வடபழனி முருகன் கோவிலில் 30ந்தேதி கும்பாபிஷேகம்

சென்னை வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 30ந்தேதி (வியாழக் கிழமை) நடைபெறுகிறது. கும்பாபிஷேத்தையொட்டி யாக சாலை பூஜைகள் 27ந்தேதி திங்கட் கிழமை துவங்க உள்ளதாக கோவிலின் அறங் காவலர் குழுத் தலைவர் சீர்காழி சிவ.சிதம்பரம் மற்றும் கோவிலின் துணை ஆணையரும், நிர்வாக அதிகாரியு மான பரஞ்சோதி ஆகியோர் தெரிவித்தனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் 24ந்தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் துவங்குகின்றன. 27ந்தேதி திங்கட்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.

யாகசாலையில் 108 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 350 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் மேற்கொள்வார்கள். தமிழகத்தின் தலைசிறந்த 12 ஓதுவார்கள் கும்பாபிஷேக பூஜைகளில் பங்கேற்கிறார் கள். வரும் 30ந்தேரி வியாழக்கிழமை காலை 830 மணி முதல் 9 மணிக்குள்ளாக மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டு அவர்கள் அனைவரும் எவ்வித சிரமுமின்றி மனநிறை வோடு முருகனை தரிசிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

லேசர் ஒளிவிளக்கு அலங்காரம்

கும்பாபிஷேகத்தையொட்டி கலை நிகழ்ச்சிகளும், லேசர் ஒளிவிளக்கு அலங்காரமும், 29,30 தேதிகளில் பல வண்ண வான வேடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே மொபைல் கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.

காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படவுள்ளன. ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் சார்பிலும், கோவிலின் சார்பிலும் குடிநீர், மோர், அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் மராமத்து பணி மற்றும் பஞ்சவர்ணம் தீட்டும் பணி, ஓவியங்களை வரைதல், புதிதாக விமானத்துடன் கூடிய சண்முகர் சன்னதி, நான்கு ராஜகோபுரங் களையும் புதிதாக மாற்றி அமைத்தல். கிழக்கு மற்றும் தெற்கு ராஜகோபுரங்களில் தங்க கலசங்களை பொருத்துதல், தங்கக் கொடி மரம் அமைத்தல், பொன் ஊஞ்சல், வெள்ளி கதவுகள் பொருத்துதல், புதிய தேர் வடிவமைத்தல் உள்ளிட்ட 66 பணிகள் 32க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் சுமார் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் சீர்காழி சிவ. சிதம்பரம், துணை ஆணையர் பரஞ்சோதி தலைமையில் அறங்காவலர்கள் செ. கண்ணப்பன், எம். பழனி, கண்மணி சீனிவாசன், ஆ. மணிமாறன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பலரும் சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

கலியுக வரதனாகிய கந்தபெருமான் உலகம் உய்யும் பொருட்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்துக் கொண்டும் அருள்பாலித்துக் கொண்டும் அருள்மிகு வடபழனி ஆண்டவராக இக்கோவிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலானது சென்னை மாநகரின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கிழக்கு மேற்காக ஆற்காடு சாலையையும், தென்புறமுள்ள 100 அடி சாலை ஆலந்தூரையும், வடபுறமுள்ள சாலை செங்குன்றத்தையும் இணைக்கிறது.

கனவில் தோன்றிய முருகன்...
கி.பி. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொண்டை நாட்டின் புலியூர் கோட்டம் என்னும் இந்த திவ்ய திருத்தலத்தில் அண்ணாசாமி நாயகர் எனும் பெரியவர் முருகப்பெருமான் மீது மாசற்ற பக்தி கொண்டு தனக்கு உற்ற நோய் நீங்கப் பெற்று தென் பழனியில் இருந்து பழனி ஆண்டவரின் திருவுருவப் படம் பெற்று அப்படத்தினை தரிசித்து வந்தார். திருத்தணி மற்றும் திருப்போரூர் போன்ற முருகன் குடி கொண்ட தலங்களுக்கு அடிக்கடி சென்று தரிசித்து வரும் அவரது கனவில் ஒரு நாள் "முருகன்' தோன்றி தாங்கள் வசிக்கும் இடத்திலேயே நாம் குடி கொண்டுள்ளோம் என கூறக் கேட்ட பின்னர் தாம் இருக்கும் இல்லத்தையே கோவிலாக அமைத்து பழனி ஆண்டவரின் படத்தை வைத்து பூஜை செய்து வந்துள்ளார்.

பக்தர்கள் துயர் துடைக்க அடிக்கடி குறி சொல்லியும், தனது நாக்கினை அறுத்து இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தி பின்னர் நாக்கு நன்கு வளர்ந்த பின்னர் இவர் கூறும் குறி பலிக்கும் வகையில் பெருந்திரளாக மக்களை ஈர்க்கும்படி இருந்துள்ளது.

தலைமுடி காணிக்கை
இத்தலம் மூலவர் அருள்மிகு வடபழனி ஆண்டவரின் மூலம் சிறப்பு பெற்றுள்ள தாகும். நினைத்தது நடக்க வடபழனி ஆண்டவரை வழிபடும் பக்தர்களின் வேண்டுதலை விரைந்து தீர்த்து வைக்கின்ற காரணத்தினால், பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள், காணிக்கையாக தலைமுடி செலுத்துதலும், வேல், ரொக்கம் போன்றவை உண்டியலில் செலுத்துதலும் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்தலும் தனி சிறப்பானதாகும்.

இவ்வாறு சிறப்புகள் பல பெற்ற இக்கோவிலில் பக்தர்களின் வேண்டு கோளுக்கு இணங்க அவர்களின் நன்கொடையினைக் கொண்டே தெற்கு ராஜகோபுரம் 72 அடி உயரத்தில் கட்டி முடித்து 1972ல் முதல்முறையாக மகா கும்பாபிஷேம் சிறப்புடன் நடந்தேறியது.

4வது முறை கும்பாபிஷேகம் 1984ல் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு 2வது முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1984ல் புதிதாக தங்க ரதம் ஒன்று அமைத்து பக்தர்களின் பிரார்த்தனைக்காக பயன் பாட்டில் உள்ளது. உட்புறம் அனைத்து இடங்களிலும் கருங்கல் தளவரிசை பளிங்கு கற்கள் பிரகாரங்களில் பதித்து கடப்பை கற்கள் பதித்து 3வது முறையாக 1996ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வரும் 30ந்தேதி கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தரவு - மக்கள் குரல்

0 comments: