சனி பெயர்கிறதா? - விடுதலை தலையங்கம்

அறிவியல் வளர்ந்தும் மனிதன் பக்திப் போதையில் சிக்கினால் அவன் காட்டு விலங்காண்டிதான். `எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது; உலக்கையைக் கொண்டு வா, கோவணம் கட்டி வருகிறேன் என்கிற நிலையில்தான் பக்திப் பைத்தியம் பிடித்த - படித்த மனிதர்களும்கூட அலைகிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு வெகுதூரம் போகவேண்டாம். நாளைய தினம் சனிப்பெயர்ச்சியாம் - பக்தர்கள் இலட்சக்கணக்கில் திருநள்ளாறு கோயிலுக்குச் சென்று தரிசிக்கப் போகிறார்களாம். அறிவியல் கண்டுபிடித்த ஏடுகளில் கிறுக்குகிறார்கள் -விஞ்ஞானம் அளித்த தொலைக் காட்சிகளைப் பயன்படுத்தி சனிப் பெயர்ச்சி நேரடி ஒளிபரப்பாம்!

புரோகிதக் கொள்ளைக்கு நல்ல அளவு வசதி செய்து கொடுப்பதுதான் இதுபோன்ற சரடுகள். அதில்கூட ஒருமைப்பாடு கிடையாது. பஞ்சாங்கங்களில் பலவகை உண்டே. முரண்பாடு இல்லாமல் என்ன செய்யும்? திருக்கணித பஞ்சாங்கம், சுத்த வாக்கிய பஞ்சாங்கம், கஞ்சனூர் பஞ்சாங்கம் என்று தொழில் போட்டிகள் அதிலும் உண்டு. இந்த ஆண்டுகூட ஜூலை 16 சனிப் பெயர்ச்சி என்ற ஒரு பஞ்சாங்கமும், இல்லை, இல்லை ஆகஸ்ட் 5 தான் சனிப் பெயர்ச்சி என்று இன்னொரு பஞ்சாங்கமும் பறைசாற்றுகின்றன. இரண்டு என்ன, ஆண்டு ஒன்றுக்கு இருநூறு சனிப் பெயர்ச்சிகள் என்று சொன்னாலும் - புரோகித வரும்படிதானே!

பக்தர்கள்தான் புத்தியைப் பறி கொடுத்தவர்கள் ஆயிற்றே -ஓர் ஆண்டுக்கு எத்தனை சனிப் பெயர்ச்சி என்று கேட்கவா போகிறார்கள்?மற்றவற்றில் எல்லாம் ராஜாஜியையும், கல்கி கிருஷ்ண மூர்த்தியையும் தூக்கிப் பிடிக்கும் `கல்கி இதழ்கூட சோதிடத்தில் அவர்கள் இருவரும் நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தாலும், வாரந்தோறும் ராசிபலன் வெளியிட மட்டும் தவறுவதில்லை.

மவுடீகமும், முட்டாள்தனமும் வளர்ந்தால்தானே பார்ப்பனியம் வளரும் என்பதை அவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் விடாப்பிடியாக அவற்றைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்!அறிவியல்படி சூரியன் என்பது நட்சத்திரமாக இருந்தாலும், ஜோதிடம் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. அதனைக் கிரகம் என்றே சொல்லுகிறார்கள்.

ஒரு வேடிக்கை - காஞ்சி `சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒருமுறை `தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக் கூறினார் (13.4.2004).

`முக்கிய கிரகம் சூரியன், மற்ற கிரகங்கள் அதைச் சுற்றி இயங்குகின்றன என்று கூறினாரே பார்க்கலாம் - இவர்தான் ஜெகத்குருவாம். தொடக்கப் பள்ளி மாணவனுக்குக் கூடத் தெரியும் சூரியன் ஒரு நட்சத்திரம் என்று. ஆனால், மத மவுடீகம் பிடித்து ஆட்டும் சங்கராச்சாரியார்களுக்கு இந்தப் பாலபாடம் கூடத் தெரியவில்லை என்பது எவ்வளவுப் பெரிய வெட்கக்கேடு.

இந்த வருடம் சனி பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறாராம் - எப்படியிருக்கிறது கதை?

சனி என்பது ஒரு கிரகம். பூமியிலிருந்து கிட்டத்தட்ட 80 கோடி மைலுக்கு அப்பாலிருக்கிறது. பூமியைவிட 700 மடங்கு பெரியது. சனி கிரகத்தில் உயிர்கள் கிடையாது. மைனஸ் 244 டிகிரி பாரன்ஹீட் கடும் குளிர் - ஆக்சிஜன் கிடையாது; எனவே, உயிர் வாழும் நிலை அங்கு இல்லை. இப்படி அறிவியல் கூறும்போது புராணீகர்கள் என்ன கூறுகிறார்கள்? சனி சூரியனுக்கும், சம்ஞைக்கும் பிறந்தவனவாம்.

இந்து மதத்தில் எல்லாமே இனக் கவர்ச்சிதான் - புணர்ச்சிதான்!

80 கோடி மைல் தொலைவில் உள்ள சனியின் சுழற்சிக்கும், பூமியில் உள்ள மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? மற்ற மற்ற உயிர்களுக்குச் சம்பந்தம் இல்லாமல் போன மர்மம் என்ன?
இதனையும் இந்த 2007 இல் 21 ஆம் நூற்றாண்டில் நம்பி சனி பகவான் பொல்லாதவன் - அவன் கோபத்தைத் தணிக்கவேண்டும் - திருநள்ளாறு செல்லவேண்டும்; நளன் தீர்த்தத்தில் எண்ணெய்த் தேய்த்து முழுகவேண்டும் என்று நம்புவதை நினைத்தால், சீ... இப்படியும் இந்த 2007--லும் இந்த மனிதர்களா என்று பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

அய்.ஏ.எஸ்., அதிகாரிகள், காவல்துறை அய்.பி.எஸ்., அதிகாரிகள், ஆளுநர்கள், அமைச்சர்கள் என்று ஒரு கிரகத்தைப் பகவானாக்கி மூத்திரக் குட்டையில் மூழ்குகிறார்களே -வெட்கப்படுவதா - வேதனைப்படுவதா?

விஞ்ஞான மனப்பான்மையை ஊக்குவிக்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 15ஏ 51(ஏ) கூறுவதன் லட்சணம் இதுதானா? மக்கள் நல அரசாக இருந்தால் இந்தக் கோயில்களில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்தி அவற்றைப் பாடசாலைகளாக்க வேண்டாமா?

விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம் அழகாகவே சொன்னார்:
"சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவில் உள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு அவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது? தங்கள் வாழ்க்கையை அவை ஆட்டிப் படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பதுபற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தகைய குட்டிக்குட்டி மூட நம்பிக்கைகளை ஒழித்துக் கட்டவேண்டுமானால், இதற்கெல்லாம் மூல மூத்த மூட நம்பிக்கையான கடவுள் என்ற நம்பிக்கையின் வேரை அடியோடு வெட்டி வீழ்த்தினாலொழிய மனிதனை மானமும், அறிவும் உள்ளவனாக, பண்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரனாக மாற்றுவது என்பது இயலாது. கடவுள்மீது தந்தை பெரியார் ஏன் கை வைத்தார் என்பதை இந்த இடத்தில் அக்கறையோடு சிந்திப்பார்களாக!

3 comments:

August 5, 2007 at 6:50 AM சிவபாலன் said...

Excellent!

Thanks for sharing!

August 5, 2007 at 10:01 AM Thamizhan said...

சனிப் பெயற்சி,செவ்வாய் தோஷம்,மூல நட்சத்திரம் இன்னும் மூளையில் இடப்பட்ட விலங்குகள் ஒழிக்கப் பட வேண்டாமா?
படித்ததன் பலன் அறிவு வளர வேண்டாமா?
நல்ல நாளும்,நட்ச்சத்திரமும் பார்த்துச் செய்த திருமணங்கள் முறிந்து நாரிவிட,பெரியார் அவர்களால் செய்து விக்கப்பட்ட சுய மரியாதைத் திருமணங்கள் ஆயிரமாயிரமானோர் பேரப்பிள்ளைகள்,பிள்ளைகள் வெளி நாடுகளில் வளமுற வாழ்கிறார்களே!

சனியையும் செவ்வாயையும் அறிந்து வாழ்வோம்.அஞ்சி வாழ்வோர் அடி மடையர்கள் என்றுணர்வோம்.

August 10, 2007 at 11:57 AM நாஞ்சில் பிரதாப் said...

அருமையான தலையங்கம் பதிவிட்டமைக்கு நன்றி.
ஆனால் என்னதான் காதுகிழிய கத்தினாலும் யாருக்கும் இதைப்பற்றி புரியபோவதில்லை. அறிவியல் பூர்வமாக அவர்களுக்கு உணர்த்தினாலும் அறிவியலே பொய் என்று கூறுவார்கள் இந்த மடையர்கள்.