமன்றத்தில் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியது காங்கிரஸ். எங்கள் அணியும் சிதம்பரத்துக்கு எதிராக அதே போன்ற போராட்டத்தை நடத்தும்' என்றார் அமர்சிங்.

ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாகக் கூடி இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

"மத்திய புலனாய்வுத்துறையைக் கண்டு கூட்டணித் தலைவர்கள் பயப்படுகிறார்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "கூட்டணித் தலைவர்கள் எல்லோருமே சிபிஐ ரிட்டன்' (சிபிஐ நடவடிக்கையை எதிர்கொண்டவர்கள்). யாருக்கும் பயப்பட மாட்டார்கள்' என்று பதிலளித்தார் அமர்சிங்.

தீர்மானம்: இதனிடையே, சமீபத்தில் அசாமில் எப்.சி.ஐ அதிகாரி பி.சி. ராம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அசாம் மாநிலத்துக்கும் பிற வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 comments: