கலைஞர் கடிதம்

`ஜோக்கர்’ அணி ஆக்குவதா?



அவர் ஒரு பெண்மணி -
கல்வித் தகுதி எம்.ஏ., எல்.எல்.பி. -
சமூக சேவகி, வழக்கறிஞராகத் தொழில் புரிந்தவர் -
1967 முதல் 1985 வரையில் மராட்டிய மாநிலத்து சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் -
1967 முதல் 1972 வரையில் மராட்டிய மாநில அரசாங்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மதுவிலக்குத் துறை, சுற்றுலாத் துறை, வீட்டு வசதித் துறை ஆகியவற்றின் துணை அமைச்சராகப் பணியாற்றியவர் -
1972 முதல் 1974 வரையில் மராட்டிய மாநில அரசின் சமூகநலத்துறை அமைச்சர் -
1974 முதல் 1975 வரையில் மராட்டிய மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் -
1975 முதல் 1976 வரையில் மராட்டிய மாநிலத்தில் மதுவிலக்கு, கலை பண்பாட்டுத் துறைகளின் அமைச்சர் -
1977 முதல் 1978 வரை மராட்டிய மாநிலத்தின் கல்வி அமைச்சர் -
1979 - 1980-இல் மராட்டிய மாநில சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் -
1982 முதல் 1985 வரையில் மராட்டிய மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் -
1983 முதல் 1985 வரையில் மராட்டிய மாநில சமூகநலத்துறை அமைச்சர் -
1985 - 1990 மாநிலங்களவை உறுப்பினர் -
1986 முதல் 1988 வரை மாநிலங்களவை துணைத் தலைவர் -
2004 நவம்பரில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநர் இத்தனை பதவிகளில் அமர்ந்து பணியாற்றியவர் என்பதுடன், மும்பையிலும், டில்லியிலும் பெண்களுக்கென தனியே விடுதிகளை ஏற்படுத்தியவர்,கிராமப்புற இளைஞர்களுக்காக ஜல்கோனில் பொறியியல் கல்லூரி ஒன்றினைத் தோற்றுவித்தவர்;`ஷ்ரம் சாதனா’ அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருந்தவர்;
அரசு சார்புள்ள மகிள விகாஸ் மகாமண்டல் என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்;
பார்வையற்றோருக்கென ஒரு தொழில் பயிற்சிப் பள்ளியையும், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கென ஒரு பள்ளியையும் தோற்றுவித்து நடத்தி வருபவர்;
பெண்களுக்கென ஒரு கூட்டுறவு வங்கியையே உருவாக்கியவர்;
நைரோபியிலும், போர்ட்டோரிகோவிலும் நடைபெற்ற சர்வதே சமூக நல மாநாடுகளில் கலந்து கொண்டவர்;
பெண்களின் நிலைபற்றி ஆஸ்திரியாவில் நடைபெற்ற மாநாட்டுக்கு பெண்களுக்குத் தலைமை தாங்கி அழைத்துச் சென்றவர்; அதைப் போலவே பல்கேரியாவில் நடைபெற்ற மாநாட்டிற்கும் அழைத்துச் சென்றவர்;
பீஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டவர்;
பெண்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொள்ளும் ஊர்காவல் படையை அமைத்தவர்;
பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மழலையர் பள்ளிகளை உருவாக்கியவர்;
ஆகிய இத்தனை பொது நலம் சார்ந்த பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றியவர் அவரைத்தான் தியாகத் திருவிளக்கு திருமதி சோனியா காந்தி அவர்களும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும், இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர்களும், இடதுசாரித் தலைவர்களும், தி.மு. கழகத்தின் தலைவராகிய நானும், மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் டில்லியில் கூடிக் கூடி விவாதித்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக இதுவரை ஒரு பெண்மணி அமையாத குறையை இந்த முறை நீக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டு; குடியரசுத் தலைவர் பொறுப்பு வகிப்பதற்கான வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளோம்.

அவரைத் தேர்ந்தெடுத்து இந்திய சுதந்திரத்தில் மகளிர்க்குரிய சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமென்று இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை படைத்தவர்கள் அனைவரையும் மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிற நேரத்தில், தேர்தல் களத்தில் நிற்கிற திருமிகு ஷெகாவத் அவர்கள்மீது நமக்குள்ள மரியாதையையும், மதிப்பையும் நினைவிற் கொள்கிறோம். போட்டி வேட்பாளர் என்பதற்காக அவரது அறிவாற்றலை அலட்சியப்படுத்தி; விமர்சிக்க மாட்டோம்.
ஆனால் சென்னையில் மூன்றாவது அணி என்ற பெயரால் ஒரு அணி கூடியது - அப்படிக் கூடுவது அவர்கள் உரிமை - அந்த அணி, ஒரு வேட்பாளரை அறிவிப்பதும் அதன் உரிமை - ஆனால் அதை விடுத்து;

திருமதி பிரதிபா பட்டீல் அம்மையார் அவர்களை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருப்பது `நல்ல நகைச்சுவை’ - `ஜோக்’ என்று அந்த மூன்றாவது அணியினர் கேலி செய்திருப்பது; அந்த அணியிலே உள்ள மூலவர்களின் தரத்தையும், தகுதியையும் குறைக்கக் கூடியதாகும்.

பெரியவர்கள்கூடி `பிள்ளையார் பிடிப்பார்கள்’ என்று எதிர்பார்த்தால்; அவர்கள் பிடித்தது பிள்ளையாராக இல்லையே?என்பதுதான் ஏமாற்றம் தரும் செய்தியாகும்.

பிரதிபா தேவி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது `நகைச்சுவை’ என்றால்; அப்படிச் சொன்னவர்கள்; ஒன்பான் சுவைகளில் ஒரு சுவையையும் அறியாதவர்கள் என்றே கருத வேண்டியுள்ளது. இலையிலிட்ட உண்டியின் அறுசுவை மட்டும் அறிந்தவர்கள் போலும் என வருந்திடவும் வேண்டியுள்ளது. குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பை `ஜோக்’ என மொழிந்து மூன்றாம் அணிக்கே `ஜோக்கர்’ அணி என்ற பெயர் சூட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்பது நமது தாழ்மையான கருத்து!

0 comments: