ஸ்ரீகாந்த் விவாகரத்து வழக்கில் புது சிக்கல்

மனுவை வாபஸ் பெற்றார் ஸ்ரீகாந்த்



வந்தனாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ஸ்ரீகாந்த் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாததால் மனுவை அவரே திரும்பப் பெற்றார்.
நடிகர் ஸ்ரீகாந்த்துக்கும், தொழிலதிபர் சாரங்கபாணி மகள் வந்தனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கிடையே, வந்தனாவின் சகோதரர் மீது மோசடி புகார்கள் இருப்பதாக செய்திகள் வெளியானதால், ஸ்ரீகாந்த்தின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். ஆனாலும் ஸ்ரீகாந்த்துடன்தான் வாழ்வேன் என்று வந்தனா பிடிவாதமாக கூறிவந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இரவு திடீரென ஸ்ரீகாந்த் வீட்டுக்கு தனது பெற்றோருடன் சென்ற வந்தனா, அங்கேயே தங்கப் போவதாக தெரிவித்தார். தனக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிப்ரவரி 7-ம் தேதியே திருமணம் நடந்துவிட்டதாக சொல்லி, அதற்கான போட்டோ ஆதாரங்களையும் வெளியிட்டார்.

வந்தனா புகாரைத் தொடர்ந்து போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என அஞ்சிய ஸ்ரீகாந்த், முன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த வந்தனா மீது நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீகாந்த் குடும்பத்தார் கூறியதால் வந்தனாவும் முன்ஜாமீன் பெற்றார்.

வீட்டை விட்டு வந்தனா வெளியேற மறுத்துவரும் நிலையில், ஐகோர்ட் வளாகத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டுக்கு கடந்த வாரம் ஸ்ரீகாந்த் வந்தார். வந்தனாவிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதில், வந்தனா தன்னை கொடுமை செய்ததாகவும், அவர் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததால் தனக்கு அதிக மனவேதனை ஏற்பட்டதாகவும் அதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நேற்று வரை பதிவாகாமல் இருந்தது. மனுவில் குறைபாடுகள் உள்ளதால் அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதையடுத்து, அந்த மனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப நல கோர்ட்டுக்கு நேற்று தனது வக்கீலுடன் வந்தார். பதிவு செய்யப்படாமல் இருந்த தனது விவாகரத்து மனுவை திரும்ப பெற்றுச் சென்றார். விவாகரத்து முடிவில் உறுதியாக இருக்கும் ஸ்ரீகாந்த், ஓரிரு நாட்களில் புதிய மனுதாக்கல் செய்வார் என தெரிகிறது.

0 comments: