'நந்து' - விமர்சனம்

மக்களிடம் அனுதாபம் பெற்று தேர்தலில் ஜெயிக்க திட்டமிடுகிறார் சாயாஜி ஷின்டே. அதற்காக தன்னைக் கொலை செய்வதுபோல் நாடகமாடும்படி பணத்துக்காக கொலை செய்யும் கில்லர் மகேஷ்பாபுவிடம் கூறுகிறார். ஆனால் நிஜத்திலேயே சாயாஜி சுட்டுக்கொல்லப்படுகிறார்.

கொலைப்பழி மகேஷ்பாபு மீது விழ, தலைமறைவாகிறார். அதிரடி விசாரணை நடத்தி மகேஷ்பாபுவை கண்டுபிடிக்கிறார் சி.பி.ஐ.அதிகாரி பிரகாஷ் ராஜ். ஆனால் சாயாஜியை கொன்றது வேறு ஆள் என தெரிந்ததும் பிரகாஷ் எடுக்கும் முடிவு கிளைமாக்ஸ். ஆக்க்ஷன் கதைக்கு த்ரில்லர் உரம்போட்டு செழிப்பாக்கி இருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம்.

அதிகம் பேசாமல் மவுனத்தை கேடயமாக்கும் மகேஷ்பாபு ஆக்க்ஷன் காட்சிகளில் துள்ளுகிறார். நாசரின் நிலத்தை அபகரிக்கும் ரவுடிக் கூட்டத்தை பென்டெடுப்பதும், திருவிழாவில் தாக்க வரும் ரவுடிகளை நின்ற இடத்திலிருந்தே குத்துவிட்டு வீழ்த்துவதும் நரம்பை முறுக்கேற்றுகிறது.

த்ரிஷாவிடம் நடத்தும் காதல் விளையாட்டுகளில் சுவை உண்டு. அழகி என்று எல்லோரும் த்ரிஷாவை வர்ணிக்கும்போது "நீ ஒண்ணும் அழகில்லை" என்று மகேஷ்பாபு மூக்குடைப்பது காமெடி. சுட்டிப்பெண்போல் சுறுசுறுக்கிறார் த்ரிஷா. காட்சியை விறுவிறுப்பாக்க வேண்டும் என்ற கவனத்தில் சென்டிமென்ட்டை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம்.

கிளைமாக்ஸில் பெரிதாக செய்யப்போகிறார் பிரகாஷ்ராஜ் என்ற எதிர்பார்ப்பும் புஸ். பாடல் காட்சிகளைவிட பின்னணி இசைக் கோர்ப்பில் ஸ்கோர் செய்கிறார் மணிசர்மா. நாசர், சரண்ராஜ், கோட்டா சீனிவாசராவ், சுதா, மாலி, காயத்ரி என நட்சத்திர குவியலால் எக்ஸ்டிரா பெனிபிட் எதுவுமில்லை. தொடக்கத்தில் வரும் சாயாஜியும் ரெண்டாவது காட்சியிலேயே டமாலாகிவிடுகிறார்.

1 comments:

July 13, 2007 at 7:09 AM ஸ்ரீமதன் said...

நந்து படத்தின் மூலக்கதை "shooter"என்ற ஆங்கிலப்படத்திலிருந்து "சுடப்பட்டது".