Monday, June 25, 2007
சென்னையில் அணுஆயுத கப்பல்!
அமெரிக்காவின் அணு ஆற்றல் போர்க்கப்பல் ஜூலை முதல் தேதியில் சென்னைக்கு வந்து, அங்கு நான்கு நாள்கள் இருக்கும்.இந்தக் கப்பலுக்கு யு.எஸ்.எஸ்., நிமிட்ஜ் என்று பெயர். ஓல்டு சால்ட் (பழைய உப்பு) என்றும் அதை அழைப்பார்கள். அமெரிக்க நாட்டின் நியூபோர்ட் நகரில் கட்டப் பட்ட இக்கப்பல் 1975 மே 3 இல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது அட்மிரல் செஸ்டர் நிமிட்ஜ் என்பவர், பசிபிக் மாக்கடலில் கடற்படைத் தளபதியாக இருந்தவர். அவர் நினைவாக இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
மணிக்கு 30 (கடல்) மைல்கள் வேகத்தில் இந்த அணு ஆற்றல் கப்பல் செல்லும். 1988 இல் சியோல் உலக (ஒலிம்பிக்) விளையாட்டின்போது, பாதுகாப்புத் தருவதற்காக இதைக் கொரியா நாட்டின் கடற் கரையில் நிறுத்தியிருந்தார்கள்.
இந்தக் கப்பலில் விமானங்களை நிறுத்துவதற்கு எனத் தனியாக விமானத்தளம் இருக்கிறது. 4.5 ஏக்கர் பரப்புள்ள அந்தத் தளத்தில் இருந்து 75 போர் விமானங்கள் பறந்து சென்று செயல்படலாம். 2003 ஏப்ரலில், இக்கப்பலின் ஓடு தளத்தில் இருந்து விமானங்கள் புறப்பட்டு, ஈராக்கைத் தாக்கின.
இந்த நிமிட்ஜ் போர்க் கப்பல் இப்பொழுது மேற்கு ஆசியாவில் உள்ள பாரசீக வளைகுடாவில் இருந்து வருகிறது. இதில் 6000 மாலுமிகள் இருக்கிறார்கள். மூன்று ``கடல் குருவி’’ ஏவுகணைகள் மற்றும் வெவ்வேறு வகையான பீரங்கிகள் பல இதில் உள்ளன. அவற்றுடன் மூன்று வகையான போர் விமானங்கள் பலவும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தக் கப்பலுக்குள் இருக்கும் இரண்டு அணுஉலைகள், இதற்கு வேண்டிய ஆற்றலை அளிக்கின்றன.
அச்சம் பரவியது ஏன்?
சென்னைத் துறைமுகத் தொழிலாளிகளும், இந்திய நீர்ப் போக்குவரத்து ஊழியர் பேரவையும் இந்தக் கப்பல், இந்தியாவைச் சேர்ந்த கடல் எல்லைக்குள் வருவதைத் தடுத்து நிறுத்தக் கோருகிறார்கள். இந்தக் கப்பல் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என அஞ்சுகிறார்கள்.
அச்சத்தின் காரணம், துறைமுகக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் உள்ள விசயம்தான்.
எந்த வகையான நெருக்கடியையும் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி அந்தச் சுற்றறிக்கை அலுவலர்களைக் கேட்டுக் கொள்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் ஆகியோரைக் கொண்ட அணி ஒன்றை உருவாக்கிட முதன்மை மருத்துவ அலுவலர் (சி.எம்.ஓ.) கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார். எதிர்பாராத ஆபத்து ஏற்பட்டால், தேவை யான மருந்துகள் அணு ஆற்றல் துறையால் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
நீர்ப் போக்குவரத்து ஊழியர் பேரவையின் பொதுச்செயலாளர் டி. நரேந்திர ராவ், மத்திய அமைச்சுச் செயலாளருக்கும், கப்பல் மற்றும் துறைமுகக் கழகத் தலைவருக்கும் மடல் வரைந்துள்ளார். அதில், "அணு ஆற்றல் கப்பலில் ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால், அதனால் உண்டாகும் கதிர் வீச்சு சென்னை மாநகரையும், அண்டை மாநிலங்களையும் அழித்துவிடும்’’ எனக் கூறப்பட்டிருக்கிறது.
வெளிப்புற நங்கூரம் பாய்ச்சும் இடத்தில் கப்பல் நிறுத்தப்படும். அதைச் செலுத்துவோர், சிறு படகுகளில் துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். இருப்பினும், கப்பலில் உள்ள இரண்டு அணு உலைகளால் ஆபத்து ஏற்படும் எனப் பேரவையினர் கருதுகிறார்கள்.
Labels:
அறிவிப்பு
Subscribe to:
Post Comments
0 comments:
Post a Comment