வாஜி... வாஜி... வாஜி... சிவாஜி!
வாஜிகினா... வாஜிகினா
சிவாஜிகினா!
இது ஒரு பாட்டுக்குத் தொகையறா!
ஜாக்கிசானின் மார்க்கெட்டுக்கு மங்களம் பாடப்போகும் பாட்டுக்கு 100 கோடி தொகையறா!
நூறுகோடி + மக்கள் தொகையுள்ள இந்திய நாட்டில் நூறு கோடி வர்த்தகம். சினிமாவின் சூப்பர் ஜிகினா ரஜினி நடித்த சிவாஜியின் வித்தகம்! அமிதாப் + ஷாருக் ஒன்றுக்குள் ஒன்றாக −ணைந்து ‘அஷாமிருதாக்ப்’ என்ற ஹிந்தி படத்துக்குக்கூட அறுபது கோடிதான் வியாபாரம் ஆகுமென விநியோகஸ்தர்கள் முணுமுணுக்கிறார்கள்.
சிவாஜிக்கான எதிர்பார்ப்பு எப்படியிருந்தது என்றால்... சுனிதா வில்லியம்ஸ், விண்கலத்தின் கோளாறைச் சரி செய்து தரையிறங்க, சிவாஜிக்கு ரெண்டு டிக்கெட் லஞ்சமாக வேண்டுமென ‘புஷ்’ஷிடம் கேட்க, புஷ் - மன்மோகன் சிங் - ஏவி.எம்.சரவணன் மூவரும் இது சம்பந்தமாக ஓர் ஒப்பந்தத்தில் ஒப்பம் இட்டிருப்பதாகத் தகவல் கசிந்தது.
வழக்கம்போல, ரஜினி திருமலை வழியாக இமயமலை யாத்திரைக்குக் கிளம்ப, அங்கு இமயமலையையே காணவில்லையாம்! விசனத்துடன் ரஜினி விமானமேறி சென்னை திரும்பும் வழியில், கர்நாடகாவை கடக்கும்போது விமானம் எதன் மீதோ மோத... மூடியை மேற்புறமாய்த் தள்ளிவிட்டு நீள் செவ்வகக் கண்ணாடி வழியே பார்த்தால்... ரஜினியின் நீண்டகால நண்பர் என்ற பந்தா எதுவுமில்லாமல் முண்டாசுக் கட்டிக் கொண்டு ‘சிவாஜி’க்கான ரிசர்வேஷன் கவுன்ட்டரில் வியர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருக்கிறது இமயமலை! மலையளவு எதிர்பார்ப்போடு சிவாஜி ரிலீஸானது.
சிவாஜிராவ் சூப்பர் ஸ்டாராக திரு.பாலசந்தர் முதல் நிறைய காரணங்கள்... அதில் ஒருவர் திருமதி.லதா! அவருடைய பொறுமையும் அமைதியும் விட்டுக் கொடுக்கும் பாங்கும்தான் ரஜினி வாழ்க்கையில் ஏற்பட்ட எத்தனையோ சூறாவளி சுனாமிகளுக்கு சூ... மந்திரக்காளி சொல்லி விரட்டியது. அந்த அன்புச் சகோதரியின் அழைப்பின் பேரில் எனக்கு அந்த நாலாயிர திவ்யப் பிரபந்த தரிசனம் கிடைத்தது. (நாலாயிரத்துக்கு திவ்யமாக விலை போனது எங்களுக்கு கொடுக்கப்பட்ட நாலு டிக்கெட்டின் மதிப்பு). படம் தொடங்கக் காத்திருந்தோம். காத்திருத்தல் எப்போதுமே சுகம். பாவாடை சட்டையில் பார்த்த அத்தைப் பெண் பத்து வருடங் கழித்து வரப்போகிறாள். அவளை வரவேற்க ரயில் நிலையத்தில் வழி மீது விழி வைத்துக் காத்திருப்பது (விழியை யாரும் வழியில் மிதித்து விடாமல்), அந்த ரயில் பத்து மணி நேரம் தாமதமானாலும் காத்திருப்பது சொல்லி மாளா சுகம். வரப்போகும் அத்தை மகள் வத்தலும் தொத்தலுமாக வருவாளா? தெத்துப் பல்லும் நத்தை மூக்குமாக வருவாளா? தப்பித்தவறி தளதளன்னு, தக தகன்னு வருவாளா? எதுவுமே தெரியாம, கருவிழி கபடி ஆடக் காத்திருப்பது உலகளாவிய உவகை!
திரையுலகக் காத்திருப்பு திரை விலகக் காத்திருந்தபோது எனக்குள் ஏகப்பட்ட flash backs.எனக்கும் ரஜினி சாருக்கும் இடையே!
நானும் ரஜினி ரசிகன்தான்! ஆனால் நல்ல படங்களுக்கும் அவரது நல்ல நடிப்புக்கும். ‘முள்ளும் மலரும்’,‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘அவள் அப்படித்தான்’... இப்படி ‘பாட்ஷா’ வரை!
நடிகரை மீறி அவர் மிக எளிமையான மனிதர். அந்த எளிமைக்கு நான் அடிமை! என் திருமணத்தைப் பற்றி நான் அவரிடம்தான் முதன் முதலில் சொன்னேன்!
அந்தளவு என் வாழ்க்கையில் முக்கியமானவர். தனக்குத் தெரிந்த ஞானத்தையும் - புத்திசாலித்தனத்தையும் திரையிடாமல், ரசிகனுக்கு எது பிடிக்குமோ அதை மட்டுமே செய்யக்கூடிய புத்திசாலி!
நான் ‘சுகமான சுமைகள்’ எடுத்து நஷ்டப்பட்டு, வங்கியில் வாங்கிய கடனை தவணை முறையில் அடைக்க நெஞ்சடைக்கப் போராடிக் கொண்டிருந்தபோது ரஜினி சார் அழைத்தார். அடுத்து நான் தயாரிக்கும் படத்தில் அவர் ‘கெஸ்ட் ரோல்’ நடித்துத் தருவதாகவும், முக்கிய பாத்திரத்தில் என்னை நடிக்கவும் சொன்னார். அப்போதைய சூழ்நிலையில் அவர் கௌரவ தோற்றத்தில் நடித்தாலே குறைந்த பட்சம் சில கோடியாவது லாபம் பார்க்கலாம்.
எவ்வளவு உயர்ந்த மனம் இருந்தால் இப்படி ஓர் உதவி செய்ய முன் வருவார்! கூடவே ஒன்றும் சொன்னார். ‘SPM மாதிரி நான் கடமைப்பட்ட சிலபேரு கேக்குறாங்க... கெஸ்ட் ரோல் பண்ணச் சொல்லி... நான் யாருக்கும் பண்ணலை. ஆனா உங்களுக்குப் பண்ணித் தரேன்’ என்றார். அந்த நெகிழ்ச்சியில் யாருக்குமே தூக்கம் வராது. எனக்கும் வரவில்லை. இரவெல்லாம் யோசித்தேன்.
மறுநாள் வாஹினி ஸ்டூடியோவில் ‘பாட்ஷா’ படப்பிடிப்பு. மதிய வேளையில் போய் அவரைச் சந்தித்தேன். உணவுக்குப் பின் என் உணர்வைச் சொன்னேன். ‘எனக்குச் சின்ன வயசு. உடம்புல தெம்பும் மனசுல தன்னம்பிக்கையும் நிறைய இருக்கு. ஆனா, SPM சாரெல்லாம் இப்பவே வயசானவங்க - நீங்களும் கடமைப்பட்டிருக்கீங்க! அவங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பைக் குடுத்தீங்கன்னா அவங்க உங்களை தெய்வமாப் பார்ப்பாங்க! அதுமட்டுமில்லாம எனக்குள்ள பிரச்னைக்காக நீங்க படம் பண்ணாம, எனக்குள்ள திறமைக்காகவும் என்னுடைய ஸ்கிரிப்டுக்காகவும் என்னைக்காவது நீங்க படம் பண்ணா... ரொம்ப நல்லா... பெருமையாயிருக்கும்’ சொல்லி முடித்ததும் அவர் அமர்ந்திருந்த ரிவால்விங் சேர் தானாக என் திசைக்குத் திரும்ப, பார்வையாலேயே பெருமிதம் பொங்கப் பார்த்தார்.
அந்தப் பார்வை என் உயரத்தை உயர்த்துவதாகயிருந்தது. ஐயோ அதுவே... அந்த வினாடியில் எனக்குக் கிடைத்த பெருமையே, பல கோடி பெறும்!
இன்று வரை அதே உயரத்தில் நான்... அதே நட்போடு அவர்...
திரையில் டைட்டில் ஓடிக் கொண்டிருந்தது.
இணை தயாரிப்பு...
S.P. முத்துராமன்
அப்பாடா!
(தரவு-கல்கி)
4 comments:
சமீபத்தில் தான் இனி மேலும் ரஜினியின் ரசிகர் இல்லை என்று தெரிவித்திருந்தார். அது பற்றி ஏதாவது தெரியுமா?
ஆமா அதென்ன "cap technology"?
cap technology இஜிக்கொல்டு "cut and paste" technology. கணினித் துறையில இருக்கும் தாத்தா காலத்து டெக்னிக்.
என் மானம் காத்த பெத்தராயடு...நன்றி நன்றி..நன்றி...
எல்லாருக்கும் தெரியும்னு நெனச்சிருந்தேன்...நம்ம பொன்ஸ் கூட போன பதிவுல கேட்டாங்க...ஹி..ஹி...என்னத்தச்சொல்ல....
cap technology இஜிக்கொல்டு தமிழில் "ஒட்டுப்படை"
Post a Comment