ஜெயலலிதா பதவிக்கு ஆபத்தா? - சட்ட வல்லுநர்கள் கருத்து

தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ள வழக்குகளால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவிக்கு ஆபத்து ஏற்படாது. எதிர்காலத்தில் தேர்தலில் நிற்பதற்கும் எவ்வித தடையும் ஏற்படாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

2001-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது இரு தொகுதிகளுக்கும் மேலாக நான்கு தொகுதிகளில் அதாவது ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று திமுக எம்.பி. குப்புசாமி கடந்த 2002-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீது தேர்தல் ஆணையம் ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 13-ம் தேதி உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மூன்றாவது மற்றும் நான்காவதாக மனு தாக்கல் செய்த புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளில் அப்போது தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர்கள் மூலம் ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல புவனகிரி தொகுதிக்கு கடலூரில் வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய குற்றவியல் சட்ட விதி 177-ன் படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விதி 125 (ஏ)-யின் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டபோது அவர்கள் கூறியது:

அரசு அதிகாரிகளிடம் தவறான தகவல் அளித்த குற்றத்துக்காக இந்திய குற்றவியல் சட்ட விதி 177-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படலாம். சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பறிக்கும் அளவுக்கு இது குற்றமாகக் கருதப்படவில்லை.

அதேசமயம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 (ஏ) பிரிவானது 2002-ம் ஆண்டுதான் அமலுக்கு வந்தது. ஆனால் மனுதாக்கல் 2001-ம் ஆண்டில் நடைபெற்றது.

எனவே ஓராண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த சட்டத்தின் மூலம் முந்தைய ஆண்டில் நடைபெற்ற குற்றத்துக்கு தண்டனை வழங்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி. அப்படி தண்டனை வழங்க முடிவு செய்தாலும் இக்குற்றத்துக்கும் 6 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத்தான் விதிக்க முடியும்.

அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளபடி, நான்கு தொகுதிகளில் மனு தாக்கல் செய்தாலும், அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், தனது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஜெயலலிதா தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே அந்த வகையில் அவருக்கு தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் இடமுள்ளதா? என்பதையும் ஆராய வேண்டியிருக்கும்.

மேலும் சட்டப் பேரவை உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ பதவிக் காலத்தின்போது தண்டனை பெற்றால், அதனால் அவரது பதவியைப் பறிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதே நடைமுறைதான் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி விஷயத்திலும் பின்பற்றப்பட்டது. அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டபோதிலும் அவர் எம்.பி.யாக தொடர்ந்து பதவி வகித்தார். ஆனால் தொடர்ந்து வந்த தேர்தலில் அவர் நிற்கவில்லை. இதே நடைமுறைதான் சிபுசோரன் வழக்கிலும் பின்பற்றப்பட்டது.

இத்தகைய முன்னுதாரணங்கள் இருப்பதால், ஜெயலலிதாவின் பேரவை உறுப்பினர் பதவிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

0 comments: