இந்தியாவின் பாதுகாப்பையும் ஒற்றுமையையும் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார். "டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியில் ஜெயலலிதா அளித்த பேட்டி வருமாறு:
கேள்வி: 2009 நாடாளுமன்ற தேர்தலை நெருங்கிக் கொண்டுள்ளோம். இதுவரை 60 சதவிகிதம் நாடாளுமன்ற காலம் முடிந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முக்கியமான தலைவராக நீங்கள் இருக்கையில் இந்தப் பேட்டி முக்கியமாக கருதப்படுகிறது. இதுபற்றி...?
ஜெயலலிதா: மீண்டும் இது உங்களது கருத்துதான்.
கேள்வி: சாத்தியமான அரசியல் கூட்டணி பற்றி மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஐந்து மாநிலங்களில் பாரதீய ஜனதா அதிகாரத்தில் உள்ளது. பாரதீய ஜனதா 10 மாநிலங்களில் அதிகாரத்தில் இருந்தால் அவர்கள் உங்கள் கூட்டணியின் ஆதரவுடன் 2009 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்யலாம். அப்படி இருக்கும்போது ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு மாற்றாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்க முடியும். இப்படி பல்வேறான அரசியல் கண்ணோட்டத்தில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் நிலை எவ்வாறு இருக்கும்?
ஜெயலலிதா: இது யூகம் செய்யப்பட்ட கேள்வி தான். அரசியல் சூழ்நிலை எப்படி மாறும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். அதை முன்பாகவே கணிக்க இயலாது. எப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அதுபற்றி ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி முடிவு செய்யும். அதை பொறுத்திருந்துதான் பார்க்க இயலும்.
கேள்வி: தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கூட்டணியின் வாய்ப்பு பற்றி...?
ஜெயலலிதா: வெளிநாட்டவரையோ, வெளிநாட்டு சக்தியையோ ஆதரிக்காத வரையில் யாரையும் நாங்கள் தீண்டத் தகாதவராய் நினைக்கவில்லை.
கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் இருந்து வாக்களிக்காமல் விலகி இருக்கப் போகிறீர்களா?
ஜெயலலிதா: இப்போதுள்ள நிலையில் இதைத் தவிர வேறு மாற்றம் இல்லை.
கேள்வி: ஷெகாவத்தை ஆதரிக்காமல் விலகி இருப்பீர்களா?
ஜெயலலிதா: இது அனைவரும் எடுத்த முடிவு.
கேள்வி: உங்களது நிலை என்ன?
ஜெயலலிதா: இதில் என்னுடையது என்கிற தனிப்பட்ட முடிவு எதுவும் இல்லை. ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முடிவு பற்றி டெல்லியில் நிருபர்களிடம் விளக்கமாக சொல்லி இருக்கிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளரையோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரையோ நாம் ஆதரிக்கப் போவதில்லை என்று.
கேள்வி: அந்த முடிவில் உறுதியாக இருப்பீர்களா?
ஜெயலலிதா: அதன்பிறகு எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி: நீங்கள் சிறந்த அரசியல்வாதியாக மக்களை ஈர்க்கும் தலைவியாக, பிரச்சினைக்கு உரியவராக, புதிராக, காந்தம் போன்ற சக்தி படைத்தவராக சித்தரிக்கப் படுகிறீர்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தியில் உரையாற்றினீர்கள். தொடர்ந்து நிருபர்களிடம் இந்தியில் பேசினீர்கள். அதுவும் ஓரளவுக்கு தூய இந்தியில் உரையாற்றினீர்கள்.
ஜெயலலிதா: ஓரளவுக்கு தூய இந்தி அல்ல. மிக சுத்தமான தூய இந்தி.
கேள்வி: நான் இந்தியில் புலமை வாய்ந்தவன் அல்ல. எனக்கு அதுபற்றி தெரியாது, மன்னிக்கவும்.
ஜெயலலிதா: என்னுடைய இந்தி மிக சிறப்பாக இருந்ததாக புலமை வாய்ந்தவர்கள் கூறினார்கள்.
கேள்வி: தேசிய அளவிலும், மாநில அளவிலும் அனைவரும் அறிந்தவராக, அங்கீகாரம் பெற்றவராக ஒரு கூட்டணியில் தலைமை தாங்கி அதிலும் முக்கியமான உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டை தாண்டியும் செயல்படுகிறீர்கள். தற்போது டெல்லியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி பலமுறை பல்வேறு வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுபற்றி கூற முடியுமா?
ஜெயலலிதா: தேசிய அளவில் செயல்பட்டாலும் காலத்திற்கு ஏற்றவாறு செய்ய வேண்டும். நான் தமிழ்நாட்டை சேர்ந்தவர். தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு பகுதிதானே. எனவே மாநில கட்சிகளும், மாநில இயக்கங்களும் தேசிய அளவில் முக்கியமான பங்கு வகிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
கேள்வி: தலைமை தாங்கி நடத்துவதற்காகவா..?
ஜெயலலிதா: அது அவரவர்களை பொறுத்து அமையும்.
கேள்வி: மாநில அளவில் உள்ளவர்கள் மத்தியில் ஓரணியை உருவாக்குவதால் அரசியல் நிலையில் மாற்றம் ஏற்படுகிறதே?
ஜெயலலிதா : என்ன நடக்கும் என்பதைப் பற்றி இப்போதே கூறமுடியாது.
கேள்வி : உங்கள் அனைத்துக் கொள்கைகளையும் கூறிவிட்டதாக நினைக்கிறீர்களா?
ஜெயலலிதா: எதைப் பற்றிய கொள்கை என்று நீங்கள் கேட்கவில்லை.
கேள்வி: மத்திய அரசியலில் அதிக பங்காற்ற முடியுமா? ஆற்ற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதை தொடர்ந்து நாட்டைப் பற்றிய உங்கள் குறிக்கோள் என்ன?
வல்லரசு நாடாக ஆக்குவதே குறிக்கோள்
ஜெயலலிதா: என்னை பொறுத்தவரையில் நாட்டிற்கு சேவை செய்வதைவிட வேறு எந்த நாட்டமும் இல்லை. எனக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இல்லை. குடும்பம் இல்லை. நாட்டுக்காக பணியாற்றத்தான் நான் இங்கு இருக்கிறேன். எனது பணி குறித்து காலம்தான் பதில் சொல்லும். இந்தியா உலகின் மிகசிறந்த வல்லரசாக வர வேண்டும். அதுதான் எனது குறிக்கோள். அது ஒருநாள் நிறைவேறும் என நான் உறுதியாக நம்புகிறேன். எனது வாழ்நாளில் அதை அடைவேன் என்று நம்புகிறேன். இந்த குறிக்கோளை அடைவதற்கு நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்தியாவை உலகில் ஒரு வல்லரசு நாடாக ஆக்குவதுதான் எனது வாழ்க்கை லட்சியமாகும்.
கேள்வி: நீங்கள் மாநில தலைவராக பேசவில்லை. தேசிய தலைவராக பேசுகிறீர்கள். நீங்கள் சிறந்த ராஜதந்திரி...?
ஜெயலலிதா: மாநில தலைவரும் இந்த நாட்டின் குடிமகன்தான். மாநிலங்களை நாட்டில் இருந்து எப்படி பிரிக்க முடியும். எல்லா மாநிலங்களும் சேர்ந்தது தான் ஒரு நாடு. பல்வேறு மாநிலங்களின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் குடிமக்கள் ஆவார்கள். நீங்கள் அசாமியராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், ஆந்திரா அல்லது பஞ்சாபியாக இருந்தாலும் நீங்கள் இந்தியர்தான். எந்த மாநிலத்தையும் சேராதவரை இந்தியர் என்று தனியாக அழைப்பதில்லை.
கேள்வி: அதில் ஒரு வேறுபாடு உள்ளதே?
ஜெயலலிதா: என்ன வேறுபாடு?
கேள்வி: தேசிய அளவில் கவனம் செலுத்தும்போது அதற்கான கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்த நாட்டை வளப்படுத்த குறிக்கோள் வைத்திருக்கும் நீங்கள், தேசிய அளவில் சிறந்த தலைமை பங்காற்ற வேண்டும். செய்வீர்களா?
ஜெயலலிதா: நான் ஏற்கெனவே இந்த நாட்டை பற்றி எனது சிறந்த குறிக்கோளை சொல்லி இருக்கிறேன். இதை பெறுவதற்கு நான் எதையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். எனது வாழ்நாளில் எனது கனவை நனவாக்குவதற்கு எதையும் தர தயாராக இருக்கிறேன். ஆனால் அதில் எனது பங்கு தேசிய அளவிலா என்பது பற்றி காலம் தான் கூற வேண்டும்.
கேள்வி: இந்த பேட்டி எப்போதும் பல ஆண்டுகளுக்கு மீண்டும் பேசப்படும் மற்றும் நினைவுப்படுத்தப்படும்? நீங்கள்அதிகமாக தொலைக்காட்சியில் பேட்டிகள் தருவதில்லை. அதிகம் விளம்பரம் விரும்பாதவராக இருக்கிறீர்கள் என்று மனந்திறந்து கூறுகிறேன். பலமான கருத்துக்களை கொண்டிருக்கிறீர்கள். தேசிய அளவில் ஆகட்டும், மாநில அளவில் ஆகட்டும் உங்களை தயார்ப்படுத்தி செயல்படுகிறீர்கள். இதுபற்றி கூற முடியுமா?
ஜெயலலிதா: ஒரு மனிதனுக்கு மூன்று நிலைகள் உண்டு. உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒன்று. உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது ஒன்று. நீங்கள் உண்மையிலேயே எப்படி இருக்கிறீர்கள் என்பது மூன்றாவது ஆகும். இதை ஒப்புக் கொள்கிறீர்களா...
கேள்வி: ஆம் ஒப்புக் கொள்கிறேன்.
ஜெயலலிதா: நான் மனஉறுதி படைத்தவர். கடுமையாக உள்ளவர். இப்படி இல்லையென்றால் அரசியலில் எனக்கு ஏற்பட்ட கரடுமுரடான நிலையில் இருந்து மீண்டு வந்திருக்க முடியாது. இப்போது இந்த நிலைக்கும் நான் வந்திருக்க முடியாது. அதே நேரத்தில் நான் மற்றவர்களை அனுசரிக்கும் திறன் வாய்ந்தவர். எனக்கென்று சில கொள்கைகள், எண்ணங்கள் உள்ளன. அதை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
என்னுடைய கணிப்பில் நான் அப்படி இருக்கிறேன். மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு என்னை தயார்படுத்திக் கொள்ளும் பன்முகத் திறமை கொண்டவராக இருக்கிறேன். எந்த நிலையிலும் நான் தேசப்பற்று கொண்ட இந்தியனாக இருக்கிறேன். இந்தியாவின் பாதுகாப்பு, ஒற்றுமை இவற்றை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டேன். தற்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியாவை வெளிநாட்டு சக்திகளுக்கு விற்பனை செய்வது போல நான் எந்த நிலையிலும் செய்ய மாட்டேன்.
கேள்வி: நீங்கள் சட்ட சிக்கலில் மாட்டி உள்ளீர்கள். நிறைய ஏற்றத் தாழ்வுகளை கண்டிருக்கிறீர்கள். நிறைய வழக்குகள், நீதிமன்ற தீர்ப்புகள், ரத்து செய்யப்பட்ட தீர்ப்புகள் இப்படியாக வழக்கறிஞர்களுடன் காலத்தை கடந்திருக்கிறீர்கள். இன்னும் வழக்குகள் உங்களுக்கு எதிராக வருகின்றன. அதுபற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்..?
ஜெயலலிதா: நான் சிறு வயதில் வழக்கறிஞராக ஆக ஆசைப்பட்டேன். ஆனால் கல்லூரிகளுக்கு போகாமலேயே சட்டத்தை பற்றி அறிந்து கொண்டேன். என்னுடைய வழக்கறிஞர்களுக்கு தேவையான ஆலோசனைகளை என்னால் வழங்க முடியும்.
இவ்வாறு ஜெயலலிதா பேட்டியில் கூறியுள்ளார்.
4 comments:
ஜெயாம்மாவை எட்டுப்போடச் சொல்லி கூப்பிட்டது யாரு? ;-)
காட்டாறு...
ஆனாலும் மனுசன இப்படி வாய்விட்டு சிரிக்க வைக்கப்டாது.
அதிசயம் ஆனால் உண்மை பங்காளி இங்க பின்னூட்டத்திற்கு பதில் போட்டிருக்கார்.
காட்டாறு ஆனாலும் ரொம்பத்தான் காமெடி உங்களுக்கு.
// ஜெயாம்மாவை எட்டுப்போடச் சொல்லி கூப்பிட்டது யாரு? ;-) //
அவர்களுக்குப் பிடித்தமான எண் 8 இல்லையே
Post a Comment