மதுரையில் ஒரு சி.எம்

ஹெல்மெட் அணிய வேண்டுமென்பதை மாநில அரசு கட்டாயமாக்கியது. சென்னையிலும், திருச்சியிலும் போலீஸ் மிகவும் தீவிரமாக அதை அமல்படுத்துவதைப் பார்த்த நிருபர், மதுரையில் ஜங்ஷனுக்கு எதிரே, ஹெல்மெட் இல்லாமல் சென்ற ஒருவரிடம் “ஏங்க ஹெல்மெட் கட்டாயம் இல்லையா?” என்று அப்பாவித்தனமாக கேட்க, வாகனத்தில் இருந்தவர் சொன்னார்: “எங்க சி.எம். இதைப் பற்றி ஒண்ணும் சொல்லல.”

நிருபருக்கு ஒன்றும் புரியவில்லை. “சி.எம்மா” என்று இழுக்க, “அட
புரியலையா? அழகிரி அண்ணன்தான் எங்க சி.எம்.” என்று கூலாகச் சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் விரைந்திருக்கிறார் அந்த நண்பர்.

மதுரையில் மட்டுமல்ல, மதுரையை ஒட்டிய சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், தேனி மாவட்டங்களின் ஆளுங்கட்சி வட்டாரங்களிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும், உச்சநிலை அதிகார மையமாகத் தெரிபவர் மு.க.அழகிரிதான். டிரான்ஸ்பர், போஸ்டிங், காண்ட்ராக்ட் என்று எதையெடுத்தாலும், ‘அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும்’ என்று நம்பிக்கை தொனிக்கும் வார்த்தைகள் கேட்பது சகஜம். இதுபோன்ற பேச்சுக்கள் கீழ்மட்ட அளவில் பரவ, பாமரர்கள் மத்தியிலும் ஒரு சி.எம்.முக்குரிய இமேஜுடன் வலம் வருகிறார்
அழகிரி.

அழகிரியின் இருபது வருட மதுரை வாசம், அவரை பல விதங்களில் மாற்றியிருக்கிறது. சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார மையமாகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்படும் சசிகலாவுக்கும்,அழகிரிக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. இருவரும் வீடியோ கேஸட் கடை வைத்திருந்தவர்கள்தான்.

“1985 - 86 காலகட்டத்தில் முரசொலி மதுரை பதிப்பை பார்த்துக்கொள்வதற்காக வந்தவர். ஒரு ஸ்கூட்டரில் சுற்றிக் கொண்டிருப்பார். பின்னர் முரசொலி நின்று போனது. அப்போதுதான் வீடியோ கடை துவங்கினார்” என்று சொல்கிறார் அவருடன் அந்த நாளில் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர்.

கிட்டத்தட்ட 1992 வரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார் அழகிரி. வைகோ பிரிந்தபோது பொன். முத்து ராமலிங்கம் உடன் சென்று விட, மதுரையில் கட்சி கலகலத்தது. களத்தில் குதித்த அழகிரி, வீடு வீடாகச் சென்று கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்து
கட்சியைப் பெரும் சரிவிலிருந்து மீட்டார். 1996-ல் கலைஞர் அரசு வந்தது அவருக்குச் சரியான ஏற்றத்தைக் கொடுத்தது. அதன்பின் மதுரை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் அழகிரிக்கு என்று கட்சி ரீதியாக ஒரு பின்பலம் உருவாயிற்று.

கலைஞர் ஆட்சி நடந்த 1996 - 2001-ல் தாம் யாரும் தட்டிக் கேட்க முடியாத ஓர் அதிகார மையமாக இருப்பதை உணர்த்தியவர் அழகிரி.

2000-ம் ஆண்டு நெருக்கத்தில் தி.மு.க. சார்பில் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட காவிரி மணியத்தை, தான் சிபாரிசு செய்ததாகவும், ஆனால், தி.மு.க. தலைமை கேட்கவில்லை என்றும் சொன்னார் அழகிரி. இதன் விளைவாக மதுரையில் கலவரச் சூழல் ஏற்பட்டது. அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டன. “அழகிரி கட்சி உறுப்பினரே இல்லை” என்று அறிக்கை விட்டார் பொதுச்செயலாளர் அன்பழகன். இந்தக் காலகட்டத்தில் மறைந்த பழனிவேல் ராஜனுக்கும்
அழகிரிக்கும் உரசல்கள் ஏற்பட, கசப்புணர்வு வளர்ந்தது. கடுப்பில் இருந்த அழகிரி, பழனிவேல்ராஜன் உட்பட மூன்று தி.மு.க. வினர் 2001 தேர்தலில் தோற்கக் காரணமாக இருந்தார்” என்கிறார் ஒரு மூத்த உடன் பிறப்பு.

ஜெயலலிதா 2001-ல் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ஒரு சம்பவம், கட்சி மட்டத்தில் அழகிரியின் இமேஜை உயர்த்திவிட்டது. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நேரடி மேயர் தேர்தலில் தி.மு.க. ஜெயிக்க, துணை மேயரைத் தேர்ந்தெடுக்க மெஜாரிட்டி இல்லை. ஆனால் அழகிரி, எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் வளைத்துப் போட்டு, துணை மேயர் தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தார். அதே போல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பாக முழு மூச்சாக அச்சப்படாமல் பணியாற்றினார் அழகிரி.

இதற்கிடையே, அழகிரிக்கும் சிவகங்கை தா.கிருஷ்ணனுக்கும் இடையே மோதல் துவங்கியது. அழகிரி சிவகங்கை சிவராமனை உயர்த்தப் பார்த்தார். தா.கி.க்கு ஸ்டாலின் ஆதரவு இருந்தது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், டெண்டர், வேலை வாய்ப்பு என்று பல விஷயங்கள்... அதிகாலை வாக்கிங்கில் தா.கி. கொலை செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட அழகிரி ஒரு மாதம் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் இருக்கிறார்.

2004-ல் தி.மு.க. பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற, மீண்டும் அழகிரியின் செல்வாக்கு உயர்ந்தது. 2006 தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும். அடித் தளத்தை நன்கு உருவாக்கியிருந்த அழகிரி வசம் சட்ட அங்கீகாரமில்லாத, அதிகார மையம் முழுமையாக வந்து சேர்ந்தது. மாவட்ட ஆட்சியாளர்கள், போலீஸ் கமிஷனர்கள் என்று போஸ்டிங்கில் வர வேண்டுமென்றால், வந்து நீடிக்க வேண்டுமென்றால் அவரது தயவு தேவையாக இருந்தது.

திருச்சிக்கு அந்தப் பக்கம் உள்ள விவகாரம் என்றால் ‘அழகிரியை ஒரு வார்த்தை கேட்கவும்’ என்கிற எழுதப்படாத விதி உருவாயிற்று.

அழகிரி - ஸ்டாலின் மோதல் வரும் என்ற கிசுகிசுக்கள் உலவி வந்த சமயத்தில், தினகரன் விவகாரம் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்திவிட்டது. கலைஞரின் சட்டமன்ற பொன்விழாவுக்கு ‘முழுப் பாதுகாப்புடன்’ அவர் வந்து சென்ற விதம், ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தையும், கட்சியின் அரவணைப்பையும் உணர்த்தியிருக்கிறது.

தரவு- கல்கி

தினகரன் விவகாரம் இல்லையென்றால் தி.மு.க.வே இடைத்தேர்தல் களத்தில் குதித்திருக்கும். இப்போது காங்கிரஸ் நின்றாலும் அழகிரிக்கு இது கௌரவப் பிரச்னை. பிரசாரத்தில் கதர் சட்டைகளைவிட தி.மு.க. படையே முக்கிய இடம் வகிக்கிறது.

அதிகார பலம், பணபலம், ப்ளஸ் ‘தொண்டர்’ பலம் ஆகியவற்றோடு இடைத்தேர்தல் களத்தில் சுற்றி வருகிறார் அழகிரி. காங்கிரசுக்கு விழும் வோட்டுக்கள் உண்மையில் அழகிரிக்கு விழும் வோட்டுகளே!

0 comments: