.'விடுதலை' தலையங்கம்

விட்டுக் கொடுக்கவில்லை என்றால் - பறிக்கவேண்டியதுதான்!




நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்கிற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது. சமூகநீதி வரலாற்றின் பரிணாமத்தில் இந்தக் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் - காலத்தின் கட்டாயமும் ஆகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் (சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம்) மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடமைப்பட்டுள்ளவர்கள் ஆவார்கள். இந்த நிலையில், தங்களுக்கு அதிகாரம் இருக்கும் காரணத்தினால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளாக இருக்கக் கூடியவர்கள், மக்கள் நலன் கருதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களைக் கிழித்துக் குப்பைக் கூடையில் வீசி எறிகிறார்கள்.

குறிப்பாக இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் அவர்களின் கைகள் எல்லை கடந்து நீளுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கமே சமூகநீதிக்கு உத்தரவாதம் தருகிறது. முதல் சட்டத் திருத்தத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோல் சமூக ரீதி - கல்வி ரீதி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. சமூக ரீதி என்கிறபோது ஜாதிதான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எத்தனை சதவிகிதம்தான் இட ஒதுக்கீடு என்றும் வரையறுக்கப்படவில்லை. இவ்வளவுத் தாராளமான இடம், இட ஒதுக்கீடுப் பிரச்சினைக்காக இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கிக் கொடுத்திருக்கும்போது, அந்த அரசமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதற்கு மாறாகப் பேசுவதும், தீர்ப்பு அளிப்பதும் எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும்?
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்கச் சென்ற ஒரு நீதிபதி - அதற்குமுன் அந்த அறையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி இருந்தார் என்பதற்காக அறையைச் சுத்திகரிக்க வேண்டும் என்று சொன்னதும், அவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட பிறகே அந்த அறையில் நுழைந்தார் என்பதும் எவ்வளவுப் பெரிய அவமானம் - சட்ட விரோதம் - மனித சமத்துவ விரோதம்!

இத்தகு நிலையில் நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் இந்தக் குரல் மிகமிக முக்கியத்துவத்தைப் பெறும் என்பதில் அய்யமில்லை.

பார்ப்பனர்களின் மனோ நிலை என்ன? இந்த வார `துக்ளக் இதழில் (5.9.2007) ஒரு கேள்வி - பதில் வாயிலாக அது தெளிவாகிறது.

கேள்வி: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ரவீந்திரன் என்பவர், `ஆண்டாண்டு காலமாக இருபது அல்லது முப்பத்து சதவிகிதத்தினர் மட்டுமே அனுபவித்து வந்த சலுகைகளை, எழுபது, எண்பது சதவிகித மக்களையும் அனுபவிக்க விடுவதில் என்ன தவறு? என்று கூறியுள்ளாரே?

பதில்: ஆண்டாண்டு காலமாக இருபது அல்லது முப்பது சதவிகிதத்தினர் `சலுகையை அனுபவித்தார்கள் என்று நீதிபதி கூறியது தவறு. அவர்கள், தங்கள் தகுதியினால் பெற்றதை, இன்று இட ஒதுக்கீடு என்ற `சலுகையின் மூலமாக, எழுபது சத விகிதத்தினர் பெறுவதற்கு வழி செய்ய, அரசுகள் முனைகின்றன. இந்த வித்தியாசத்தை நீங்கள் குறிப்பிட்டுள்ள நீதிபதியின் கருத்து, கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.


இதுதான் `துக்ளக் பதில்.
ஆண்டாண்டு காலமாக இருபது அல்லது முப்பது சதவிகிதத்தினர் சலுகைகளை அனுபவித்தவர்கள் தங்கள் தகுதியினால் அவற்றைப் பெற்றார்களாம்.அவர்கள் கூறும் அந்தத் தகுதி - 20 அல்லது 30 சதவிகிதத்தினரைச் சுற்றியே தொடர்ந்து வந்து கொண்டிருந்த `மர்மம் என்ன? இதுபற்றி `துக்ளக் சோ ராமசாமி என்றைக்காவது சிந்திக்க முயற்சித்தது உண்டா?

ஆண்டாண்டுகாலமாக குறிப்பிட்ட அந்த ஆதிக்கக் கூட்டத்திற்கு மட்டுமேதானே கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அரசர்கள் காலத்தை எடுத்துக்கொண்டாலும், சமஸ்கிருதமும், அதன் வழி வேதங்களும், உபநிடதங்களும் தானே பார்ப்பனர்களுக்காக மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.
இந்தச் சமூக வரலாற்றினைப் புறந்தள்ள முடியுமா? வாய்ப்பு மறுக்கப்பட்டுக் கிடந்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதுதானே சமூகநீதி?

இந்த நிலையில் உயர் அதிகார மையமாகத் திகழக்கூடிய உயர்மட்ட நீதித்துறைகளில் இட ஒதுக்கீடு அவசியம் என்பது சொல்லாமல் விளங்கக் கூடியதாகும்.பார்ப்பனர்கள் என்றைக்குத் தங்கள் ஆதிக்கத்தை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள்? விட்டுக் கொடுக்கவில்லையென்றால், அதனைப் பறிக்கவேண்டியது இயற்கை நியதிதானே?

1 comments:

August 31, 2007 at 10:03 AM PRINCENRSAMA said...

பறிக்கத்தான் வேண்டுமெனில் எங்கள் கைகள் தயார்! தயார்!