நான் பகடை காயா?- கலாம்

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை வைத்து இந்த நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் நடத்தும் அரசியல் விளையாட்டில், தான் ஒரு பகடைக்காயாக இருக்க விரும்பாததாலும், மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவி, அரசியல் மனமாச்சரியங்கள் காரணமாக பந்தயப் பொருளாக மாறிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தாலும் இனி போட்டியிடுவதில்லை என்று வெள்ளிக்கிழமை அப்துல் கலாம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னமும் அதே மன நிலையிலேயே இருப்பதையே சனிக்கிழமை சந்திப்பின்போதும் அவர் வெளிப்படுத்தினார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள் அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து 40 நிமிஷம் உரையாடினர். அப்போது, தேர்தலில் மீண்டும் போட்டியிட மறுத்துவிட்டது ஏன் என்று கேட்டபோது, ""போதும், போதும்; இனி போட்டியிட மாட்டேன்'' என்று பதில் அளித்தார்.

மக்கள் பவனம்: கடந்த ஐந்து ஆண்டுகளில் ராஷ்டிரபதி பவனத்தை, மக்கள் பவனமாக அனைவரின் ஒத்துழைப்போடு மாற்றிவிட்டேன். இந்த மாளிகை நாட்டுக்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இந்த இடம் தொடர்பாகவோ, இதில் குடியிருக்க வருகிறவர் (குடியரசுத் தலைவர்) தொடர்பாகவோ எந்த சர்ச்சையும் ஏற்படக்கூடாது. அது நாட்டின் கெüரவத்தையே தாழ்த்திவிடும். போட்டி போடவும், அதில் வெற்றியை ஈட்டவும் இது சாதாரணமான பதவி அல்ல.

குடியரசுத் தலைவர் தேர்வு என்பது அரசியல் நடவடிக்கை அல்ல; எனவே எந்தவித அரசியல் நடவடிக்கைக்கும் உள்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகையின் மாண்பைக் குறைக்க நான் விரும்பவில்லை.

அடுத்து குடியரசுத் தலைவராக வருகிறவர் நல்லவராக இருக்க வேண்டும்; அப்படிப்பட்டவர்தான் வருவார். அவருடைய வருகை, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலும் புகழ் சேர்க்கும்.

""மக்களின் (மனம் கவர்ந்த) குடியரசுத் தலைவர்'' என்றே என்னை எல்லோரும் நினைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆதாயம் தரும் பதவி மசோதா: ""இரட்டை உறுப்பினர் பதவி'' என்றும் அழைக்கப்படும், ""ஆதாயம் தரும் பதவியை'' வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக்கோரும் விவகாரம்தான் என்னைச் சிக்கலில் ஆழ்த்திய விஷயமாகும். அதிலும், அரசியல் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக்கேட்டு அதன்படியே நடந்தேன். எனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது மேலும் சில விளக்கங்கள் பெறுவது அவசியம் என்று கருதியதால் நாடாளுமன்றத்துக்கு அதை மீண்டும் திருப்பி அனுப்பினேன். அதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. பிறகு நாடாளுமன்றம் அதன் மீது விவாதம் நடத்தி, சில வழிகாட்டு நெறிகளையும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

உயிரி எரிபொருள்: பெட்ரோலுடன் உயிரி-எரிபொருளைக் கலப்பது தொடர்பான முடிவு, எனது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்று நான் கருதுகிறேன். உயிரி-எரிபொருளில் ஓடுமாறு கார்களை நம்நாட்டில் தயாரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிபொருள் நமக்குத் தேவை என்பதற்காக, பெட்ரோலில் உயிரி-எரிபொருள் (தாவரங்களிலிருந்து எடுத்தது) 10% அளவு வரை சேர்க்கப்படலாம் என்று அரசு இப்போது அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது' என்றார் கலாம்.

வாஜ்பாய், மன்மோகன்: எனது பதவிக்காலத்தில் வாஜ்பாய், மன்மோகன் சிங் என்ற இரு பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். ஒருவர் முடிவுகளை எடுப்பதில் வல்லவர் என்றால், மற்றொருவர் இயல்பாகவே வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது என்று மனம் திறந்து பாராட்டினார் அப்துல் கலாம்.

0 comments: