Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

கலைஞர் கவிதை...

காந்தியடிகளின் கணக்கைத் தீர்த்தவர்களுக்கு
இடுகாட்டிலும் இடம் அளிக்கலாமா?



கலைஞர் கவிதை காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி (2.10.2007) கலைஞர் தொலைக்காட்சியில் ``காந்தியடிகள் என்ற சிறப்பு கவியரங்கத்திற்குத் தலைமை வகித்த முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கிய கவிதையிலிருந்து....


இன்று இந்தியா சுதந்திர பூமி -
இல்லாதவன்; வரிகட்ட வக்கு வகை இல்லாதவன்; அவனே
காந்தி கணக்கு வைக்கத் தகுதியானவன் - இதில்
இரு வேறு கருத்துக்கு இடமில்லை - ஆனால்
காந்தியின் கணக்கையே தீர்த்த கும்பலுக்கு
இடுகாடு, சுடுகாட்டில் கூட இம்மண்ணில் இடமளிக்கலாமா?

மதவெறியரால் மகாத்மா நீ மாய்க்கப்பட்டபோது
இதற்கு `காந்தி தேசம் என்று பெயர் வைப்போம் என்றார் பெரியார்!
எதிர்ப்புக்கிடையிலேயும் வேலை மாநகரில் உன் சிலையைத்
திறந்தார் அண்ணா!
இவ்விரு தலைவர் வழிவந்த நான் இக்கவியரங்கை
உமக்குக் காணிக்கை ஆக்குகிறேன்

ஒரு மனிதர் அறிவித்த உண்ணா நோன்பு; இந்த உலகையே
உலுக்கிற்று - அந்த
உத்தமரின் வழி நின்று அறப்போர் தொடுத்தோம்;
அது அநீதியாளர் வயிற்றைக் கலக்கிற்று

தென்மாவட்ட திசை நோக்கி வேண்டுகிறேன்! - கலைஞர் கவிதை



அய்யா கலைஞரே; அமர்த்தியா சென்

ஆய்ந்தறிந்து வெளியிட்ட ஆழமான கருத்தை;

அன்றாடம் எழுதும் மடலில் குறிப்பிட்டு

உழவுத் தொழிலும் தொழிற்சாலைப் பெருக்கமும்,

ஒன்றுக்கொன்று முரணானதேயில்லை யென்று

ஒன்றையொன்று தழுவி வளர்வதே உயர்வான பொருளாதாரம் என்று;

ஒப்பற்றதோர் கருத்தை உரைத்துள்ளார் - மிக நன்று!

ஒரு பகுதியில் நிலத்தையெடுத்தங்கே ஆலை அமைக்கும்போது,

வருங்காலத்தில் அவ்வாலை தர இருக்கும் வருமானத்தையும்

ஒரு கணக்கிட்டு அந்நில விலைக்கு ஈடாகவோ;

அல்லால் சில மடங்கு மிகையாகவோ வழங்குவது தான்

அந்நிலமுடையார் அகமகிழச் செய்யும் செயலாகும் - அதனால்

அமர்த்தியா சென் அறிவித்துள்ள கருத்தை ஏற்கின்றேன், என –

அருங் கவிஞர் வைரமுத்து சொன்ன போது,

கண்ணீர் கலந்த மகிழ்வுடனே அவர் படைத்த

"கள்ளிக்காட்டு இதிகாசம்" நூலின் பெயரை நினைவூட்டினேன்.

அவரோ; தண்ணீரில் பல கிராமங்கள்,

அடியோடு மூழ்கிப் போக அன்றொரு நாள்

வைகை அணை கட்டுதற்காக

வகைப்படுத்திய ஏற்பாட்டில்

வெள்ளக்காட்டில் மிதந்தனவே கிராமங்கள் என ஏங்கி

உள்ளம் நோக முடித்திருந்தார் நூலை எனினும் ஒரு வகையில் ஆறுதல் எமக்கு!

வைகையினால் வளம் பெருகும், செழிக்கும் சிற்றூர் பேரூர்கள்;

வயல்களிலே பயிர் குலுங்கும்!

பாதிப்பு சிலருக்கே எனினும்

பல்வேறு நன்மை கிட்டுமே பலருக்கு என்று

கள்ளிக்காட்டு இதிகாசமென எழுதிய நூலில்

வடுகப்பட்டிக் கவிஞர்

வார்த்தைகளால் அல்ல;

வடித்துள்ளார் கண்ணீரால் -

ஆயினும் அணையினால் அந்தப் பகுதி வளம்

வாய்ந்து வாலைக் குமரி போல்

இயற்கை அழகு கூட்டி

ஏழ்மை போக்குவது கண்டு

இருவரும் ஆறுதல் பெற்றோம்

அங்கு வாழ் மக்கள் எல்லோரும் தான்!

இது போல;

சாத்தான்குளம் பகுதியும்

வளமிகு வாழ்வு - நலமிகு வாழ்வு பெற்றிட

வேலை வாய்ப்பு இளைஞர்க்குக் கிட்டிட

பாலைவனத்தைப் பசுஞ்சோலையாக்கிட

தொழில் வளம் தொடங்கலாமெனத்

தோன்றிய எண்ணம் தொடர்ந்திட இயலாமல்

தொல்லைகள் பல்லுருவில் படையெடுப்பது காண

எல்லையிலாத் துயரம் எமை வாட்டுவதாலே

இந்தியப் பெரு நாட்டில்

இந்த ஒரு பிரச்சினைக்காக

எத்தனை கட்சிகள் கொடி பிடித்துப் பயணங்கள்

எத்துணை எத்துணை பேட்டிகள் -

இடைத் தேர்தல் போல் நடைபெறும்

இடையறாப் பிரச்சாரங்கள் -

இந்தத் தொல்லைதனை இப்போது எண்ணிப் பார்த்து

இரு பிரிவாய் கருத்து மோதல் தவிர்த்து

எப்போதும் போல் இருக்கட்டும்

இனிய சாத்தான்குளம் என்று

திட்டத்தை ஒத்தி வைத்தால் அது

திருட்டுக் கனிமம் எடுப்போர்க்கு

தித்திப்புச் செய்தியாகும் - அதனாலே

திட்டமிட்டவாறு அமைச்சர் குழு ;

திங்களன்று ஆய்வுக்கு வரும்போது

தெரிவித்திடுக தெளிவான கருத்தையென்று

தென் மாவட்ட மக்கள் வாழும்

திசைநோக்கி வேண்டுகின்றேன்!

ஏறிவிட்டீர் எம் இதயங்களில்! - கலைஞர் கவிதை

அண்ணலே அய்ந்தாண்டுக்கு முன்னர், நீவீர்

அன்னைத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப்

பொறுப்பேற்கப் போகும் செய்தி கேட்டு; பூரிப்பு தாங்காமல்

"பொன் மனம் கொண்ட மண்ணின் புதல்வருக்கு

பொருத்தமான மகுடம்தான் இது" என்று

புகழ் மலர்கள் தொடுத்துக் கவிதை மாலையொன்று

கட்டி யுமது தோளுக்கு அணிவித்தபோது - இராமேசுரம்

கடல் அலைகள் களிப்பு மிகுதியால் கையொலித்து

ககனத்து முகடு வரை துள்ளிக் குதிக்கின்றன என நான் எழுதினேன்!

கன்யாகுமரி முதல் இமயம் வரை என்றல்ல;

காசினியில் அனைத்து நாடும் புகழ்ந்தேத்த - இந்த

அன்னை நாடும் பிரியா விடை தந்து பிரியமுடன் வாழ்த்த

நினைவுகள் ஆயிரத்தை எம் நெஞ்சில் நட்டு -

இன்று இறங்கிவிட்டீர் பதவியை விட்டு!

இல்லை; ஏறிவிட்டீர், எம் இதயங்களில்!

இனிது வாழ்க; என்றும் வாழ்க! வாழ்க!!

அன்புள்ள,

மு.க.

செக்ஸ் கவிஞர்கள் மு.மேத்தா கொதிப்பு

"செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தியே தற்போதைய சினிமா கவிஞர்கள் பலர் கவிதை எழுதுகின்றனர். பல கவிஞர்கள் எப்படி பாடல் எழுதக்கூடாது என்பதற்கு உதாரணமாக விளங்குகின்றனர்" என்று கவிஞர் மு.மேத்தா கூறினார்.

சி.கே.கே. அறக்கட்டளை சார்பில் ஈரோட்டில் இலக்கிய விழா நடந்தது. இதில் "துளிகள்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. கவியரங்கத்துக்கு தலைமை வகித்த கவிஞர் மு.மேத்தா பேசியதாவது:

சமீபகாலமாக செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தியே பல கவிஞர்கள் திரைப்படங்களில் பாடல்களை எழுதுகின்றனர். என்னைப் போன்ற ஒரு சில கவிஞர்கள் "ராஜராஜ சோழன் நான்; என்னை ஆளும் காதல் தேவி நீதான்" என்று சினிமாவில் செக்ஸ் விஷயத்தை மறைமுகமாக எழுதினோம்.

ஆனால் இன்றைக்கு செக்ஸ் பாடல் எழுதுவதில் கவிஞர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு கவிஞர் பத்து அடி பாய்ந்தால், மற்றொரு கவிஞர் 15 அடி பாயும் அளவுக்கு செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தி பாடல்களை எழுதுகின்றனர். முன்பிருந்த திரைப்பட கவிஞர்கள் எப்படி பாடல்களை எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தனர். ஆனால், தற்போதுள்ள பல கவிஞர்கள் எப்படி பாடல்களை எழுதக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.

இவ்வாறு மு.மேத்தா பேசினார்.

ரஜினி ரசித்த பெரியார்! - கலைஞர் கவிதை

"என் வழி தனி வழி எனும்
பொன்மொழிக்குச் சொந்தக்காரர்-
பழகிவிட்ட நண்பருக்கு என்றும்
பந்த பாசம் மாறாத உறவுக்காரர்-
பல்வேறு கருத்துகள் அரசியலில்
படைதிரண்டு அலைகளாக மோதிய போதும்;
பதற்ற மடையாமல் பகுத்தறிந்து மவுனமாகப்
பண்பாடு போற்றுவதே பட உலகில் தான் கற்ற
பாடம் எனப் பகர்ந்தது மட்டுமன்றி;
பயமின்றி அதனைச் செயலிலும் காட்டியவர்-
பால வயதில் தனக்கு வழி காட்டி வாழ்வித்த
ஆலம் விழுதுகளை அரவணைத்துப் புகழ்ந்தேத்தியவர்-
பல்லாண்டு காலம் எனக்கும் நண்பர் -
சொல்லால் விளக்கமுடியாத நல்லிதயம் படைத்த தோழர்
வாய்மையொன்றே வாழ்வினில் அனைவர்க்கும் தேவைப்படும்
தூய்மை என்பதை கடைப்பிடிக்கும் மனிதநேயர்!
ரஜினி! ரஜினி! ரஜினி! ரசிகர்களுக்கு மந்திரச்சொல்! அதுவே
ரசிகர் அல்லாதோர் பலருக்கும் மயக்கும் சொல்!
அவரையே எங்கள் தந்தை பெரியார்
அடடா, எப்படி மயக்கி விட்டார் பாருங்கள்!
"படம் பார்த்தேன்; பெரியார் படம் -
படமெடுத்தாடினர் அவருக்கு எதிராகப் பல பேர்-
அவர் படமா பார்ப்பதென்ற அய்யப்பாட்டுடன்
அன்பு நண்பர் சத்யராஜூடன் அப்படத்தைப் பார்த்தேன்
அடடா; என்ன சொல்வேன்? அய்யா பெரியாராக;
அச்சில் வார்த்ததுபோல் சத்யராஜ் நடித்தது கண்டேன்;
பெரியார் பற்றிப் பலர் பேசக் கேட்டுள்ளேன் - அவர்
பகுத்தறிவு முழக்கத்தை - அதனால் வென்ற இயக்கத்தை;
வைக்கம் போன்ற வரலாற்றுச் செய்திகளை;
சாதிக் கொடுமை ஒழிக்க அவர் சண்டமாருதமாய் எழுந்ததை-
நிகழ்ச்சிகளின் தொகுப்பாய்க் கண்டேன் - என்
நெஞ்சம் விம்மிட நிறைவாய்ச் சொல்கிறேன் -
கலைஞரும் வீரமணியாரும் பெரியாருடன் பழகியது;
விலை மதிப்பில்லா காலமன்றோ?
அக்காலம் நான் வாழ்வதில் எனக்கு
அளவிலா ஆனந்தம் பெருகுதன்றோ!
கலைச் சிகர உச்சியாகக் காட்சி தரும் சூப்பர் ஸ்டார்;
எம்மோடு வாழ்வதற்கு மகிழ்கின்றார் என்றால்; அவர்
நம்மோடு பெரியாரைப் புரிந்துகொண்டு வாழும் நாள்;
நம் போன்ற பகுத்தறிவாளர்க்கெல்லாம் திருநாள் தானே!

"பரத்வாஜ் ஸ்கூல் ஆஃப் மியூசிக்"

ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இசை கற்றுத்தர முன் வருகிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ்!



தமிழ் சினிமாவில் எண்ணற்ற சூப்பர்ஹிட் பாடல்களை அளித்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, வளரத்துடிக்கும் இசை ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதத்தில் இசைப்பள்ளி ஒன்றை துவங்கியிருக்கிறார்.

"பரத்வாஜ் ஸ்கூல் ஆஃப் மியூசிக்" என்று அழைக்கப்படுகிறது இந்த இசைப்பள்ளி. கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை, போன்ற பாரம்பரிய இசை வடிவங்களை பல இசை நிறுவனங்கள் கற்றுத்தந்தாலும் மெல்லிசை பயிற்சிக்கென எந்த அமைப்பும் இல்லை. அதை ஈடு செய்வதுதான் இந்த இசைப்பள்ளியின் நோக்கம் என்கிறார் பரத்வாஜ்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் கூடிய ஓராண்டு மெல்லிசை பட்டய படிப்பினை பரத்வாஜ் இசைப்பள்ளி துவங்குகிறது. இந்த பள்ளியில் என்னவெல்லாம் சிறப்புகள் இருக்கின்றன?

தொழில் முறை நோக்கமும், சிறந்த அமைப்புடன் கூடிய மெல்லிசை பட்டயம்
நவீன சிறப்பு தொழில் நுட்பங்களுடன் விஞ்ஞான பூர்வமான பயிற்சி.
தொலை நிலை கல்வி (சுய கற்பித்தல் முறை)
ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் (பணி புரிபவர்களின் வசதிக்காக)

இவற்றோடு இசையமைப்பாளர் பரத்வாஜ் மற்றும் அவருடன் சேர்ந்த இசை ஜாம்பவான்கள் உருவாக்கிய பாடத்திட்டம்!செப்டம்பர் மாதம் 2007 லிருந்து சென்னை, கோயமுத்தூர், ஈரோடு. சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.

எதிர்காலத்தில் எண்ணற்ற எஃப்.எம்.களும், தொலைக்காட்சிகளும் உருவாக இருப்பதால் இந்த பட்டயப்படிப்பு நிச்சயம், மாணவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை விளக்கேற்றும் என்கிறார் பரத்வாஜ்.

-ஆர்.எஸ்.அந்தணன்

இசை ஆல்பமாகும் அப்துல்கலாம் கவிதைகள்

ஜனாதிபதி அப்துல் கலாமின் கவிதைகள், இசை ஆல்பமாக விரைவில் வெளியாக உள்ளன.


"சில்க் ரூட்' இசைக் குழு "கலாம்' என்ற பெயரிலேயே இந்த ஆல்பத்தை தயாரிக்கிறது. இந்தி பாப் இசைக்குழு இது.

ஏறினேன் மீண்டும் ஏறினேன்...எங்கிருக்கிறது சிகரம், என் இறைவா? மற்றும் எல்லை காக்கும் வீரர்களே...என் தாய்நாட்டின் மாபெரும் மைந்தர்கள் நீங்கள்...என்ற 2 பாடல்களையும் இசைக் குழுவின் முன்னணி பாடகரான மொகித் சௌகான் பாடியுள்ளார். இந்த இசைத் தொகுப்பில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. அனைத்தும் ஜனாதிபதி பதவிக் காலத்தில் கலாம் எழுதிய கவிதைகள்.

இந்த ஆல்பத்தின் முதல் கேசட் கலாமின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் எஸ்.எம்.கான் கூறியுள்ளார்."மிகுந்த ஆவலுடன் ஆல்பத்தைக் கேட்ட கலாம், முதல் பாடலிலேயே அசந்து விட்டார். மிகச்சிறந்த ஆக்கம் என அவர் பாராட்டியதாக' பிராண்ட் கம்யூனி கேஷனைச் சேர்ந்த ரவுல் சந்திரா கூறி யுள்ளார். சில்க் ரூட்டுடன் கூட்டாக ஆல்பத்தை தயாரிக்கும் நிறுவனம் இது.இந்த மாதத்திலேயே ஆல்பம் வெளியிடப் படும் எனவும், வெளியீட்டு விழாவுக்கு கலாம் அழைக்கப்பட்டுள்ளார் எனவும் ரவுல் சந்திரா கூறியுள்ளார்.

"எல்லைப் பாதுகாவலர்கள்' என்ற கலாமின் கவிதையின் அடிப்படையில் சுதந்திர தினத்துக்காக பாடல் அமைத்தது "சில்க் ரூட்' இசைக்குழு. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தப் பாடலைக் கேட்ட கலாம் பின்னர் அந்த இசைக்குழுவைச் சந்தித்தார். அப்போது கலாமின் கவிதைகளை இசை ஆல்பமாக்கும் ஆவலை வெளியிட்டது சில்க் ரூட். ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பின் வேலையைத் தொடங்கி கடந்த மாதம்தான் ஆல்பம் முழுமையடைந்தது என்று கூறியுள்ளார் சந்திரா.

எழுத்தாளர்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு - எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என தனது எழுத்துகளின் மூலம் தமிழக மக்களின் மனங்களுடன் மிகுந்த நெருக்கத்தில் இருப்பவர். `பாபா', `சண்டைக்கோழி', `உன்னாலே உன்னாலே' முதலிய படங்களுக்கு வசனம் எழுதியவர். தற்போது ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கும் `தாம் தூம்' படத்திற்கும், இயக்குநர் லிங்குசாமியின் `பீமா' படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார். அவரிடம் நடந்த சிறிய உரையாடல்...

நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?

குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்தது போல்தான் நாம் அனைவரும் வாழ்க்கையைப் புரிந்து வைத்துள்ளோம். எனது வீட்டிற்கு எதிரில் இருக்கும் மரமும், நான் ஆஸ்திரேலியாவில் பார்த்த மரமும் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். அவை ஒரே பூமியில்தான் வேரூன்றி இருக்கின்றன என்ற உண்மையை மறந்து விடுகிறோம். இப்படி வாழ்க்கையை ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொள்ள, நான் புரிந்து கொண்டதை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ளத்தான் எழுதுகிறேன்.

நாவல், சிறுகதை எழுதுவதற்கும், திரைப்பட வசனம் எழுதுவதற்கும் என்ன வேறுபாடு?

நாவல், சிறுகதைகளை நான் முழுக்க முழுக்க எனக்காகத்தான் எழுதுகிறேன். விருப்பப்பட்டால் மட்டுமே அதை நான் வெளியிட்டு மற்றவர்கள் படிக்க முடியும். ஆனால் திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி. அதில் ஒரு பகுதியாக இயக்குநரின் கதாபாத்திரங்களுக்கு வசனம் எழுதி கொடுக்கும் பொறுப்புதான் என்னுடையது. எனவே அடிப்படையில் இரண்டுமே வெவ்வேறு துறைகள்.

ஒரு எழுத்தாளர் சினிமாவில் வந்து என்ன சாதிக்க முடியும்?

திரைப்பட வசனங்கள் மூலம் நான் நினைக்கும் சில விஷயங்களை சொல்ல முடியும் என நினைக்கிறேன். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி சுவாரஸ்யமான வசனங்களையும் எழுத முடியும். உதாரணமாக `தாம் தூம்' படத்தில் பாதிக்கதை பொள்ளாச்சி பகுதிகளிலும், மீதிக் கதை ரஷ்யாவிலும் நடக்கிறது. ரஷ்யர்கள் கதாநாயகனிடம் பேசும் போது, ரஷ்ய மொழி புரியாவிட்டாலும் படம் பார்ப்பவர்களுக்கு புரியும் வகையில் வசனங்களை அமைத்துள்ளேன்.

சண்டைக்கோழி படத்தில் "வா! வந்து அருவாள வீசிப்பாரு'' என்று தென்மாவட்ட பேச்சுவழக்கில் வசனம் அமைத்திருப்பீர்கள். ஆனால் `உன்னாலே உன்னாலே' படத்தில் மேல்தட்டு மக்களின் வசனங்களை எழுதியிருக்கிறீர்கள். இப்படி பல்வேறு தரப்பு வசனங்களை எழுதுவதில் சிரமம் இல்லையா?

நான் வசனம் எழுதப்போகிற கதாபாத்திரங்களின் வாழ்வியல் சூழல், குணநலன் என வேர் வரை ஆய்வு செய்து பிறகுதான் வசனம் எழுதுகிறேன். கிராமங்கள் எனக்கு நன்கு அறிமுகமானவை. பொருளாதார ரீதியில் வசதியான இளைஞர்களிடம் பழகி இருக்கிறேன். எனவே அவற்றை எழுதுவது சிரமமாக இல்லை. வெளிவர இருக்கும் `பீமா' படம் நிழல் உலக தாதாக்களின் கதை என்பதால் அதற்கு தகுந்தபடி வசனம் எழுதி இருக்கிறேன்.

வசனங்கள் எழுதுவதற்கான வரையறை என்ன?

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு, வசனங்களுக்கும் பின் ராமகிருஷ்ணன் என்னும் எழுத்தாளன் மறைந்திருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படாதபடி எழுதுகிறேன். படத்தில் கதாபாத்திரங்கள் மிகையில்லாத வசனங்களை பேச வேண்டும். அதில் எனது புத்திசாலித்தனத்தைப் புகுத்த மாட்டேன். இதுதான் நான் கடைப்பிடித்து வரும் வரையறை.

புதுமைப்பித்தன், பாரதிதாசன் என முந்தைய தமிழக எழுத்தாளர்கள் சினிமாவில் நுழைந்து அதில் வெற்றி பெறவில்லை. `எல்லா நதியும் கடலில் கலப்பது போல எழுத்தாளர்களின் முடிவான ஆசை சினிமாதான்' என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

புதுமைப்பித்தன் சினிமாத்துறைக்கு வந்ததன் பின்புலம் வேறு. அவரது நண்பர் பி.எஸ்.ராமையா போன்றவர்கள் அப்போது சினிமாத்துறையில் இருந்தார்கள். பாரதிதாசன் திராவிட இயக்கத் தலைவர்களான அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் சினிமாவில் இருந்ததால் ஈர்க்கப்பட்டு சினிமாத்துறையில் ஈடுபட்டார். நான் சினிமாவிற்கு வந்த பாதை வேறு.

கதை என்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறதோ அங்கு நான் செல்வேன். கதைக்கான எல்லா வடிவங்களையும் முயற்சித்து பார்த்த நாம் ஏன் சினிமாவிலும் முயற்சித்து பார்க்கக்கூடாது? என்று தோன்றியதன் விளைவாக நான் வசனம் எழுத வந்தேன்.

தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு மரியாதை கிடையாது என்ற கருத்து உள்ளதே?

என்னைப் பொறுத்தவரையில் நான் இந்தக் கருத்தை மறுக்கிறேன். தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களை விட, மக்களுக்கு திருவள்ளுவர், கம்பர் போன்ற புலவர்களைத்தான் அதிகம் தெரியும். அவர்களை மக்கள் இன்றும் போற்றி வருகிறார்கள். அதைப்போல் பாரதி, ஜெயகாந்தன் என தமிழ்நாட்டின் எழுத்தாளர்களுக்கு மக்களின் மனதில் நீங்காத இடம் உண்டு.

எழுத்தாளர்கள் என்றால் கோபக்காரர்கள், சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் என்ற கருத்தும் உள்ளதே?

இதுவும் தவறான கருத்தாகும். எழுத்தாளர் என்பவர் எழுதும் போது மட்டும்தான் வேறு மனிதர். மற்றபடி அவரும் சாதாரணமானவர்தான். எழுத்தாளர் மக்களுக்காக என்ன எழுதியிருக்கிறார், அது மக்களை எந்த அளவிற்கு சென்றடைந்துள்ளது என்பதைப் பொறுத்துதான் மக்கள் எழுத்தாளரை மதிக்கிறார்கள். மக்களைப் பற்றி கவனமோ, கவலையோ கொள்ளாத எழுத்தாளர்களை மக்களும் மறந்து விடுவார்கள். எனவே மக்கள் எழுத்தாளர்களிடம் சாதாரணமாகவே பழகி வருகிறார்கள்.

ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீச்சு உடைய எழுத்தாளர்கள் இல்லாதது ஏன்?

உண்மைதான். ஆனால் ஜெயகாந்தனின் பின்புலமும், அவர் எழுதிய காலம் வேறு. அதற்கு பிறகான காலம் வேறு. அவருக்கு அரசியல் இயக்கங்களுடன் தொடர்பிருந்ததாலும், ஒரு போராளியாக இருந்த காரணத்தாலும் மக்களை சென்றடைய முடிந்தது. ஆனால் இப்போது ஊடகங்கள் பெருகிவிட்டன. எழுத்தாளர்கள் சொல்ல விரும்பும் பிரச்சினைகளை இப்போது ஊடகங்கள் எழுதி, விவாதித்து விடுகின்றன. இதனால் எழுதுவதற்கான விஷயங்களும் சுருங்கிவிட்டதும் இதற்கு ஒரு காரணம்.

உங்களின் எழுத்துகள், சகித்து கொண்டு வாழ வேண்டிய, தவறு நடக்கும்போது தட்டி கேட்க முடியாமல் வேடிக்கைப் பார்த்துவிட்டு பிறகு புலம்புகிற நடுத்தரவர்க்க மனநிலையின் வெளிப்பாடாக இருப்பது ஏன்?

நான் வாழ்வது நடுத்தர வர்க்கச் சூழல்தான். எனது சொந்தக்காரர்கள், என்னைச் சுற்றி வாழ்பவர்கள் என எல்லோரும் நடுத்தர வர்க்கமாக இருக்கிறார்கள். எனவேதான் மேலேயும் போகமுடியாமல் கீழேயும் வரமுடியாமல் இடையில் தவித்து மிதக்கிற நடுத்தர மக்களின் வாழ்வையும், ஆசையையும்தான் பெரும்பாலும் நான் பதிவு செய்கிறேன்.

உதாரணமாக ஒருவரைப் போட்டு போலீஸ்காரர் அடித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு முந்தைய நிகழ்வும் எனக்குத் தெரியாது, அதற்கு அடுத்த நிகழ்வும் எனக்கு தெரியாது. இந்நிலையில் இடையில் போய் நுழைந்து சிக்கலில் மாட்ட விரும்பவில்லை. தவறை தட்டிக்கேட்க நான் ஒரு `ஆக்டிவிஸ்ட்' இல்லை. எனவே அந்நிகழ்வை பதிவு செய்வதோடு இருந்துவிடுகிறேன்.

தமிழ் சினிமா தொடாத கதை வடிவங்கள் இருக்கின்றதா?

ஏகப்பட்டவை உண்டு. நமது வரலாற்று நாயகர்கள், சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாழ்வை நாம் திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தவில்லை. இந்தியில் `மங்கள் பாண்டே', `பகத்சிங்' என்று சுதந்திர போராட்டத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கிறார்கள். தமிழில் வாஞ்சிநாதனின் வாழ்க்கை, அவர் ஆங்கிலேய கலெக்டரை சுட்டுக்கொள்ள போட்ட திட்டம் போன்றவற்றை நாம் படமாக எடுத்தால் வணிக ரீதியாகவும் அப்படம் வெற்றி பெறும். அதைப்போல பெண்களை நாயகிகளாக கொண்ட படங்கள் தமிழில் அதிகம் வரவில்லை. பதினைந்து வயதுக்குள்ளான சிறுவர்களின் வாழ்க்கை... இப்படி தமிழ் சினிமா தொடாத எத்தனையோ கதை வடிவங்கள் உண்டு.

வசனத்திற்கு அடுத்தபடியாக படங்களை இயக்கும் எண்ணம் உண்டா?

நான் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை மட்டுமே யோசித்து அதில் கவனம் செலுத்துவேன். அடுத்தகட்ட திட்டங்களைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. நாளையே நான் இயக்குநராகவும் ஆகலாம் அல்லது சினிமா வேண்டாமென்று ஒதுங்கியும் விடலாம்.