ஜெயலலிதா மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் உத்தரவு
ஜெயலலிதா மீது வழக்குத் தொடருமாறு, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என விதிமுறை உள்ளது. ஆனால், 2001 சட்டப் பேரவைத் தேர்தலின்போது கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிபட்டி மற்றும் புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்த ஜெயலலிதா, தான் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல்களைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2001 சட்டப் பேரவைத் தேர்தலில் தவறான தகவல்களைக் கொடுத்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, திமுக எம்பி குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 6 வாரங்களுக்குள் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 13-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. தவறான தகவல்களைக் கொடுத்ததாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடர போதிய சான்றுகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குகளைப் பதிவு செய்யுமாறு புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"2001 சட்டப் பேரவைத் தேர்தலின்போது மேற்குறிப்பிட்ட 2 தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகளாகப் பணிபுரிந்தவர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டும், அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது தொடர்பாக அவர்களின் சொந்தக் கருத்தை தெரிவிக்குமாறு கூறியும் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு' தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
2001 சட்டப் பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, அரசமைக்குமாறு ஜெயலலிதாவை மே 2001-ல் அழைத்தார். இதைத் தொடர்ந்து அவர் முதல்வரானார்.
ஆனால், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என நவம்பர் 23, 2001-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. டான்சி வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் சிறிது காலம் முதல்வராகப் பதவி வகித்தார். பின்னர் ஆண்டிபட்டித் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா மார்ச் 2002-ல் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றார்.
0 comments:
Post a Comment