கொடநாடு எஸ்டேட்டில் நானும் பங்குதாரர்தான் - 'ஜெ'

கொடநாடு எஸ்டேட்டில் பங்குதாரராக இருக்கிறேன்; ஆனால், அந்த நிறுவனத்திலிருந்து இன்று வரை 1 ரூபாய் கூட லாபம் அடையவில்லை என்று தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

இதுபற்றி சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 1996-ல் கருணாநிதி அரசு என் மீதும் இன்னும் சிலர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தது. அதில், கொடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டது. அப்போது எனக்கும், எஸ்டேட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்தக் காலகட்டத்தில் கொடநாடு எஸ்டேட் என்னுடையது அல்ல. அது சசிகலாவுக்கும் வேறு சிலருக்கும் சொந்தமானது என்று கூறினேன். அதுதான் உண்மை. வழக்கின் தன்மையும் அது தான்.

சட்ட விரோதமான காரியம் அல்ல:பல ஆண்டுகள் கழித்து, 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் நானும் பங்குதாரராக இணைந்தேன்.

இதைப் பிரச்னையாக்கி, முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கருத்துகளுக்கு இரண்டு அறிக்கைகள் மூலம் பதில் அளித்தேன். அதில், எந்த இடத்திலும் கொடநாடு எஸ்டேட்டுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றோ, அதில் எனக்கு பங்கு இல்லை என்றோ சொல்லவில்லை.

தேயிலை எஸ்டேட் நடத்துவதோ, அங்கே வீடு கட்டி தங்குவதோ சட்ட விரோதமான காரியங்கள் அல்ல.

கொடநாடு எஸ்டேட் வரலாறு: கொடநாடு எஸ்டேட் 889.79 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

1993-ம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, கொடநாடு டீ எஸ்டேட் நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ஏறக்குறைய ரூ.7 கோடி அளவுக்கு இருந்தது.

இதையடுத்து, கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் பங்குதாரர்களாகச் சேர்ந்தார்கள். இதன்பின், 1994-ம் ஆண்டு இறுதியில் ராதா வெங்கடாசலம் மற்றும் அவருடைய உறவினர்கள் 2 பேர் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இணைந்தார்கள்.

1995-ம் ஆண்டு பிப்ரவரியில் கிரேக் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் மற்றும் அவரது உறவினர்களும், குடும்ப அறக்கட்டளைகளும் அந்த கம்பெனியின் பங்குதாரர்களில் இருந்து விலகிக் கொண்டார்கள்.

1995-ம் ஆண்டு ஜூனில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இணைந்தனர். 1996-ம் ஆண்டு செப்டம்பரில் சுதாகரன் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார்.

2000-ம் ஆண்டில் பங்குதாரர் ஆனேன்: இத்தனை மாற்றங்கள் செய்த பின்பும், எஸ்டேட் கடன்களை செலுத்த முடியவில்லை. இந்த எஸ்டேட் நிறுவனத்தை சீரமைக்க வேண்டும் என்ற நோக்கில் 2000-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்ந்தேன்.

லாபமோ, ஆதாயமோ பெறவில்லை: கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்தபோது, என்னுடைய முதலீடு ரூ.1 கோடியே 80 லட்சம். இது, கணக்கில் காட்டப்பட்டு வருமான வரித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. அச்சமயத்தில் கொடநாடு எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.6 கோடியே 60 லட்சம் அளவுக்கு கடன் இருந்தது.

2004-ம் ஆண்டில் இருந்துதான் அந்த நிறுவனத்துக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்தது. கடந்த ஐந்தாண்டில் இந்த நிறுவனத்தில் இருந்து 1 ரூபாய் கூட நான் எடுத்துக் கொள்ளவில்லை.

எஸ்டேட் என்னுடையது அல்ல என்று நான் சொன்னது 1996-ல்தான். அப்போது எனக்கும் எல்டேட்டுக்கும் சம்பந்தம் இல்லை. கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் சேர்ந்தது 2000-வது ஆண்டு. அதன்பின், எஸ்டேட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் சொன்னதில்லை.

தேர்தலின்போது விலகினேன்: கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்த செலுத்த வேண்டி இருந்தது. இதனால், 2006-ம் ஆண்டு ஏப்ரலில் கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து விலகிக் கொண்டேன்.

விலகியபோது, நிறுவனத்தின் கணக்குகள் முடிக்கப்பட்டு, இழப்பில், அதாவது நஷ்டத்தில் என்னுடைய பங்காக நான் செலுத்த வேண்டிய தொகை ரூ.1 கோடியே 93 லட்சம் என்று மதிப்பிடப்பட்டது. ஆக, எஸ்டேட் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்ததில் எந்த லாபமும் அடையவில்லை. மாறாக, நிறுவனத்துக்கு நான் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ. 1 கோடியே 93 லட்சம் என்பதுதான் உண்மை.

தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது, கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் நான் பங்குதாரராக இல்லை. அதனால்தான் எனது வேட்பு மனுவோடு சமர்ப்பிக்கப்பட்ட சொத்து விவரத்தில் இதனைக் காட்டவில்லை. ஆகவே, எந்தத் தவறும் நடைபெறவில்லை. எந்த உண்மையையும் மூடி மறைக்கவில்லை.

மீண்டும் சேர்ந்தேன்: கொடநாடு எஸ்டேட் நிறுவனம் தொடர்ந்து பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது, மீண்டும் இணைந்தால் நல்லது என மற்ற பங்குதாரர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த 2006 ஜூனில் மீண்டும் பங்குதாரராக இணைந்தேன். இதுவரை இருந்து வருகிறேன் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

0 comments: