எட்டாம் நூற்றாண்டில் சர்ஜரி - 'சுஜாதா'

நம் பழைய நூல்களில் மருத்துவக் குறிப்புகள் பல இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாம் நூற்றாண்டில் சுஸ்ருதர் எழுதிய நூல்களில் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். தமிழிலக்கியத்தில் எனக்குத் தெரிந்தவரை முதல் அறுவை சிகிச்சையை பற்றிக் குறிப்பிட்டவர் குலசேகர ஆழ்வார்.

இவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரமன்னர். இன்றைய கொல்லம் நகரம் அன்று கொல்லி என்று அழைக்கப்பட்டது. அதைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னர் திடவிரதனின் மகன் குலசேகரர் பட்டத்துக்கு வந்து, மெள்ள மெள்ள அரசியல் நாட்டம் குறைந்து திருமாலின்பால் ஈர்க்கப்பட்டார் குலசேகரர். அதற்குச் சாட்சியாக −இருப்பது இவரது ‘பெருமாள் திருமொழி’யின் 105 பாடல்களே.

இவற்றில் ஒன்றில்தான் இந்த சர்ஜரிக் குறிப்பு உள்ளது.

‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல், மாயத்தால்
மீளாத் துயர் தா¢னும் வித்துவக்கோட்டு அம்மா! நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே’
(மாயத்தால் - விளையாட்டாக, ஆளா- அடிமை செய்வதற்கு)

‘ஒரு மருத்துவன் கத்தியால் அறுத்துச் சூடு போட்டாலும் அவன் அதை நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் செய்வதால் மருத்துவன் மேல் நீங்காத அன்பு ஏற்படுகிறது. அதுபோல் விளையாட்டு போல் நீ எனக்கு விடாத துன்பம் தந்தாலும் உனக்கு அடிமை செய்ய உன் அருளையே எதிர்பார்த்துக் காத்திருப்பேன்’ என்று வித்துவக்கோட்டில் உள்ள பெருமானிடம் சொல்கிறார்.

வித்துவக்கோடு கேரளத்தில் பட்டாம்பியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருக்கும் உய்யவந்த பெருமாள் கோயில் என்று சொல்கிறார்கள். இதை இன்று தேடிச் சென்று கண்டுபிடிக்க முடிந்தால் குலசேகரன் என்ற மன்னனையும் இந்த அருமையான பாடலையும் நினைத்துக் கொள்ளலாம்.

வாளால் அறுத்துச் சூடுபோட்டு! அனஸ்தீஸியா வரும்வரை ஜனங்கள் பெருமாளை நினைத்துக்கொண்டுதான் வலியைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்..

0 comments: