இடைத்தேர்தல் முடிவும் எண்ண ஓட்டமும்!
மதுரை மேற்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அபார வெற்றி பெற்று இருக்கிறது. அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க.; தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளைக் கூட்டினாலும், அதனையும் விஞ்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர்.
இந்த இடைத்தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லையென்றாலும், ஆளும் கட்சி வேட்பாளர் தோல்வி கண்டால், `மக்களிடம் ஆளும் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது; நம்பிக்கையை இழந்துவிட்டது; எனவே, பதவி விலகுக!’ என்று கூப்பாடு போட ஆரம்பித்து விடுவார்கள். இப்பொழுது அந்தக் கேள்விக்கே இடம் இல்லாமற் போய்விட்டது.
கடந்த முறை அ.இ.அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதியை அது இழந்திருக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கதாகும். அதுவும் கடந்த முறை பெற்ற வாக்குகளில் சரி பாதியை இழந்து பரிதாப நிலையில் தலைவிரிகோலமாய் நிற்கிறது.
இதற்குக் காரணங்கள் என்ன? மாநிலத்தை ஆளும் தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சி காங்கிரஸ் என்பது; மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தது. இவ்விரண்டு ஆட்சிகளும் மக்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டக் கூடியவைகளாக இருக்கின்றன.குறிப்பாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க., கடந்த ஓராண்டுக் காலத்தில் சாதித்து இருப்பவை அசாதாரணமானவை.
பதவியையேற்ற அந்த இடத்திலேயே மக்கள் சமுத்திரத்தின் முன் தேர்தலில் தாம் கொடுத்த வாக்குறுதியை நிலை நாட்டும் வண்ணம் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்பதற்கான கோப்பில் முதல் கையொப்பமிட்டாரே! பிறகு செய்தும் காட்டினாரே!
அன்றாடக் கூலிகளாய் அல்லல்படும் மக்களின் வாழ்வில் பால் வார்த்த செயல்பாடல்லவா அது! தி.மு.க., அரசு எந்த மக்களின் பால் கண்ணோட்டம் செலுத்துகிறது என்பதற்கான அடையாளமாகவே இது கருதப்படுகிறது.
சித்தாந்த அளவில் என்று சொல்லும்பொழுது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான செயல்பாட்டுக்கு ஒப்பம்!
கொள்கை, மக்கள் வளர்ச்சி என்கிற இரு தண்டவாளங்களில் கலைஞர் தலைமையிலான ஆட்சி மக்கள் நல அரசு என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாகச் செயல்பட்டு வருகிறது.
மிக முக்கியமான பிரச்சினையாகத் தலையெடுத்து நிற்பது வேலையின்மையாகும்.
கலைஞர் தலைமையிலான ஆட்சியைப் பொறுத்தவரை தொழிற்சாலைகள், ஆலைகள் தொடங்கப் படுவதற்கு இருகரம் நீட்டிக் காத்திருக்கும் அரசாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டும் உள்ளன; தொடங்கப்படவும் உள்ளன. இதனால் உற்பத்திப் பெருக்கம் என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கத்தில் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டக்கூடிய சூழ்நிலையாகும்.
படித்துவிட்டு வேலை கிட்டாமல் தத்தளிக்கும் இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை அளிப்பது என்பது இந்தியாவிலேயே தி.மு.க., ஆளும் தமிழ்நாட்டில் மட்டும்தான்! ஒரு மாநில அரசு இதனைச் செய்வது என்பது, மனந்திறந்த பாராட்டுக்குரியதாகும்.
ஆளும் கட்சி இந்தச் சிறப்பில் இருக்கிறது என்றால், அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய அ.இ.அ.தி.மு.க.,வின் செயல்பாடோ அறிவார்ந்த முறையில், பொறுப்பான தன்மையில் இல்லாமல் எதிரிக்கட்சியாகவே செயல்படுகிறது.
சட்டமன்றத்திற்குச் செல்வதே அமைதியைக் குலைப்ப தற்குத்தான், வெளி நடப்புச் செய்வதற்குத்தான் என்கிற தண்டவாளங்களில் அது ஓடிக் கொண்டு இருக்கிறது.
இவர்களை எதிர்க்கட்சியாக அனுப்பியதேகூட தவறுதான் என்று வாக்களித்த நாட்டு மக்கள் நினைத்து வருந்தும் அளவுக்கு, தான்தோன்றித்தனமாக அது செயல்படுகிறது. மதுரை மேற்கு இடைத்தேர்தல் உணர்த்தும் பாடம் இதுதான்.
தே.மு.தி.க.,வைப் பொறுத்தவரை, அதன் வளர்ச்சி நாட்டுநலன் கண்ணோட்டத்தில் கவலையைத் தரக் கூடியதாக இருக்கிறது.கொள்கைக் கோட்பாடுகள் ஏதும் இன்றி சினிமாத்தனத்தின் வக்கிரத்தில் வீழ்ந்துவிடும் விட்டில் பூச்சிகளாக பதினெட்டு வயது இளைஞர்கள் ஆகக் கூடிய ஆபத்தை சமுதாய, அரசியல் களத்தில் உள்ள பொறுப்பான பெருமக்கள் உணர்ந்து, ஆக்க ரீதியான வழிகாட்டுதலைத் தரவேண்டியது அவசியமான கடமையாகும்.
எல்லாமே சினிமா என்பது ஆரோக்கியமானது அல்ல, சித்தாந்தம் இருக்குமானால் விமர்சிக்கலாம். அது இல்லாத இடத்தை என்ன செய்வது!ஊடகங்களுக்கும்கூட இதில் பொறுப்பு இருக்கிறது, எச்சரிக்கை!
0 comments:
Post a Comment