மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது!

கர்நாடகாவில் மழை குறைந்தது... மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 42 ஆயிரம் கன அடியாக சரிவு



கர்நாடக மாநிலத்தில் பருவ மழை குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகாவிலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து உபரி நீர் முழுவதும் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

நீர் வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் இருந்ததால் ஒரே வாரத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் காவிரி டெல்டா பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டது. அணைக்கு நேற்று அதிகாலை விநாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று பகல் முழுவதும் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகலில் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணை முழு கொள்ளளவையும் எட்டியதை தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக இன்று குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 42 ஆயிரத்து 572 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.77 அடியாக இருந்தது.
தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டதால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் நீர்வரத்து குறைந்து விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 37 ஆயிரத்து 960 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. உபரி நீர் வெளியேற்றப்படும் 16 கண் மதகுகளின் வழியாக விநாடிக்கு 16 ஆயிரத்து 611 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 359 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம், நான்கு கதவணைகள் மூலம் 360 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து சேலம் கலெக்டர் மதிவாணன் கூறுகையில், "மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு துறையினர், பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறை என அனைத்து துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்" என்றார்.

0 comments: