சதி, சூது, சூழ்ச்சி, அராஜகம் வென்றது: ஜெயலலிதா

சதி, சூது, சூழ்ச்சி, அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் வென்று விட்டது என்று மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித் திருக்கிறார்.

இந்த தேர்தல் முடிவு செயற்கையான முடிவு. இது உண்மையான மக்கள் தீர்ப்பு அல்ல என்றும், ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்த தேர்தல் முடிவை கண்டு அண்ணா தி.மு.க. உடன்பிறப்புகள் சோர்வடைய வேண்டாம், மனம் தளர வேண்டாம். நிச்சயம் நமக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. மக்கள் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் மீறி அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.



மதுரை மேற்கு தொகுதி தேர்தல் முடிவு பற்றி அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வந்துள்ள முடிவு எதிர்பார்த்ததுதான். இப்போது வந்துள்ளது மக்கள் தீர்ப்பு அல்ல. இது தி.மு.கவினரின் திட்டமிட்ட சதி.

இந்தத் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடக்காது, அல்லது நடத்த முடியாது என்பதை உணர்ந்து தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரே இந்தத் தேர்தலை ரத்து செய்ய விரும்பினார். அதற்காக தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அவசரமாக டெல்லிக்கு அழைக் கப்பட்டார். தேர்தல் ரத்து செய்யப்படப் போகிறது அல்லது ஒத்தி வைக்கப்படப் போகிறது என்கிற அறிவிப்பு வெளியிடப் படுவதற்கு முன்பாக அதைத் தெரிந்து கொண்ட கருணாநிதி, எப்படியும் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்.

கருணாநிதியின் மிரட்டல்

தேர்தல் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ஒத்தி வைக்கப்பட்டாலோ, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்றும், இந்திய அரசியல் சாசனப்படி மாநில அரசு செயல்படவில்லை என்ற ஒரு பெரிய உண்மை பட்டவர்த்தனமாக நிரூபணம் ஆகி விடும் என்பதால், அதற்குப் பயந்து தேர்தலை குறித்த தேதியில் நடத்தியே ஆக வேண்டும்; இல்லாவிடில் ""தேர்தல் ஆணையம் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்'' என்று கருணாநிதி மிரட்டினார். கருணாநிதியின் வற்புறுத்தலால் சோனியா காந்தியும் இதில் தலையிட்டு இந்திய தேர்தல் ஆணையத் திற்கு நெருக்கடி கொடுத்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக மத்திய தி.மு.க. மந்திரி டி.ஆர். பாலு நேரில் சென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பயங்கரமாக மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவுடி பட்டாளத்துடன் அழகிரி

மு.க. அழகிரி சம்பந்தப்பட்ட, "தினகரன்' நாளிதழ் ஊழியர்கள் மூன்று பேர் படு கொலையால் மதுரை மக்கள் வெறுப் படைந்து தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து விட்டால், இந்தத் தோல்விக்கு மு.க.அழகிரி தான் முழு பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால், எல்லோரையும் மிரட்டி பணிய வைத்து எப்படியும் ஒரு செயற்கையான வெற்றியைக் காட்டி விட வேண்டும் என்று மு.க. அழகிரி கங்கணம் கட்டிக் கொண்டு தனது ரவுடி பட்டாளத் துடன் களத்தில் இறங்கினார்.

மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர காவல் துறை ஆணையர், தேர்தல் அதிகாரி உட்பட பல உயர் அதிகாரிகள் அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டாலும் கூட, மேலிருந்து கீழ் வரை எல்லாமே மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், அந்த அளவிற்கு மதுரையில் அரசு எந்திரம் கெட்டுப் போய், புரையோடிப் போய் இருப் பதாலும் தான், தேர்தலை நடத்த முடியாது என்ற நிலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் வந்தது. இதைத் தான் இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

சதி, சூது, சூழ்ச்சி, அராஜகம் வென்றது

நிலைமை சரியில்லை, தேர்தலை நடத்த முடியாது என்ற முடிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் வந்த பிறகு, அந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? மிரட்டலுக்கும், பலவிதமான அச்சுறுத்தல் களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் பணிந்ததே தவிர, மதுரையில் உள்ள நிலை மையில் எந்த மாற்றமும் ஏற்பட வில்லையே? கடைசி வரை மு.க. அழகிரி அங்கே தானே இருந்தார்? அதன் விளை வாகத் தான் இந்தத் தேர்தல் முடிவு. சதியும், சூதும், சூழ்ச்சியும், அராஜகமும், அதிகார துஷ்பிரயோகமும் வென்றுவிட்டது.

அண்ணா தி.மு.க. வேட்பாளருக்காக தேர்தல் பணியாற்றிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும், தோழமை கட்சி தலைவர் களுக்கும், தோழமை கட்சிகளின் தொண்டர் களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரத்தம் சிந்திய உடன்பிறப்புகள்

குறிப்பாக தேர்தல் பணியின் போது, எப்பாடுபட்டேனும் கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற் காக ரத்தத்தை சிந்திய மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர். ஜெயராமன், மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், கழக வழக்கறிஞர்கள் கோவிந்தன், சீத்தாராமன், தொழிற் சங்கத்தைச் சேர்ந்த முருகன், தேனி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.ஆர். தயாளன், போடிநாயக்கனூர் ஒன்றியக் கழகச் செயலாளர் எஸ்.எம். சற்குணம், மதுரை மாநகர் மாவட்டம், 34வது வட்ட கழக செயலாளர் சக்தி பாண்டியன், 27வது வட்டத்தைச் சேர்ந்த சந்துரு, அருண் போன்ற கழக உடன்பிறப்புகள் செய்த தியாகத்தை நான் என்றும் போற்றி நினைவில் வைத் திருப்பேன்.

செயற்கையான முடிவு

இந்த தேர்தல் முடிவால் கழக உடன் பிறப்புகள் சோர்வு அடைய வேண்டாம், மனம் தளர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இது உண்மையான தோல்வி அல்ல; ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பெற்ற செயற்கையான முடிவு. இது உண்மையான மக்கள் தீர்ப்பு அல்ல. மக்கள் நம்முடன் தான் இருக்கிறார்கள்; நமக்கு ஆதரவாகத் தான் இருக்கிறார்கள்.

விரைவில் நமக்கு நல்ல காலம் வரும்; இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்ற நம்பிக் கையுடன் தொடர்ந்து மக்கள் பணி யாற்றுவோம். ராவணனை வீழ்த்தவே முடியாது என்று உலகம் கருதிய போது ராமர் வந்தார், ராவணனை வீழ்த்தினார். கம்சனை வீழ்த்தவே முடியாது என்று உலகம் நினைத்த போது கிருஷ்ணர் வந்தார், கம்சனை வீழ்த்தினார். இரணியனை வீழ்த்தவே முடியாது என்று அனைவரும் கருதிய போது நரசிம்மர் வந்தார், இரணியனை வதம் செய்தார்.

கொடுங்கோல் ஆட்சி முடிவு வரும்

அதைப் போல, எந்தக் கொடுங்கோலனாக இருந்தாலும், எவ்வளவு தான் கொடூரமான கொடுங்கோல் ஆட்சி நடத்தினாலும், தீயவை அனைத்திற்கும் ஒரு நாள் முடிவு வந்தே தீரும். தர்மம் ஒரு நாள் நிலை நாட்டப்படும். நிச்சயமாக நமக்கு ஒளிமய மான எதிர்காலம் உண்டு. ஆகவே, செயற்கையான இந்த தேர்தல் முடிவை நினைத்து அண்ணா தி.மு.க. உடன்பிறப்புகள் வருந்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இத்தனை மிரட்டல்களையும், அச்சுறுத்தல் களையும் மீறி, அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியிருக்கிறார்.

2 comments:

June 29, 2007 at 11:27 AM தமிழன் said...

அம்மா சொன்னது சரிதான் ,

June 29, 2007 at 11:32 AM தமிழன் said...

தி மு க பயந்துபோயுள்ளது என்பது அவர்களுடைய செயல்களில் வெளிப்பட்டது.
உண்மையான ஜனநாயக உரிமைகளை மக்கள் அனுபவிப்பது இந்த் ஆட்சியில் பகற்கனவே.