மாணவர் சிசேரியன் செய்த விவகாரம் ,டாக்டர்களான தாய், தந்தை கைது.

மணப்பாறை மாணவன் சிசேரியன் செய்த வழக்கில் டாக்டர் தம்பதிகளை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் போலீஸ் ஸ்டேஷனில் தீவிர விசாரணை நடக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் டாக்டர் முருகேசன். இவரது மனைவி டாக்டர் காந்திமதி. இவர்களது மகன் திலீபன்ராஜ். கடந்த மே மாதம் மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவர் கழக கூட்டத்தில் பேசிய டாக்டர் முருகேசன், தனது 14 வயது மகன் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் செய்ததாகவும், ஒரு சாதனை முயற்சிக்காக இது செய்யப் பட்டதாகவும் கூறினார். அப்போது அதுபற்றிய ஒரு சிடியையும் போட்டுக் காண்பித்தார். இதை பார்த்த மற்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். டாக்டர் முருகேசனின் இந்த செயலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்சி கலெக்டர் ஆசிஷ் வச்சானி உத்தரவின்பேரில் ஆர்டிஓ ரமணிதரன் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு டாக்டர்கள் முருகேசன், காந்திமதி, இவர்களது மகன் திலீபன்ராஜ், ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தாங்கள் ஆபரேஷன் செய்தபோது, திலீபன்ராஜ் உடன் இருந்து கவனித்ததாக வாக்குமூலம் அளித்தனர். ஆனால் சிடியை பார்த்த டாக்டர்கள், ஆபரேஷனை திலீபன்ராஜ் செய்தது உண்மை என எழுத்து மூலமாக வாக்குமூலம் அளித்தனர்.
பின்னர் ஆஸ்பத்திரியிலிருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுபற்றிய விசாரணை அறிக்கையை கலெக்டர் ஆசிஷ்வச்சானியிடம் ஆர்டிஓ ரமணிதரன் நேற்று மாலை வழங்கினார்.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் டாக்டர் முருகேசனின் வீட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், கோபிநாத் பாண்டியன் மற்றும் போலீசார் டாக்டர் வீட்டுக்கு சென்று முருகேசன், காந்திமதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 20 நிமிட விசாரணைக்கு பின்னர் தம்பதிகள் இருவரையும் அவர்களது காரில் ஏற்றிய போலீசார் இருவரையும் மணப்பாறை அருகே உள்ள வளநாடு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், டாக்டர் தம்பதிகளிடம் ஆர்டிஒ தலைமையிலான அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், முக்கிய ஆதாரமாக கருதப்படும் சிடி கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் போலீசாரின் உதவியை கேட்டுள்ளனர். எனவே தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றுள்ளனர் என்றார்.
விசாரணை அறிக்கையில் டாக்டர் தம்பதிகளை கைது செய்வதற்கான அனைத்து ஆதாரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை பகுதியில் வைத்து அவர்களை கைது செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று கருதிய போலீசார் அவர்களை வளநாடு அழைத்து சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
டாக்டர் தம்பதிகள் இருவரும் அழைத்து செல்லப்பட்டதை கேள்விப்பட்ட நிருபர்களும், போட்டோகிராபர்களும் காரை பின்தொடர ஆரம்பித்தனர். கார் வளநாடு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி செல்வதை கேள்விப்பட்ட அவர்கள் அங்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் வழிமறித்து தடுத்தனர். இது தொடர்பாக டிஐஜி அசோக்குமார் தாசிடம் புகார் செய்யப்பட்டது. அவர் தலையிட்ட பின்னர் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment