குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபா பாட்டீலை ஆதரிப்பது என்று பால் தாக்கரே தலைமையிலான சிவசேனைக் கட்சி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரி கட்சிகளின் ஆதரவில் பிரதிபா பாட்டீல் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசேனை எடுத்துள்ள இந்த முடிவு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், பைரோன் சிங் ஷெகாவத்துக்கும் பெருத்த பின்னடைவாகும்.
சிவசேனை கட்சிக்கு மகாராஷ்டிர சட்டப் பேரவையில் 56 எம்.எல்.ஏ.க்களும் மக்களவையில் 15 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 3 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த அனைவரின் வாக்குகளுடைய மொத்த மதிப்பு 22 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரதிபாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
சிவசேனை கட்சி நிர்வாகிகள் கூட்டம் தலைவர் பால் தாக்கரே தலைமையில் மும்பையில் திங்கள்கிழமை நடந்தது. பிறகு இந்த முடிவு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது.
"பைரோன் சிங் ஷெகாவத் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அல்ல; சுயேச்சையாகத்தான் போட்டியிடுகிறார். சுயேச்சையாக நிறுத்தப்பட்டால்தான் பிற அணியிலிருந்தும் அவரை ஆதரிப்பார்கள் என்று கூறுகிறார்கள். இந்த மாதிரியான நேர்மையற்ற அரசியல் பேரத்தை நாங்கள் விரும்பவில்லை.
"நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த எவருமே உயர் பதவிக்கு வந்ததே இல்லை. முதல்முறையாக இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை கட்சிக் கண்ணோட்டத்தில் கோட்டைவிட சிவசேனை தயாராக இல்லை.
"மகாராஷ்டிரம் என்ற தனி மாநிலம் ஏற்பட்டதன் பொன்விழா ஆண்டு நெருங்கி வருகையில் மாநிலத்துக்கு இப்படியொரு கெüரவம் கிடைப்பதை சிவசேனை இழக்க விரும்பவில்லை. பிரதிபா குறித்து ஊழல் புகார்களையும் வேறு புகார்களையும் கூறி, புழுதிவாரித் தூற்ற வேண்டாம் என்று தேசிய ஜனநாயக கூட்டணியை, குறிப்பாக பாரதீய ஜனதாவை கேட்டுக் கொள்கிறோம்.
மராட்டியர்களின் மொழி, கலாசாரம், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் காப்பதற்காகத்தான் சிவசேனை பாடுபடுகிறது. எனவே பிரதிபாவை ஆதரிப்பது என்ற முடிவை கட்சி எடுத்துள்ளது' என்று சிவசேனை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
3 கட்சிகள் ஆதரவில்லை: பைரோன் சிங் ஷெகாவத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 3 கட்சிகள் ஆதரிக்கவில்லை என்பது திங்கள்கிழமை அக் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்புமனு தாக்கலுக்கு வராததிலிருந்து தெரிகிறது.
சிவசேனை, திரிணமூல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் வேட்புமனு தாக்கலுக்கு வரவில்லை.
""பிரதிபாவும் வேண்டாம், ஷெகாவத்தும் வேண்டாம், அப்துல் கலாமே தொடரட்டும்'' என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மம்தா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருந்தாலும், ஒப்புக்கொண்டபடி அக் கட்சியைச் சேர்ந்தவருக்கு உரிய நேரத்தில் முதல்வர் பதவியை மாற்றித் தருவார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. எனவே அவர்கள் சார்பில் யாரும் வராததால், ஷெகாவத்தை அவர்கள் ஆதரிப்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.
0 comments:
Post a Comment