தி.மு.க. தலைவர் முதல்வர் கருணாநிதி, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை அறிவித்து, அவருக்கு ஆதரவு திரட்டிட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினர் தொடங்கியுள்ள முயற்சியை ஆதிக்க வெறி கொண்டவர்கள், ஆதரித்துத்தான் தீர வேண்டுமென்று நம்மவர் எவரும் கட்டாயப்படுத்தவில்லை.
ஆனால், மூத்த தலைவர்கள் கூடி, அறிவித்துள்ள முடிவை மிகக் கேவலமாக விமர்சிக்கவும், கேலி செய்யவும் முனைந்துள்ளவர்களின் போக்கினைக் கண்டு சிரிப்பும் வருகிறது, சீற்றமும் பிறக்கிறது. சிரிப்பை அடக்கிக் கொண்டு, சீற்றத்தையும் தவிர்த்து, சிந்தனைக்கு இடமளித்தால் சில உண்மைகள் பேருரு எடுக்கும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.
பிரதிபா பாட்டீல் வேட்பாளர் என்று நமது அணி அறிவித்துள்ளதை "ஜோக்" என்று ஆணவத்துடன் விமர்சிக்க ஐந்தாறு பிரபல தலைவர்கள் சென்னையில் மூன்றாவது அணியாகக் கூடினார்கள் என்றால், அடடா, என்னே நாகரீகம்-எத்தகைய அரசியல் பண்பாடு?- எப்படிப்பட்ட ஐனநாயக மேம்பாடு? நமது கூட்டணியை "ஹ்யூமர் கிளப்" என்றே ஒருவர் வர்ணித்து எழுதியிருக்கிறார்.
பல பெயர்கள், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளருக்கென தேர்வு செய்யப்பட்டு கடைசியாகத்தான் பிரதிபா பெயர் அறிவிக்கப்பட்டதாக ஏதோ அதிசயத்தைக் கண்டுபிடித்தது போலவும் எழுதுகிறார்கள், செய்தி வெளியிடுகிறார்கள்.
எந்தவொரு தேர்தல் என்றாலும், வேட்பாளர் யார் என்பதை ஒரு முறைக்குப் பலமுறை பரிசீலிப்பது என்பது பொறுப்புடையோர் செயலாகத்தான் பல காலமாக இருந்து வருகிறது. அந்தப் பரிசீலனை இப்போதும் நடைபெற்றது.
60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராக வரக்கூடிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதும், அவரை வேட்பாளராக தேர்வு செய்ததும் எந்த வகையில் "ஜோக்" வரிசையில் வைக்கப்படக் கூடியது என்பதை அந்த "வசவாளர்கள்" விளக்கிட முன்வருவார்களா?
சரி, இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்திட தனக்கு விருப்பமே இல்லை என்றும், மீண்டும் கல்விப் பணியாற்றுவதில் தான் அக்கறையோடு இருப்பதாகவும் கூறி, மறுத்துரைத்த மாமனிதர் அப்துல் கலாமை, இப்போது மூன்றாவது அணியினர் வேட்பாளராக அறிவிக்கிறோம் என்று கூறி, அவர் ஒப்புதலுக்காக டெல்லியில் படையெடுத்துள்ளனர். அவரோ, வெற்றி உறுதி என்றால் பரிசீலிப்பேன் என்று கூறி, அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
அவரைப்பற்றி, அவர் குடியரசுத் தலைவராக 2002ம் ஆண்டு பொறுப்பேற்ற போது, அவரை வாழ்த்தி நான் எழுதிய கவிதையில் சில வரிகளை நினைவுகூர்ந்து நினைவூட்டுகிறேன்.
இராமேஸ்வரம் கடற்கரையில் மோதுகின்ற
அலைகள் கூட இன்று மலையளவு உயர்கின்றன
மகிழ்ந்து கூத்தடிக்கின்றன
நடுக்கடலில் காற்றழுத்தத்தின் விளைவு என
நானும் நீயும் கருதினால், அது தவறு
நாள்தோறும் கேட்கும் கடல்பாட்டல்ல இது
அலைகள் நடனம் அனுதினமும் கண்டுள்ளோம்.
அற்புதமாய் இன்று மட்டும் இந்த ஆனந்தக்கூத்து ஏன்?
மன்பதை ஆளும் விஞ்ஞானம்- இந்திய
மாநாட்டையும் ஆளப்போகிற தென்ற
மகிழ்ச்சியின் துள்ளலே, இதோ
மணல்மீது அலையின் நடனம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment