'விடுதலை' தலையங்கம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பரிதாபம்!




அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரிகளும் ஒரு மனதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெண் வேட்பாளர் ஒருவரைத் தேர்வு செய்துள்ளனர்.சில நாள்களாகவே நிலவி வந்த குழப்பம், இந்த அறிவிப்பின்மூலம் விடைபெற்று விட்டது. நாட்டின் மிக உயர்ந்த பதவி, அரசியல் சர்ச்சைக்குள் சிக்கிக் கொள் ளாமல், தேர்வு செய்யப்படக் கூடிய ஓர் ஆரோக்கியமான சூழலும் மலர்ந்தது. உலக நாடுகளும் இந்தியாவின் இந்தத் தேர்வை மெச்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், எதிர்க்கட்சியாக இல்லாமல் எதிரிக்கட்சியாகச் செயல்படத் துடிக்கும் பா.ஜ.க., இந்தப் பிரச்சினையில் தேவையில்லாத ஒரு முடிவை எடுத்திருப்பதன் மூலம், கவுரவமாக நடந்துகொள்ளும் ஆரோக்கியம் அதனிடம் இல்லை என்பதை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

ஓர் எதிர்க்கட்சியாகச் செயல்படுவது அரசியலில் தவிர்க்க முடியாததுதானே என்கிற விவாதம் முன்வைக்கப்படுமேயானால், அது என்ன செய்திருக்க வேண்டும்? பா.ஜ.க., மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளின் சார்பில் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) ஒரு வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக நிறுத்தி வைத்திருக்கவேண்டும்.ஆனால், பா.ஜ.க., என்ன செய்தது? தமது கட்சியைச் சார்ந்த நாடறிந்தவரான பைரோன்சிங் ஷெகாவத்தை தமது கட்சியின் வேட்பாளராக அறிவிக்காமல், சுயேச்சையாக நிறுத்த முயலுவது, பா.ஜ.க., சங் பரிவாரத்துக்கே உரித்தான தந்திரமும் வெளிப்படையற்ற தன்மைக்குமான எடுத்துக்காட்டாகும்.

துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஷெகாவத்தும் தம் ஜாதியைச் சேர்ந்தவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து ஆதரவு தேட முயற்சித்ததும், அவர் எந்த அளவு குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் என்பதை வெளிப்படுத்தி விட்டது. ஒருக்கால் அவர்கள் வலியுறுத்தும் இந்துத்துவாதனத்துக்கு அது பொருத்தமானதாக இருக்கக் கூடும்.
இரண்டாவது அணியின் `திருக்கூத்து’ இந்தத் தகைமையில் இருக்கிறது என்றால், மூன்றாவது அணி என்ற ஒன்று தள்ளாடித் தள்ளாடி, தாங்களும் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்ளும் ஒரு முயற்சியில் ஈடுபட்டு இருப்பது, யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத வெளிறிப்போன விரக்தியின் முகத்தைக் காட்டிக் கொண்டு விட்டது.

தற்போது குடியரசுத் தலைவராக இருக்கக் கூடிய கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில், மதிப்புக்குரியவராக விளங்கும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பொறுப்பில் நீடிப்பதில் ஆர்வத்தைக் காட்டவில்லை. தனது கல்விப் பயணத்தை மீண்டும் தொடர இருப்பதாக அறிவித்து விட்டார். இந்த நிலையில், அவரை வேட்பாளராக அறிவிக்க முயன்றிருப்பது மூன்றாம் அணியின் முதிர்ச்சியின்மையைத் தான் படம் பிடிக்கிறது. அப்படியே அவரை அறிவிப்பதாக இருந்தாலும் அவரின் கருத்தையறிந்து அல்லவா அறிவிக்கவேண்டும்?

மதிப்பிற்குரியவராக விளங்கிய ஒருவரை தங்களின் ஆற்றாமைக்குப் பலியாக்க நினைப்பது அறிவுடைமை யாக இருக்க முடியுமா?தேவையில்லாமல் அவர் பெயரை இழுத்து அவருக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதுதான் மிச்சமாகும்.57 ஆண்டு குடியரசில் பெண்ணொருவர் குடியரசுத் தலைவராக வரவேற்கும் பண்பும், பக்குவமும் இல்லாதவர்கள் எப்படி மக்களுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்க முடியும்? இவ்வளவுக் காலம் பதவியில் இவர்களும் இருந்திருக்கிறார்களே என்றுதான் ஆச்சரியமாக நினைக்க வேண்டியுள்ளது.

0 comments: