நதி நீருக்காக உண்ணாவிரதமிருப்பாரா கலைஞர்?-விஜயகாந்த் கேள்வி

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைத்தால் உண்ணாவிரதம் இருப்பதாக கூறும் முதல்வர் கருணாநிதி, நதி நீர் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருப்பாரா? என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

மதுரையில் மேற்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் சிவமுத்துக்குமரனுக்கு ஆதரவாக இந்திராநகர், ஆரப்பாளையம் கிராஸ், பாரதியார் ரோடு போன்ற பகுதிகளில் விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: இத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரசார் சோனியா படத்தை போட்டு ஒட்டு கேட்கவில்லை. மாறாக கருணாநிதி படத்தை போட்டுள்ளனர். காமராஜர் ஆட்சி அமைப்போம் என கூறும் காங்கிரசார், ஒரு காலத்தில் மூப்பனார் பிரதமராகாமல் தடுத்த கருணாநிதிக்கு பல்லக்கு துõக்குகின்றனர்.

தி.மு.க., என்றாலே தில்லுமுல்லு கட்சி தான். தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கொள்கைகளை சொல்லி ஓட்டு கேட்கவில்லை. பணத்தை கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைத்தால் டில்லியில் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதாக மத்தியமைச்சர் ஒருவர் கூறுகிறார். பாலாற்றில் அணை கட்டுவதை தவிர்க்கவும், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைஉயர்த்தவும், காவிரி பிரச்னையில் தமிழகத்திற்குரிய பங்கு கிடைக்கவும் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பாரா?

அ.தி.மு.க., தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு மக்கள் ஓட்டு போட்டது போதும். அரசியலில் புதிய சிந்தனை, கொள்கைகள் மலர தே.மு.தி.க.,வுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நான் சொன்ன சொல் மாற மாட்டேன். அதனால் தான் தெய்வத்தையும், மக்களையும் நம்பி தனித்து நிற்கிறேன். ஆனால் தி.மு.க., அ.தி.மு.க., மாறி மாறி கூட்டணி வைத்து கொள்கின்றன. தெய்வம் இல்லை என வெளியில் கூறும் கருணாநிதி மஞ்சள் துண்டை அணிந்து கொள்வதன் மர்மம் என்ன? எனவே மக்கள் சிந்தித்து இந்த இடைத்தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்த முடியும். இவ்வாறு பேசினார்.

வழிநெடுகிலும் அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தனர். குழந்தைகளுக்கு அவர் பெயர் சூட்டினார். மழை பெய்த போதும் ஏராளமான பெண்கள் அவரது பேச்சை கேட்டனர். அவர் இந்திராநகர் பகுதியில் பிரசாரம் செய்த போது கரிமேடு பகுதியில் அவரது மனைவி பிரேமலதா தனியாக பிரசாரம் செய்தார்.

0 comments: