'கல்கி' தலையங்கம்

நெரிபடுகிறது நீதியின் குரல்வலை




ஆர்ஜன்டீனா தேசத்து நீதிபதி, நமது சி.பி.ஐ.க்கு வைத்துள்ள குட்டு நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்ல, நடுநிலையான, அரசு சாரா அமைப்பாக இயங்க வேண்டிய சி.பி.ஐ.யை இனி எந்த விஷயத்துக்குமே நம்ப முடியாது என்கிற முடிவுக்கு நம்மை வரச் செய்கிறது.

போ·பர்ஸ் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த
ஒட்டாவியோ குவாட்ரோச்சியை முதலில் தப்பவிட்டது சி.பி.ஐ. அவரது மேல்நாட்டு வங்கிக் கணக்கை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, ஓசைப்படாமல் நீக்கி, அத்தனை பணத்தையும் அவர் வேறு தேசத்துக்குக் கொண்டு செல்ல சௌகரியம் செய்து கொடுத்தார் ஒரு மத்திய அமைச்சர்! அரசின் கவனத்துக்குக் கொண்டு வராமல் அமைச்சர் தன்னிச்சையாக இயங்கிவிட்டதாகத் தெரிவித்தார் பிரதமர்! சர்வதேச போலீஸ் குவாட்ரோச்சிக்கு வலை விரித்ததன் அடிப்படையில் ஆர்ஜன்டீனாவில் அவரை போலீஸ் கைது செய்து இந்தியாவுக்குத் தகவல் தந்தது. இதன் பிறகே வேறு வழியின்றி அவரை விசாரணைக்கு அழைத்து வர சி.பி.ஐ. மனு செய்தது! அந்த முயற்சியில் படுதோல்வியும் அடைந்திருக்கிறது!

தோல்விக்குக் காரணம் சி.பி.ஐ.யின் திறமையின்மை என்பதைக் காட்டிலும் திட்டமிட்ட முயற்சியின்மை என்றே கூற வேண்டும். வெறும் கண்துடைப்புக்காக ஒரு மனு தயாரித்தளித்து, ஆர்ஜன்டீன நீதிபதியின் வன்மையான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது சி.பி.ஐ. நீதிபதி, கண்டனம் தெரிவித்ததோடல்லாமல், எதிர்த்தரப்புக்கு வீண் செலவு ஏற்படுத்தியதற்காக நஷ்ட ஈடும் அபராதமும் விதித்திருக்கிறார்.

வரி செலுத்தும் அப்பாவி இந்திய குடிமக்கள், போ·பர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குவாட்ரோச்சி முறைகேடு செய்து கோடிகோடியாக சம்பாதித்ததைச் சகித்துக் கொண்டதோடு, இப்போது சி.பி.ஐ.யின் மோசடி காரணமாக விளைந்துள்ள அபராதச் செலவையும் குவாட்ரோச்சிக்குக் கொடுத்து அழ வேண்டும்!

ராஜீவ்காந்திக்கும் போ·பர்ஸ் ஊழலுக்கும் தொடர்பு இருப்பதை
ஊர்ஜிதப்படுத்தக் கூடிய விசாரணைகள் அனைத்துமே அரசியல் செல்வாக்கினால் தடைபடுத்தப்பட்டு வந்துள்ளன; அல்லது பூசி மெழுகப்பட்டு வருகின்றன. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிவிட்டது சி.பி.ஐ. குற்றம் சாட்டப்பெற்ற அரசியல்வாதி அல்லது அவரது கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், வழக்குகள் உடனே வாபஸ் பெறப்படுகின்றன; அல்லது கிடப்பில் போடப்படுகின்றன. தப்பித் தவறி வழக்கை எடுத்து நடத்தினாலும், குற்றவாளி தப்புவதற்கு வசதியான விதத்தில் அது நடத்தப்படுகிறது. எதிர்கட்சியினர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு சி.பி.ஐ. விசாரணை ஆரம்பமாகிறது!



இப்படி எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்ட சி.பி.ஐ.தான் மதுரை தினகரன் அலுவலகத் தாக்குதல் வழக்கையும் விசாரித்துக் கொண்டிருக்கிறது; ஜெயலலிதா பேரில் உள்ள குற்றச்சாட்டுகளையும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததுமே ‘தாஜ் காரிடார்’ வழக்கு கிடப்பில் போடப்படுகிறது. முலாயம் சிங் பேரில்
விசாரணை தொடங்க ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது.

நீதித்துறையைக் கடைசி நம்பிக்கையாக நாம் கொண்டிருக்கிறோம். ஆனால், வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் கண்துடைப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டால் நீதி ஜெயிப்பதற்குப் பதிலாக அதன் குரல்வளை நெரிக்கப்படுகிறது. வஞ்சகம்தான் ஜெயிக்கிறது.

0 comments: