எழுத்தாளர்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு - எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என தனது எழுத்துகளின் மூலம் தமிழக மக்களின் மனங்களுடன் மிகுந்த நெருக்கத்தில் இருப்பவர். `பாபா', `சண்டைக்கோழி', `உன்னாலே உன்னாலே' முதலிய படங்களுக்கு வசனம் எழுதியவர். தற்போது ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கும் `தாம் தூம்' படத்திற்கும், இயக்குநர் லிங்குசாமியின் `பீமா' படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார். அவரிடம் நடந்த சிறிய உரையாடல்...

நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?

குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்தது போல்தான் நாம் அனைவரும் வாழ்க்கையைப் புரிந்து வைத்துள்ளோம். எனது வீட்டிற்கு எதிரில் இருக்கும் மரமும், நான் ஆஸ்திரேலியாவில் பார்த்த மரமும் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். அவை ஒரே பூமியில்தான் வேரூன்றி இருக்கின்றன என்ற உண்மையை மறந்து விடுகிறோம். இப்படி வாழ்க்கையை ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொள்ள, நான் புரிந்து கொண்டதை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ளத்தான் எழுதுகிறேன்.

நாவல், சிறுகதை எழுதுவதற்கும், திரைப்பட வசனம் எழுதுவதற்கும் என்ன வேறுபாடு?

நாவல், சிறுகதைகளை நான் முழுக்க முழுக்க எனக்காகத்தான் எழுதுகிறேன். விருப்பப்பட்டால் மட்டுமே அதை நான் வெளியிட்டு மற்றவர்கள் படிக்க முடியும். ஆனால் திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி. அதில் ஒரு பகுதியாக இயக்குநரின் கதாபாத்திரங்களுக்கு வசனம் எழுதி கொடுக்கும் பொறுப்புதான் என்னுடையது. எனவே அடிப்படையில் இரண்டுமே வெவ்வேறு துறைகள்.

ஒரு எழுத்தாளர் சினிமாவில் வந்து என்ன சாதிக்க முடியும்?

திரைப்பட வசனங்கள் மூலம் நான் நினைக்கும் சில விஷயங்களை சொல்ல முடியும் என நினைக்கிறேன். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி சுவாரஸ்யமான வசனங்களையும் எழுத முடியும். உதாரணமாக `தாம் தூம்' படத்தில் பாதிக்கதை பொள்ளாச்சி பகுதிகளிலும், மீதிக் கதை ரஷ்யாவிலும் நடக்கிறது. ரஷ்யர்கள் கதாநாயகனிடம் பேசும் போது, ரஷ்ய மொழி புரியாவிட்டாலும் படம் பார்ப்பவர்களுக்கு புரியும் வகையில் வசனங்களை அமைத்துள்ளேன்.

சண்டைக்கோழி படத்தில் "வா! வந்து அருவாள வீசிப்பாரு'' என்று தென்மாவட்ட பேச்சுவழக்கில் வசனம் அமைத்திருப்பீர்கள். ஆனால் `உன்னாலே உன்னாலே' படத்தில் மேல்தட்டு மக்களின் வசனங்களை எழுதியிருக்கிறீர்கள். இப்படி பல்வேறு தரப்பு வசனங்களை எழுதுவதில் சிரமம் இல்லையா?

நான் வசனம் எழுதப்போகிற கதாபாத்திரங்களின் வாழ்வியல் சூழல், குணநலன் என வேர் வரை ஆய்வு செய்து பிறகுதான் வசனம் எழுதுகிறேன். கிராமங்கள் எனக்கு நன்கு அறிமுகமானவை. பொருளாதார ரீதியில் வசதியான இளைஞர்களிடம் பழகி இருக்கிறேன். எனவே அவற்றை எழுதுவது சிரமமாக இல்லை. வெளிவர இருக்கும் `பீமா' படம் நிழல் உலக தாதாக்களின் கதை என்பதால் அதற்கு தகுந்தபடி வசனம் எழுதி இருக்கிறேன்.

வசனங்கள் எழுதுவதற்கான வரையறை என்ன?

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு, வசனங்களுக்கும் பின் ராமகிருஷ்ணன் என்னும் எழுத்தாளன் மறைந்திருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படாதபடி எழுதுகிறேன். படத்தில் கதாபாத்திரங்கள் மிகையில்லாத வசனங்களை பேச வேண்டும். அதில் எனது புத்திசாலித்தனத்தைப் புகுத்த மாட்டேன். இதுதான் நான் கடைப்பிடித்து வரும் வரையறை.

புதுமைப்பித்தன், பாரதிதாசன் என முந்தைய தமிழக எழுத்தாளர்கள் சினிமாவில் நுழைந்து அதில் வெற்றி பெறவில்லை. `எல்லா நதியும் கடலில் கலப்பது போல எழுத்தாளர்களின் முடிவான ஆசை சினிமாதான்' என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

புதுமைப்பித்தன் சினிமாத்துறைக்கு வந்ததன் பின்புலம் வேறு. அவரது நண்பர் பி.எஸ்.ராமையா போன்றவர்கள் அப்போது சினிமாத்துறையில் இருந்தார்கள். பாரதிதாசன் திராவிட இயக்கத் தலைவர்களான அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் சினிமாவில் இருந்ததால் ஈர்க்கப்பட்டு சினிமாத்துறையில் ஈடுபட்டார். நான் சினிமாவிற்கு வந்த பாதை வேறு.

கதை என்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறதோ அங்கு நான் செல்வேன். கதைக்கான எல்லா வடிவங்களையும் முயற்சித்து பார்த்த நாம் ஏன் சினிமாவிலும் முயற்சித்து பார்க்கக்கூடாது? என்று தோன்றியதன் விளைவாக நான் வசனம் எழுத வந்தேன்.

தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு மரியாதை கிடையாது என்ற கருத்து உள்ளதே?

என்னைப் பொறுத்தவரையில் நான் இந்தக் கருத்தை மறுக்கிறேன். தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களை விட, மக்களுக்கு திருவள்ளுவர், கம்பர் போன்ற புலவர்களைத்தான் அதிகம் தெரியும். அவர்களை மக்கள் இன்றும் போற்றி வருகிறார்கள். அதைப்போல் பாரதி, ஜெயகாந்தன் என தமிழ்நாட்டின் எழுத்தாளர்களுக்கு மக்களின் மனதில் நீங்காத இடம் உண்டு.

எழுத்தாளர்கள் என்றால் கோபக்காரர்கள், சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் என்ற கருத்தும் உள்ளதே?

இதுவும் தவறான கருத்தாகும். எழுத்தாளர் என்பவர் எழுதும் போது மட்டும்தான் வேறு மனிதர். மற்றபடி அவரும் சாதாரணமானவர்தான். எழுத்தாளர் மக்களுக்காக என்ன எழுதியிருக்கிறார், அது மக்களை எந்த அளவிற்கு சென்றடைந்துள்ளது என்பதைப் பொறுத்துதான் மக்கள் எழுத்தாளரை மதிக்கிறார்கள். மக்களைப் பற்றி கவனமோ, கவலையோ கொள்ளாத எழுத்தாளர்களை மக்களும் மறந்து விடுவார்கள். எனவே மக்கள் எழுத்தாளர்களிடம் சாதாரணமாகவே பழகி வருகிறார்கள்.

ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீச்சு உடைய எழுத்தாளர்கள் இல்லாதது ஏன்?

உண்மைதான். ஆனால் ஜெயகாந்தனின் பின்புலமும், அவர் எழுதிய காலம் வேறு. அதற்கு பிறகான காலம் வேறு. அவருக்கு அரசியல் இயக்கங்களுடன் தொடர்பிருந்ததாலும், ஒரு போராளியாக இருந்த காரணத்தாலும் மக்களை சென்றடைய முடிந்தது. ஆனால் இப்போது ஊடகங்கள் பெருகிவிட்டன. எழுத்தாளர்கள் சொல்ல விரும்பும் பிரச்சினைகளை இப்போது ஊடகங்கள் எழுதி, விவாதித்து விடுகின்றன. இதனால் எழுதுவதற்கான விஷயங்களும் சுருங்கிவிட்டதும் இதற்கு ஒரு காரணம்.

உங்களின் எழுத்துகள், சகித்து கொண்டு வாழ வேண்டிய, தவறு நடக்கும்போது தட்டி கேட்க முடியாமல் வேடிக்கைப் பார்த்துவிட்டு பிறகு புலம்புகிற நடுத்தரவர்க்க மனநிலையின் வெளிப்பாடாக இருப்பது ஏன்?

நான் வாழ்வது நடுத்தர வர்க்கச் சூழல்தான். எனது சொந்தக்காரர்கள், என்னைச் சுற்றி வாழ்பவர்கள் என எல்லோரும் நடுத்தர வர்க்கமாக இருக்கிறார்கள். எனவேதான் மேலேயும் போகமுடியாமல் கீழேயும் வரமுடியாமல் இடையில் தவித்து மிதக்கிற நடுத்தர மக்களின் வாழ்வையும், ஆசையையும்தான் பெரும்பாலும் நான் பதிவு செய்கிறேன்.

உதாரணமாக ஒருவரைப் போட்டு போலீஸ்காரர் அடித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு முந்தைய நிகழ்வும் எனக்குத் தெரியாது, அதற்கு அடுத்த நிகழ்வும் எனக்கு தெரியாது. இந்நிலையில் இடையில் போய் நுழைந்து சிக்கலில் மாட்ட விரும்பவில்லை. தவறை தட்டிக்கேட்க நான் ஒரு `ஆக்டிவிஸ்ட்' இல்லை. எனவே அந்நிகழ்வை பதிவு செய்வதோடு இருந்துவிடுகிறேன்.

தமிழ் சினிமா தொடாத கதை வடிவங்கள் இருக்கின்றதா?

ஏகப்பட்டவை உண்டு. நமது வரலாற்று நாயகர்கள், சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாழ்வை நாம் திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தவில்லை. இந்தியில் `மங்கள் பாண்டே', `பகத்சிங்' என்று சுதந்திர போராட்டத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கிறார்கள். தமிழில் வாஞ்சிநாதனின் வாழ்க்கை, அவர் ஆங்கிலேய கலெக்டரை சுட்டுக்கொள்ள போட்ட திட்டம் போன்றவற்றை நாம் படமாக எடுத்தால் வணிக ரீதியாகவும் அப்படம் வெற்றி பெறும். அதைப்போல பெண்களை நாயகிகளாக கொண்ட படங்கள் தமிழில் அதிகம் வரவில்லை. பதினைந்து வயதுக்குள்ளான சிறுவர்களின் வாழ்க்கை... இப்படி தமிழ் சினிமா தொடாத எத்தனையோ கதை வடிவங்கள் உண்டு.

வசனத்திற்கு அடுத்தபடியாக படங்களை இயக்கும் எண்ணம் உண்டா?

நான் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை மட்டுமே யோசித்து அதில் கவனம் செலுத்துவேன். அடுத்தகட்ட திட்டங்களைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. நாளையே நான் இயக்குநராகவும் ஆகலாம் அல்லது சினிமா வேண்டாமென்று ஒதுங்கியும் விடலாம்.

2 comments:

June 26, 2007 at 7:39 AM selventhiran said...

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு, வசனங்களுக்கும் பின் ராமகிருஷ்ணன் என்னும் எழுத்தாளன் மறைந்திருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படாதபடி எழுதுகிறேன். படத்தில் கதாபாத்திரங்கள் மிகையில்லாத வசனங்களை பேச வேண்டும். அதில் எனது புத்திசாலித்தனத்தைப் புகுத்த மாட்டேன். இதுதான் நான் கடைப்பிடித்து வரும் வரையறை - பிரமாதம்

June 26, 2007 at 7:52 AM கதிரவன் said...

இந்தப் பேட்டியைப் பதிவு செய்ததற்கு நன்றி !

//வாழ்க்கையை ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொள்ள, நான் புரிந்து கொண்டதை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ளத்தான் எழுதுகிறேன்//

நல்ல விளக்கம்.

இந்தப்பேட்டி எந்தப் பத்திரிக்கையில் வெளியானது ?