பகல் நேர சினிமா காட்சிகளை ரத்து செய்ய போராட்டம்: ராமதாஸ்

தமிழகத் திரையரங்குகளில் பகல் நேரக் காட்சிகளை ரத்து செய்யக் கோரும் போராட்டத்தை பாட்டாளி இளைஞர் சங்கம் விரைவில் நடத்தும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் கூறினார்.

வேலூரில் சனிக்கிழமை நடந்த பாட்டாளி இளைஞர் சங்க மாநாட்டில் அவர் பேசியது:

இந்த மாநாடு தமிழ் இளைஞர்களை சீரழிவில் இருந்து காப்பாற்றும் சமுதாய மாநாடாக நடத்தப்படுகிறது. தந்தை பெரியார் ஆங்காங்கே இத்தகைய சமுதாய சீர்திருத்த மாநாடுகளை நடத்தினார். அவர் வழியில் பாமக இளைஞர் சங்கம் இந்த மாநாட்டை நடத்துகிறது.

இவ்வாண்டு ஐக்கிய நாடுகள் மன்றம் 100 கோடி மரங்களைடிசம்பர் 31-க்குள் நடுவதற்கு கட்டளையிட்டுள்ளது. பசுமை தாயகம் தமிழகத்தில் ஜூலை 25 முதல் 31-க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பூரண மதுவிலக்கு பாமக கொள்கையாக உள்ளது. பாரெங்கும் படை நடத்திய இளைஞர்கள் "பார்" எங்கும் நுழையக் கூடாது என்று கூறுகிறோம். அதனால் அவற்றை இழுத்து மூடச் சொல்கிறோம்.

டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்துக்கு பெண்கள் தயாராக உள்ளனர். இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் "பார்'களை மூடும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

உழைப்பின் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய இளைஞர்கள் சினிமா திரையரங்கு வாயிலில் காலையிலேயே காத்துக் கிடக்கும் சூழல் தமிழகத்தில் உள்ளது.

இந்த அவலத்தைத் தடுக்க மாலை 5 மணிக்குப் பின்னர்தான் திரைப்பட அரங்குகள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி இளைஞர் சங்கம் போராட்டம் நடத்தும் என்றார் ராமதாஸ்.

2011-ல் ஆட்சி மாற்றம்

1967-ல் ஆட்சி மாற்றத்தின் மூலம் திமுக ஆட்சி மலர்வதற்கு காரணம் அன்றைய இளைஞர்களே. அதேபோன்ற ஆட்சி மாற்றத்தை இன்றைய இளைஞர்கள் 2011-ல் ஏற்படுத்தவுள்ளனர்.

இளைஞர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்ய வேண்டும். இறப்புக்கு பிறகு கண்களை தானம் செய்யுங்கள். கிராமம்தோறும் விளையாட்டுக் குழு அமைத்து தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்துங்கள் என்றார் அன்புமணி ராமதாஸ்.

முன்னதாக அவர் எல்லோருக்கும் தரமான, கட்டணமில்லா கட்டாய கல்வி கிடைக்க பாடுபடுவது, தமிழ் பண்பாட்டை காப்பது, மது, போதை, லாட்டரி உள்ளிட்ட தீயப் பழக்கங்களை கைவிடுவது, தடுப்பது உள்ளிட்ட 10 அம்ச கட்டளைகளை வாசிக்க, மாநாட்டில் பங்கேற்றோர் உறுதிமொழியாக ஏற்றனர்.

ஏறிவிட்டீர் எம் இதயங்களில்! - கலைஞர் கவிதை

அண்ணலே அய்ந்தாண்டுக்கு முன்னர், நீவீர்

அன்னைத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப்

பொறுப்பேற்கப் போகும் செய்தி கேட்டு; பூரிப்பு தாங்காமல்

"பொன் மனம் கொண்ட மண்ணின் புதல்வருக்கு

பொருத்தமான மகுடம்தான் இது" என்று

புகழ் மலர்கள் தொடுத்துக் கவிதை மாலையொன்று

கட்டி யுமது தோளுக்கு அணிவித்தபோது - இராமேசுரம்

கடல் அலைகள் களிப்பு மிகுதியால் கையொலித்து

ககனத்து முகடு வரை துள்ளிக் குதிக்கின்றன என நான் எழுதினேன்!

கன்யாகுமரி முதல் இமயம் வரை என்றல்ல;

காசினியில் அனைத்து நாடும் புகழ்ந்தேத்த - இந்த

அன்னை நாடும் பிரியா விடை தந்து பிரியமுடன் வாழ்த்த

நினைவுகள் ஆயிரத்தை எம் நெஞ்சில் நட்டு -

இன்று இறங்கிவிட்டீர் பதவியை விட்டு!

இல்லை; ஏறிவிட்டீர், எம் இதயங்களில்!

இனிது வாழ்க; என்றும் வாழ்க! வாழ்க!!

அன்புள்ள,

மு.க.

அப்துல் கலாம் - கல்கி பேட்டி

லேசாக மழை பெய்துகொண்டிருந்த ஒரு மதியம். தலைநகரில் சங்கடமான குளிர்! குடியரசுத் தலைவர் மாளிகை வாசலில் பாதுகாப்பு அலுவலரிடம் ‘ஆஜர்’ சொன்னதும் அவர் தம்மிடமுள்ள பட்டியலை எடுத்து, பெயரைச் சரிபார்த்து உள்ளே அனுப்புகிறார். இப்படி மூன்றுகட்ட ‘சரி பார்ப்பு’களைக் கடந்து போனால், உள்ளே விஸ்தாரமான அறை ஒன்றில் அமரச் செய் கிறார்கள். “தேனீரா? கா·பியா?” என்று கேட்டறிந்து சிற்றுண்டியுடன் உபசரிப்பு. ஜன்னல் கண்ணாடி வழியே பசும்புல் தரையும் செந்நிற மலர்களும் தெரிகின்றன. தோகை மயில் ஒன்று நீலக்கழுத்தை நிமிர்த்தி கம்பீரமாகக் கடந்து செல்கிறது.

நிசப்தத்தில் கனத்திருக்கும் அறையின் கதவைத் திறந்துகொண்டு அதிகாரி ஒருவர் வந்து அழைக்கிறார்... நீண்ட தாழ்வாரத்தை கடந்து, மற்றோர் அறைக்குள் நம்மை அனுமதித்துவிட்டு வெளியேறுகிறார்.

‘இங்கு யாரையும் காணோமே...?’ என்று நாம் யோசனையுடன் தேட, அந்த பிரும்மாண்ட அறையின் மறுகோடியிலிருந்து மிக மெல்லிய தமிழ்க் குரல் கேட்கிறது - சில இணைய தளங்களில் தேடச் சொல்லி யாரிடமோ தொலைபேசியில் கூறிக் கொண்டிருக்கும் குரல். அத் திசை நோக்கிச் சென்றால்...

மிகப்பெரிய மேஜையின் பின் மிகச் சிறிய உருவமாக அமர்ந்திருக்கிறார். பாரத குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

ஏதோ நீண்ட நாட்கள் நம்முடன் பழகியதைப் போல் உரையாடலை அவரே தொடங்குகிறார்... “பேட்டிக்கு நேரமில்லையே...” என்று இழுத்துவிட்டு, மறுக்க மனமின்றி, சில கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.

“விஞ்ஞான ஆராய்ச்சியின் பயன்கள் கடைநிலை இந்தியனையும் சென்றடைய வேண்டும்” என்று முந்தைய நாள்தான் பேசியிருக்கிறார் - ஒரு கூட்டத்தில். “அப்படியானால் சந்திராயணம் எதற்கு?” என்று கேட்கிறோம்.

“அது அவசியம்... சந்திர மண்டலம் ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல; அங்கே நமக்கும் உரிமை இருக்கிறது என்பதை நாம் நிலைநாட்ட வேண்டும் இல்லையா? பௌர்ணமி நிலவைப் பார்த்து சந்தோஷப் படுகிறோம். அங்கே இருக்கிற விஷயங்கள் அதிகம் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். விண்வெளி ஆராய்ச்சிக்குத் தேவையான ராக்கெட் எரிபொருளுக்கு அங்கே டைட்டானியம், டங்ஸ்டன், ஹீலியம் போன்றவை கிடைக்கும்... இவை முக்கியமாக அணு ஆராய்ச்சிக்குத் தேவை... அண்டார்டிகாவில் கூடத்தான் நமது இந்திய ஆராய்ச்சிக் கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது... அது எதற்காக என்று கேட்க முடியுமா...? இவையெல்லாம் நம் நாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்துக்கு, மக்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான நடவடிக்கைகள். எந்த ஆராய்ச்சியின் வித்துக்களும் பலன் தருவதற்கு 20 - 30 வருஷங்கள் ஆகும். தொடர்ந்து பல திசைகளிலும் ஆராய்ச்சி நடத்தப்படத்தான் வேண்டும்.

அணு ஆராய்ச்சியின் அபாயங்கள் குறித்த நமது சந்தேகங்கள் அவசியமற்றவை என உறுதியாக நம்புகிறார் குடியரசுத் தலைவர். “செர்னோபைல் போன்ற விபத்துக்களெல்லாம் அந்தக்காலம்! நியூக்ளியர் எனர்ஜி இஸ் வெரி க்ளீன் எனர்ஜி. அதன் உற்பத்தியின்போது மாசுகள் வெளிப்படுவ தில்லை” என்று சுட்டிக் காட்டுகிறார்.

குடியரசுத் தலைவருக்குள் இருக்கும் விஞ்ஞானி பேசுவதை உணர்ந்து, அது குறித்தே அவர்ரிடம் கேட்கிறோம் : “விஞ்ஞானி கலாமுக்கும் குடியரசுத் தலைவர் கலாமுக்கும் என்ன வித்தியாசம்?”

“எல்லா பொறுப்புகளிலும் இருந்தவர் இருப்பவர் ஒரே கலாம்தான்” என்று பொறுமையாகப் பதில் சொல்கிறார். நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கான தீர்க்கதரிசன ஆவணம் ஒன்றை விஞ்ஞானத் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியபோது உருவாக்கியதையும் அந்த ஆவணமே கல்வியாளர் கலாமையும் குடியரசுத் தலைவர் கலாமையும் வழிநடத்துவதையும் விளக்குகிறார். “அதுதான் என்னுடைய எல்லா பொறுப்பு களையும் இணைத்துக் கோக்கும் நூல் சரடு!” என்கிறார்.

“பெரிய கனவுதான் இந்தியா 2020... ஆனால், இந்தியா உலக ஊழல் பட்டியலில் ‘உயர்’ இடம் பிடித்திருப்பது நம் நம்பிக்கையைப் பலவீனப்படுத்துகிறதே” என்றால்...

“நான் நம்புகிறேன்!” என்று அடித்துச் சொல்கிறார். இந்த நாட்டில் ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என்று வளர்ச்சியில் குறுக்கிடும் கோளாறுகளைச் சரிசெய்யும் ஆன்ம பலம் நம் குழந்தைகளிடமும் தாய்மார்களிடமும் இருக்கிறது என்பது கலாமின் உறுதியான நம்பிக்கை. மாணவர்களிடம் உரையாடி அவர்களது உள்ளங்களை அறிந்து பேசுவதாகக் கூறுகிறார்.

“கூட்டுக் குடும்பம் என்ற அமைப்புக்குப் பழகிய சமுதாயம் இது. நல்லது கெட்டதை எடுத்துச் சொல்ல பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களது அறிவுரையை ஏற்று நடக்கும் பக்குவமும் கட்டுப்பாடும் இந்த நாட்டுக்கு இயற்கையாகவே உண்டு.

ஆதி சுஞ்சுனகிரி என்ற ஊரில் ஆயிரக் கணக்கான பள்ளி மாணவர்கள் கூட்டம். பவானி என்ற சிறுமி எழுந்து என்னிடம் இதே கேள்வியைத்தான் கேட்டாள்... ‘ஊழலை ஒழிக்க முடியுமா?’ என்று.”

‘உங்கள் பெற்றோர் அந்தத் தப்பைச் செய்தால் நீங்கள் எதிர்ப்பீர்களா?’ என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் கலாம். முதலில் தயக்கத்துடன் உயர்ந்த கைககள், பிறகு கிடுகிடுவென்று உயர்ந்திருக்கின்றன. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் சுமார் பத்தாயிரம் பெற்றோரும் அந்தக் கூட்டத்திலேயே லஞ்ச மறுப்பு வாக்குறுதி தந்து −லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்றிருக்கின்றனர்.

மக்களின் மனங்களைத் தொட்டசைக்கும் இந்த ஆளுமைதான் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மிகப்பரிய பல மாகக் கை கொடுத்திருக்கிறது. எளிய குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறியவா¢ன் வாழ்க்கையோடு சராசரி இந்தியனால் எளிதில் ஒன்றிட முடிந்திருக்கிறது. அவரது வாழ்க்கைப் போராட்டங்களும் முயற்சிகளும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருந்திருக்கிறது.

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி என்பது அதிகாரங்கள் அற்ற அலங்காரப் பதவிதான். ஆனால், அப்துல் கலாம் மக்களிடம் நெருங்கி வந்ததன் மூலமாக, அந்தப் பதவிக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கூட்டியிருக்கிறார்.

இலவசங்களையும் ஒதுக்கீடுகளையும் வைத்துக் கொண்டு வித்தை காட்டி கட்சித் தலைவர்கள் அர சியல் பண்ணும் சூழலில், மக்கள் மனங்களில் கனவுகளை விதைத்து உத்வேகத்தை ஊட்டிய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

தோற்றத்திலும் பேச்சிலும் எளிமை மேலிட இருப்பவரைப் பார்த்துக் கேட்கிறோம்: “இக்கட்டான சூழலில் உங்களுக்குக் கைக் கொடுத்த குரான் வாசகம் ஒன்று...?”

“குறள் வாசகத்தை முதலில் சொல்கிறேன்:

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து’.

உயர்ந்த செயல்களையே செய்ய நினைத்து, அது முடி யாமல் போனால்கூட, நமது எண்ணத்தின் உயர்வே வெற்றிதான்.

இதே கருத்துபட குரான் வாசகம் ஒன்றும் இருக்கிறது. அல் ·பாத்தியா வில் : உன் எண்ணங்கள் இறைவனைச் சார்ந்தும், செயல்கள் இறைவனுக்கு
உகந்தவையாக வும் இருக்கிறபோது பயமே வேண்டியதில்லை!”

ஒதுக்கிய நேரம் கடந்துவிட்டதால் மன் னிப்புக் கேட்டு அவசரமாக விடைபெறு கிறோம். “எப்படி வந்தீர்கள்? திரும்பிப் போக வண்டி இருக்கிறதா?” என்று
கனிவுடன் விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்கிறார் குடியரசுத் தலைவர்!

-சீதா ரவி

"மெகா டிவி" - புதிய தமிழ் டிவி

காங்கிரஸ் எம்.பி. தங்கபாலு "மெகா டிவி" என்ற பெயரில் டிவி சேனல் துவக்குகிறார். ராஜீவ்காந்தி பிறந்தநாளான ஆகஸ்ட் 20ந் தேதி இந்த சேனல் துவக்கப்படும். பொழுது போக்குடன், பயனுள்ள கருத்துக்களை வழங்கும் இந்த சேனல் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கும் தேச நலனில் அக்கறை உள்ள நிகழ்ச்சி களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று தங்கபாலு எம்.பி. தெரிவித்தார்.

மெகா டிவியின் நிர்வாக இயக்குனராக தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலு பதவி வகிக்கிறார். இவர் ஏற்கனவே தங்கவேலு என்ஜினியரிங் கல்லூரி, டி.ஜே. தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட், தங்கவேலு கலைக் கல்லூரிகளை திறம்பட நிர்வகித்து தமிழ்நாட்டில் தலைசிறந்த 10 என்ஜினியரிங் கல்லூரிகளில் ஒன்றாக திகழச் செய்து உள்ளார்.

மெகா டிவி டைரக்டராக தங்கபாலுவின் மகன் கே.டி.கார்த்திக் செயல்படுகிறார். விஜய் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பில் 5 ஆண்டு பொறுப்பு வகித்த சுதாகர் துணைத்தலைவர் பதவி வகித்து வருகிறார்.

இன்று காலை ரெசிடன்சி டவர் ஓட்டலில் மெகா டிவி அறிமுக விழா நடைபெற்றது. இந்த டிவியின் நிர்வாக இயக்குனர் ஜெயந்தி தங்கபாலு, டைரக்டர் கே.டி.கார்த்திக் பேசுகையில் கூறியதாவது:

24 மணி நேர இலவச ஒளிபரப்பாக மக்களின் கண்ணையும் கருத்தையும் கவர வரும் மெகா டிவி தமிழ் சமுதாயத்தை தன்னிகரற்றதாக உயர்த்தும் தனிப்பெரும் லட்சியத்தை ஏற்றுள்ளது. தேசநலனை முன்னிறுத்தும் சமுதாய அக்கறை உள்ள நிகழ்ச்சிகள் மெகா டிவியின் சிறப்பம்சமாகும்.

தமிழ் மக்களின் சமூக, பொருளதாதார முன்னேற்றத்துக்கு ஏதுவான நிகழ்ச்சிகளை தாங்கி வரவுள்ள மெகா டிவியில் தமிழ் பண்பாட்டையும், தமிழர் கலாச்சாரத்தையும் பேணிக் காக்கும் அரிய நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. திரைப்படம் சார்ந்த அல்லது சாராத பொழுது போக்கு நிகழ்ச்சிகள் எதுவானாலும் அவற்றில் பாரதத் திருநாட்டின் பாரம் பரியத்தை காக்கும் வகையில் நிகழ்ச்சிகளை வடிவமைத்திருக்கிறோம்.

மேலை நாட்டு மோகத்தைத் தவிர்த்து, இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமான வழியில் திருப்பவும் மகளிர் உரிமையை நிலைநாட்டவும் மெகா டிவி நிகழ்ச்சிகளை வழங்க உள்ளது. வாழ்க்கைக்கு அத்தியா வசியமான தகவல்களை பொழுது போக்குடன் சேர்த்து வழங்க உள்ள மெகா டிவி, பரதம்பண்பாடுபாரம்பரியம் என்ற அடித்தளத்தில் தமிழ்தமிழர்தமிழகத்தின் வளம் சேர்க்க அயராது பாடுபடும்.

நடுநிலையான சமுதாய அக்கறை உள்ள செய்திகள் மெகா டிவியின் உயிர்நாடி ஆகும். தேசியப் பார்வை உடன் மக்களுக்கு விழிப் புணர்வூட்டும் அம்சங்கள் மெகா செய்திகளை அலங்கரிக்கும். பொதுமக்களுக்கு மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை உரக்கச் சொல்லி உணர்த்தவும், அவற்றின் பயன்களை உய்விக்க செய்யும் சீரிய பணியையும் சீர்மேற்கொள்ள இருக்கிறது மெகா செய்திகள்.

துல்லியமாக படம் எடுக்கும் கேமிராக்கள் அதிநவீன படத்தொகுப்பு சாதனங்கள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட அரங்குகள், என சிறந்த தொழில்நுட்பம் எங்கள் கூடுதல் பலமாகும். உலகின் எந்த பகுதியில் நிகழும் செய்திகளையும் உடனுக்குடன் பெற, மக்களுக்குத் தர எங்கள் தொழில்நுட்பத் திறன் உதவி புரியும். முக்கிய நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தகுந்த வசதிகள் மெகா டிவியின் சிறப்பம்சம்.

மொத்தத்தில் பயனுள்ள செய்திகள் மற்றும் தலைசிறந்த பொழுதுபோக்கு அம்சங் களுடன் உலகெங்கிலும் வாழும் தமிழர் இல்லங்களுக்கும், உள்ளங்களுக்கும் மகிழ்ச்சியை வழங்க வருகிறது மெகா டிவி.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ராஜீவ் கொலை - ஓய்வு பெற்ற RAW உளவாளி திடுக் தகவல்!


ராஜீவ் மரணத்துக்கு உளவுத்துறை தோல்வியும் ஒரு காரணம் - ஓய்வுபெற்ற உளவாளி திடுக் தகவல்



முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு உள்நாட்டு உளவுத்துறை தோல்வியும் ஒரு காரணம் என வெளிநாட்டு உளவு விவகாரங்களை கவனித்து வரும் "ரா" அமைப்பின் முன்னாள் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உளவு விவகாரங்களை கவனிப்பதற்காக அமெரிக்காவின் சிஐஏ போல் இந்தியாவில் "ரா"(ரிசர்ச் அண்டு அனாலிசஸ் விங்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் கூடுதல் செயலாளராக பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்ற பி.ராமன், தனது அனுபவங்களை "தி கீ பாய்ஸ் ஆப் ரா" என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வருகிறார். இந்த மாத இறுதியில் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது.

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை ராமன் வெளியிட்டுள்ளார். அதில் ராஜீவ்காந்தி விஷயத்தில் உள்நாட்டு உளவுத்துறை காட்டிய அலட்சியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ராமன் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை யாழ்ப்பாண தமிழர்கள் ஐரோப்ப நாடுகளில் ஜெர்மன், பிரான்ஸ் போன்றவற்றிலும், அமெரிக்க கண்டத்தில் கனடா நாட்டிலும் அதிக அளவில் வசிக்கிறார்கள்.

இவர்கள் விடுதலைப்புலிகளின் இயக்கத்துக்கு ஆதரவாக நிதி மற்றும் ஆயுதங்கள் திரட்டுவது போன்ற காரியங்களுக்கு அதிக அளவில் உதவி செய்து வருகிறார்கள். இதனால் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் குறித்து ஓரளவுக்கு இங்கு வசிக்கும் யாழ்ப்பாண தமிழர்களுக்கு தெரியும். இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளின் உளவுத்துறையினர் யாழ்ப்பாண தமிழர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பதுண்டு.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர் ஒருவர் அடிக்கடி சென்னைக்கு வந்து போயிருப்பதாக ஜெர்மன் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

முக்கியமான இந்த தகவலை ஜெர்மன் உளவுத்துறை அதிகாரிகள் ரா அமைப்புக்கு தெரிவித்தனர். அவர்கள் உள்நாட்டு உளவுத்துறைக்கு தெரியப்படுத்தினர். ஆனால் இது தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையையும் இந்திய உளவுத்துறை மேற்கொள்ளவில்லை. இந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக் கொண்டு ஜெர்மன் அதிகாரிகளிடம் கூடுதல் தகவல் கேட்டிருந்தால், ராஜீவ் கொலையாளிகளின் திட்டத்தை முன்கூட்டியே முறியடித்திருக்க முடியும்.

இவ்வாறு தனது புத்தகத்தில் ராமன் எழுதியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது போல் உளவுத்துறைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் மேலும் பல தகவல்கள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ரா அமைப்பை விமர்சித்து முன்னாள் ராணுவ அதிகாரி எழுதியிருந்த புத்தகத்தை தடை செய்வது குறித்து பரிசீலித்து வரும் நிலையில் ராமன் புத்தகத்துக்கும் தடை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனக்கு திருமணம் நடக்கவே இல்லை - நடிகை மீரா ஜாஸ்மின் கொதிப்பு

இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ§டன் எனக்கு திருமணம் நடக்கவில்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் ஆவேசமாக கூறினார்.

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் கலைஞர் ராஜேஷ§க்கும் திருப்பதியில் திருமணம் முடிந்து இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை மீரா ஜாஸ்மின் உறுதியாக மறுத்தார். ‘கொல்கத்தா நியூஸ்Õ என்ற மலையாளப்பட படப்பிடிப்புக்காக கொல்கத்தா வந்துள்ள மீரா ஜாஸ்மினை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது போது அவர் கூறியதாவது:

சாதாரண குடும்பத்திலிருந்து நடிக்க வந்த நான் கடுமையான உழைப்பாலும், திறமையாலும் தென்னிந்திய சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். நான் எவ்வளவு வேகமாக வளர்ந்தேனோ அந்த அளவுக்கு பிரச்சினைகளையும் சந்தித்தேன்.

நான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் குடும்பம் நடத்துவதாகவும் செய்திகள் வெளிவருவது புதிதல்ல. அதைபோலத்தான் இப்போதும் செய்தி வெளிவந்திருக்கிறது. என் மீது மீடியாக்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னை நிம்மதியாகவே இருக்கவிட மாட்டேன் என்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நேபாளிÕ படப்பிடிப்பில் இருந்து திருப்பதிக்கு போனது உண்மை. சாமி கும்பிட கோவிலுக்கு போவது தப்பா? உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா? திருப்பதியில் நேர்த்திகடன் நிறைவேற்ற வேண்டியது இருந்தது. அதற்காகத்தான் சென்றேன். மாண்டலின் ராஜேஷ் ஒரு நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார் அவரது விழா ஒன்றுக்கு சென்றேன். உடனேயே அவருக்கும் எனக்கும் திருமணம் செய்து பார்த்து விட்டார்கள்.

நான் திருமணம் செய்யும்போது எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரகசிய திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். இவ்வாறு மீரா ஜாஸ்மின் கூறினார்.

திருமணம் நடந்ததா என்பது குறித்து இசை கலைஞர் மாண்டலின் ராஜேஷ் தரப்பில் விசாரித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியதாவது:
மாண்டலின் ராஜேஷின் நண்பர் ஒருவர் மீராவுக்கும் நண்பர். அவரது ஏற்பாட்டின்படி கடந்த 20-ந் தேதி சென்னையில் நடந்த ராஜேஷின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் மீரா கலந்து கொண்டார். மற்றபடி ராஜேஷ§க்கும், மீராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்றார்.
“மீரா ஜாஸ்மின் குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் அவரை பற்றிய பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. முதலில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் லோகிததாஸ§டன் நெருக்கமாக இருந்தார். அவருடன் குடும்பம் நடத்துவதாக செய்தி வெளியானது. சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களை பிரிந்து கேரள முதல்வர் கலந்து கொண்ட விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் மீரா.

அதன் பிறகு நடிகர் பிருத்விராஜுடன் நிச்சயதார்த்தம் நடந்தாக கூறப்பட்டது. எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் வேளாங்கண்ணி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. இப்போது அதேபோல மாண்டலின் ராஜேஷ§டன் திருமணம் செய்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளதுÕÕ என்கிறார் மீராவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர்.

தரவு - தமிழ்முரசு

கோயம்பேடு-மதுரவாயல்-பாடி சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை


ஆகஸ்ட் 4ம் தேதி முதல் கோயம்பேடு-மதுரவாயல்-பாடி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை



அம்பத்தூர் பாடி-கோயம்பேடு-மதுரவாயல் ஆகிய இடங்களில், அடுத்த மாதம் 4ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. அந்த வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோயம்பேடு-மதுரவாயல்-பாடி பகுதிகளில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய ஓர் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பால், தண்ணீர், மருந்து, சமைத்த உணவு, மண்ணெண்ணெய் போன்ற அத்யாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களைத் தவிர, பிற பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை செல்ல ஒரு மாத காலத்துக்கு தடை செய்யப்படுகிறது. இந்த திட்டம் பரிட்சார்த்தமான முறையில் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

அதில் பொருள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், தாம்பரம் பைபாஸ் சாலையில் வந்து தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக மதுரவாயலைக் கடந்து கோயம்பேடு சந்திப்பை நோக்கி செல்வதும், உள்வட்ட சாலை வழியாக மாதவரம் சந்திப்பை நோக்கிச் செல்வதும் தடை செய்யப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலையை கடந்து தேசிய நெடுஞ்சாலை- 4 மற்றும் உள்வட்ட சாலை வழியாக வடசென்னையை நோக்கி இதுவரை சென்ற மேற்படி கனரக வாகனங்கள் இனிமேல் தடை செய்யப்பட்ட நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை-4, பூந்தமல்லி - ஆவடி சாலை, தேசிய நெடுஞ்சாலை-205, அம்பத்தூர்-மதனகுப்பம்-மேட்டுப்பாளையம் ரோடு - தேசிய நெடுஞ்சாலை-5ன் வழியாக செல்ல வேண்டும்.

பொருள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 4ல் சென்னீர்குப்பம் மேம்பாலத்தை கடந்து, கோயம்பேடு சந்திப்பை நோக்கி செல்வது தடை செய்யப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை - 4ல் சென்னீர்குப்பம் மேம்பாலத்தை கடந்து கோயம்பேடு சந்திப்பு வழியாகவும், உள்வட்ட சாலை வழியாகவும் வடசென்னைக்கு இதுவரை சென்ற கனரக வாகனங்கள், இனிமேல் தடை செய்யப்பட்ட நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை-4, பூந்தல்லி, ஆவடி சாலை, தேசிய நெடுஞ்சாலை 205, அம்பத்தூர், மதனகுப்பம், மேட்டுப்பாளையம் ரோடு, தேசிய நெடுஞ்சாலை- 5ன் வழியாக செல்ல வேண்டும்.

திருவள்ளூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை- 205ன் வழியாக வந்து பாடி சந்திப்பு மற்றும் உள்வட்ட சாலை வழியாக வடசென்னைக்கு சென்ற வாகனங்கள், இனிமேல் தடை செய்யப்பட்ட நேரத்தில் அம்பத்தூர்-மதனகுப்பம், மேட்டுப்பாளையம் ரோடு, புழல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை- 5ன் வழியாக செல்லலாம்.

வடசென்னையில் இருந்து மாதவரம் மேம்பாலத்தை கடந்து உள்வட்ட சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை- 4ன் வழியாக திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், தாம்பரம் நோக்கிச் சென்ற வாகனங்கள் இனிமேல் தேசிய நெடுஞ்சாலை - 5, புழல், அம்பத்தூர், மதனகுப்பம், மேட்டுப்பாளையம் ரோடு, தேசிய நெடுஞ்சாலை- 205, பூந்தமல்லி, ஆவடி ரோடு, தேசிய நெடுஞ்சாலை - 4 , தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக செல்லலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடை பெறுகிறார் 'மக்கள்' ஜனாதிபதி.....

ஜனாதிபதி மாளிகையில் தங்கி சாப்பிட்டதற்கு பணம் கட்டிய பண்பாளர் அப்துல்கலாம்.




ஜனாதிபதி மாளிகையில் தனது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் தங்கி சாப்பிட்டதற்கு கூட பணம் செலுத்திய பண்பினை பெற்றவர் அப்துல் கலாம் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிறப்பு அலுவல் அதிகாரியாக இருந்த சுதீந்திர குல்கர்னி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் செயலாளராக இருக்கும் சுதீந்திரி குல்கர்ன், அப்துல் கலாமின் குணநலன்கள் குறித்து வியந்து எழுதியுள்ள ஒரு கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:

அரசியலின் தரம் குறைந்து கொண்டு வந்த இந்திய வானில், இக்கால இளமையான இந்தியர்களுக்கு அரசியலின் மீது ஒரு புது நம்பிக்கையை அவர் ஏற்படுத்தி வந்தார். அப்துல்கலாம் நாட்டின் கடைகோடியில் இருக்கும் குடிமகனுக்கும் நாட்டின் வளர்ச்சியின் பயனை எட்டச் செய்யும், "வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறவேண்டும்" என்ற அவரது கொள்கையானது, சரியான கோணத்தில் சிந்திக்கும் எல்லா இந்தியர்களின் உணர்வையும் தட்டி எழுப்பக் கூடியதாக இருந்தது.

அவரது நன்நடத்தையும், அவரின் எளிமையுமே ஆகும். அவரது ஈடில்லா பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக, ""ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பது போல்'', ஒரே ஒரு சிறந்த உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம்.

கடந்த ஆண்டில் ஜனாதிபதி மாளிகைக்கு அப்துல் கலாமின் சொந்த கிராமத்தில் இருந்து 60 உறவினர்களும், நண்பர்களும் வந்தார்கள். அவர்கள் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். அவர்கள் டெல்லியை சுற்றி பார்க்க விரும்பினார்கள். ஜனாதிபதி மாளிகையில் ஏராளமான கார்கள் இருந்தாலும், டெல்லி மாநகரை அவரது உறவினர்கள் சுற்றி பார்க்க சென்றபோது ஒரு காரை கூட அவர்களுக்காக அப்துல் கலாம் அனுப்ப உத்தரவிடவில்லை. அவர்களுக்காக ஒரு பஸ்ஸை ஏற்பாடு செய்தார். அதற்கு தனது சொந்த கணக்கில் இருந்தே பணம் செலுத்தினார்.

அவர்கள் தங்கியதற்கான அறை வாடகை, உணவுக்கான செலவினையும் அவரே செலுத்திவிட்டார். அப்துல் கலாமின் தனி பங்களாவில் அவரது 90 வயது சகோதரர் ஏ.பி.கே. முத்து மரைக்காயர் அப்போது தங்கினார். அவர் தங்கியதற்காக பணம் செலுத்த அப்துல் கலாம் முன்வந்தார். அப்போது, மிகுந்த உணர்ச்சி பெருக்கால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, "ஐயா, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். இதற்கு மட்டும் எங்களால் கட்டணம் வாங்கவே முடியாது'' என்று ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

செக்ஸ் கவிஞர்கள் மு.மேத்தா கொதிப்பு

"செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தியே தற்போதைய சினிமா கவிஞர்கள் பலர் கவிதை எழுதுகின்றனர். பல கவிஞர்கள் எப்படி பாடல் எழுதக்கூடாது என்பதற்கு உதாரணமாக விளங்குகின்றனர்" என்று கவிஞர் மு.மேத்தா கூறினார்.

சி.கே.கே. அறக்கட்டளை சார்பில் ஈரோட்டில் இலக்கிய விழா நடந்தது. இதில் "துளிகள்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. கவியரங்கத்துக்கு தலைமை வகித்த கவிஞர் மு.மேத்தா பேசியதாவது:

சமீபகாலமாக செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தியே பல கவிஞர்கள் திரைப்படங்களில் பாடல்களை எழுதுகின்றனர். என்னைப் போன்ற ஒரு சில கவிஞர்கள் "ராஜராஜ சோழன் நான்; என்னை ஆளும் காதல் தேவி நீதான்" என்று சினிமாவில் செக்ஸ் விஷயத்தை மறைமுகமாக எழுதினோம்.

ஆனால் இன்றைக்கு செக்ஸ் பாடல் எழுதுவதில் கவிஞர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு கவிஞர் பத்து அடி பாய்ந்தால், மற்றொரு கவிஞர் 15 அடி பாயும் அளவுக்கு செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தி பாடல்களை எழுதுகின்றனர். முன்பிருந்த திரைப்பட கவிஞர்கள் எப்படி பாடல்களை எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தனர். ஆனால், தற்போதுள்ள பல கவிஞர்கள் எப்படி பாடல்களை எழுதக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.

இவ்வாறு மு.மேத்தா பேசினார்.

ஷெகாவத் ராஜினாமா!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததையடுத்து துனை குடியரசு தலைவர் திரு.பைரோன் சிங் ஷெகாவத் தனது பதவியினை ராஜினாமா செய்தார். முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மாளிகை சென்ற திரு.ஷெகாவத், ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்களிடம் தனது ராஜினாமா கடிதத்தினை கையளித்தார்.

மிக சுருக்கமான அக்கடிதத்தில் தான் தனது பதவியினை ராஜினாமா செய்வதாகவும், தனது பதவிகாலத்தில் தனக்கு தேவையான வழிகாட்டுதலையும், ஆதரவினையும் நல்கிய குடியரசுத்தலைவருக்கு தனது நன்றியினை தெரிவித்துக்கொளவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி மாளிகைக்கு அரசுவாகனத்தில் சென்ற ஷெகாவத் பின்னர் தனது சொந்த வாகனத்தில் இல்லம் திரும்பினார்.

முன்னதாக முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், வெற்றிபெற்ற திருமதி.பிரபாவதிபாட்டீலை தொலை பேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ஷெகாவத், தேர்தல் தோல்வியை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தான் தொடர்ந்து நலிவடைந்த மற்றும் பிற்பட்டோருக்கான அடிப்படை உரிமைகளை பெற தன்னால் இயன்றவரையில் உழைக்கப்போவதாய் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி ரசித்த பெரியார்! - கலைஞர் கவிதை

"என் வழி தனி வழி எனும்
பொன்மொழிக்குச் சொந்தக்காரர்-
பழகிவிட்ட நண்பருக்கு என்றும்
பந்த பாசம் மாறாத உறவுக்காரர்-
பல்வேறு கருத்துகள் அரசியலில்
படைதிரண்டு அலைகளாக மோதிய போதும்;
பதற்ற மடையாமல் பகுத்தறிந்து மவுனமாகப்
பண்பாடு போற்றுவதே பட உலகில் தான் கற்ற
பாடம் எனப் பகர்ந்தது மட்டுமன்றி;
பயமின்றி அதனைச் செயலிலும் காட்டியவர்-
பால வயதில் தனக்கு வழி காட்டி வாழ்வித்த
ஆலம் விழுதுகளை அரவணைத்துப் புகழ்ந்தேத்தியவர்-
பல்லாண்டு காலம் எனக்கும் நண்பர் -
சொல்லால் விளக்கமுடியாத நல்லிதயம் படைத்த தோழர்
வாய்மையொன்றே வாழ்வினில் அனைவர்க்கும் தேவைப்படும்
தூய்மை என்பதை கடைப்பிடிக்கும் மனிதநேயர்!
ரஜினி! ரஜினி! ரஜினி! ரசிகர்களுக்கு மந்திரச்சொல்! அதுவே
ரசிகர் அல்லாதோர் பலருக்கும் மயக்கும் சொல்!
அவரையே எங்கள் தந்தை பெரியார்
அடடா, எப்படி மயக்கி விட்டார் பாருங்கள்!
"படம் பார்த்தேன்; பெரியார் படம் -
படமெடுத்தாடினர் அவருக்கு எதிராகப் பல பேர்-
அவர் படமா பார்ப்பதென்ற அய்யப்பாட்டுடன்
அன்பு நண்பர் சத்யராஜூடன் அப்படத்தைப் பார்த்தேன்
அடடா; என்ன சொல்வேன்? அய்யா பெரியாராக;
அச்சில் வார்த்ததுபோல் சத்யராஜ் நடித்தது கண்டேன்;
பெரியார் பற்றிப் பலர் பேசக் கேட்டுள்ளேன் - அவர்
பகுத்தறிவு முழக்கத்தை - அதனால் வென்ற இயக்கத்தை;
வைக்கம் போன்ற வரலாற்றுச் செய்திகளை;
சாதிக் கொடுமை ஒழிக்க அவர் சண்டமாருதமாய் எழுந்ததை-
நிகழ்ச்சிகளின் தொகுப்பாய்க் கண்டேன் - என்
நெஞ்சம் விம்மிட நிறைவாய்ச் சொல்கிறேன் -
கலைஞரும் வீரமணியாரும் பெரியாருடன் பழகியது;
விலை மதிப்பில்லா காலமன்றோ?
அக்காலம் நான் வாழ்வதில் எனக்கு
அளவிலா ஆனந்தம் பெருகுதன்றோ!
கலைச் சிகர உச்சியாகக் காட்சி தரும் சூப்பர் ஸ்டார்;
எம்மோடு வாழ்வதற்கு மகிழ்கின்றார் என்றால்; அவர்
நம்மோடு பெரியாரைப் புரிந்துகொண்டு வாழும் நாள்;
நம் போன்ற பகுத்தறிவாளர்க்கெல்லாம் திருநாள் தானே!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது!

கர்நாடகாவில் மழை குறைந்தது... மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 42 ஆயிரம் கன அடியாக சரிவு



கர்நாடக மாநிலத்தில் பருவ மழை குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகாவிலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து உபரி நீர் முழுவதும் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

நீர் வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் இருந்ததால் ஒரே வாரத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் காவிரி டெல்டா பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டது. அணைக்கு நேற்று அதிகாலை விநாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று பகல் முழுவதும் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகலில் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணை முழு கொள்ளளவையும் எட்டியதை தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக இன்று குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 42 ஆயிரத்து 572 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.77 அடியாக இருந்தது.
தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டதால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் நீர்வரத்து குறைந்து விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 37 ஆயிரத்து 960 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. உபரி நீர் வெளியேற்றப்படும் 16 கண் மதகுகளின் வழியாக விநாடிக்கு 16 ஆயிரத்து 611 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 359 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம், நான்கு கதவணைகள் மூலம் 360 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து சேலம் கலெக்டர் மதிவாணன் கூறுகையில், "மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு துறையினர், பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறை என அனைத்து துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்" என்றார்.

விடை பெறுகிறார்....


மக்களின் ஜனாதிபதி என புகழப்பட்ட....ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையட்டி, ராஷ்டிரபதி பவனில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் போட்டோகிராபர்களுடன் நின்று உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் கலாம்.

புதிய குடியரசு தலைவருக்கான தேர்தலில் திருமதி.பிரபாவதி பாட்டீல் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்ட்டுள்ளது. இதன் மூலம் அவர் நாட்டின் உயர் பதவிக்கு வரும் முதல் பெண்மணி என்கிற பெருமையை பெறுகிறார்.எதிர்வரும் 24ம் தேதி நாட்டின் 13 வது குடியரசு தலைவராக அவர் பதவியேற்பார்.

மருத்துவமனையில் அஜீத்!

கடந்த ஒரு மாதமாக மலேசியாவில் நடந்து வரும் பில்லா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் அஜீத். படத்தை குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதற்காக தன்னை வருத்திக் கொண்டு நடித்து வருகிறார் அவர். இரவு பகல் பாராமல் படப்பிடிப்பு நடந்து வருவதால், சற்றும் ஓய்வு கிடைக்காமல் இருந்தார். இதற்கிடையில் மனைவி ஷாலினி கர்பமுற்றிருப்பதால் கிடைக்கிற ஓய்வுநாளில் சென்னைக்கு வந்துவிட வேண்டிய நிர்பந்தமும் இருந்தது அவருக்கு.

இதனால் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. இடைவிடாத காய்ச்சலை அடுத்து அவருக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு டைபாய்டு காய்ச்சலும், மஞ்சள் காமாலை நோயும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டிப்பாக ஒரு மாதமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார் அஜீத். அவர் மீண்டும் உடல் நலம் பெறுகிற வரை படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார் பில்லா படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

சோர்வுடன் காணப்படும் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார் மனைவி ஷாலினி. ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஜீத்தின் உடல்நலத்தை விசாரித்து வருகிறார்கள்.

'போதும் தி.மு.க.' - சிதம்பரம்

சிதம்பரத்தின் சிவகங்கை சபதம்



பெருந்தலைவர் காமராஜரின் 105வது பிறந்த நாள் விழா, கடந்த 15ஆம் தேதி நாடு முழுவதும் தடபுடலாகக் கொண்டாடப்பட்டுள்ளது. புதிதாகக் கட்சி துவங்கப்போகும் சரத்குமார், சென்னையில் முப்பெரும் விழாவாக அதை நடத்தியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் காமராஜர் விழாவினைக் கொண்டாடியுள்ளது. அக்கட்சியில் உள்ள கோஷ்டிகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அந்த விழா களைகட்டியது.

மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் புரசைவாக்கம் தாணா தெருவில் காமராஜரின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடினார்கள். மறுபுறம் மௌன்ட்ரோட்டின் அருகே உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கிருஷ்ணசாமி இவ்விழாவினை நடத்தினார்.

இந்த இரு கோஷ்டிகளுக்கும் பிடிக்காத இன்னொரு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், வட சென்னைக்குப் போய்விட்டார். அங்கே அவரது ஆதரவு மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ தலைமையில் காமராஜர் விழா கலகலப்பாக நடைபெற்றுள்ளது.

இப்படித் தங்களுக்கு பிடித்த தலைவரின் பிறந்த நாள் விழாவினை காங்கிரஸ் பிரமுகர்கள் ஆளுக்கொரு திசையில் கொண்டாடினர். இந்நிலையில் காமராஜரின் சில எண்ணங்களைப் பிரதிபலித்தும், பலவற்றைப் பிரதிபலிக்காமலும் போகும் வகையில் மத்தியில் பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ள நிதி யமைச்சர் சிதம்பரம், புதிய சிந்தனையில் இருக்கிறாராம்.

டெல்லியில் அவருக்கு அன்றாடம் பெரும் தலைவலி! தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளுக்கு அவர் செயல் வடிவம் கொடுக்க முனையும் போதெல்லாம், முன்னால் போனால் கம்யூனிஸ்ட்டுகள் இழுக்கிறார்கள். பின்னால் போனால் காங்கிரஸில் உள்ளவர்களே குறை சொல்கிறார்கள்.

இப்படி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், காங்கிரஸில் உள்ள தன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் சிதம்பரம். நிதியமைச்சகத்தில் இருப்பது அவருக்கு திரிசங்கு சொர்க்கம் போலிருக்கிறது என்றுதான் அவருடைய நெருங்கிய வட்டாரங்களே பேசுகின்றன.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்கின் வலியுறுத்தலால்தான் சிதம்பரம் டெல்லியில் நிதியமைச்சராக நீடித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் இன்றைய நிலை.

டெல்லி நிலைமை இப்படியிருக்க, தமிழகத்திலோ "போதும் தி.மு.க! இனி ஆட்சியைப் பிடிக்க நாம் தமிழக பாலிடிக்ஸில் நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கிறார் சிதம்பரம்' என்று அவருடைய முக்கிய ஆதரவாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.

"காமராஜர் ஆட்சி' என்ற லட்சியத்தை தூக்கிப் பிடித்து 1996ல் காங்கிரûஸ விட்டு மூப்பனாருடன் வெளியேறினார் சிதம்பரம். அதற்காக சில முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் அ.தி.மு.க.வுடன் மீண்டும் த.மா.கா. கூட்டணி வைக்க வேண்டி வந்தது.

அப்போது, "வேண்டாம். நான் தனிக்கட்சி காண்கிறேன்' என்று கூறிவிட்டு காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை ஆரம்பித்தார். மாவட்ட அளவில் நிர்வாகிகளைப் போட்டு, உண்மையான எண்ணிக்கையில் உறுப்பினர்களைச் சேர்த்து கட்சியை நடத்தினார்.

ஆனாலும் அவர் நினைத்தது போல் "காமராஜ் ஆட்சியை'க் கொண்டு வரும் வலிமை, அந்த இயக்கத்துக்கு இல்லாமல் போனது.அதற்குக் காரணம் 1996, 2001 ஆகிய இரு தேர்தல்களிலுமே "அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க.' என்றும், "தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க.' என்றும் மாறாத சிந்தனை மக்கள் மனதில் குடி இருந்ததுதான்.

இந்த நிலையில் 2006 சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில்தான் புதிய சக்தியாக வந்தது தே.மு.தி.க. இந்தக் கட்சி, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கும் மாற்றாக வரும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்து, அதில் ஓரளவு வெற்றியும் கண்டது.

விஜயகாந்த் வைத்த கோஷம் ஒன்றும் புதிதல்ல. "இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை' என்று காமராஜர் சொன்ன கருத்துதான். "அதை நாம் சொன்னபோது ஏற்றுக் கொள்ள மறுத்த மக்கள், இன்று அந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காத விஜயகாந்த் சொல்லும்போது ஏற்றுக் கொண்டுள்ளார்களே...' என்ற எண்ணம் சிவகங்கைக்காரரின் மனதில் குடியேறியிருக்கிறது. இது,

அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய சிந்தனையை புது மாதிரியாக அவர் மனதில் கிளறி விட்டுள்ளது. "இனி தி.மு.க.வை ஆதரித்துப் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று முடிவே செய்துவிட்டாராம் சிதம்பரம்.

சமீபத்தில் மதுரை மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. சிதம்பரம் வெற்றி பெற்ற சிவகங்கை தொகுதிக்கு அருகில் உள்ளது இந்த இடைத்தேர்தல் தொகுதி. ஆனால் அங்கு தேர்தல் பிரசாரத்திற்குப் போகவில்லை சிதம்பரம்.

ஏனென்றால், அங்கு போனால் தி.மு.க. அரசின் சாதனைகளைப் பாராட்டி வாக்கு கேட்க நேரிடும். இதனாலேயே அவர் தேர்தல் பிரசாரத்தைத் தவிர்த்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கையில் போட்டி வேட்பாளராக நின்று வெற்றி பெற்று நகர சபைத் தலைவரானார் முருகன். இவர் குண்டு வைத்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் சிதம்பரம், "குற்றவாளிகள் உடனடியாக பிடிக்கப்பட வேண்டும்' என்று அறிக்கையே விட்டார்.

மத்திய நிதி அமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர், மாநிலத்தில் தனிப்பட்ட விரோதத்தில் நடைபெற்ற ஒரு கொலைக்குக் கண்டனம் தெரிவித்தது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற முதல் சம்பவம். இந்த ஆட்சியை எதிர்த்து விட்ட முதல் அறிக்கை இது என்றும் கூட சொல்லலாம்.

"நான் தி.மு.க.வின் ஆதரவாளன் அல்ல' என்பதை மெல்ல மெல்ல அழுத்தமாகக் காட்டிக் கொண்டு வரும் அமைச்சர் சிதம்பரம், இன்னொரு புறத்தில் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் (காங்கிரஸ் ப்ளஸ் பழைய த.மா.கா) தன் பக்கம் அணி திரள வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். அதன் ஓர் அங்கம்தான் கார்த்தி சிதம்பரம் நடத்தும் ரகசியக் கூட்டங்கள்!

கார்த்தி சிதம்பரம் தலைமையில் ப.சிதம்பரத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அடிக்கடி பேசுகிறார்கள். சுப்புராம், ராமசாமி, சுந்தரம் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் கார்த்தி நடத்தும் பிரத்யேகக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்கிறார்கள். இதுவரை வெளிப்படையாக ஒரு கூட்டமும், ரகசியமாக பத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களும் போட்டு காங்கிரஸ் கட்சிக்குள் "பலம் மிக்க' தங்கள் அணியை உருவாக்குவது பற்றி ஆலோசனை செய்து வருகிறது இந்தப் படை.

வருகின்ற 19ஆம் தேதி கார்த்தி தலைமையில் இன்னொரு கூட்டத்தை காமராஜர் வீட்டின் முன்பு இருக்கும் ஒரு ஹோட்டலில் போடுகிறார்கள். அதில் அநேகமாக ஃபைனல் ஆக்ஷன் ப்ளான்கள் பளிச்சிடும் என்றே தகவல். தங்கள் அணியை பலமுள்ளதாக்க காங்கிரஸில் வெயிட்டாக உள்ள வாசன் அணியை உடைப்பது கார்த்தி சிதம்பரத்தின் திட்டமாக இருக்கலாம் என்று பேசிக் கொள்கின்றனர். இதற்கு பட்டுக்கோட்டை ராஜேந்திரன் போன்ற பழைய மூப்பனார் ஆதரவாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் வாசன் பக்கம் இருந்தாலும், அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலரும் பொறுப்பு ஏதும் கிடைக்காமல் சுணங்கிப் போயிருக்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களுக்காக வாசன் அறங்காவலர் பதவியோ, வேறு வாரிய உறுப்பினர்கள் பதவியோ தி.மு.க.விடம் சிபாரிசு செய்து பெற்றுத் தருவதில்லை என்ற கோபமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இப்படி வாசன் மீது அதிருப்தியில் இருப்போருக்கு வலை வீசுகிறார்கள் கார்த்தி அணியினர். மாவட்டத்திற்கு குறைந்தது 30 பேரையாவது பிடித்துவிட வேண்டும் என்று தன் ஆதரவாளர்களுக்கு "ஸ்பெஷல் அûஸன்மென்ட்' கொடுத்துள்ளாராம் கார்த்தி. இவர் நடத்தும் வெளிப்படையான மற்றும் ரகசியக் கூட்டங்கள் அனைத்திற்குமே அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவு இருப்பதாகவே பேசுகிறார்கள்.

காங்கிரஸுக்குள் தங்கள் அணியைப் பலப்படுத்துதல் பற்றி சிதம்பரத்திடம் டிஸ்கஸ் பண்ணியபோது, ""என் அந்தஸ்துக்கு இங்கே கோஷ்டி அரசியல் பண்ண முடியாது. ஆனால் தமிழக காங்கிரஸ் போகும் பாதை சரியில்லை. நம் கட்சியை இன்னொரு கட்சி விழுங்க அனுமதிப்பது சரியல்ல. அதனால் எல்லாவற்றையும் செய்து காங்கிரஸ் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். மற்றவற்றை நான் மேடத்திடம் (சோனியா காந்தி) பேசிக் கொள்கிறேன். அவர் ஓ.கே. சொன்ன பிறகுதான் என்னால் இங்கு முழு வீச்சில் களமிறங்க முடியும்'' என்று பூடகமாகக் கூறியுள்ளாராம்.

""இரு கழகங்களும் ஒன்றே' என்ற கோஷத்தை முன் வைத்து மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க முயற்சி எடுப்போம்'' என்று "சிவகங்கை சபதம்' போட்டிருக்கும் சிதம்பரம், ஒருபுறம் வங்கிகள் மூலம் நலத் திட்ட உதவிகளை மாதத்திற்கு இரு முறையாவது தொகுதியில் செய்கிறார். மக்களுக்கான மருத்துவத் திட்டங்களையும் நிறைவேற்றுகிறார். இன்னொரு புறம் காங்கிரஸிற்குள் தங்கள் அணி பயில்வானாக இருக்க, முழு வீச்சில் தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை களமிறக்கியுள்ளார். ஆக, தமிழக பாலிடிக்ஸýக்கு சிதம்பரம் மீண்டும் சுறுசுறுப்பாகத் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

ராம்ஸ்

மேட்டூர் அணை இன்று திறப்பு....

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இன்று மாலை 6 மணிக்கு அணையை பாசனத்துக்காக திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.. கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து காரணமாக கடந்த 29ம் தேதி 72 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்தது.

நேற்று காலை கபினி அணையில் இருந்து வினாடிக்கு 46 ஆயிரத்து 117 கனஅடி நீர், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து வினாடிக்கு 28 ஆயிரத்து 779 கனஅடி நீர் சேர்த்து மொத்தம் 74 ஆயிரத்து 896 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. இந்த நீர் இன்று மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 54 ஆயிரத்து 48 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 104.750 அடியாகவும், நீர் இருப்பு 71.135 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்தது. அணை நிரம்புவதற்கு இன்னமும் 22 டி.எம்.சி., நீர் தேவை. தற்போது அணையின் நீர் இருப்பு நாள் ஒன்றுக்கு 4.5 டி.எம்.சி., வீதம் உயர்கிறது. வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர்வரத்து கிடைக்கும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ஆறு டி.எம்.சி., வீதம் நீர் இருப்பு உயரும். இதனால், வரும் நான்கு நாட்களில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி விடும்.

அணை திறக்கும் முன்பே உபரி நீர் திறந்தால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிருப்தியடைவர். எனவே, உபரி நீர் திறப்பதற்கு முன்பே மேட்டூர் அணையை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். தற்போது மேட்டூர் அணை வேகமாக நிரம்புவதால் ஜூலை 25ம் தேதிக்கு முன்பாகவே மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

.இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்வரத்தை முதல்வர் கருணாநிதி நேற்று மீண்டும் ஆய்வு செய்தார். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஓரிரு நாட்களில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல்வரிடம் கூறினர். இதையடுத்து, இன்று (18ம் தேதி) மாலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டார்.

கன்னடர்- தமிழர் ஒற்றுமை - தேவகவுடா பேச்சு

மொழியில் வேறுபாட்டாலும், கலாசாரத்தால் ஒன்றுப்பட்டுள்ளோம் கன்னடர்-தமிழர் சகோதர மனப்பான்மையுடன் வாழ வேண்டும், தமிழ்ச்சங்க முப்பெரும் விழாவில் தேவேகவுடா பேச்சு



பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் கர்நாடக பொன்விழா, சிவகுமார சாமிகளின் நூற்றாண்டு விழா, காமராஜர் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமாரசாமிக்கு பதிலாக இளைய மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் தேவேகவுடாவுக்கும், சித்தலிங்க சுவாமிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு கொடுக்கப்பட்டது.விழாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசியதாவது:-

பெங்களூர் தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொண்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். பெஙகளூரை ஒரு மினி இந்தியா என்று அழைத்தால் தவறாகாது. காரணம், பெங்களூரில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட நாட்டில் உள்ள அனைத்தும் மொழியினரும் உள்ளனர். அதேபோல அனைத்து மதத்தினரும் வாழ்கின்றனர்.

இவ்வாறு மொழி, மதத்தில் வேறுபட்ட மக்கள் பல்வேறு கலாசாரத்துடன் அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறார்கள். மினி இந்தியா என்றழைக்கப்படும் பெங்களூர் நகரின் கவுரவத்திற்கு பாதிப்பு வராமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

கர்நாடகத்தில் தமிழர்கள் எவ்வளவு பேர் வாழ்கிறார்களோ, அதே அளவு தமிழகத்தில் கன்னடர்கள் வாழ்கிறார்கள். கன்னடம், தமிழர்கள் தாங்கள் பேசும் மொழியில் வேறுபட்டு இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை-கலாசாரத்தில் ஒற்றுமை உள்ளது. இதனால் கன்னடர்-தமிழர்கள் ஒற்றுமையாக அமைதியான முறையில் வாழ வேண்டும். சகோதர மனப்பான்மையுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். 2 மொழியினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை தூண்டும் விதத்தில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் பிரிவினைக்கு வித்திடக்கூடாது.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்கள் ஞானோதயம் தரும் விதத்தில் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மாநில மொழிகள் தான் பெரிதாக கருதப்படும். இதர மொழிகளுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்படும்.

ஆதிசங்கரர், ராமகிருஷ்ணபரம்பஹம்சர், விவேகானந்தர் போன்றோர் மனித குலத்திற்கே வழிகாட்டியாக திகழ்ந்தனர்.

இவ்வாறு முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசினார்.

சனி பெயர்ச்சி பலன்...

உலக வலைப்பதிவுகளில் முதல்முறையாக சனிபெயர்ச்சி பலன்கள்.....


சனிபகவான் சிம்மராசிக்கு ஆகஸ்ட் 5ல் பெயர்ச்சியாகிறார். இதையொட்டி கடும் மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். மழைக்கு அடிப்படை காரணமானவர் சூரியன். சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்திற்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். சனிக்கு சிம்மராசி பகைவீடு. இதனால் இனி வரும் இரண்டரை ஆண்டுகளுக்கு கடும் வெள்ளப்பெருக்கு அல்லது பிற இயற்கை சீற்றங்கள் மூலம் ஆபத்து ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.


ஆனால், இதற்கு பரிகாரமும் இருக்கிறது. கோயில்களில் கூட்டு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படுவதன் மூலம் கெடுபலன்களின் தாக்கம் குறையும். சனிப்பெயர்ச்சி பலன்கள் குறித்து திருநள்ளாறு ராஜா சுவாமிநாத குருக்கள் கூறியதாவது. ரிஷப ராசியினர் அர்தாஷ்டம சனியை சந்திப்பதால், பதவி மாற்றம், அடமானம், மனச்சோர்வு, வியாபாரத்தில் மந்தம், குழப்பம், கருத்து வேறுபாடு, அதிக அலைச்சல் ஆகியவற்றைச் சந்திப்பர். கடகராசியினர் ஏழரையின் கடைசி கட்டத்தைச்சந்திப்பதால், பணிமாற்றம், இடமாற்றம், மனக்கஷ்டம், வம்பு, ஆரோக்கியக் குறைவு ஆகியவற்றைச் சந்தித்தாலும், பதவி உயர்வும், நண்பர்களின் உதவியும் கை துõக்கி விடும். சிம்மராசியினர் சற்று கூடுதல் சிரமங்களைச் சந்திப்பர். மனக்கஷ்டம், குடும்பத்தில் கருத்து வேறுபாடு, வழக்கு தாமதம் ஆகியவற்றைச் சந்திப்பர். இவர்கள் பணியிலும், குடும்ப விஷயங்களிலும் முன் யோசனையுடன் நடந்தால் சிரமங்களைக் குறைத்து விடலாம்.

கன்னிராசிக்கு ஏழரை துவங்குவதால், பணப்பற்றாக்குறை, வியாபார தேக்கம், உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்றாலும், வீண் பணச்செலவை சுப விரயமாக மாற்றிவிட்டால், கஷ்டத்திலும் சந்தோஷப்பட்டுக்

கொள்ளலாம். விருச்சிகராசியினருக்கு நன்மையும், சிரமமும் கலந்த மத்திம பலன்கள் நடக்கும். இவர்கள் உடல்நலத்தில் கவனம்செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை பிரமுகர்களின் உதவியோடு

சமாளிக்க வாய்ப்பு கிடைக்கும். கும்ப ராசியினர் கண்டகச்சனியை சந்திப்பதால், உடல் நலக்குறைவு, கடன் வாங்குதல், நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, நாணயம் தவற வேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.

மற்ற ராசியினருக்கு சுபபலன்கள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அன்றாட செலவுக்குக் கூட திண்டாடும் ஜெயலலிதா?

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை நிதியமைச்சர் ப. சிதம்பரம் பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாக ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது. அவருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

கூட்டணித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் தலைவர்கள் பேசினர். அப்போது, சமாஜவாதி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் இதை அறிவித்தார்.

நிதியமைச்சர் சிதம்பரம், ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ் உள்பட தமது அணியின் தலைவர்களை குறிவைத்து தேவையற்ற தொல்லைகளைத் தருவதாக அமர்சிங் குற்றம் சாட்டினார்.

கூட்டணித் தலைவர்களுக்கு எதிராக சர்வாதிகார போக்கை சிதம்பரம் கடைபிடிப்பதாக அமர்சிங் புகார் கூறினார். ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கைக்கூட முடக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அவருக்கு அன்றாடச் செலவுக்குக்கூட பணம் இல்லாத அளவுக்கு, நெருக்குதலான நிலைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் புகார் கூறினார்.

"தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸýக்கு எதிராக நாடாளுமன்றத்தில் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியது காங்கிரஸ். எங்கள் அணியும் சிதம்பரத்துக்கு எதிராக அதே போன்ற போராட்டத்தை நடத்தும்' என்றார் அமர்சிங்.

ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாகக் கூடி இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

"மத்திய புலனாய்வுத்துறையைக் கண்டு கூட்டணித் தலைவர்கள் பயப்படுகிறார்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "கூட்டணித் தலைவர்கள் எல்லோருமே சிபிஐ ரிட்டன்' (சிபிஐ நடவடிக்கையை எதிர்கொண்டவர்கள்). யாருக்கும் பயப்பட மாட்டார்கள்' என்று பதிலளித்தார் அமர்சிங்.

தீர்மானம்: இதனிடையே, சமீபத்தில் அசாமில் எப்.சி.ஐ அதிகாரி பி.சி. ராம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அசாம் மாநிலத்துக்கும் பிற வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமருக்கு தயாநிதிமாறன் கடிதம்...!

பி.எஸ்.என்.எல். நிறுவன டெண்டர் தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றி உடனடி விசாரணை நடத்தி, உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மறைந்த எனது தந்தை முரசொலி மாறன் மற்றும் எனது மதிப்புக்குரிய தலைவரும் வழிகாட்டியுமான கலைஞர் கருணாநிதி ஆகியோர் காட்டிய வழியில் பொதுவாழ்வில் நான் எப்போதும் உயரிய கண்ணியத்தை கடைப்பிடித்து வருகிறேன். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஜி.எஸ்.எம். 2ஜி மற்றும் 3ஜி டெண்டர் பற்றி விரும்பத்தகாத சர்ச்சைகள் எழுந்துள்ளது துரதிருஷ்டவசமானது. இதனால் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய நேர்ந்தது.

எனக்கு எதிராக ஊடகங்கள் மூலம் திட்டமிட்ட விஷமப் பிரசாரத்தில் சிலர் உள்நோக்கத்துடன் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் என்ற முறையில், பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்களின் டெண்டர் நடைமுறைகளில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை. இப்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இந்த டெண்டரை பி.எஸ்.என்.எல். போர்டுதான் இறுதி செய்தது.

இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான கொள்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நோக்கியே எனது முழு கவனமும் இருந்தது. நாட்டின் எந்த மூலையில் இருந்தும் ஒரு ரூபாயில் மக்கள் பேச வகை செய்த "ஒரே இந்தியா" திட்டம், தேசிய மற்றும் தொலைதூர தொலைபேசி சேவையில் புதிய நிறுவனங்கள் ஈடுபட இருந்த தடைகளை நீக்கியதன் மூலம் தொலைதூர தொலைபேசி சேவைக்கான கட்டணங்களைக் குறைக்க வகை செய்தது, மாதத்துக்கு ரூ.250 என்ற மிகக் குறைந்த மாதாந்திர கட்டணத்தில் 2 எம்.பி. திறன்கொண்ட பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை ஆகியவை, நான் அமைச்சராக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சில.

இந்திய தொலைத்தொடர்புத் துறைக்கு வழிகாட்டும் வகையில், 2007ம் ஆண்டுக்குள் 25 கோடி தொலைபேசி இணைப்புகளை வழங்கவும் 2010ம் ஆண்டுக்குள் 50 கோடி இணைப்புகளை வழங்கவும் இலக்கு நிர்ணயித்து, அதற்கான நடவடிக்கைகளில் நான் கவனம் செலுத்தினேன். அதேநேரம், மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி மையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்ததன் மூலம், இத்துறையில் இறக்குமதியைத் தவிர்க்க முயற்சிகளை எடுத்தேன். இந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முன்னோடியாக செயல்பட்டு வந்தது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, "நவரத்னா" அந்தஸ்தைப் பெறவிருக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி, அதன் மூலம் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், பி.எஸ்.என்.எல். டெண்டரை தடுத்து நிறுத்தி, அதன் மூலம் ஆதாயம் பெற என்.ஆர்.ஐ. (வெளிநாடு வாழ் இந்தியர்) ஒருவர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அறிகிறேன். இதன் ஒரு பகுதியாக, ஊடகங்கள் வழியாக நடத்தப்படும் பொய் பிரசாரத்தின் மூலம், மக்களிடம் எனக்குள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக அஞ்சுகிறேன்.

டெண்டர் நடவடிக்கையில் தவறுகள் நடந்திருப்பதாக சில பத்திரிகைகளில் பொய்யான குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. எனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நலனையும் அதன் ஊழியர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, பி.எஸ்.என்.எல். டெண்டர் தொடர்பாகவும் இந்தப் பிரச்னையில் என்.ஆர்.ஐ. தொழிலதிபரின் பங்கு குறித்தும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

உடனடியாக விசாரணை நடத்தி, உண்மைகளை வெளியில் கொண்டு வருவதன் மூலம், எனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த நடக்கும் பொய் பிரசாரமும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அழிக்க நடக்கும் சதித் திட்டமும் அம்பலமாகும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு தயாநிதி மாறன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருவாளர் ராமகோபாலனை விசாரிக்கவேண்டும்!

தலையங்கம் - 'விடுதலை'



`ராமன்’ என்ற இதிகாசக் கற்பனையைத் தூக்கிப் பிடித்து இந்த நாட்டில் பார்ப்பனீய வருணாசிரமக் கொடியை மீண்டும் பறக்கவிடலாம் என்ற மனப்பான்மையிலிருந்து பார்ப்பனர்கள் விடுபடுவதாகத் தெரியவில்லை.

பாபர் மசூதியை இடித்து ராமன் கோயிலை எழுப்பத் துடிப்பதும், மக்கள் நலன் சார்ந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் `ராமன் பாலம்’ என்ற புளுகைத் திணிப்பதும் அந்த வகையைச் சார்ந்ததேயாகும்.

புராணங்களையும், இதிகாசங்களையும் உண்மை வரலாறுபோல நிலைநாட்ட இந்தக் கூட்டம் மேற்கொள்ளும் பித்தலாட்டத்தைச் சொல்லி முடியாது.

கருத்தால் சந்திக்க முடியாது என்கிற கட்டம் வருகிறபோது தயாராக சில சொற்களைக் கையிருப்பில் வைத்திருப்பார்கள்.
..... என்பது நம்பிக்கை!
..... என்பது அய்தீகம்! என்கிற வார்த்தைப் பிரயோகங்கள்தான் அவை.

இப்படிச் சொல்லிவிட்டால், அதற்குமேல் எந்தவித விவாதத்துக்கும், அறிவு ரீதியான விமர்சனத்துக்கும் அவர்கள் தயாராக இல்லை என்பது பொருளாகும்.பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமன் கோயில் பிரச்சினையைக் கிளப்பும் நிலையிலும்கூட `இந்தப் பிரச்சினை யில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது, கூடாது. இது ஒரு நம்பிக்கைப் பிரச்சினை என்று அவர்கள் அடம்பிடித்துப் பேசினார்களா இல்லையா - இன்றும் பேசுகிறார்களா - இல்லையா?

ராமன் பாலம் பிரச்சினையில் தொடக்கத்தில் விஞ்ஞான முலாம் பூசிப் பார்த்தனர். `நாஸா’வைச் சந்திக்கு இழுத்தனர். மணல் திட்டு இருப்பதாகத்தான் கூறினோமே தவிர, ராமன் பாலம் என்றெல்லாம் கூறவில்லை. 17 லட்சம் வருடங்களுக்கு முந்தியது அந்தப் பாலம் என்றும் கூறவில்லை என்று அவர்கள் கை விரித்த நிலையில், புதுப்புது அக்கப்போர்களைக் கிளப்பிவிட்டுப் பார்த்தனர்.

யாரோ ஒரு விஞ்ஞானியாம்! புனித் தனேஜா (வயது 40) என்ற நபர் விஞ்ஞானி என்று சங் பரிவார்க் கும்பலால் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `இஸ்ரோ’வின் விஞ்ஞானி என்றும் அவர் கூறிக் கொண்டார். அவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்தினார்கள் சங் பரிவார்க் கூட்டம்.

தனுஷ்கோடி கடற்பகுதியில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று மணல் திட்டுகளை வீடியோ படம் எடுத்து ``இதுதான் ராமன் பாலம்’’ என்று தெரிவித்தாராம்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர்களும் நம்பினார்களாம். அதன் பிறகே அவர்கள் இந்தப் பிரச்சினையை உரத்த குரலில் முழங்கினார்களாம்.

கடைசியில் இப்பொழுது என்னாயிற்று? ஏழு லட்ச ரூபாயை இதற்காக ஆர்.எஸ்.எஸ்., தலைவரிடம் பெற்றுக்கொண்டு விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொண்ட அந்த ஆசாமி தலைமறைவாகி விட்டார் என்ற செய்தி வெளியாயிற்றே, இல்லை என்று மறுக்க முடியுமா?

இவர்கள் தூக்கி நிறுத்திய இந்தப் பிரச்சினை அடிப்படை ஏதும் இல்லாததால், அடி முறிந்து அசிங்கமாகப் போய்விட்டதே.இந்த நிலையில்தான் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் திருவாளர் ராமகோபாலன் என்பார் சங் பரிவார்க் கும்பலுக்கே உரித்தான வழக்கமான பாணியில் கரடி விட ஆரம்பித்துவிட்டார்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்துக்காக ராமன் பாலத்தை இடித்தால் கடல் பகுதியில் எரிமலை வெடித்துக் கிளம்பும் என்று ஓய்வுபெற்ற புவியியல் நிபுணர் கூறியிருப்பதாகக் கூறியுள்ளார்.யார் அந்தப் புவியியல் நிபுணர்? அவர் பெயர் என்ன? எந்த ஊர்க்காரர்? என்கிற விவரங்களைக் கூறவில்லை.இது அவர்களின் வழமையான முறையாகும். அறிவு நாண யத்துக்கும், அவர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.

இதுவரை எந்தப் புவியியல் வல்லுநர்களாவது அந்தப் பகுதியில் எரிமலை இருப்பதாகக் கூறியதுண்டா? அப்படியிருந்தால் அதனை வெளிப்படுத்தலாமே!கடைசியில் நெருக்கிக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? `ராமன் நேற்றிரவு என் கனவில் வந்து அப்படிக் கூறினார்’ என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

சிதம்பரத்தில் நடராஜக் கடவுள் கனவில் வந்து நந்தனைத் தீயில் குளித்து வரச் சொன்னார் என்று சொல்லி, நந்தனைச் சாம்பலாக்கிவிடவில்லையா?நியாயமாக காவல்துறை, திருவாளர் ராம கோபாலனை அழைத்து, எரிமலை வெடிக்கும் என்று கூறியது தொடர்பாக விசாரணை நடத்திட வேண்டும். அப்படி ஒரு புவியியல் நிபுணர் இருப்பாரேயானால் அவரிடமும் தகவல் கேட்கும் முறையில் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற புரளிகள், மக்களை அச்சுறுத்தும் போக்கிரித்தனங்களுக்கு ஒரு முடிவு ஏற்படும். அரசும் யோசிக்கட்டும்!

7 மாத குழந்தைக்கு "PAN CARD'

மத்தியப் பிரதேசத்தில் 7 மாத குழந்தைக்கு "பான் கார்டு' விண்ணப்பித்து பெற்றனர் அக் குழந்தையின் பெற்றோர். நாட்டில் மிக இளம்வயதில் பேன் கார்டு வைத்திருப்பவர் என்ற பெருமை எனது மகளைச் சாரும் என இந்தக் குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.

பெண் குழந்தை பர்னிக்கா, 2 மாதங்கள் 7 நாள்களிலே "பேன் கார்டு' பெற்றுள்ளார். பர்னிக்காவின் பெற்றோர் பிரமோத் மற்றும் விபா சாகு. 2006 டிச. 15-ல் பிறந்த இந்தக் குழந்தைக்கு, 2007 பிப். 20-ல் "பேன் கார்டு' பெற்றுள்ளனர். பர்னிக்காவின் பெயரில் "டிமேட்' கணக்கை வங்கியில் துவக்கி ரூ. 70 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளதாகவும் தாய் விபா சாகு தெரிவித்தார்.

"பான் கார்டு' விண்ணப்பிப்பதற்கு இளவயதினருக்கு வயது வரம்பு ஏதும் சட்டத்தில் இல்லை என வருமான வரித் துறையின் கூடுதல் ஆணையர் கே.கே. சிங் தெரிவித்தார்.

தலையங்கம் - 'விடுதலை'

முல்லை பெரியாறு அணையும் - கேரள அதிகாரிகளின் அவசரமும்!


முல்லை பெரியாறு அணைப் பகுதி வட்டார செய்தி ஒன்று - ஜூன், ஜூலை மாதங்களில் அதிக மழை வேண்டி பெரியாறு அணைப் பகுதியில் விவசாயிகள் வருண பூஜை நடத்துவார்களாம். இந்த ஆண்டு அந்தப் பகுதியில் அத்தகைய பூஜை நடத்திட கேரள அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனராம்!

இப்படி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அறிவுப் பிரச்சினையா? உரிமைப் பிரச்சினையா? என்ற கேள்வி எழலாம்.
பார்த்தீர்களா, பார்த்தீர்களா, வருண பகவான் பூஜை நடத்துவதற்குக்கூட கேரள அரசு அனுமதி அளிக்கவில்லை என்று ஆர்ப்பரிக்கலாம்.பூஜையின்மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றால், முல்லை பெரியாறு பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே!

இந்தப் பொது அறிவிருந்தால், இந்தப் பிரச்சினையே ஏற்பட்டு இருக்காதே!
மழை பொழிவது வருண பகவானால் என்பதும், காற்றடிப்பது வாயு பகவானால் என்பதும், நெருப்புக் கிடைப்பது அக்னி பகவானால் என்றும் கருதிய காலம் கடைந்தெடுத்த கற்காலமாகும்.மழையையும், காற்றையும், நெருப்பையும் அறிவியலால் சுழலச் செய்யும் காலகட்டத்தில் இன்னும் காட்டு மிராண்டிக் காலக் கருத்தின் காலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருப்பது அறிவுடைமையானதுதானா?

கேரள மாநில அரசு முல்லை பெரியாறு பிரச்சினையில் நியாய விரோதமாகவும், சட்ட விரோதமாகவும் நடந்துகொண்டு இருக்கிறது என்பது வேறு பிரச்சினை. சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலத்தில் ``குறுகிய வட்டார வெறி’’ கண்மண் தெரியாமல் தலைவிரித்தாடுகிறது என்பது மக்களுக்குத் தெரிந்து விட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் அவர்களேகூட இந்தப் பிரச்சினையில் கேரள மாநில முதலமைச்சரிடம் நேரில் பேசி உரியன செய்வதாகக் கூறி பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால், பலன்தான் இதுவரை ஏற்படவில்லை.

இப்பொழுது நிலைமை என்ன தெரியுமா? அந்த வட்டாரத்தில் வருண பகவானுக்குப் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டாலும்கூட கனமழை கொட்டித் தீர்க்கிறது. இப்பொழுது அணையின் நீர்மட்டம் 131.50 அடி ஆகிவிட்டது. வினாடிக்கு 2091 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்துகொண்டும் இருக்கிறது. அணையி லிருந்து 1644 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளில் கேரள மாநிலப் பொதுப் பணித்துறை தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

142 அடிக்கு மேலும் அணையில் தண்ணீரைத் தேக்கினாலும் அணைக்கு அதனால் ஆபத்து ஏற்பட்டு விடப் போவதில்லை. அந்த அளவு அணை பலமாக உள்ளது என்று தொழில் ரீதியாக உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

142 அடிவரை தண்ணீர் தேங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதில் கேரள அரசு விழிப்பாக இருக்கிறது என்பதுதான் உண்மையாகும். இயற்கையாக மழை பொழிந்து 142 அடியையும் தாண்டிவிட்டால், கேரள அரசு சாதித்து வருகிற பிடிவாதம் அடிபட்டுப் போய்விடுமே! அதிக அளவு தண்ணீரைத் தேக்க முடியாது. அப்படித் தேக்கினால் அணை உடைந்து இடுக்கி மாவட்டமே மூழ்கிப் போய்விடும் என்ற அவர்களின் பொய்க் கூற்று அம்பலமாகிவிடுமே. அந்த அவசரத்திலும், ஆத்திரத்திலும்தான் அவர்களின் செயல்பாடுகள் அமைந்து இருக்கின்றன. தண்ணீரை அவசர அவசரமாக திறந்துவிடும் தந்திரம் இதுதான்!

'நந்து' - விமர்சனம்

மக்களிடம் அனுதாபம் பெற்று தேர்தலில் ஜெயிக்க திட்டமிடுகிறார் சாயாஜி ஷின்டே. அதற்காக தன்னைக் கொலை செய்வதுபோல் நாடகமாடும்படி பணத்துக்காக கொலை செய்யும் கில்லர் மகேஷ்பாபுவிடம் கூறுகிறார். ஆனால் நிஜத்திலேயே சாயாஜி சுட்டுக்கொல்லப்படுகிறார்.

கொலைப்பழி மகேஷ்பாபு மீது விழ, தலைமறைவாகிறார். அதிரடி விசாரணை நடத்தி மகேஷ்பாபுவை கண்டுபிடிக்கிறார் சி.பி.ஐ.அதிகாரி பிரகாஷ் ராஜ். ஆனால் சாயாஜியை கொன்றது வேறு ஆள் என தெரிந்ததும் பிரகாஷ் எடுக்கும் முடிவு கிளைமாக்ஸ். ஆக்க்ஷன் கதைக்கு த்ரில்லர் உரம்போட்டு செழிப்பாக்கி இருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம்.

அதிகம் பேசாமல் மவுனத்தை கேடயமாக்கும் மகேஷ்பாபு ஆக்க்ஷன் காட்சிகளில் துள்ளுகிறார். நாசரின் நிலத்தை அபகரிக்கும் ரவுடிக் கூட்டத்தை பென்டெடுப்பதும், திருவிழாவில் தாக்க வரும் ரவுடிகளை நின்ற இடத்திலிருந்தே குத்துவிட்டு வீழ்த்துவதும் நரம்பை முறுக்கேற்றுகிறது.

த்ரிஷாவிடம் நடத்தும் காதல் விளையாட்டுகளில் சுவை உண்டு. அழகி என்று எல்லோரும் த்ரிஷாவை வர்ணிக்கும்போது "நீ ஒண்ணும் அழகில்லை" என்று மகேஷ்பாபு மூக்குடைப்பது காமெடி. சுட்டிப்பெண்போல் சுறுசுறுக்கிறார் த்ரிஷா. காட்சியை விறுவிறுப்பாக்க வேண்டும் என்ற கவனத்தில் சென்டிமென்ட்டை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம்.

கிளைமாக்ஸில் பெரிதாக செய்யப்போகிறார் பிரகாஷ்ராஜ் என்ற எதிர்பார்ப்பும் புஸ். பாடல் காட்சிகளைவிட பின்னணி இசைக் கோர்ப்பில் ஸ்கோர் செய்கிறார் மணிசர்மா. நாசர், சரண்ராஜ், கோட்டா சீனிவாசராவ், சுதா, மாலி, காயத்ரி என நட்சத்திர குவியலால் எக்ஸ்டிரா பெனிபிட் எதுவுமில்லை. தொடக்கத்தில் வரும் சாயாஜியும் ரெண்டாவது காட்சியிலேயே டமாலாகிவிடுகிறார்.

ஜெயலலிதா இன்று டெல்லி சென்றார்!

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று பிற்பகல் 2.20 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது, துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பது பற்றியும் அரசியல் சூழ்நிலைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதீபா பட்டீல் நிறுத்தப்பட்டிருக்கிறார். பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் சுயேச்சையாக பைரோன்சிங் ஷெகாவத் போட்டியிடுகிறார்.

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் அப்துல்கலாமை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் அது முடியாமல் போனது. எனவே ஜனாதிபதி தேர்தலில் தங்களது நிலையை அறிவிப்பதில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு கால அவகாசம் தேவைப் பட்டது. இதற்கிடையில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அமெரிக்கா சென்று விட்டார். அவர் 2 நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் இருந்து திரும்பினார்.

எனவே ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் நாளை மதியம் 12 மணிக்கு டெல்லியில் இந்திய லோக்தள் கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா வீட்டில் கூடி ஆலோசனை நடத்து கிறார்கள். டெல்லி போதி எஸ்டேட்டில் உள்ள சவுதாலாவின் வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடை பெறுகிறது.

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டம் முதலில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் சந்திரபாபு நாயுடு வீட்டில் நடந்தது. அடுத்த கூட்டம் சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்த அணிக்கு ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது.

நேற்று முன்தினம் ஜெயலலிதாவை பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் சந்தித்து பேசினார். அப்போது பாரதீய ஜனதா ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிடும் பைரோன்சிங் ஷெகாவத் துக்கு ஆதரவு தரும்படி ஜெயலலிதாவிடம் ஜஷ்வந்த் சிங் கேட்டதாக தெரிகிறது. ஆனால் முடிவு ஏதும் தெரிவிக்கப் படவில்லை. வைகோவையும் ஜஸ்வந்த் சிங் சந்தித்து பேசினார். இந்த நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் பைரோன்சிங் ஷெகாவத்துக்கு ஆதரவா? அல்லது தேர்தல் புறக்கணிக்கப்படுமா? என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

கூட்டம் முடிந்த பின் நாளை மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.

என்னைப் பார் யோகம் வரும் - விமர்சனம்


வித்தியாசமாக எதையாவது செய்ய நினைக்கும் மன்சூர் அலிகான் தலைப்பில் வித்தியாசம் காட்டியது மாதிரி குழந்தைத்தனமான தாதாவையும் காட்டியிருக்கிறார். தேடிவரும் அசைன்மென்டுகளை பணத்துக்காகச் செய்து கொடுத்தாலும் அதில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பவர். பெண் அரசியல்வாதி அனுராதா சொன்ன பொய்யை நம்பி புதுமுகம் மஞ்சுவின் திருமணத்தை நிறுத்துகிறார்.

மகள் திருமணம் நின்றதால் மண்டபத்திலேயே அப்பா உயிர்விட, மன்சூரைப் பழிவாங்க கிளம்புகிறார். பிறகு அவர் நல்லவர் என்பதை அறிந்து லவ்வாகி ஹீரோயின் பணியை நிறைவு செய்கிறார் மஞ்சு. பொய் சொல்லி அப்பாவி பெண்ணின் வாழ்க்கை கெட காரணமாக இருந்த அனுராதா கூட்டத்தை நொறுக்கி ஹீரோ கடமையை நிறைவேற்றுகிறார் மன்சூர்.

“லாஜிக்காவது, மேஜிக்காவது ரெண்டு மணி நேரம் சிரிச்சிட்டு வரணும்யா’’ என்று சொல்கிறவர்களுக்கு ஏற்ற படம். நாட்டு நடப்பு, அரசியல், சொந்த வாழ்க்கை சம்பவம் எதையும் விட்டு வைக்காமல் ஏகத்துக்கு பிரித்து மேய்கிறார் மன்சூர். புதுமுகம் மஞ்சுக்கு பாஸ் மார்க் போடலாம்.

பெரிய காமெடி கூட்டமும், கவர்ச்சி அணியும் இருக்கிறது. “கோயம்போடு கொய்யா பழம்...“(தொல்.திருமாவளவன் தோன்றும்போது விசில் பறக்குதுங்கோ...) போலீசே போலீசே... பாடல்கள் நேயர் விருப்பமாக வலம் வரும். லோ பட்ஜெட் கமர்ஷியல் இயக்குனராக அடையாளம் காட்டியிருக்கிறார் எம்.ஜமீன்ராஜா.

தயாநிதி மாறன் சிக்குவாரா...?

ரூ. 10 ஆயிரம் கோடி டெண்டர் முறைகேடுக்கு காரணம் யார்? விரிவான விசாரணைக்கு உத்தரவு முக்கிய புள்ளிகள் கதிகலக்கம்



மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது இறுதி செய்யப்பட்ட டெண்டரால் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட இருந்தது

அந்த டெண்டரை ரத்து செய்து 10 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சம் செய்து விட்டேன் என இப்போதைய அமைச்சர் ராஜா கூறியுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடுக்கு துணை போனது யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப அடிப்படையிலான இணைப்புகளை அதிகரிக்க கடந்த ஆண்டு துவகத்தில் முடிவு செய்யப்பட்டது. மும்பை மற்றும் டில்லியில் சேவை செய்து வரும் எம்.டி.என்.எல்., நிறுவனத்தின் புதிய இணைப்புகளுக்கான 2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்ப கருவிகளை வழங்க மோட்டோரோலா நிறுவனம் முன் வந்துள்ளது. இதற்காக ஒரு இணைப்புக்கு ரூ.2,845 என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதே போல பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் புதிதாக 6.3 கோடி புதிய இணைப்புகள் ஏற்படுத்த திட்டமிட்டது. இதற்கு ஏற்றவாறு இரண்டாம் தலைமுறை(2ஜி) மற்றும் மூன்றாம் தலைமுறை(3ஜி) கருவிகள் தேவை.இதில் (3ஜி) கருவிகளின் பங்கு 25 சதவீதம். மொத்தமுள்ள 6.3 கோடி புதிய இணைப்புகளில் 1.8 கோடி இணைப்புகளுக்கு தேவையான கருவிகளை அரசுக்கு சொந்தமான ஐ.டி.ஐ., மற்றும் அல்காடெல் நிறுவனம் இணைந்து அளிக்க உள்ளன. இதுதவிர 4.5 கோடி புதிய இணைப்புகளுக்கான 2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்ப கருவிகளை வழங்க கடந்த ஆண்டு மார்ச்சில் டெண்டர் விடப்பட்டது.

இந்த நேரத்தில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த தயாநிதி மாறன். இந்த டெண்டருக்கு மோட்டரோலா, இசட்.டி.இ., எரிக்சன், நோக்கியா, சிமென்ஸ் என ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்தன. டெண்டரின் இரண்டாவது கட்டத்தில் மோட்டரோலா, இசட்.டி.இ., ஆகிய நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்டன. டெண்டர் நிபந்தனைகளின்படி மிகவும் குறைந்தபட்ச விலையை குறிப்பிடும் நிறுவனத்துக்கு 60 சதவீத கான்ட்ராக்ட்டும், அடுத்த இடத்தில் வரும் நிறுவனத்துக்கு 40 சதவீத கான்ட்ராக்ட்டும் அளிக்க வேண்டும். மிகவும் குறைந்தபட்ச விலையாக ஒரு இணைப்புக்கு எரிக்சன் நிறுவனம் 107 அமெரிக்க டாலரை குறிப்பிட்டு இருந்தது.

அதாவது ஒரு இணைப்புக்கு ரூ.4,940 செலுத்த வேண்டும். எனவே எரிக்சன் நிறுவனத்துக்கு 60 சதவீத கான்ட்ராக்ட்டும், அடுத்த விலையை குறிப்பிட்ட நோக்கியா நிறுவனத்துக்கு 40 சதவீத கான்ட்ராக்ட்டும் அளிக்கப்பட்டன. எரிக்சன் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், நோக்கியா நிறுவனத்தின் மொபைல்போன் உற்பத்தி நிறுவனமும் தமிழகத்தில் உள்ளன.

இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி விலகினார். புதிய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த ராஜா பொறுப்பேற்றார். பி.எஸ்.என்.எல்., டெண்டரை நிறுத்தி வைக்கவும் ராஜா உத்தரவிட்டார். இதனால், மொபைல் போன் சந்தையில் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தள்ளாடி வருவதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து அமைச்சர் ராஜாவிடம் கேட்ட போது "எம்.டி.என்.எல்., நிறுவன டெண்டரை விட பி.எஸ்.என்.எல்., நிறுவன டெண்டர் இரண்டு மடங்கு கூடுதல் விலையை கொண்டுள்ளது.

இதனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். எனவே தான் டெண்டரை நிறுத்தி வைத்து மறு ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். அதே நேரத்தில் புதிய இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரை இறுதி செய்ய வேண்டும் என்று பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். எனவே இந்த டெண்டர் விஷயத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவன உயர் அதிகாரிகள் விரைவில் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

எரிக்சன் நிறுவனம் குறிப்பிட்டுள்ள 107 அமெரிக்க டாலருக்கு பதிலாக 90 அமெரிக்க டாலருக்கு சப்ளை செய்யும்படி பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவுறுத்த வாய்ப்பு உள்ளது.மேலும், செலவை குறைக்கும் பொருட்டு டெண்டர் ஒப்பந்தத்தில் இருந்து 3ஜி கருவிகளை சப்ளையும் செய்யும் திட்டம் நீக்கப்படலாம்.

ஆனால், ஏற்கனவே குறிப்பிட்ட விலையை குறைத்து கொள்ள எரிக்சன் நிறுவனம் சம்மதிக்காது. எனவே டெண்டரை பெற மிகவும் குறைந்தபட்ச விலையை குறிப்பிடும் நிறுவனமாக மோட்டரோலா அல்லது சிமென்ஸ் நிறுவனங்கள் உருவெடுக்கலாம். இரண்டாவது இடத்தில் நோக்கியா நிறுவனம் இடம் பெறலாம். பி.எஸ்.என்.எல்., இயக்குனர்கள் குழு கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. அப்போது புதிய டெண்டர் குறித்தும், எரிக்சன் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பது குறித்தும் முடிவெடுக்கப்படும்.

மேலும், ரூ.10 ஆயிரம் கோடி முறைகேடு குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடுவது குறித்தும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது. இதில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதளம் மூலமாக இனி வழக்கு தாக்கல் செய்யலாம்

இணைய தளம் மூலமாக வழக்குகளைத் தாக்கல் செய்யும் முறை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கும் என்று தலைமை நீதிபதி ஏ.பி. ஷா கூறினார்.

இ-கோர்ட் திட்டத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசினார். இந்த விழாவில் 10 நீதிபதிகளுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்களை வழங்கிய அவர் கூறியதாவது:

இ-கோர்ட் திட்டமானது, இணையதளம் மூலமாக வழக்குகளைப் பதிவு செய்யவும், நீதி நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்தவும் உதவும். நாடு முழுவதும் 13,000 நீதிமன்றங்களை கம்ப்யூட்டர் மூலம் இணைக்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 15,000 நீதிபதிகளுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் 700 நீதிபதிகளுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தரப்படும்.

5 ஆண்டுகளில் 3 கட்டங்களாக தமிழ்நாட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நீதிபதிகளுக்குத் தேவையான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் 2 ஆண்டுகளில் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக முதல் கட்டமாக ரூ.441 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வழக்குத் தாக்கல் செய்பவர், தனது வழக்கின் அனைத்து விவரங்களையும் இணையதளம் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சிங் முறை அறிமுகப்படுத்தப்படும். மகாராஷ்டிர மாநிலத்தில் எல்லா நீதிமன்றங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு இவ்விஷயத்தில் பின்தங்கியுள்ளது. கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தை விரைவில் முடிக்க அரசு உடனே உதவ வேண்டும் என்றார் தலைமை நீதிபதி.

பொன்னியின் செல்வன்-கலைஞர் டி.வி கலக்கல்!

ஆணானப்பட்ட கமல்ஹாசனே ஆசைப்பட்ட விஷயம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய அந்த கதையை எப்படியாவது படமாக்கிவிட வேண்டும் என்பது அவரது கனவாகவே இருந்தது. இதற்கிடையில் இந்த கதையை டி.வி சீரியலாக்கிவிட வேண்டும் என்று பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முயன்றும் அது, முயற்சி அளவிலேயே கைவிடப்பட்டது.

தற்போது பொன்னியின் செல்வன் கதையை விரைவில் உதயமாக இருக்கும் கலைஞர் டி.வி க்காக தயாரித்துக் கொண்டிருக்கிறார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. "மர்மதேசம்" என்ற தொடரின் மூலம் சின்னத்திரை ரசிர்களை தன் பக்கம் ஈர்த்த நாகா என்ற இளைஞர்தான் பொன்னியின் செல்வனை இயக்குகிறார்.

இம்மாத இறுதியில் இருந்து காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். கலைஞர் டி.வி யில் வரப்போகும் தொடர்கள் குறித்து கலைஞரிடம் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிற நிர்வாகிகள், பொன்னியின் செல்வன் விஷயத்தில் கலைஞர் காட்டுகிற அக்கறையை நினைத்து வியக்கிறார்கள்.

இன்னும் படப்பிடிப்பே துவங்கவில்லை. அதற்குள் செலவு ஒரு கோடியை எட்டிவிட்டதாம். கலைஞர் இருக்க கவலை எதற்கு? என்கிறார் சக்கரவர்த்தி.

-ஆர்.எஸ்.

பிரதிபாவுக்கு எதிரான இணையதளம்: பாஜக வெளியீடு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக களம் இறங்கியுள்ள பிரதிபா பாட்டீல் மீதான புகார்கள், தகவல்கள் அடங்கிய இணைய தளத்தை பாஜக தலைவர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

பாஜக முன்னாள் தலைவர் வெங்கைய நாயுடு இல்லத்தில் நடந்த நிருபர்கள் கூட்டத்தில் இந்த இணைய தளத்தை அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தாம் வாக்களிக்கும் வேட்பாளர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவில் சுயேச்சையாக போட்டியிடும் பைரோன் சிங் பற்றி இணைய தளம் தொடங்குவது தேவையில்லாதது.

பிரதிபா பற்றிய இணையதளத்தை இந்தியா புரஜெக்ட்ஸ் என்ற குழு உருவாக்கியுள்ளது. இதுபோன்ற முயற்சிகளை பாஜக ஆதரிக்கிறது.

இது போன்ற முயற்சிகளால் அதிபர் ஆட்சி முறைக்கு மாறுவதை பாஜக விரும்புகிறதா என்று கேள்வி எழும்பலாம். அத்தகைய சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்றார் ஜேட்லி. இதே நிகழ்ச்சியில் பிரதிபா பற்றி பத்திரிகைகளில் வந்த கட்டுரைகள், செய்திகளை தொகுத்து அச்சடிக்கப்பட்ட புத்தகத்தையும் ஜேட்லி வெளியிட்டார்.

விலை போன டி.வி சீதை !

இந்த பதிவினை குழந்தைகள் கண்டிப்பாக தவிர்க்கவும்.குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு இந்த பதிவினை திறக்க வேண்டாம்.இந்த பதிவு எந்தவொரு தனிநபரின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை. கிடைத்த செய்தியினை பகிர்ந்து கொள்ளும் முயற்சி அவ்வளவே!



ஒரு காலத்தில் ராமாயணம் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது உண்மையான ராமரும் சீதையுமே தங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டதாக கருதி டி.வி பெட்டிக்கு பூஜையும்,ஆரத்தியும் காட்டிய கூத்துக்களை மறந்திருக்க மாட்டோம்.

அந்த தொடர் முடிவடைந்த பின்னரும் கூட அதில் நடித்த நடிகர்கள் அந்த கதாபாத்திரங்களாகவே கருதப்பட்டு சமூக அங்கீகாரமும் மரியாதையும் ஏன் பாரதிய ஜனதா கட்சி சீதையாக நடித்த தீபிகாவையும், ராவணனாக நடித்தவரையும் நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த காலமும் உண்டு.

அன்மையில் 'யூட்யூப்'பில் உலாவரும் இந்த படத்துனுக்கினை பாருங்கள்...நமது டிவி சீதை எத்தனை வெளிப்படையாக நடித்திருக்கிறார் என....


ஜெயலலிதா பதவிக்கு ஆபத்தா? - சட்ட வல்லுநர்கள் கருத்து

தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ள வழக்குகளால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவிக்கு ஆபத்து ஏற்படாது. எதிர்காலத்தில் தேர்தலில் நிற்பதற்கும் எவ்வித தடையும் ஏற்படாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

2001-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது இரு தொகுதிகளுக்கும் மேலாக நான்கு தொகுதிகளில் அதாவது ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று திமுக எம்.பி. குப்புசாமி கடந்த 2002-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீது தேர்தல் ஆணையம் ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 13-ம் தேதி உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மூன்றாவது மற்றும் நான்காவதாக மனு தாக்கல் செய்த புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளில் அப்போது தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர்கள் மூலம் ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல புவனகிரி தொகுதிக்கு கடலூரில் வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய குற்றவியல் சட்ட விதி 177-ன் படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விதி 125 (ஏ)-யின் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டபோது அவர்கள் கூறியது:

அரசு அதிகாரிகளிடம் தவறான தகவல் அளித்த குற்றத்துக்காக இந்திய குற்றவியல் சட்ட விதி 177-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படலாம். சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பறிக்கும் அளவுக்கு இது குற்றமாகக் கருதப்படவில்லை.

அதேசமயம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 (ஏ) பிரிவானது 2002-ம் ஆண்டுதான் அமலுக்கு வந்தது. ஆனால் மனுதாக்கல் 2001-ம் ஆண்டில் நடைபெற்றது.

எனவே ஓராண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த சட்டத்தின் மூலம் முந்தைய ஆண்டில் நடைபெற்ற குற்றத்துக்கு தண்டனை வழங்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி. அப்படி தண்டனை வழங்க முடிவு செய்தாலும் இக்குற்றத்துக்கும் 6 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத்தான் விதிக்க முடியும்.

அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளபடி, நான்கு தொகுதிகளில் மனு தாக்கல் செய்தாலும், அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், தனது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஜெயலலிதா தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே அந்த வகையில் அவருக்கு தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் இடமுள்ளதா? என்பதையும் ஆராய வேண்டியிருக்கும்.

மேலும் சட்டப் பேரவை உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ பதவிக் காலத்தின்போது தண்டனை பெற்றால், அதனால் அவரது பதவியைப் பறிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதே நடைமுறைதான் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி விஷயத்திலும் பின்பற்றப்பட்டது. அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டபோதிலும் அவர் எம்.பி.யாக தொடர்ந்து பதவி வகித்தார். ஆனால் தொடர்ந்து வந்த தேர்தலில் அவர் நிற்கவில்லை. இதே நடைமுறைதான் சிபுசோரன் வழக்கிலும் பின்பற்றப்பட்டது.

இத்தகைய முன்னுதாரணங்கள் இருப்பதால், ஜெயலலிதாவின் பேரவை உறுப்பினர் பதவிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தலையங்கம் -"கல்கி"

நடந்து முடிந்த தேர்தலும் நடக்கப்போகும் தேர்தலும்


இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதென்பது கடினம். இதுவரை நடந்த ஆட்சி மீது அதிருப்தி கொண்டு எதிர் அணிக்கே மக்கள் வாக்களிப்பது இயல்பு. மதுரை மேற்கில் இந்த நிலை மாறுபட்டு, அ.தி.மு.க.வுக்கு, போன தேர்தலை விடவும் குறைவாக வாக்குகள் பதிவாகியுள்ளன. விஜயகாந்த் கட்சி, வாக்குகளில் தன் பங்கைக் கணிசமாக உயர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகளை விடவும் மிக அதிகமாகப் பெற்று, தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. விடமிருந்து இந்தத் தொகுதியை காங்கிரஸ் பறித்துக் கொண்டும்
விட்டது.

இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கௌரவமாக ஆமோதிக்காததுகூட ஆச்சர்யமில்லை; அதை அவரிடம் எதிர்பார்க்க முடியாது என்று கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஆனால், வெற்றி பெற்ற தி.மு.க. அணித் தலைவர், அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்த அரும்பாடுபட்ட தேர்தல் கமிஷனுக்கு உரிய ஆமோதிப்பை வழங்குவதற்குப் பதிலாக, அதனைக் குறை கூறி அதன் நேர்மையையே கேள்விக்குட்படுத்தியிருப்பதுதான் அதிசயமான வேதனை! கமிஷன் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டிருந்தால், இவ்வளவு பெரிய வெற்றி தி.மு.க. அணியினருக்கு எவ்வாறு கிட்டியிருக்கும்?

முதல்வரின் பாய்ச்சல், வெற்றிப்படிகளின் உச்சியில் இடறி விழுந்தது போலாகிவிட்டது.

தன்னதிகாரம் பெற்ற ஜனநாயக அமைப்புகளின் மேலாண்மையை
மதித்து ஏற்கும் பக்குவம் நம் அரசியல்வாதிகளுக்கு என்றுதான் வரப்போகிறதோ!

குடியரசுத் தலைவர் பதவிக்கு முற்றிலும் தகுதிபடைத்த அறிஞர்களையும் நன்மக்களையும் ஒதுக்கிவிட்டு, சர்ச்சைகளின் உறைவிடமான ஒரு வேட்பாளரை, ஆளும் கூட்டணி நியமித்திருப்பது மிகவும் கொடுமை!

பிரதிபா பாடீல் மீதும் அவரது சுற்றத்தார் மீதும் புற்றீசலாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய் என்று அவர் சார்பில் காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பு வெளியிடும்போதே, மீடியா அக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைப் பிட்டுப் பிட்டு வைத்துக் கொண்டிருக்கிறது! இதற்கிடையே விருந்து, பேரணி, கொண்டாட்டம் என்று இந்த வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகள் அருவருப்பூட்டி, கௌரவமும் நடுநிலையும் மிக்க நாட்டின் முதல் குடிமகன் பதவிக்கே இழுக்கு செய்கின்றன!

‘மனசாட்சிப்படி வோட்டுப் போடுங்கள்’ என்று பா.ஜ.க. அணி வேட்பாளர் ஷெகாவத் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது எப்படி சாத்தியம் என்பதுதான் கேள்விக்குறி!

ஒரு வேட்பாளர், குற்றச்சாட்டு மழையில் தத்தளிக்க, எதிர் வேட்பாளர் ஹிந்துத்வா கோட்பாடுகளின் ஆதரவாளர்! அவரிடம் நடுநிலைமையையோ கட்சி மற்றும் மதம் கடந்த தெளிந்த பார்வையையோ எவ்வாறு எதிர்பார்ப்பது? மனசாட்சிப்படி
வாக்களிப்பதானால் இருவரையுமே நிராகரிக்கத்தான் முடியும்.

குடியரசுத் தலைவரைத் தங்கள் கைப்பாவையாக்கிக் கொண்டு, தட்டிக் கேட்பார் இல்லாமல் தங்கள் கொட்டத்தைத் தொடர்வதற்கான திட்டத்தை அரசியல்வாதிகள் தீட்டியிருப்பது தெளிவு. அதனை முறியடிக்க முடியாவிட்டாலும் அது குறித்த விழிப்புணர்வு பெற்று
எச்சரிக்கையாக இருப்பது மக்களின் பொறுப்பு!

காலத்தை வென்ற அழகி - பத்மினி








வந்தனாவுடன் வாழ தயார் ?- ஸ்ரீகாந்த்

"வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கிறேன்" என்று போலீசில் நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.





நடிகர் ஸ்ரீகாந்துக்கும் வந்தனாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்குள், வந்தனா குடும்பத்தினர் மீது மோசடி வழக்குகள் இருப்பதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து, திருமணத்தை ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் நிறுத்தினர். அதிர்ச்சி அடைந்த வந்தனா, கடந்த மாதம் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் நுழைந்தார். "எனக்கும் ஸ்ரீகாந்துக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது" என்று கூறி, அதற்கான புகைப்படம் மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை வெளியிட்டார்.

ஆனால், ‘அத்துமீறி வந்தனா வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அவரை வெளியேற்ற வேண்டும்' என்று ஸ்ரீகாந்த் தரப்பும், ‘ஸ்ரீகாந்துடன் சேர்த்து வைக்க வேண்டும்’ என்று கோரி வந்தனாவும் வடபழனி போலீசில் புகார் செய்தனர்.

முன்ஜாமீன் பெற்ற வந்தனா, வடபழனி போலீஸ் நிலையத்தில் தினமும் மாலை 4.30 மணிக்கு கையெழுத்து போட்டு வருகிறார். அதேபோல், ஸ்ரீகாந்த், அவரது அப்பா கிருஷ்ணமாச்சாரி, அம்மா ஜெயந்தி ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.

ஸ்ரீகாந்த் தன் பெற்றோருடன் வடபழனி போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, ஸ்ரீகாந்த் தன் பெற்றோருடன் நேற்று காலை வடபழனி போலீஸ் நிலையம் வந்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வயோலாபாய் முன்பு ஆஜராகி கையெழுத்து போட்டார். அப்போது, இன்ஸ்பெக்டர் வயோலாபாய், "திருமணம் செய்து கொண்ட பிறகு வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை? வந்தனாவின் அண்ணன் மீதுதானே புகார்கள் இருக்கின்றன. அதற்கு வந்தனா என்ன செய்வார்?" என்று ஸ்ரீகாந்திடம் கேட்டார்.

அதற்கு நடிகர் ஸ்ரீகாந்த், 'வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கிறேன்' என்றார். போலீஸ் நிலையத்தை விட்டு வெளியில் வந்த ஸ்ரீகாந்த், நிருபர்களிடம் கூறியதாவது:
என் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டேன். என் வீட்டுக்கு போவதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், இப்போதைக்கு வீட்டுக்கு போக விரும்பவில்லை. அங்கு இருக்கும் என் 85 வயது பாட்டி நன்றாக இருக்கிறார்.
இந்த வழக்கைப் பற்றிய எல்லா விவரங்களும் தினமும் பத்திரிகையில் வந்து கொண்டிருக் கிறது. புதிதாக வேறு எதுவும் செய்தி இல்லை.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கோபப்பட்ட ஸ்ரீகாந்த், நேற்று வடபழனி போலீஸ் நிலையத்தில் நிருபர்களிடம் சகஜமாகப் பேசினார். ‘அம்மாவின் முகத்தில் மைக் பட்டதால்தான் நேற்று கொஞ்சம் கடுமையாக பேச வேண்டியதாகிவிட்டது‘ என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

வடபழனி போலீஸ் நிலையத்துக்கு நடிகர் ஸ்ரீகாந்த் வருவதை அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலைய வாசலில் கூடினர். ஸ்ரீகாந்த் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே செல்லும்வரை அங்கேயே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

தலலயங்கம் - 'விடுதலை'

அடிப்படை வாதத்தின் ஆபத்தான முகம்!




எந்த மதமாக இருந்தாலும் அடிப்படை வாதத்தினைக் கையில் எடுத்துக் கொள்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள். மதம் என்பதே அபின் என்றாலும், ஒடுக்குமுறைக்கான கூர் ஆயுதம் என்றாலும், அடிப்படை வாதமானது அந்தக் கூர்முனையில் தடவப்பட்ட நஞ்சாகும்.
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள், இஸ்லாமிய மக்களையே கூட அதிர்ச்சி அடையச் செய்திருக்கும்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் லால் மசூதியின் கட்டுப்பாட்டில் இரு மதரசாக்களில் ஏழாயிரம் பேர் படித்து வருவதாகவும், அங்கு இருபால் மாணவ, மாணவிகளுக்கும் அடிப்படைவாதக் கல்வி போதிக்கப்படுவதாகவும், இஸ்லாமியக் கொள்கைகளுக்கு விரோதமாக நடப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், அரசுக்கே இந்த அமைப்புகள் சவாலாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த நிலையில், இந்த இரு மதரசாக்களும் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

அப்துல் அஜீஸ் அவரது உடன் பிறப்பான அப்துல் ரஷித் காஜி ஆகிய இருவருமே இந்த அமைப்பினை நடத்தி வருகிறார்கள்.அப்துல் அஜீஸ் பெண்ணைப்போல பர்தா அணிந்து தப்பிக்கச் சென்றபோது பிடிபட்டுள்ளார். அவர் பல தகவல்களைக் கூறியதாகத் தெரிகிறது.
அடுத்த 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும், தேவையான ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் மசூதிக்குள் இருப்பதாக மதக் குரு கூறுவதிலிருந்து திட்டமிட்ட வகையில் மதரசாவை உருவாக்கி நடத்தி வருவது புலனாகிறது.

பாகிஸ்தான் அதிபர் முஷாரப்மீது ராக்கெட் குண்டு வீசும் அளவுக்கு அவர்கள் தயாராகி உள்ளனர் என்பது சாதாரணமானதல்ல.இப்பொழுது மசூதி இராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. உள்ளே மாணவர்கள், மாணவிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதால் இராணுவம், தான் நினைத்தபடி சூறையாடிடவும் முடியாது. மிகவும் விழிப்பாகப் பிரச்சினையைக் கையாள வேண்டிய நெருக்கடி! அரசுத் தரப்பில் எது நடந்தாலும் அது உலகம் தழுவிய மதப் பிரச்சினையாக வெடித்துக் கிளம்பும் ஆபத்தும் இதற்குள் இருக்கிறது. காரணம் அடிப்படைவாதிகள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள்.

இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் மத அடிப்படை வாதம் எவ்வளவுப் பெரிய ஆபத்தானது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.இந்தியாவில் இந்துத்துவா என்ற முகமூடி அணிந்து கொண்டு அடிப்படைவாத உருவமாகவே இருக்கக் கூடிய ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தின் ஆபத்தான வெளிப்பாடே குஜராத் கலவரங்கள். அந்தக் கூட்டத்தின் இன்னொரு முகமே ராமன் பாலம் என்பது போன்ற குரூரமான கூச்சல், மற்றொரு முகமே பாபர் மசூதி இடிப்பு! இவர்கள் இந்து மதத் தாலிபன்கள்! அவர்களோ முசுலிம் மதக் காவிகள்!

மதம் மக்களுக்குத் தேவையென்றும், அதுதான் நன்மார்க்கத்துக்கான வழிகாட்டியென்றும், ஒழுக்க நெறிக்கு ஊன்றுகோல் என்றும் பொதுவாக இதோபதேசம் செய்பவர்கள் அந்தக் கருத்துகளின்மீது மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டனர்.
மதக் காரணங்களுக்காக உலகில் மனித ரத்தம் சிந்தப்பட்ட அளவுக்கு, வேறு காரணங்களுக்காகச் சிந்தப்பட வில்லை என்பதுதான் வரலாறு.

அவரவர்களின் வேத நூல்களில் பேசப்படும் மென்மையான `குரலுக்கும்’, யதார்த்தமான நடப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை நாடு அனுபவத்தில் கண்டுகொண்டுதானிருக்கிறது.
மதத்தை அறவே தூக்கி எறிய முடியாவிட்டால், அந்தந்த மதத்துக்குள் இருக்கும் கல்வியாளர்களும், சமூகக் கவலை யாளர்களும் ஒரு மேசைமுன் அமர்ந்து நிதானமாகக் கருத்துகளைப் பரிமாறக் கடமைப்பட்டுள்ளனர். காலத்துக்கேற்ற வடிவங்களைக் கொடுக்க முன்வர வேண்டும். அடிப்படை வாதம் என்கிற எரிமலை வீச்சிலி ருந்து மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்று பொறுப்பாகச் சிந்திக்காவிட்டால், செயல்வடிவம் கொடுக்காவிட்டால், ஒரு முடிவை ஏற்படுத்தாவிட்டால், ஒட்டுமொத்தமாகவே அந்த எரிமலை எரித்து முடித்துவிடும், எச்சரிக்கை!

"சிவாஜி' தடை கோரி வழக்கு...!

ஏவிஎம்மின் பிரம்மாண்ட தயாரிப்பான ரஜினியின் சிவாஜி படத்தை தடை செய்ய வேண்டும்; ரூ.50 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் சத்தியமூர்த்தி என்னும் காங்கிரஸ்காரர் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரது நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சிவாஜி படத்தில் காட்சி சித்தரிக்கப்பட்டிருப்பதாக தன் மனுவில் அவர் கூறியிருக்கிறார். கல்லூரி கல்விக்கு கட்டாய நன்கொடை வசூலிப்பது சம்பந்தமாக படத்தில் ஒரு காட்சி இடம் பெறுகிறது. தனியார் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கும் படத்தின் வில்லனுடன் (சுமன்) நாயகன் (ரஜினிகாந்த்) சந்தித்து உரையாடும் ஒரு காட்சியின் பின்புலத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இருவரின் படங்கள் மாட்டப்பட்டுள்ளன.

வில்லன் பின்னணியில் இப்படி அரசியல் பெருந்தலைவர்கள் இருவரின் படத்தை காட்டியிருப்பது அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகும்; அவப்பெயர் ஏற்படுத்துவது ஆகும். ஆகவே படத்தை திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், ரூ.50 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தன் மனுவில் அவர் கூறியிருக்கிறார்.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர், சென்னையில் உள்ள மத்திய தணிக்கை குழு, நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், இயக்குனர் ஷங்கர் மற்றும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு எதிராக சத்தியமூர்த்தி இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார்.

மனு நாளை விசாரணை வருகிறது

போக்கிரி விழா...-இணையதளங்கள் புறக்கணிப்பு

போக்கிரி படத்தின் 175 வது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு இணையதளங்கள் எதற்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. இதையடுத்து இந்த விழா குறித்த தகவல்களையும் படங்களையும் தங்கள் இணையதளத்தில் வெளியிடப் போவதில்லை என்று இணையதளங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இணைய தளங்களை ஏன் அழைக்கவில்லை? என்று போக்கிரி, மற்றும் விஜய் தரப்பில் விசாரித்தபோது, இந்த விழாவை படம்பிடித்து அதை மொத்தமாக இணையதளம் ஒன்றிற்கும், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கும் விற்றுள்ளதாகவும், அதனால்தான் அழைப்பு அனுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த Ôசந்திரமுகிÕ படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் கலந்து கொண்ட இந்த விழாவை ஒளிபரப்பும் உரிமையை, முன்னணி தனியார் தொலைக்காட்சி ஒன்று பெற்றிருந்தது. ஆனாலும், இணைய தளங்கள் அனைத்திற்கும் அழைப்பு அனுப்பிய சிவாஜி புரடக்ஷன், வரும்போது கேமிராவை எடுத்து வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. அதே நேரத்தில் சந்திரமுகி வெற்றி விழா செய்தியை இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

இந்த பெருந்தன்மையைதான் விஜயிடமும், போக்கிரி தயாரிப்பாளரிடமும் எதிர்பார்த்தார்கள் இணையதள நிருபர்கள். சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆசைப்படும் விஜய், தற்போதைய சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அதில் ஒன்றுதான் நாம் மேலே கூறிய சந்திரமுகி பட விழா.

நாற்காலி மட்டும் வேண்டும். அதை அடைவதற்கான நடைபாதை தேவையில்லை என்று விஜய் முடிவு செய்தால், அதை "விதி" என்று விட்டுவிட வேண்டியதுதான்!

தரவு- தமிழ்சினிமா

"நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்பவன் முட்டாள்" - அன்புமணி

சினிமாவால் போதைக்கு அடிமையாகின்றனர் .நடிகர்களின் கட்&அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்பவன் முட்டாள் - மத்திய அமைச்சர் அன்புமணி ஆவேசம்



சிதம்பரத்தில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பேசியதாவது:

நானும், எங்கள் கட்சியைச் சேர்ந்த வேலுவும் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றபோது, டாக்டர் ராமதாஸ் என்னை அழைத்து பேசினார். "இந்தியாவில் ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதி, சாதாரண ஏழைக்கும் கிடைக்க வேண்டும். அதற்காக நீ உழைக்க வேண்டும்" என்றார். அதற்கேற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஒருநாடு முன்னேற்றம் அடைய கல்வி வளர்ச்சி மிகவும் அவசியம். அந்த கல்வியை அளிக்கக்கூடிய ஆசிரியர்கள்தான் மக்கள் இதயங்களில் இடம் பிடிப்பார்கள். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல்வேறு கல்வி முறைகள் உள்ளன. முன்னேறிய நாடுகளில் உள்ளதைப்போல பிரதமரின் மகனும், விவசாயியின் மகனும் ஒன்றாக அமர்ந்து படிக்கக்கூடிய கல்விமுறை இந்தியாவில் வரவேண்டும். இந்தக் கல்வி முறைக்காக பல்வேறு துணைவேந்தர்களை அழைத்து பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

கிலோ கணக்கில் புத்தகங்களை தூக்கிக்கொண்டு மாணவர்கள் சுமைதாங்கிகளாக உள்ளனர். தமிழ்நாட்டில் தமிழில் படிக்க அதிக மாணவர்கள் பயப்படுகின்றனர். ஏனெனில் வேறு மொழிகளில் படித்தால் அதிக மதிப்பெண் பெற முடிகிறது. அந்த நிலை மாறிட, தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

சினிமாவால் இளைஞர்கள் மது மற்றும் போதை பழக்கத்துக்கு ஆளாகின்றனர். நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகமும், பீர் அபிஷேகமும் செய்யும் இளைஞர்கள் முட்டாள்கள். முன்னேற்றம் அடைந்த பல நாடுகளை பார்க்கும்போது நம்நாடு அது போல் வளரவில்லையே என்ற ஏக்கம் தோன்றுகிறது.

இவ்வாறு அமைச்சர் அன்புமணி பேசினார். விழாவில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலாம் எங்களுடன் வசிக்கவேண்டும் - அண்ணன் உருக்கம்

ராமேஸ்வரத்தில் தனி அறை தயார் பதவிக் காலம் முடிந்த பிறகாவது கலாம் எங்களுடன் வசிக்க வேண்டும் - அண்ணன் உருக்கம்




"நாட்டுக்காக வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்த அப்துல் கலாம், ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின் எங்களுடன் இருக்க வேண்டும்; அவருக்காக ராமேஸ்வரத்தில் அவர் பிறந்த வீடு தயாராக உள்ளது" என மூத்த சகோதரர் முத்துமீரா மரைக்காயர் கூறினார்.

ராமேஸ்வரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், பள்ளி படிப்பை முடித்து விட்டு ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை தொடர்ந்தார். பின்னர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, சென்னை எம்.ஐ.டி.யில் தனது படிப்பு காலங்களை முடித்தார். ஆராய்ச்சி பணியில் ஈடுபட்ட அவர், பொக்ரானில் அணுகுண்டு சாதனை நிகழ்த்தி சாதனை புரிந்தார். ஜனாதிபதி பதவி அவரைத் தேடி வந்தது.

திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையை நாட்டுக்காகவே அவர் செலவழித்து வருகிறார். 2020 இந்தியா வல்லரசாக ஆக வேண்டும் என்ற ஆசையோடு தனது ஜனாதிபதி பதவிக் காலத்தையும் அவர் முடிக்க போகிறார்.கலாமின் பதவிக்காலம் இந்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின், அப்துல் கலாம் தங்கள் மாநிலத்தில் தங்க வேண்டும் என பல மாநில முதல்வர்கள் போட்டிப் போட்டு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசும் நடைமுறைப்படி டெல்லியில் ஒரு பெரிய பங்களாவை அவருக்காக தயார்படுத்தி வருகிறது.

அப்துல் கலாம் பிறந்து வளர்ந்த வீடு, ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. அங்கு இவருடைய மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரக்காயர் குடும்பத்துடன் இருந்து வருகிறார். இந்த வீட்டின் மாடி தளத்தை அப்துல் கலாமுக்காக ஒதுக்கி தம்பியின் வருகைக்காக காத்திருக்கிறார்.

இது குறித்து முகமது முத்துமீரா மரைக்காயர் கூறியதாவது:

பள்ளி படிப்பு காலத்தை முடித்து சென்ற கலாம், ஆராய்ச்சி, அணுகுண்டு சோதனை, ஜனாதிபதி பதவி என வாழ்வின் பெரும் பகுதியை நாட்டுக்காகச் செலவழித்துள்ளார். அவர் இங்கு வந்து சென்றது சில நாட்களே. கடைசியாக கடந்த ஆண்டு, செப்டம்பர் 23ம் தேதி வீட்டுக்கு வந்து சென்றார்.

அவருடைய பதவிக்காலம் முடிந்த பிறகு, பிறந்த வீடான இங்கு வந்து தங்க வேண்டும். அவருக்காக மாடியில் ஒரு அறையை ஒதுக்கியுள்ளோம். இதுதொடர்பாக முடிவு எடுப்பது கலாமின் விருப்பத்தை பொறுத்தது. அவர் எடுக்கும் முடிவு எப்போதும் சரியாகவே இருக்கும். வாழ்வின் பெரும் பகுதியை வெளியூரில் கழித்த அவர், இனிமேல் எங்களுடன் தங்குவார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு முத்துமீரா கூறினார்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணம்


இந்திய அரசியலில் 'இளம் துருக்கியர்' என அறியப்பட்டவரும் சுதந்திர இந்தியாவின் பதினோறாவது பிரதமருமான திரு.சந்திரசேகர் இன்று காலை புது தில்லியில் அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார்.

புற்று நோயால் அவதிப்பட்டு வந்த திரு.சந்திரசேகர் கடந்த ஒரு வாரமாக தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

நேற்று மாலை பிரதமர் திரு.மன்மோகன்சிங் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தார்.